கடித்தால் மட்டுமல்ல... காயம் மூலமும் பரவும்!


செல்லமே செல்லம்

அழகு, அன்பு, அந்தஸ்து என ஏதேதோ காரணங்களுக்காக செல்லப் பிராணிகள் வளர்க்கிறோம். நன்றியோடு நமக்கு அளவிலா அன்பையும் கொடுக்கும் அந்த ஜீவன்களை சரியாகப் பராமரிக்க வேண்டும். இல்லையெனில், அந்த அன்போடு சேர்த்து நோய்களையும் அவை நமக்குத் தரக்கூடும். செல்லப்பிராணிகள் மூலம் நமக்கு பரவும் நோய்க்கிருமிகள், தடுக்கும் முறைகள் பற்றி விளக்குகிறார் செல்லப்பிராணிகளுக்கான மருத்துவர் ஆனந்தராஜ்.

கொக்கிப்புழு (Hookworm) மற்றும் உருளைப்புழு (Round worm)

உணவு கொடுக்கப் பயன்படுத்தும் பாத்திரங்கள் சுத்தமாக இல்லாவிட்டாலும், அசுத்தமான உணவினாலும் அவற்றின் குடலில் இவ்விருவகை புழுக்களும் உருவாகும். தாயிடமிருந்து கருவிலேயே குட்டிகளுக்கும் பரவக்கூடியவை இவை. பிராணிகளின் குடல்களில் வாழும் இவை நமக்கும் பரவுகிறது. பூங்காக்களிலும் சாலைகளிலும் நாம் வெறும் காலோடு நடக்கும் போது இந்தப் புழுக்களின் முட்டைகள் மற்றும் லார்வாக்கள் காலில் ஒட்டிக்கொள்கின்றன. இந்தப் புழுக்களால் மனிதனுக்கு இருமல், இழைப்பு, காய்ச்சல், இரைப்பை மேற்பகுதியில் வலி, குமட்டல், மலச்சிக்கல் மற்றும் வாந்தி பேதி போன்றவை ஆரம்பத்தில் தோன்றும். பின்வரும் நாட்களில் ரத்தசோகை ஏற்பட்டு புரதச்சத்து குறைபாட்டினால் உடல் மெலிந்து காணப்படுவர். இதயச் செயலிழப்பு மற்றும் வயிறு வீக்கமடைதல் போன்ற கடுமையான நோய்களுக்கும் இது வழிவகுக்கும். கொக்கிப்புழுக்கள் இருப்பதை எளிதில் கண்டுபிடிக்க முடியாது என்பதுதான் பிரச்னை.டாக்ஸோபிளாஸ்மோசிஸ்

விலங்குகள் வழியாக பரவும் இந்த நோய் சமைக்கப்படாத மாமிசம், அசுத்தமான மண், விலங்குகளின் மலம் போன்றவற்றில் உள்ள புழுக்களின் மூலம் மனிதனிடம் வேகமாகப் பரவுகிறது. குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தி குறைந்திருப்பவர்கள், கர்ப்பிணிகள்
மற்றும் எய்ட்ஸ் நோயாளிகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். விலங்குகளுக்கு உணவு வைக்கும் பாத்திரங்களை சரியாக சுத்தம் செய்யவில்லை என்றால், அதில் வைக்கும் முட்டைகள் பல்கிப் பெருகி நோய் பரவ காரணமாகும். கர்ப்பிணிகள் அவற்றைச் சுத்தம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

லைம் நோய்

பிராணிகளின் உடலில் உள்ள உண்ணிகளால் மனிதனைத் தாக்கக்கூடிய லைம் என்பது வேகமாக பரவக்கூடிய தொற்று நோய். இது ரத்தம் மூலமே பரவும். காய்ச்சல் ஏற்பட்டு உடல் சோர்வு அடைவர். எதிர்ப்புசக்தி குறைந்து நாளடைவில் சிறுநீரக நோய்களும் வரக்கூடும். பிராணிகளுக்கு தோலில் தடிப்புகள் ஏற்பட்டு அவை நினைவிழந்துவிடும். நம் நாட்டில் லைம் நோயின் தாக்கம் குறைவாக இருந்தாலும், அயல்நாட்டிலிருந்து வரும் உயர்ரக நாய்கள் மூலம் இந்த நோய் பரவுகிறது.

சொறி சிரங்கு

சிலந்திகள் போல இருக்கும் பூச்சிகளால் பிராணிகளுக்கு சொறி சிரங்கு நோய் வருகிறது. அவற்றைப் பராமரிக்க பயன்படுத்தும் சீப்பு, நகவெட்டி மற்றும் நாய்களின் இருப்பிடம் (kennel) போன்றவற்றை சரியாக சுத்தம் செய்யாமல் வைத்திருப்பதால், அவற்றுக்கு தோல் நோய்கள் வருகின்றன. அந்தப் புண்களில் ஏற்படும் அரிப்பால் அவற்றை கடித்துக் கொள்ளும். பூச்சிகள் இடும் முட்டைகள் நாய்களின் தோலின் அடிப்புறத்தின் ஆழத்தில் தங்கி 21 நாட்களில் இனப்பெருக்கம் செய்கின்றன. நாய்களோடு பழகும் வீட்டில் உள்ள நபர்களுக்கும் பரவி இடுப்பைச் சுற்றிலும் மற்றும் அக்குள் பகுதிகளிலும் சிரங்குகள் ஏற்படுகின்றன.

ரேபிஸ்

வெறிநாய் கடித்தால் மட்டுமே ரேபிஸ் நோய் மனிதனுக்கு வரும் என்று மட்டும் நாம் தெரிந்து வைத்திருக்கிறோம். நாயின் உடலில் உள்ள வெட்டுக்காயம் மூலமாகவும் ரேபிஸ் பரவும். இதனால் வருடம் ஒருமுறை ரேபிஸ் தடுப்பூசி போடுவது மிக அவசியம்.


தடுக்கும் முறைகள்...

மருத்துவரின் அறிவுரைப்படி பிராணிகளின் எடைக்குத் தகுந்தவாறு 3 மாதங்களுக்கு ஒருமுறை பூச்சி மருந்து (De-worming) கொடுக்க வேண்டும். இரண்டாவதாக மருத்துவர் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் தடுப்பூசிகளை தவறாமல் போடவேண்டும். மூன்றாவதாக உண்ணிகள், பேன்கள் போன்றவற்றுக்கு மருந்து போட்டு (Anti tick) சுத்தமாக வைத்துக் கொள்வதும் அவசியம். இந்த மூன்று விஷயங்களை கடைப்பிடித்து சரியான முறையில் அவற்றை பராமரித்து வந்தால் நம்மை இந்த நோய்கள் தாக்காது. மற்றபடி செல்லப்பிராணிகள் நமக்கு சந்தோஷத்தை மட்டுமே தருபவை.”

"பிராணிகளின் உடலில் உள்ள உண்ணிகளால் மனிதனைத் தாக்கக்கூடிய லைம் என்பது வேகமாக பரவக்கூடிய தொற்று நோய். இது ரத்தம் மூலமே பரவும். காய்ச்சல் ஏற்பட்டு உடல் சோர்வு அடைவர். எதிர்ப்புசக்தி குறைந்து நாளடைவில் சிறுநீரக நோய்களும் வரக்கூடும். அயல்நாட்டிலிருந்து வரும் உயர் ரக நாய்கள் மூலம் இந்த நோய் பரவுகிறது..."

"வெறிநாய் கடித்தால் மட்டுமே ரேபிஸ் நோய் மனிதனுக்கு வரும் என்று மட்டும் நாம் தெரிந்து வைத்திருக்கிறோம். நாயின் உடலில் உள்ள
வெட்டுக்காயம் மூலமாகவும் ரேபிஸ் பரவும்."


Similar Threads: