அடடே ஐ.க்யூ.


ஜீனியஸ்!

படிக்கிற காலமோ, சம்பாதிக்கிற காலமோ... வாழ்வின் எந்த நேரங்களிலும் நம்முடைய செயல்திறனை தீர்மானிப்பதில் மிகப்பெரும் செல்வாக்கு செலுத்துகிறது ஐ.க்யூ. இதை நன்கு உணர்ந்துதான் ‘புத்திமானே பலவான்’, ‘Knowledge is power’ என்று பலமொழிகளிலும் அறிவின் ஆற்றல் பற்றிச் சொல்லியிருக்கிறார்கள்.நம்முடைய அறிவுத்திறனை அதிகரிக்க ஏதேனும் வழிமுறைகள் இருக்கிறதா என்ற கேள்வியோடு நரம்பியல் சிகிச்சை மருத்துவரான ப்ரித்திகா சாரியை சந்தித்தோம்.

‘‘மூளையின் சாமர்த்தியம் அல்லது மூளை செயல்படும் திறனைத்தான் ஐ.க்யூ. (Intelligence quotient) என்கிறோம். தமிழில் நுண்ணறிவுத் திறன். புதிதாக ஒரு விஷயத்தைக் கற்றுக்கொள்கிற திறன், நினைவாற்றல், சந்தர்ப்பத்தை உணர்ந்து அறிவை செயல்படுத்தும் திறமை, எதிர்காலத்தில் என்ன செய்யப் போகிறோம் என்ற திட்டம், கடந்த கால அனுபவங்களில் இருந்து பாடம் கற்றுக் கொள்வது என எல்லாம் கலந்ததுதான் ஐ.க்யூ.

சராசரியாக ஒருவருக்கு 90 முதல் 100 வரை ஐ.க்யூ. இருக்கும். கெட்டிக்காரர்கள் என்று சொல்லப்படுகிறவர்களுக்கு 120க்கும் மேல் இருக்கும். 140, 150 என்று சிலருக்கு அரிதாக இருக்கலாம். இவர்களையே ஜீனியஸ் என்று கொண்டாடுகிறோம். 80க்கும் குறைவாக உள்ளவர்களை அறிவுத்திறனில் பின் தங்கியவர்கள் என்று சொல்லலாம். சொந்த வேலைகளை யோசித்து செய்யக்கூட இவர்கள் சிரமப்படுவார்கள்’’ என்பவர், மரபியல் காரணங்கள், குழந்தை கருவில் இருக்கும்போது உள்ள அம்மாவின் உணவுப்பழக்கம், சுற்றுப்புறச்சூழ்நிலை என மூன்று விஷயங்கள்தான் ஐ.க்யூவை தீர்மானிப்பதாகச் சொல்கிறார்.

மரபியல் காரணங்களை நம்மால் மாற்ற முடியாது. ஆனால், குழந்தை கருவில் இருக்கும்போது ஊட்டச்சத்து உள்ள உணவுகளை அம்மா சாப்பிட்டு வந்தால் ஐ.க்யூ. அதிகம் உள்ள குழந்தை பிறக்கும். இதில் மூன்றாவது காரணியான சுற்றுப்புறச் சூழ்நிலைகள் மிகவும் முக்கியம்.குறைவான ஐ.க்யூவோடு பிறந்த குழந்தையாக இருந்தாலும், சுற்றுப்புறச்சூழல் பாசிட்டிவாக அமைந்துவிட்டால் அந்தக் குழந்தையால் தனது அறிவுத்திறனையும் தாண்டி சிறப்பாக செயல்பட முடியும். அதேபோல ஐ.க்யூ. திறன் அதிகம் கொண்ட குழந்தைக்குப் போதிய கல்வியின்மை, பெற்றோருக்குள் ஏற்படும் சண்டை, நோய்கள் போன்ற சுற்றுப்புறச் சூழ்நிலைகள் எதிராக இருந்தால் இருக்கிற ஐ.க்யூவும் செயல்படாமல் முடங்கிப் போகும்.

ஒருவரது ஐ.க்யூவை அதிகப்படுத்தவும் முடியாது... குறைக்கவும் முடியாது. அதற்குச் சிகிச்சைகள் எதுவும் இல்லை. பிறவியிலேயே நமக்குக் கிடைத்திருக்கும் அறிவுத்திறனைத் தூண்டி, மேலும் நன்றாக செயல்படுத்த நம்மால் முடியும். பயன்படுத்தாமல் விட்டுவிட்டால் இருக்கிற அறிவுத்திறனும் வீணாகும்...’’குழந்தைகளின் அறிவுத்திறனை மேம்படுத்த என்னென்ன வழிகள் இருக்கின்றன?

‘‘மூளை வளர்ச்சியில் இரண்டு முக்கிய காலகட்டங்கள் இருக்கின்றன. 5 வயது வரை முதல் கட்டமாக குழந்தையின் மூளை வேகமாக வளரும். இந்த நேரத்தில் குழந்தைகளை அளவுக்கு அதிகமாகக் கண்டிப்பது, அடித்து வளர்ப்பது போன்ற தவறான நிலைமை இருந்தால் குழந்தைகளின் மூளை வளர்ச்சி பாதிக்கப்படும். இந்த காலகட்டத்தில் நல்ல கல்வியைக் கொடுக்க வேண்டும். தொலைக்காட்சிகளில் வரும் வன்முறை, பாலியல் போன்ற தவறான காட்சிகள் இந்த வயதில் மூளையில் எளிதாகப் பதிவாகும் என்பதால், கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகளை இயற்கையோடு தொடர்புப்படுத்தி வளர்க்க வேண்டிய பருவம் இது. விலங்கு சரணாலயங்கள், சுற்றுலாத்தலங்கள் போன்ற இடங்களுக்கு அழைத்துச் செல்லவும், ஓடி ஆடி விளையாடவும் ஊக்கப்படுத்த வேண்டும்.

அடுத்ததாக, 12 முதல் 20 வயதுவரை இரண்டாம் கட்டமாக மூளை வளரும். இந்த இரண்டாம் கட்டத்தில்தான் புகைப்பழக்கம், மதுப்பழக்கம் போன்ற தீய பழக்கங்களைக் கற்றுக் கொள்ள ஆரம்பிப்பார்கள். வளரும் பருவத்தில் மூளை இருப்பதால் குழந்தைகளுக்கே எது சரி, எது தவறு என்பது தெரியாது, குழப்பமாகத்தான் இருப்பார்கள். தேவையில்லாமல் ரிஸ்க் எடுப்பது, வேகமாக வண்டி ஓட்டுவது எல்லாம் இதனால்தான். இந்தத் தவறுகளை எல்லாம் முழுமையான அறிவோடு அவர்கள் செய்வதில்லை. பாராட்டப்பட வேண்டும் என்ற ஆசை மூளையில் சுறுசுறுப்பாக இயங்கும். அதனால்தான் த்ரில்லுக்காக இத்தகைய ஆபத்தான காரியங்களில் ஈடுபடுகிறார்கள். இந்த காலகட்டத்தில்தான் எது சரி, எது தவறு என்று அவர்களுக்கு வழிகாட்டும் மூளையின் முன்பகுதியான Frontal lobe என்ற பகுதி வளர்ச்சியடையும். Frontal lobe வளர்ச்சி அடைந்த பிறகு பக்குவமானவர்களாக மாறுவார்கள். அதுவரை அவர்களை புரிந்துகொண்டு நாமும் ஒரு Frontal lobe போல வழிகாட்ட வேண்டும்.

பெரும்பாலும் 5 வயது வரை அக்கறை எடுத்துக்கொள்கிற பெற்றோர், இந்த இரண்டாம் கட்டத்தில் கவனக்குறைவாக இருந்துவிடுகிறார்கள். சரியான வழிகாட்டுதல், நல்ல நண்பர்களோடு சேர வைப்பது, சுற்றுப்புறச் சூழலை நல்லவிதமாக ஏற்படுத்திக் கொடுப்பது போன்றவற்றைச் செய்ய வேண்டும். குழந்தைகளை எதிர்மறையாகத் தூண்டும் விதத்தில் திட்டுவது, குறை சொல்வது கூடாது. குழந்தைகளும் மூளை வளர்ச்சியைப் பாதிக்கும் துரித உணவுகளைத் தவிர்க்க வைக்க வேண்டும், ஒமேகா 3 அதிகம் உள்ள மீன், புரதச்சத்துள்ள உணவுகள், காய்கறிகள் போன்ற நல்ல உணவுப் பழக்கங்களைப் பின்பற்றி ஐ.க்யூவை மேம்படுத்த வேண்டும். மூளையை மழுங்கடிக்கும் வெட்டி அரட்டைகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், செல்போனை அதிகம் பயன்படுத்துவது போன்ற தவறான வேலைகளைச் செய்யக் கூடாது. இவற்றால் மூளையின் செயல்திறன் முடங்கிப் போகும்.’’

ஐ.க்யூவை சிகிச்சையின் மூலம் அதிகரிக்க முடியுமா ?

‘‘80 க்கும் குறைவாக ஐ.க்யூ இருக்கும் குழந்தைகளுக்கு தெரபி போல சில பயிற்சிகள் கொடுக்கும்போது தினசரி வாழ்க்கையைத் தானே நடத்திக் கொள்ளும் அளவு அவர்களை மேம்படுத்த முடியும். சில மருந்துகள் இருக்கின்றன. ஆனால், இவை ஐ.க்யூவை அதிகப்படுத்தும் மருந்துகள் அல்ல. ஒமேகா 3யை கேப்ஸ்யூலாக கொடுக்கும்போது மூளையின் செயல்திறனைத் தூண்டிவிட முடியும்.மற்றபடி, மூளைக்கும் பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டியது அவசியம். ஐ.க்யூவை மேம்படுத்துவதில் தூக்கமும் முக்கியப் பங்கு வகிக்கிறது. மூளையின் தற்காலிக நினைவுப் பகுதியில் பதிந்திருக்கும் ஒரு செய்தி, நீண்ட காலமாக நம் நினைவில் நிற்பதற்குத் தூக்கம் பெரிதும் உதவுகிறது. பலருக்கும் நள்ளிரவுக்கு மேல் தூங்கும் பழக்கம் உருவாகி வருகிறது. போதுமான தூக்கமின்மை கொண்ட வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள வேண்டும்.

ஐ.க்யூ. சரியான அளவில் இல்லாதபோது, பிறவியிலேயே சரியில்லாதபோது நரம்பியல் மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். குழந்தைகளுக்கு மட்டும் அல்ல... வயது வந்த பெரியவர்களும் புதிதாக ஏதாவது கற்றுக் கொள்வது, புதிய வேலைகளைச் செய்வது, படித்தவற்றை நினைவுபடுத்திப் பார்ப்பது, ஆக்கப்பூர்வமான விவாதங்களில் ஈடுபடுவது, குறுக்கெழுத்துப் புதிர்கள், விடுகதைகளுக்கு விடை கண்டுபிடிப்பது போன்ற செயல்களை செய்து வந்தால் தங்களது மூளையின் திறனை மேம்படுத்திக் கொள்ள முடியும்!’’

‘உலக அளவில் அதிக ஐ.க்யூ. திறன் கொண்டவர்’ என்ற பெருமையைப் பெற்றிருக்கிறாள் பாளையங்கோட்டையைச் சேர்ந்த 14 வயது சிறுமியான விசாலினி. கடந்த ஆண்டு ஐ.க்யூ. நிபுணர்கள் மத்தியில் நடத்தப்பட்ட பல கட்ட பரிசோதனைத் தேர்வுகளில் 225 என்ற அளவை எட்டிப்பிடித்திருக்கிறாள் விசாலினி. இதற்கு முன்பு அதிக ஐ.க்யூ. கொண்டவர் (210) என்ற கின்னஸ் சாதனை படைத்திருப்பவர் கிம் யுங் யோங் (Kim Ung-Yong) என்ற சீனர். மைக்ரோசாஃப்ட் அதிபரான பில்கேட்ஸின் ஐ.க்யூ. 160 என்றும், உலக செஸ் சாம்பியன் பாலி பிஸ்சரின் ஐ.க்யூ. 180 என்றும் கணக்கிட்டு இருக்கிறார்கள்.

விசாலினி குழந்தையாக இருந்தபோது பேச முடியாமல் சிரமப்பட்டிருக்கிறாள் என்று அவளது பெற்றோர் கூறியிருக்கிறார்கள். மருத்துவர் அளித்த ஆலோசனையின்படி, அவளுடன் இடைவிடாமல் பேசி, கதைகள் சொல்லி, ஸ்லோகங்கள் பாடிக் காட்டி விசாலினியின் பேசும் திறனை வளர்த்திருக்கிறார்கள். இதில் இருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டியது, பயிற்சியும் முயற்சியும் இருந்தால் நாமும் ஜீனியஸ் ஆகலாம் என்பதைத்தான்!


Similar Threads: