100 வயது - மயக்குது மரபியல்ஜாதகம்


“நவீன தொழில் நுட்பங்கள்மற்றும் சிகிச்சைகளின் அபார வளா்ச்சியால் 100 வருடம் வாழ்வது இனி சாத்தியமே” என்கிறாா் சென்னையில் மரபணு தொடா்பான நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் சலீம் முகமது.

‘‘ஒருவரது உயரம், நிறம், ஆரோக்கியம், ஆயுள் என சகலத்தையும் தீர்மானிப்பது Gene என்கிற மரபணுதான். இந்த மரபியல் காரணங்கள் Genetic, Epigenetic என்ற இரு விதமாக ஒருவரது வாழ்க்கையை முடிவு செய்கிறது. ஜெனட்டிக் என்பது மரபியல் ரீதியாகவே ஏற்படும் தாலசீமியா போன்ற குறைபாடுகள். எபிஜெனட்டிக் என்பவை மரபியல் ரீதியான குறைபாடுகளை தூண்டிவிடும் வெளிப்புறக் காரணிகள்.இதில் மரபியல் குறைபாடுகளால் ஏற்படும் ஜெனட்டிக் வகை மரணங்களைவிட, வெளிப்புறக் காரணிகளால் ஏற்படும் எபிஜெனட்டிக் உயிரிழப்புகள்தான் இன்று அதிகம். அதாவது, நீரிழிவு, மாரடைப்பு, ரத்த அழுத்தம், பருமன் போன்ற பல நோய்கள் உயிரிழப்புகளை ஏற்படுத்தும் முக்கிய காரணிகளாக இருக்கின்றன. இந்த எபிஜெனட்டிக் உயிரிழப்புகளைத் தடுக்க Genome assessment test பெரிதும் உதவும். அதாவது, ஒருவருடைய மரபணுவைப் பரிசோதனை செய்வதன் மூலம் எதிர்காலத்தில் வர இருக்கும் நோய்கள் பற்றி முன்கூட்டியே தெரிந்துகொள்ள முடியும். இதை ஒருவருடைய மரபியல் ஜாதகம் என்று கூட சொல்லலாம். 23 and Me என்ற அமெரிக்க நிறுவனம் கடந்த 2007ம் ஆண்டு இதில் முதன்முதலில் ஈடுபட ஆரம்பித்தது. இந்த ஜீனோம் டெஸ்ட்டில் ஒருவர் எடுத்துக்கொள்ளும் மருந்துகள் அவரது உடலமைப்புக்கு ஏற்றதுதானா என்பதையும் தெரிந்துகொள்ள முடியும்.

இதய அறுவை சிகிச்சை செய்து ஸ்டென்ட் கருவி வைத்த பிறகு, Clopidogrel என்ற மருந்தை எடுத்துக்கொள்ள இதய சிகிச்சை நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.ஆனால், 30 சதவிகித இந்தியர்களுக்கு இந்த மருந்து ஏற்றுக் கொள்ளாது. இதனால் இதய சிகிச்சை மருத்துவர்கள் ஜீனோம் பரிசோதனை முறையின் உதவியோடு இப்போது சிகிச்சை அளிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். புற்றுநோய் சிகிச்சையில் கீமோதெரபி எப்போது செய்ய வேண்டும், எப்போது செய்யக் கூடாது என்பதைக் கண்டுபிடிக்கும் சோதனையும் இருக்கிறது. இந்த மரபணு பரிசோதனையை ஒருவரது எச்சில், நகம், முடி, ரத்தம் எனப் பல வழிகளில் கண்டுபிடிக்க முடியும். இதன்மூலம் அவரது உடலமைப்பு, மரபியல் தன்மை போன்றவற்றை நுட்பமாக ஆராய்ந்து அவருக்கென்று பிரத்யேகமாக உணவுமுறையையும் உடற்பயிற்சிகளையும் வடிவமைக்கலாம்.

ஜீனோம் டெஸ்ட்டை போலவே மனிதர்களின் வாழ்நாளை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக உலகம் முழுவதும் பல அறிவியல் அறிஞர்கள் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். அமெரிக்காவில் Human longevity என்ற நிறுவனத்தின் மூலம் க்ரெய்க் வெண்டர் என்பவர் ஆய்வுகள் செய்து வருகிறார். Calico என்ற அமெரிக்க நிறுவனமும் வயது தொடர்பாக பல முயற்சிகளை செய்து வருகிறது. குறைபாடுள்ள கல்லீரல், சிறுநீரகம் போன்ற உறுப்புகளை மாற்றும் உறுப்பு மாற்றும் சிகிச்சையைப் போல, எதிர்காலத்தில் குறைபாடுள்ள செல்லில் புதிய டி.என்.ஏ. பொருத்திக் கொள்ளும் Gene editing ஆய்வுகளும் நடந்து வருகிறது. இதேபோல் உறுப்பு தானத்துக்காக மனிதர்களை எதிர்பார்க்காமல், விலங்குகளின் உடலிலேயே மனிதர்களின் உடல் உறுப்புகளை வளர வைக்கவும் ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன.

1960ம் ஆண்டில் இந்தியரின் சராசரி ஆயுள்காலம் 41 ஆக இருந்தது. உலக சுகாதார நிறுவனம் 2013ம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையின்படி இந்தியர்களின் சராசரி வயது 66 ஆக உயர்ந்திருக்கிறது. நோய்களை கண்டறியும் தொழில்நுட்ப கருவிகளின் வளர்ச்சி, அதிகரித்து வரும் விழிப்புணர்வு, நவீன சிகிச்சைகள் போன்ற காரணங்களால் உலக அளவிலேயே கடந்த 40 ஆண்டுகளில் மக்களின் ஆயுள்காலம் உயர்ந்திருப்பதாகவே ஆய்வுகள் கூறியிருக்கின்றன. அதனால், இனி செஞ்சுரி அடிப்பது பெரிய விஷயம் இல்லை!’’

1960ம் ஆண்டில் இந்தியரின் சராசரி ஆயுள்காலம் 41 ஆக இருந்தது. உலக சுகாதார நிறுவனம் 2013ம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையின்படி இந்தியர்களின் சராசரி வயது 66 ஆக உயர்ந்திருக்கிறது. அதனால், இனி செஞ்சுரி அடிப்பது பெரிய விஷயம் இல்லை!

உணவே மருந்தாகட்டும்!

‘ஜீ னோம் டெஸ்ட் மூலம் நோய்கள் வரக்கூடிய சாத்தியங்களைக் கண்டுபிடித்த உடன், அதை வெற்றிகரமாக செயல்படுத்த உணவுப் பழக்கத்தில் பெரிதும் கவனம் செலுத்த வேண்டும்’ என்கிறார் உணவியல் நிபுணரான ஜனனி.

‘‘100 ஆண்டுகளை மருந்துகள், மாத்திரைகள், சிகிச்சைகள் என்று ஒருவர் சிரமப்பட்டு வாழ்ந்தால் அதில் எந்த அர்த்தமும் இல்லை. நோய்கள், மருந்துகள் இல்லாமல் வாழ்ந்தால்தான் 100 வருட வாழ்க்கையும் மகிழ்ச்சியானதாக மாறும். ஜீனோம் டெஸ்ட் செய்வதன்மூலம் ஒருவருடைய உடலுக்கு என்ன உணவு தேவை, என்ன உணவு தேவை இல்லை என்பதைத் துல்லியமாகத் தெரிந்துகொள்ள முடியும். இது மேலோட்டமாக, பொதுவாக சொல்லப்படும் ஆலோசனை அல்ல. உதாரணத்துக்கு, ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டால், ‘கார்போஹைட்ரேட் உணவுகளை குறைத்துக் கொள்ளுங்கள்’ என்று சொல்வார்கள். ஆனால், அவரது உடல் அமைப்புக்கு Gluten intolerance என்கிற கோதுமையை ஏற்றுக் கொள்ளாத பிரச்னை இருக்கலாம்.

ஏப்பம், அசிடிட்டி, வயிறு உப்புவது, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்னைகள் வந்தால் எண்ணெய் உணவுகளால் ஏற்பட்டது, மசாலாதான் காரணமாக இருக்கும் என்று தவறாக நினைத்துக் கொள்வார்கள். சில மருத்துவர்கள் காபி, டீ சாப்பிட வேண்டாம் என்றும் பரிந்துரைப்பார்கள். ஆனால், பாலில் இருக்கும் லாக்டோஸ் சிலரின் உடலுக்கு ஏற்றுக் கொள்ளாததே பிரச்னைக்குக் காரணமாக இருக்கும் என்பது பலருக்குத் தெரியாது. ரத்த அழுத்தம் இருக்கிறது என்றால் உப்பைக் குறைத்துக் கொள்ளுங்கள் என்பார்கள். ஆனால், அவருக்கு உப்பால் எந்தப் பாதிப்பும் ஏற்படாத உடலமைப்பாகக் கூட இருக்கலாம். இதை Salt sensitivity test மூலம் கண்டுபிடிக்கலாம். இதுபோன்ற நுட்பமான, பிரத்யேகமான பரிசோதனையால் உணவு முறையையும், அதற்கேற்ற உடற்பயிற்சிகளையும் தீர்மானிக்கும்போது 100 வருட வாழ்க்கையை ஆரோக்கியமாகவும் வாழ்வது சாத்தியமே!’’


Similar Threads: