சருமம் காப்போம்
நிற்காதே நிக்கல் அலர்ஜி!

நாணயம், நகைகள், செல்போன், கண்ணாடி ஃப்ரேம், சாவி, உடைகளில் உள்ள ஜிப் மற்றும் பட்டன்கள், பெல்ட் பக்கிள்ஸ், பாத்திரங்கள் என எங்கும் எதிலும் பயன்படுத்தப்படுகிறது வெள்ளியைப் போன்றே நிறமுள்ள நிக்கல்! நாம் உண்ணும் உணவிலும் கூட இது கலந்திருக்க வாய்ப்புள்ளது. இப்படி பிரிக்க முடியாத படி கலந்துள்ள நிக்கல் எப்படி நம்மைப் பாதிக்கிறது? அதன் அறிகுறிகள் என்ன? விவரிக்கிறார் சரும நோய் நிபுணர் டாக்டர் ப்ரியா ராமநாதன்.“நம்மில் சிலருக்கு நிக்கல் அலர்ஜியை (Allergic contact dermatitis) ஏற்படுத்துகிறது. பொதுவாக நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு அமைப்பானது, வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களினால் ஏற்படும் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கிறது. நிக்கல் அலர்ஜி உள்ளவர்களுக்கோ நோய் எதிர்ப்புசக்திக்கு எதிராக நிக்கல் வினைபுரிகிறது.

காது மற்றும் கழுத்தில் அணியும் நகைகள் போன்றவை சருமப் பகுதியில் உரசிக்கொண்டு இருப்பதால், அவற்றில் வியர்வை படும்போது அதிகமான அரிப்பை ஏற்படுத்தும். நிக்கலினால் ஆன ஊசியைக் கொண்டு காது, மூக்கு போன்றவற்றில் துளையிடும்போதும், டாட்டூ குத்திக் கொள்ளும் போதும், அக்குபங்சர் சிகிச்சையின் போதும் சிலருக்கு அலர்ஜி ஏற்படலாம். நிக்கலால் ஆன கண்ணாடி ஃப்ரேம் அணிபவர்களுக்கு காது மடல்களில் அரிப்பு, புண் ஏற்படும். இந்தப் பொருட்களை உபயோகித்த 12 முதல் 48 மணி நேரங்களிலேயே சருமத்தில் மாற்றங்களை உணர்வார்கள். கடுமையான நிக்கல் அலர்ஜியால் சில இடங்களில் கொப்புளங்களும் வரலாம். அலர்ஜி உள்ளவர்கள் நிக்கல் மிகுந்த உணவுப் பொருட்களான சாக்லெட், சோயா பீன்ஸ், முழுதானியம் மற்றும் ஓட்ஸ் போன்றவற்றை உண்ணக்கூடாது.

இரும்புச் சத்து அதிகம் உள்ள கீரை, பீட்ரூட் போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும். சிலருக்கு மூக்கில் நீர்வடிதல், மூக்கு வீக்கம், சுவாசப் பிரச்னைகளும் ஏற்படும்’’ என்கிற டாக்டர் ப்ரியா, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கூறுகிறார்... “முதல் முறையாக நிக்கல் பொருளை உபயோகித்த உடனோ, தொடர்ந்து உபயோகிக்கும் போதோ, 4 நாட்களுக்கு மேலாக சருமத்தில் அரிப்பு ஏற்பட்டு, சிவந்து தடித்திருந்தால் உடனே மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. உணவின் மூலம் நிக்கல் அலர்ஜி ஏற்பட்டிருந்தால் அதை மருத்துவரால் மட்டுமே கண்டறிய முடியும். கண்டறியப்பட்ட உடனே நிக்கல் கலந்த பொருட்களை அணிவதையும், டின்களில் அடைக்கப்பட்ட உணவுகள் மற்றும் பானங்கள் எடுத்துக் கொள்வதையும் நிறுத்தி விடுவது நல்லது...”


Similar Threads: