எந்தக் கையில் பிபி பார்க்கலாம்?


லெஃப்டா? ரைட்டா?

ஒரு மனிதனின் ரத்த அழுத்தமானது சூழ்நிலைக்கேற்ப மாறுபடும். ரத்த அழுத்தத்தை அளக்கும் கருவியான ஸ்பிக்மோமோனோமீட்டர் உதவியுடன் கையில் ஒரு இறுக்கமான ஸ்டராப்பை கட்டி ஒருவரின் ரத்த அழுத்தத்தை கண்டறிய முடியும்.


வலது கையில் ரத்த அழுத்தம் அளவிடுவதற்கும், இடது கையில் அளவிடுவதற்கும் வேறுபாடு கள் இருக்குமா? எந்தக் கையில் பிபி பார்ப்பது சிறந்தது? இதயநல மருத்துவர்

ஆர்.சிவக்குமாரிடம் பேசினோம்...

``பொதுவாக இந்தக் கையில்தான் ரத்த அழுத்தம் பார்க்க வேண்டும் என்று விதிமுறைகள் எதுவும் கிடையாது. இரு கைகளிலும் ரத்த அழுத்த அளவை பார்ப்பது நல்ல விஷயம். ஒரு கையில் அளவு நார்மலாக இருந்து இன்னொரு கையில் அதிக அளவு வேறுபாடு இருந்தால் நோயாளிக்கு இருக்கும் பிரச்னையை கண்டறிந்து விடலாம்.

பெரும்பாலான மருத்துவமனைகளில் நேரம் கருதி அவ்வாறு பார்ப்பதில்லை. ஏதாவது ஒரு கையில்தான் சோதிக்கிறார்கள். வலது கையில் பார்க்கும் போது இருக்கும் அளவை விட இடது கையில் பார்க்கும் போது 5 முதல் 10 என்ற அளவில் ரத்த அழுத்தத்தில் வேறுபாடு இருக்கும். 10க்கு மேல் அளவுகளில் மாறுபாடு இருந்தால், அவரது ரத்தக்குழாய்களில் அடைப்போ அல்லது இதய நோய் வருவதற்கான வாய்ப்போ இருக்கிறது என்று அர்த்தம். கைகளில் மட்டுமல்ல...

கால்களிலும் ரத்த அழுத்த அளவை கண்டுபிடிக்கலாம். கைகளில் அளக்கும் போது உள்ள ரத்த அழுத்த அளவை விட கால்களில் அளக்கும் போது 10 முதல் 20 வரை அளவுகள் மாறுபடும். அதற்கு மேல் அதிகமாக இருக்கக் கூடாது. ரத்த அழுத்தமானது, 140/90 mmHg அளவுக்கு அதிகமாக சென்றால் அதைத்தான் உயர் ரத்த அழுத்தம் என்கிறோம்.

டெங்கு காய்ச்சல், தீவிர வயிற்றுப்போக்கு, அதிர்ச்சி தருணங்களின் போது 90/70mmHg அளவுக்கு கீழே கூட ரத்த அழுத்தம் சென்று ஆபத்தை ஏற்படுத்தும். இன்று ரத்த அழுத்தத்தை கண்டறிய பல நவீன கருவிகள் வந்துவிட்டன. மிக எளிய முறையில் ரத்த அழுத்தத்தை இன்று கண்டறிந்துவிடலாம். அதனால், எந்த கையில் பார்க்கலாம் என கவலைப்படத் தேவையில்லை.’’கைகளில் மட்டுமல்ல... கால்களிலும் ரத்த அழுத்த அளவை கண்டுபிடிக்கலாம்!


Similar Threads: