Cardio Pulmonary Resuscitation-உயிர் காக்கும் எளிய சிகிச்சை!

Cardio Pulmonary Resuscitation...இந்தப் பெயரைப் பார்த்தால் ஏதோ முக்கியமான உயர்சிகிச்சையாக இருக்கும் என்று தோன்றுகிறதுதானே... இது நாம் ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டிய எளிய முதல் உதவி சிகிச்சை என்கிறார் இதய சிகிச்சை மருத்துவரான ஹரிகிருஷ்ணன்.கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்களேன், டாக்டர்!‘‘சில அசாதாரண சூழலில் இதயமும் நுரையீரலும் செயலிழக்கும்போது கொடுக்கப்படும் சிகிச்சைதான் Cardio Pulmonary Resuscitation. இதை சுருக்கமாக CPR என்று சொல்வோம். இதில் கார்டியோ என்பது இதயத்தையும், பல்மோனரி என்பது நுரையீரலையும் குறிக்கும். அதாவது, இதயம் மற்றும் நுரையீரல் தொடர்பான உயிர்காக்கும் சிகிச்சை என்று அர்த்தம்’’ இதயமும் நுரையீரலும் ஒரே கணத்தில் செயலிழக்குமா?‘‘இது ஒன்றுக்கொன்று தொடர்புடைய சங்கிலித் தொடர் நிகழ்ச்சி. மாரடைப்பின்போது இதயத்தின் தசைகள் வலுவிழந்து, மின்திறன் குறைந்து துடிப்புகள் அடங்கும். இதனால் இதயத்தில் இருந்து மூளைக்குச் செல்லும் ரத்தம் ஓட்டம் குறையும். உடலின் மற்ற உறுப்புகள் எல்லாம் ரத்த ஓட்டம் இல்லாமல் சில நிமிடங்களுக்காவது தற்காத்துக் கொள்ளும் திறன் கொண்டவை.


ஆனால், ரத்த ஓட்டம் இல்லாமல் 3 நிமிடங்களுக்கு மேல் மூளையால் தாக்குப் பிடிக்க முடியாது. மூளை செயலிழந்துவிட்டால் மற்ற உறுப்புகளுக்குத் தகவல் பரிமாற்றம் கிடைக்காமல் நுரையீரல் உள்பட மற்ற உறுப்புகளும் செயலிழந்துவிடும். அதனால், ஒருவர் மயங்கி விழுந்தவுடன் தாமதிக்காமல் சி.பி.ஆர். செய்ய வேண்டும்.’’

யார் யாருக்கு சி.பி.ஆர். கொடுக்க வேண்டும்?

‘‘மாரடைப்பு வந்தவர்கள், விபத்தால் ரத்த இழப்பு ஏற்பட்டவர்கள், மின்சாரத் தாக்குதலுக்கு ஆளானவர்கள், நச்சுக்காற்றை சுவாசித்து மயங்கியவர்கள், தண்ணீரில் மூழ்கியவர்களுக்கு சி.பி.ஆர். செய்யலாம். வாந்தி பேதியின் போதோ, சிறுநீரகக் கோளாறின் போதோ ஏற்படும் உப்புச்சத்து குறைபாடு, உயரமான மலைப்பிரதேசங்களுக்குச் செல்லும்போது ஏற்படும் பருவநிலை மாற்றம், தீக்காயங்கள் ஏற்படுவது போன்ற நேரங்களில் மயக்கமாகும்போதும் சி.பி.ஆர். செய்யலாம்.’’

ஒருவருக்கு சி.பி.ஆர். தேவைப்படுவதை எப்படி தெரிந்துகொள்வது?‘‘நம் கண் முன்னால் ஒருவர் மயக்கமாகி கீழே விழுகிறார் என்றால் சத்தமாக அவரைக் கூப்பிட வேண்டும். பதில் வராவிட்டால் உலுக்கிப் பார்க்க வேண்டும். அப்படியும் எந்த எதிர்விளைவு இல்லாதபட்சத்தில், மூச்சுவிடுகிறாரா என்பது மார்பு ஏறி இறங்குவதிலேயே தெரிந்துவிடும்.

அவர் மூக்கின் அருகில் நம் கைகளை வைத்துப் பார்த்தாலும் சுவாசம் வருகிறதா என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். நாடித்துடிப்பு தெரிந்தவர்கள் பல்ஸ் பார்க்கலாம். இத்தனையையும் தாண்டி, நிலைமை நெருக்கடியாக இருக்கிறது என்பதை உணர்ந்தால், தாமதிக்காமல் ஆம்புலன்ஸை கூப்பிட வேண்டும். ஆம்புலன்ஸ் வரும் வரை அல்லது மருத்துவ உதவி கிடைக்கும் வரையில் நாம் செய்ய வேண்டிய முதல் உதவிதான் சி.பி.ஆர்.’’

சி.பி.ஆர். எப்படி செய்ய வேண்டும்?‘‘ஒருவர் மயக்கமாகி விழுந்தால், நெஞ்சின் மீது கை வைத்து அழுத்தமாகத் தேய்க்க வேண்டும். இந்த அழுத்தம் நெஞ்சுக்குக் கீழே 5 செ.மீக்குக் கிடைக்கும் வகையில் இருக்க வேண்டும். இதற்கு `கார்டியாக் மசாஜ்’ என்று பெயர். இந்த அழுத்தத்தின் மூலம் இதயத்துக்கு மின்திறன் கொடுத்து ரத்தத்தை மூளைக்கு அனுப்ப முயற்சிக்கிறோம். திரைப்படங்களில் காட்டுவது போல வாய் மீது வாய் வைத்துக் காற்றைக் கொடுக்கவும் முயற்சி செய்யலாம்...’’

உதவிக்குச் செல்கிறவர்கள் பின்பற்ற வேண்டிய விஷயங்கள்?‘‘இதுபோன்ற இக்கட்டான நேரத்தில் இன்னொருவரை உதவிக்கு அழைப்பது முக்கியமானது. ஒருவர் இதயத்தின் மீது அழுத்தம் கொடுக்கவும், மற்றொருவர் சுவாசம் கொடுக்கவும் தேவை. ஒருவரே இரண்டு வேலைகளையும் ஆம்புலன்ஸ் வரும் வரை செய்ய முடியாது.

பாதிக்கப்பட்டவரை அடிப்பது, குத்துவது போன்ற முரட்டுத்தனமான வழிகளில் கையாளக் கூடாது. மயக்கமானவருக்கு சோடாவோ, தண்ணீரோ கொடுக்கக் கூடாது. அது மூச்சுக்குழாய்க்குள் சென்றால் பிரச்னை இன்னும் பெரிதாகிவிடும். பாதிக்கப்பட்டவரை தரையில் படுக்க வைக்கும்போது தலையணை வைக்கக் கூடாது. தலைக்கு ரத்தம் போகும் வகையில் கிடைமட்டத்தில் (ஃப்ளாட்) படுக்க வைக்க வேண்டும். இதன்பிறகே, சி.பி.ஆர். தொடங்க வேண்டும்.

முன்பின் தெரியாதவர்களுக்கு வாய் மீது வாய் வைத்து காற்று கொடுக்க முயற்சிக்கக் கூடாது. ஒருவேளை அவர் விஷம் சாப்பிட்டிருக்கலாம், ஹெச்.ஐ.வி. நோயாளியாக இருக்கலாம். இது போன்ற அறியாச் சூழல்களில் நமக்கும் அந்த பாதிப்பு வந்துவிடும். மின் தாக்குதல், நச்சுக்காற்று இருக்கிற இடத்தில் ஒருவர் மயங்கிக் கிடந்தால், அந்த இடத்துக்குத் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன்தான் உதவிக்கு செல்ல வேண்டும். இல்லாவிட்டால், காப்பாற்றச் செல்கிறவருக்கும் ஆபத்து.’’

அனைவரும் சி.பி.ஆர். அறிந்து வைத்திருப்பது அவசியமா?‘‘சி.பி.ஆர். சிகிச்சையை வெளிநாடுகளில் பெரும்பாலும் எல்லோருமே தெரிந்து வைத்திருப்பார்கள். ஓட்டல், ரயில்வே ஸ்டேஷன், சூப்பர் மார்க்கெட் என்று முக்கியமான இடங்களில் வேலை பார்க்கிறவர்களுக்கும் கற்றுக் கொடுத்திருப்பார்கள். கஸ்டமருக்கு ஆபத்து ஏற்பட்டால் உடனடியாகக் காப்பாற்ற வேண்டும் என்கிற அளவுக்கு அங்கு
விழிப்புணர்வு இருக்கிறது.

அதனால் நம் நாட்டிலும் எல்லோரும் இதைத் தெரிந்துகொள்வது நல்லது. பள்ளி, கல்லூரி அளவில் மாணவப்பருவத்திலேயே கற்றுக் கொடுப்பது இன்னும் சிறந்தது. அப்போதுதான் நமக்கு அருகில் யாராவது உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தால் உடனடியாக சி.பி.ஆர். செய்து காப்பாற்ற முடியும்.’’மருத்துவர்கள் எப்படி சி.பி.ஆர். கொடுப்பார்கள் ?‘‘ஆம்புலன்சில் அழைத்துச் செல்லும்போதோ, மருத்துவமனைகளிலோ
ஆக்சிஜன் மாஸ்க் மூலம் சுவாசம் கொடுப்பார்கள்.

மூக்கின் வழியாக மூச்சுக்குழாயில் டியூப் செலுத்தியும் ஆக்சிஜனை அனுப்புவார்கள். சுவாசத்துக்காக டியூப் போட்ட பிறகு வென்டிலேட்டர் வைத்துவிடுவார்கள். இதயம் துடிப்பதற்காக மருந்துகள் கொடுப்பார்கள். இந்த குறுகிய இடைவெளியிலேயே எதனால் இதயத் துடிப்பு நின்றது என்ற காரணத்தைக் கண்டறிந்து அதை சரி செய்ய வேண்டும். முடியாதபட்சத்தில், இதயத்துடிப்புக்காக பேஸ்மேக்கர் வைப்பார்கள். இந்த பேஸ்மேக்கர் இதயத்துக்கு கரன்ட் தந்து துடிக்க வைக்கும்.

இப்போது இன்னும் அட்வான்ஸ்டாக, செயற்கை இதயம் வைக்கிறார்கள். இது உடனடியாக செய்ய முடியாது. நோயாளியின் உடலமைப்பு, நிலைமையை ஆராய்ந்துதான் பொருத்த முடியும். வெளிநாடுகளில் சி.பி.ஆர். கொடுக்க எந்திரம் இருக்கிறது. நோயாளியின் மார்பில் பொருத்திவிட்டால் அது தானாகவே சி.பி.ஆர். செய்து கொண்டிருக்கும். இதயத்துடிப்பை மீண்டும் கொண்டு வர எலெக்ட்ரிக் ஷாக் கொடுக்கவும் எந்திரம் இருக்கிறது.’’

சி.பி.ஆர். சிகிச்சையை வெளிநாடுகளில் பெரும்பாலும் எல்லோருமே தெரிந்துவைத்திருப்பார்கள். ஓட்டல், ரயில்வே ஸ்டேஷன், சூப்பர் மார்க்கெட் என்று முக்கியமான இடங்களில் வேலை பார்க்கிறவர்களுக்கும் கற்றுக் கொடுத்திருப்பார்கள். கஸ்டமருக்கு ஆபத்து ஏற்பட்டால் உடனடியாகக் காப்பாற்ற வேண்டும் என்கிற அளவுக்கு அங்கு விழிப்புணர்வு இருக்கிறது...


Similar Threads: