முப்பதுகளின் தொடக்கத்திலேயே மூட்டுவலி!


வலியில்லா வாழ்வு

‘‘காலை எழுந்திருக்கும் போது முழங்கால், கை, இடுப்பு போன்றவற்றை இலகுவாக இயக்க முடியாமல் இறுக்கிப் பிடித்தது போல் இருக்கிறதா? இரவில் வலி தாங்காமல் வலி நிவாரண ஜெல்களையும் மாத்திரைகளையும் அதிகமாக பயன்படுத்தத் தொடங்கிவிட்டீர்களா? அப்போது நீங்கள் மூட்டுவலி நோயின் ஆரம்ப நிலையில் இருக்கிறீர்கள்’’ என்கிறார் முழங்கால் மற்றும் இடுப்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் எஸ்.ஆறுமுகம்.

``மூட்டுத் தேய்மானம் வயதானவர்களுக்கு சொந்தமானது என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். இப்போது மால்களிலும், துணிக்கடை, நகைக்கடை போன்றவற்றில் வேலை பார்க்கும் விற்பனை நபர்கள் 8 மணி நேரத்துக்கு மேல் நின்றுகொண்டே வேலை பார்க்கும் நிலை ஒருபுறம் என்றால், கணினி முன்பு நாள் முழுவதும் உட்கார்ந்தே வேலை செய்பவர்களும் இருக்கிறார்கள்.

இதுபோன்ற வாழ்க்கை முறையால் முப்பதுகளின் தொடக்கத்திலேயே மூட்டுவலிக்கான அறிகுறி எட்டிப்பார்க்கத் தொடங்கி விடுகிறது. அது பற்றி அக்கறை எடுத்துக் கொள்ளாமல் வலி அதிகமாகி நிலைமை மோசமடையும் போதுதான் மருத்துவரிடம் சிகிச்சைக்கு வருகிறார்கள்...’’ என்கிற டாக்டர், ‘Life long Knee Campaign’ என்கிற விழிப்புணர்வு பிரசாரத்தையும் நடத்துகிறார்.

``இதில் முதற்கட்ட சிகிச்சையாக மூட்டுவலியின் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு பிஸியோதெரபி பயிற்சிகள் மற்றும் வாழ்வியல் மாற்றங்களை சொல்லித் தருகிறோம். இவற்றோடு நீச்சல், சைக்கிளிங், உடற்பயிற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ளும் போது பூரண குணமடைய வாய்ப்புண்டு. இரண்டாம் கட்ட சிகிச்சை முறையாக ஜாயின்ட் சப்ளிமென்ட் மாத்திரைகள் கொடுக்கிறோம். மூட்டு இணைப்புகளில் தேய்மானத்தைத் தடுக்கக்கூடிய சைனோவியல் திரவம் (Synovial fluid) இயற்கையாக உற்பத்தியாகும்.

இந்த திரவத்தின் உற்பத்தி குறையும் போது தேய்மானம் ஏற்படுகிறது. நோயாளிகளுக்கு சைனோவியல் திரவத்தை ஊசி மூலம் மூட்டுகளில் செலுத்துவதன் மூலம், வலியில்லாத பழைய நிலைக்கு நோயாளி திரும்பலாம். சிலர் மூட்டு தேய்மானத்தால் கால்கள் முன்பக்கம் மற்றும் பக்கவாட்டில் வளைந்து மிக மோசமான நிலையில் இருப்பார்கள்.

இவர்களுக்கு மூன்றாம் கட்ட சிகிச்சையான மூட்டுமாற்று அறுவை சிகிச்சையைத் தவிர வேறு தீர்வு இல்லை. பழைய முறையில் சேதமடைந்த குருத்தெலும்பு மற்றும் மூட்டு எலும்புகளை எடுத்துவிட்டு, உலோகம், பிளாஸ்டிக், செராமிக் போன்ற செயற்கைப் பொருட்களால் ஆன செயற்கை மூட்டை அறுவை சிகிச்சை செய்து பொருத்துவோம். இது சுமார் 20 வருடம் வரைதான் நீடிக்கும் என்பதால் 60-65 வயதுக்கு மேல் இருப்பவர்களுக்கு இம்முறைப்படி மூட்டு எலும்பை மாற்றுவோம்.

இப்போது அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முழங்கால் மூட்டு துல்லியமாக வடிவமைக்கப்பட்டு பொருத்தப்படுவதால், முழுமையான அறுவை சிகிச்சை சாத்தியமாகிறது. நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டு அறுவை சிகிச்சை செய்து கொள்வோருக்கு, 30 ஆண்டுகளுக்கு மேல் முழங்காலில் எந்தத் தொந்தரவும் ஏற்படாது என்பதால், முழங்கால் வலிக்கு உள்ளாகும் 35 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இந்த சிகிச்சை முறை வரப்பிரசாதமே. அறுவை சிகிச்சை நடந்த 10 நாட்களிலேயே இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பலாம்.

சென்னை மாநகரில் உள்ள அனைத்து துறை சிறப்பு மருத்துவர்கள் குழு தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து மாதம் ஒருமுறை நகரின் பல இடங்களில் ‘Life Long Knee’ என்ற இலவச முகாம் நடத்துகிறோம். இந்த முகாமில் ரத்தப் பரிசோதனை, எக்ஸ்ரே, ஸ்க்ரீனிங் என அனைத்து பரிசோதனைகளும் செய்யப்பட்டு, ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு இலவச ஆலோசனைகள், பிஸியோதெரபி சிகிச்சைகளையும் வழங்குகிறோம். வறுமைநிலை மக்களுக்கு முழு சிகிச்சையையும் இலவசமாக அளிக்கிறோம்” என்கிற பயனுள்ள தகவலையும் கூறுகிறார் டாக்டர் ஆறுமுகம்.

மூட்டு இணைப்புகளில் தேய்மானத்தைத் தடுக்கக்கூடிய சைனோவியல் திரவம் இயற்கையாக உற்பத்தியாகும். இந்த திரவத்தின் உற்பத்தி குறையும் போது தேய்மானம் ஏற்படுகிறது. நோயாளிகளுக்கு சைனோவியல் திரவத்தை ஊசிமூலம் மூட்டுகளில் செலுத்துவதன் மூலம் வலியில்லாத பழைய நிலைக்கு நோயாளி திரும்பலாம்.


Similar Threads: