மிரள வைக்கும் ஹீட்ஸ்ட்ரோக்!


அக்னி நட்சத்திரத்தின் அதிரடி ஆரம்பமாகிவிட்டது. பிப்ரவரியிலிருந்து கொளுத்தும் வெயிலுக்கு இது முக்கியமான இன்னிங்ஸ். ஏற்கனவே நூற்றுக்கணக்கானவர்களை பலி கொண்டிருக்கிறது ஹீட் ஸ்ட்ரோக்.

உடலின் வெப்பநிலை இயல்புக்கு மாறாக அதிகரிப்பதும், அதனால் ஏற்படும் உடலியல் மற்றும் நரம்பியல் மாற்றங்களுமே ஹீட் ஸ்ட்ரோக் எனப்படுகிறது.

நம் உடல் இயல்பாகவே அதிக வெப்பத்தை சருமம் வழியாகவும் வியர்வையின் வாயிலாகவும் வெளியில் அனுப்பிவிடுகிறது. அது இயலாதபோதும், உடலில் நீர்ச்சத்து அநியாயத்துக்குக் குறைந்தாலும் இந்தப் பிரச்னை வருகிறது.

குமட்டல், வாந்தி, மயக்கம், உடல் பலவீனம், தலைவலி, தசைப்பிடிப்பு போன்றவையே அறிகுறிகள்.

பிரச்னை தீவிரமாகும்போது உடல்சூடு, வியர்வையே சுரக்காமல் இருப்பது, நாடித்துடிப்பு அதிகரிப்பது, மூச்சு விடுவதில் சிரமம், சருமம் உலர்ந்து சிவப்பது, என்ன நடக்கிறது என்பதே தெரியாத குழப்பம் என நேரும்.

ஹீட் ஸ்ட்ரோக் உடல் உறுப்புகளை பாதித்து பெரும் ஆபத்தை விளைவிக்கும். முறையாக கவனிக்காமல் விட்டால் மரணமும் நேரும். உடனடி சிகிச்சையே முக்கியம்!

வருமுன் காப்பதே உயர்ந்த சிகிச்சை. தண்ணீர், இளநீர், ஜூஸ் என அவ்வப்போது குடிக்கவும். கொளுத்தும் வெயிலில் செல்வதையும், வெப்பமான சூழலில் இருப்பதையும் இயன்றவரை தவிர்க்கவும். நிறைய வியர்த்தால், எலெக்ட்ரோலைட் போன்ற நீர்ச்சத்து பானங்கள் கரைத்துக் குடிக்கவும். அடர் வண்ணமில்லாத ஆடைகள் அணியவும்; தலைக்கு தொப்பி
முக்கியம்.

குழந்தைகள், முதியோர்கள், விளையாட்டு வீரர்கள், வெயிலில் வேலை பார்ப்பவர்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

உடல் சூட்டை தணிப்பது முதல் காரியம். பாதிக்கப்பட்டவரை நிழலான இடத்தில் படுக்க வைத்து, இறுக்கமான உடைகளைத் தளர்த்தி, குளிர்ந்த நீரை உடலில் தெளிக்க வேண்டும். தலையைவிட கால்கள் உயர்த்தி இருக்குமாறு படுக்க வேண்டும். மின்விசிறிக் காற்று பட வேண்டும்; அல்லது விசிற வேண்டும். முடிந்தால் அக்குள், தொடை போன்ற இடங்களில் ஐஸ் ஒத்தடம் தரலாம். நீர்ச்சத்தை ஈடுகட்ட ஏதாவது பானங்கள் தரலாம்.

Similar Threads: