உண்ணா நோன்பும் எண்ணா நோன்பும்!


விரதம் நல்லது!


விரதம் இருப்பதற்கு மருத்துவரீதியாகப் பலன்கள் இருக்கிறது என்று இன்றைய மருத்துவம் ஒப்புக் கொண்டிருக்கிறது. அதேபோல, மவுன விரதத்துக்கும் பலன்கள் உண்டா? சித்த மருத்துவர் காசிப்பிச்சையிடம் கேட்டால் ‘நிச்சயம் உண்டு’ என்கிறார் அழுத்தமாக!

‘‘நம் முன்னோர் ‘வாயைக் கட்டி நோயைக் கட்டு’ என்று சொல்லியிருக்கிறார்கள். இந்தப் பழமொழி உண்ணா நோன்பு இருக்க வேண்டும் என்பதற்காக மட்டும் சொல்லப்பட்டதல்ல. எண்ணா நோன்பு என்கிற மவுன விரதமும் இருக்க வேண்டும் என்பதற்காகவும்தான்.
மனிதனின் சராசரி ஆயுள் 300 ஆண்டுகள். இன்றோ 63 ஆண்டுகள் என்று மிகப்பெரிய வீழ்ச்சி அடைந்திருக்கிறது. இந்த இழப்பை ஈடுகட்ட விரதம் உதவுவதைப் போலவே மவுன விரதமும் உதவும்.

பேசும்போது நம் உடலின் சக்தியை இழக்கிறோம். அதனால்தான் மேடையில் ஆவேசமாகப் பேசிவிட்டு உடனே சோடா கேட்கிறார்கள். ‘பேசிப் பேசி ஆவியை வீணாக்காதே’ என்று ஊர்புறங்களில் சொல்வார்கள். அதற்குக் காரணம், பேச்சின் மூலம் நம் உடல்நலமும் ஆயுளும் கெடுகிறது என்பதுதான்.மவுன விரதத்தின் மூலம் இதயநலன் மேம்படுகிறது என்பதை இன்று விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள்.

இதயம் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கும்போது, ‘பேசக் கூடாது’ என்று மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். பார்க்கப் போகிறவர்களையும் ‘பேசக் கூடாது’ என்பார்கள். எதுவும் பேசாமல் இருக்கும்போது மனம் அமைதியாகி, இதயத்துடிப்பு குறைவதை நாமும் உணர்ந்திருப்போம்.

மனிதனின் ஆயுளைத் தீர்மானிக்கும் இதயத்தின் நலன் மேம்படுவது போலவே, உடலின் அனைத்து உறுப்புகளும் புத்துணர்வு அடைகிறது. மவுனமாக இருக்கும்போது மனதிலும் இனம்புரியாத அமைதி, மகிழ்ச்சி தோன்றும். இதை அனுபவித்தால்தான் உணர முடியும். இன்று மன அழுத்தம், டென்ஷன் என்று கூறுகிறவர்கள் ஒருநாள் மவுனவிரதம் இருந்து பார்த்தால் ஆச்சரியப்படுவார்கள்.

இன்றைய அவசர வாழ்க்கையில் வாரம் ஒரு முறை மவுனவிரதம் இருக்க முடியாதுதான். அதனால், மாதம் ஒருமுறையாவது இருக்கலாம். ஏதேனும் விடுமுறை தினத்தை அதற்காகத் தேர்ந்தெடுத்துக் கொள்வதும், எளிமையான உணவுகளையே எடுத்துக் கொள்வதும் சிறந்தது!’’


Similar Threads: