என்ன செய்தால் எவ்ளோ குறையும்?


எந்தெந்த உணவில் எவ்வளவு கலோரி என்பதைத் தெரிந்து உண்ணுகிற பழக்கம் இன்று அதிகரித்திருக்கிறது. எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க விரும்புபவர்கள் குறைவான கலோரி கொண்ட உணவுப் பொருட்களை உட்கொள்வார்கள்.

நமது உடல் இயக்கத்துக்கான எரிபொருளாக விளங்கக்கூடியவை கலோரிகள். உடலில் தங்கும் கலோரிகளை நமது உடல் இயக்கத்தின் மூலம்தான் எரிக்க முடியும். எந்தெந்த செயல்பாடுகள் மூலம் எவ்வளவு கலோரிகளை எரிக்கலாம்? உடற்பயிற்சி மருத்துவ நிபுணர் அரவிந்திடம் கேட்டோம்...

‘‘நாம் உயிர் வாழ்வதற்கென அடிப்படையாக குறிப்பிட்ட அளவு கலோரி தேவை. அந்தத் தேவைக்கு அதிகமாக இருக்கும் கலோரிகள்தான் நமது உடல் இயக்கத்துக்கான உந்து சக்தி யாக இருக்கின்றன.

உணவுகளின் மூலம் நாம் பெறும் கலோரிகளை நமது உடல் இயக்கத்தின் மூலம் எரித்து விட வேண்டும். இல்லையெனில், மிகுதியாகும் அந்த கலோரிகள் பருமனை ஏற்படுத்தும். நடத்தல், ஓடுதல், சைக்கிள் ஓட்டுதல், உடற்பயிற்சி செய்தல் என பல விதங்களில் நமது உடலில் தேங்கும் கலோரிகளை எரித்து சமநிலைக்குக் கொண்டு வர முடியும். வேகம் மற்றும் தூரத்துக்கு ஏற்றாற்போல கலோரி எரிக்கப்படும் அளவும் மாறுபடுகிறது.

65-70 கிலோ உள்ள சராசரி மனிதர் மணிக்கு 4 கிலோமீட்டர் வேகத்தில் நடக்கிறார் என்றால் 200-240 கலோரி எரிக்கப்படும். மணிக்கு 6 கிலோமீட்டர் வேகத்தில் நடந்தால் 350 கலோரிகள் எரிக்கப்படும். மணிக்கு 8 கிலோமீட்டர் வேகத்தில் ஜாக்கிங் சென்றால் அவரது உடலிலிருந்து 500 - 550 கலோரிகளை எரித்து விடுவார். அதுவே மணிக்கு 10 கிலோமீட்டர் வேகம் என்றால் 700 கலோரிகள் எரிக்கப்படும்.

மணிக்கு 15 கிலோமீட்டர் வேகத்தில் சைக்கிள் ஓட்டிச் செல்வதால் 300 கலோரிகளும், மணிக்கு 20 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்போது 450 கலோரிகளும் எரிக்கப்படுகின்றன. உடற்பயிற்சி செய்வதால் கலோரிகள் எரிக்கப்படுவதோடு, உடல் வளர்ச்சிக்காகவும் கலோரிகள் தேவைப்படுவதால் அவை மிகுதியாவதில்லை. இவை சராசரி கணக்குதான். எனவே, நமது அன்றாட வாழ்க்கையில் உடல் இயக்கத்தை அதிகப்படுத்த வேண்டும்’’ என்கிறார் அரவிந்த்.