நகச்சுற்றும் எலுமிச்சைப்பழமும்


நகச்சுற்றுக்கு எலுமிச்சைப்பழம் செருகுவது சரியான சிகிச்சையா?

ஐயம் தீர்க்கிறார் பொது நலமருத்துவர் நிரஞ்சனா தேவி...நகத்திற்கு கீழே உள்ள சருமப் பகுதியில் அழுக்கு சேர்ந்து கொண்டே இருக்கும். நம்மில் பலர் சாப்பிட்ட பிறகும், வேலை செய்த பிறகும், வெளியே சென்று விட்டு வந்த பிறகும் கைகளை சோப்பு போட்டு சுத்தமாக கழுவுவது கிடையாது. இதனால் சருமப் பகுதியில் அழுக்கு சேர்ந்து தொற்று ஏற்பட்டு, அந்த இடத்தைச் சுற்றிலும் சீழ் பிடித்து நகச்சுற்று உண்டாகுகிறது.

நகச்சுற்று வர நகம் கடிக்கும் பழக்கமும் ஒரு காரணம். நகத்தைக் கடிக்கும்போது, அதனைச் சுற்றியுள்ள சருமத்தையும் சேர்த்து கடித்து விடுவதால் அந்த இடத்தில் தொற்று உண்டாகி நகச்சுற்று வருகிறது.

துணிகளை துவைத்தல், பாத்திரம் கழுவுதல் என நீண்ட நேரம் தண்ணீரில் வேலை செய்பவர்களும், கட்டிடத் தொழிலாளர்களும் வேலை முடிந்த பிறகு, கைகளை சோப்பு மற்றும் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்வது கிடையாது. இதனாலும் நகச்சுற்று ஏற்படுகிறது. சர்க்கரை நோயாளிகள் நீண்ட நேரம் தண்ணீரில் கைகளை வைத்து இருந்தால் பூஞ்சைத் தொற்று உண்டாகி, நகத்தை சுற்றியுள்ள இடத்தில் வீக்கம் ஏற்படும். ஆனால், சீழ் பிடிக்காது.

தொற்று, அழுக்கு காரணமாக ஏற்படுகிற நகச்சுற்றை குணப்படுத்த ஆன்ட்டிபயாடிக் மாத்திரைகளை எடுக்க வேண்டும். நகச்சுற்று ஏற்பட்டுள்ள விரலை வெதுவெதுப்பான வெந்நீரில் சிறிதுநேரம் வைத்திருக்க வேண்டும். நகச்சுற்று உள்ள இடத்தில் வெந்நீர் ஒத்தடம் கொடுக்கலாம். நகச்சுற்று வந்துள்ள விரலில் எலுமிச்சைப் பழத்தை செருகிக் கொள்வது சரியான சிகிச்சை முறை கிடையாது.

எலுமிச்சைப் பழத்தை பொருத்துவதால் அந்த விரல் முழுவதும் சீழ் பிடிக்கும். அந்த விரலில் இருந்து சீழ் வெளியே வருவதற்கு பல நாட்கள் ஆகும். அதுபோன்ற நேரங்களில் சீழ் உள்ள இடத்தை சுற்றி கொஞ்சமாக அறுத்து சீழை வெளியே எடுக்க வேண்டும்.

அதன்பின், அந்த இடத்தை சுற்றி ஆயின்மென்ட் தடவி பேண்டேஜ் கட்ட வேண்டும். அந்த இடத்தில் மண், தண்ணீர் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் மூன்று நாளில் நகச்சுற்று குணமாகிவிடும்.’’


Similar Threads: