நடுத்தர மக்களை தாக்கும் குறைபாடு!

வாவ் வைட்டமின்!

நீங்கள் அடிக்கடி வெளியில் சாப்பிடுகிற பழக்கம் உள்ளவரா? அதிலும் பீட்சா, பர்கர் போன்ற துரித உணவுகளை விரும்பி உண்பவரா? பல் துலக்கும்போது ஈறுகளில் ரத்தம் கசிகிறதா? சிறிய காயம் ஏற்பட்டாலும், புண் ஆறாமல் இருப்பதைப் பார்த்து நீரிழிவாக இருக்குமோ என பயப்படுகிறீர்களா?

அடிக்கடி நோய்வாய்ப்படுகிறீர்களா? களைப்பாக உணர்கிறீர்களா? இவை அனைத்துக்கும் காரணம் வைட்டமின் சி குறைபாடு என்பதை அறிவீர்களா? வைட்டமின் சி குறைபாடு இன்னும் என்னவெல்லாம் செய்யும்? அதிலிருந்து எப்படி மீள்வது? விளக்கமாகச் சொல்கிறார் பொது மருத்துவர் கே.ரம்யா.

``அந்தக் காலத்தில் 90 வயது கொண்ட ஆணோ, பெண்ணோ சர்வசாதாரணமாக 3 கிலோமீட்டர் நடப்பார்கள். இன்றோ 10 முதல் 30 வயதினர் அரை கிலோமீட்டர் கூட நடக்க முடியாமல், ஷேர் ஆட்டோ பிடித்துச் செல்லும் நிலையில் உள்ளனர். இதற்கு, வைட்டமின் சி குறைபாடுதான் காரணம்.வைட்டமின் சி குறைபாடு குறித்து, சில ஆண்டுகளுக்கு முன்பே மருத்துவர்கள் ஆய்வு செய்தனர். முதலில் மீனவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

காரணம், அவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றால், குறைந்தது ஒரு வாரம் ஆகும். அப்போது, அவர்களது உணவுப் பழக்கம் பற்றி அறிந்த போது, கடலுக்கு மீன்பிடிக்க செல்லும்போது, அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் கொண்டு செல்வார்கள்.

கடலில் கிடைக்கும் மீன், இறால் போன்றவைகளை பிடித்து, அங்கேயே படகில் அடுப்பு வைத்து சமைத்து சாப்பிடுவதாக தெரிவித்தனர். இயற்கை காய்கறிகள் அவர்களுக்கு கிடைக்காததால், சிறிய காயம் ஏற்பட்டாலும், அந்த புண் ஆறாமல் இருந்தது. இதையொட்டியே அவர்களுக்கு வைட்டமின் சி குறைபாடு இருப்பதைக் கண்டுபிடித்தனர்.

இதைத் தொடர்ந்து ஏழ்மையானவர்கள், நடுத்தர வர்க்கத்தினர், வசதி படைத்தவர்கள் என அனைத்துத் தரப்பினரையும் ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. அவர்களில் ஏழ்மையானவர்களில் பலரிடம் வைட்டமின் சி அதிக அளவில் இருந்தது. நடுத்தர மக்கள் பலருக்கு ‘வைட்டமின் சி’ குறைபாடு இருப்பதும் கண்டபிடிக்கப்பட்டது. காரணம், அவர்கள் சரியான உணவை தேர்ந்தெடுக்காததே.

வைட்டமின் சி குறைவினால் ஏற்படும் பாதிப்புகள்உடலுக்கு சரிவிகித ஊட்டச்சத்துள்ள உணவு மிக அவசியம். சரியான அளவு ஊட்டச்சத்து எவ்வளவு என்பதில்தான் பலருக்கும் சந்தேகம் உள்ளது. குறிப்பிட்ட அளவில் புரதச்சத்து, கொழுப்புச் சத்து, மாவுச் சத்து, தாதுச் சத்து மற்றும் வைட்டமின்கள் போன்றவை சேர்ந்ததுதான் சரிவிகித ஊட்டச் சத்து. எல்லாச் சத்துகளுமே முக்கியமானவை என்றாலும், செல்களின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்துக்கும், நோய் எதிர்ப்பு சக்தி மேம்படுவதற்கும் வைட்டமின் சி மிகவும் அவசியம்.

வைட்டமின் டி போலவே, இதையும் நம் உடல் உற்பத்தி செய்வதில்லை. நீரில் கரையக்கூடியது என்பதால் சேமித்து வைக்கவும் முடியாது. எலுமிச்சை, நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது.நோய் எதிர்ப்பு சக்திக்கும், கொலாஜன் என்ற புரத உற்பத்திக்கும் வைட்டமின் சி மிகவும் அவசியம். இந்த கொலாஜன், லிகமென்ட் என்று சொல்லக்கூடிய எலும்பு மூட்டு சவ்வுகள், ரத்தக் குழாய்கள், தசைகளுக்கு உதவுகிறது.

நம் சருமம் மற்றும் இதர உறுப்புகளின் ஆரோக்கியத்துக்கும் காரணமாக இருக்கிறது. இது மிகச்சிறந்த ஆன்ட்டி ஆக்சிடன்ட். வைட்டமின் சி குறைவின் அறிகுறிகள்
வைட்டமின் ‘சி’ குறைந்தால் ஸ்கர்வி எனப்படுகிற ரத்த நாளங்கள் எளிதில் உடைந்து ரத்தக்கசிவு ஏற்படுதல், பசியின்மை, புண்கள் ஆறாமல் போதல், குழந்தைகளில் கால், தொடைகளில் வலி, வீக்கம், காய்ச்சல், வாந்தி ஆகியவையும், ரத்த சோகையும் உண்டாகும். இந்தியாவில் ஸ்கர்வி அதிகமாக தாக்கியதில்லை. ஆஸ்டியோபொரோசிஸ் (Osteoporosis) எனும் எலும்புச் சிதைவு, எடை குறைதல், அஜீரணம், சருமப் பாதிப்புகள் ஏற்படுகின்றன.

அதிகமும் ஆபத்து!ஒரு நாளுக்கு 100 மி.கி. அளவை தாண்டினாலும் பிரச்னைதான். வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி, மயக்கம், தலைசுற்றல், தலைவலி, தசைப்பிடிப்பு, வாய்ப்புண்கள், சிறுநீரகத்தில் கற்கள் ஆகியவை ஏற்படலாம்.உணவின் மூலம் பெறலாம்!வைட்டமின் ‘சி’ காற்றில் சுலபமாக ஆக்ஸிகரணம் (Oxidation) ஆகிவிடும்.

எனவே, வைட்டமின் சி உள்ள காய்கறிகளை வெட்டி வைத்தாலோ, உலர வைத்தாலோ, அவற்றில் உள்ள வைட்டமின் சி காற்றிலே கரைந்து விடக்கூடும். சூரிய ஒளியாலும் வைட்டமின் சி பாதிக்கப்படும். தண்ணீரில் அதிக நேரம் காய்கறிகளை ஊற வைத்தாலும், அதிக நேரம் வேக வைத்தாலும், வைட்டமின் சி அழிந்து விடும். கூடிய வரை வைட்டமின் சி செறிந்த காய்கறிகளை பச்சையாக உண்பதே நல்லது.

ஏன் தேவை?
வைட்டமின் சியை நமது உடல் தானாகவே தயாரித்துக்கொள்ள முடியாது. உணவிலிருந்துதான் பெற்றுக்கொள்ள வேண்டும். அல்லது மாத்திரைகள் மூலம் எடுத்துக் கொள்ள வேண்டும்.உடல் சீராக வளர உதவும். எலும்புகளும் பற்களும் உருவாக உதவும். புரதத்துடன் இணைந்து திசுக்களின் வளர்ச்சியிலும் அமைப்பிலும் பங்கேற்கும்.நோய் தடுப்பு சக்தியை அதிகரிக்கிறது. உடலின் நச்சுப்பொருட்களை வெளியேற்ற உதவுகிறது. பாக்டீரியா, வைரஸ் கிருமிகளால் உண்டாகும் தொற்றுநோய்களை தடுக்கிறது.

அடிபட்டதால் ஏற்படும் காயங்கள், தீப்புண்களை விரைவாகக் குணமாக்குகிறது. தசைநார்கள், எலும்புகள், செல், திசுக்கள், பற்கள், ஈறுகள் ஆகியவற்றையெல்லாம் இணைக்கும் முக்கியமான பொருள் கொலாஜன் (Collagen). இதை தயாரிப்பதும் வைட்டமின் ‘சி'யே!உணவிலிருந்து இரும்புச்சத்தை உடல் கிரகிக்க வைட்டமின் ‘சி' உதவுகிறது. அதே போல் கால்சியத்தை உடல் ஏற்றுக் கொள்ளவும் உதவுகிறது.ஜலதோஷத்தை ஓரளவு கட்டுப்படுத்த உதவுகிறது.

தீவிரமான காய்ச்சல் அல்லது அறுவைசிகிச்சைக்குப் பிறகு, உடல் ஆற்றல் பெற உதவும் சிறந்த டானிக். தங்கம் போன்ற வைட்டமின் சி, நோய் களைத் தடுக்கும் பாதுகாப்பான். ஆராய்ச்சிகளின் மூலம் இதன் புதிய பயன்கள் மேலும் மேலும் கண்டுபிடிக்கப்பட்டு
வருகின்றன. இந்த வைட்டமின் அஸ்கார்பிக் அமிலம் (Ascorbic acid) என்றும் அழைக்கப்படுகிறது.

தினசரி தேவை (வைட்டமின் சி)
ஆண், பெண் - 40லிருந்து 75 மி.கி.
பாலூட்டும் தாய்மார்கள் - 80லிருந்து 95 மி.லி.
குழந்தைகள் (0-12 மாதங்கள்) - 25 மி.கி.
சிறுவர்கள் (1லிருந்து 18 வரை) - 40 மி.கி.

முளை கட்டலாம்!

தானியம், பருப்பு வகைகளில் வைட்டமின் சி இல்லையென்றே சொல்லலாம். ஆனால், முளை கட்டிய (Sprouted) தானியங்களில் இது அதிகம் இருக்கிறது. தானியங்களை முளை கட்டுவதற்கு 24 மணி நேரம் நீரில் நனைத்து, வடிகட்டி ஈரத்துணியில் பரப்பி, ஈரத்துணியால் மூடி வைக்க வேண்டும். இரண்டு மூன்று நாட்களில் 1 (அ) 2 செ.மீ. நீளமாக முளை வரும்.

முளைகட்டிய முழு கடலைப்பருப்பு (கொத்துக்கடலை), பஞ்ச காலங்களில் வைட்டமின் சி குறைபாடுகளை போக்க மிகவும் உதவியது. இந்த பருப்பை விட 3 மடங்கு அதிகம் வைட்டமின் சி நிறைந்த பருப்பு முளைகட்டிய பாசிப்பயறு. முளைகட்டிய தானியங்களை பச்சையாகவும், குறைவாகவும் சமைத்து உண்பது நல்லது.

அன்றும் இன்றும் என்றும் நெல்லி!

வைட்டமின் சி யின் நற்குணம், அது மலிவாகவும் எளிதாகவும் கிடைக்கும் நெல்லிக்காயில் அபரிமிதமாக இருப்பதுதான். ஆரஞ்சு ஜூஸை விட நெல்லிக்காயில் 20 மடங்கு வைட்டமின் சி அதிகம். நெல்லிக்காயை உலர வைத்தாலும், சமைத்தாலும் அதில் உள்ள வைட்டமின் குறைவதில்லை!

எல்லாச் சத்துகளுமே முக்கியமானவை என்றாலும், செல்களின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்துக்கும், நோய் எதிர்ப்பு சக்தி மேம்படுவதற்கும் வைட்டமின் சி மிகவும் அவசியம்.


Similar Threads: