Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine Jan 2018! | All Issues

User Tag List

Like Tree1Likes
 • 1 Post By chan

முதுகுவலிக்குத் தீர்வு என்ன?


Discussions on "முதுகுவலிக்குத் தீர்வு என்ன?" in "Health" forum.


 1. #1
  chan's Avatar
  chan is offline Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  chennai
  Posts
  17,568

  முதுகுவலிக்குத் தீர்வு என்ன?

  முதுகுவலிக்குத் தீர்வு என்ன?

  வெளிப்பக்கம் காணப்படும் உடல் பகுதிகளில் முகம் பார்க்கும் கண்ணாடி இல்லாமல் நம்மால் பார்க்கமுடியாத ஒரு முக்கியப் பகுதி முதுகு. தடித்த சருமம், பரந்து விரிந்த தசைகள், நீண்ட தசை நாண்கள், பலதரப்பட்ட எலும்புகள், மூளைத்தண்டுவட நரம்புகள் என்று பல கலவையால் ஆன ‘கூட்டுக்குடும்பம்’ இது. கழுத்து, தோள்பட்டை எலும்பு, மேல் முதுகு, மத்திய முதுகு, கீழ் முதுகு என்று பல பகுதிகளைக் கொண்டது இது.

  மேல் முதுகுமுது கெலும்பின் மேல் பகுதியான கழுத்துக்கும், கீழ் முதுகுக்கும் நடுவில் அமைந்துள்ளது மேல் முதுகு. இந்தப் பகுதியில் உள்ளவை மார்பு முள்ளெலும்புகள் (Thoracic Vertebrae). இவை எண்ணிக்கையில் மொத்தம் பன்னிரண்டு. இவை சற்றே பின்புறமாக வளைந்திருக்கும். ரொம்பவே வளைந்துவிட்டால் அதைக் ‘கூன்’ என்கிறோம்.

  இந்தப் பகுதியில் முதுகெலும்பின் அசைவு மிகவும் குறைவுதான். என்றாலும், இந்த எலும்புகளோடு இணைக்கப்பட்டுள்ள விலா எலும்புகள் எந்நேரமும் அசைந்து கொண்டிருக்கின்றன.

  நாம் பிறந்ததும் முதல் மூச்சை இழுப்பதிலிருந்து இறுதி மூச்சு வரை நம்மையும் அறியாமல் நிமிடத்துக்கு 18லிருந்து 20 தடவை இந்த விலா எலும்புகள்தான் அசைந்து கொண்டே இருக்கின்றன. அதிலும் நாம் தும்மும்போது, இருமும்போது, விழுந்து விழுந்து சிரிக்கும்போது இந்த விலா எலும்புகள் வேகமாகவே அசையும்; இப்படி அசைவதன் பலனாக சுவாசத்துக்குத் துணைபோகின்றன.

  மேல் முதுகுப் பிரச்னைகள்பெரும்பாலும் மேல் முதுகில் ஏற்படும் பிரச்னை தசை சுளுக்கு காரணமாகவே இருக்கும். விபத்தின் மூலம் முதுகெலும்பு களில் அடிபடுதல், தோள்பட்டை வலி, விலா எலும்பு முறிவு, ரத்தம் கட்டுதல், விலா குருத்தெலும்பு வீக்கம் போன்ற பிரச்னைகளும் வரலாம்.

  மேல் முதுகில் வலி உண்டாகி இருமலும் இருந்து இவை இரண்டு வாரங்களுக்கு மேல் நீடித்தால், அது காசநோயாக இருக்கலாம். மேல் முதுகெலும்புகளில் பலமாக அடிபட்டு அவை நொறுங்கிப் போனாலோ, அங்கு செல்லும் முதுகுத்தண்டுவட நரம்புகள் பாதிக்கப்பட்டாலோ, அடிபட்ட உடல் பகுதிக்குக் கீழ் உள்ள பகுதிகள் எல்லாமே செயலிழந்துவிடும். அந்த இடங்களில் உணர்ச்சி இல்லாமல் போகும். இந்த பாதிப்பு களை சரி செய்வது மிகவும் சிரமம்.

  கீழ் முதுகுமார்பு முள்ளெலும்புத் தொடருக்கும் இடுப்பெலும்புக் கட்டுக்கும் (Pelvis) இடையில் உள்ள பகுதியைக் கீழ் முதுகு (Low back) என்கிறோம். இதில் ஐந்து கீழ் முதுகு முள்ளெலும்புகள் (Lumbar vertebrae) ஒன்றோடொன்றாக கோர்க்கப்பட்டு, சற்று முன்புறமாக வளைந்துள்ளன. மேல் முதுகு சற்றே பின்பக்கமாக வளைந்துள்ளதைச் சரிசெய்யவே இந்த எலும்புகள் முன்பக்கமாக வளைந்துள்ளன.

  முதுகெலும்பிலேயே அதிக அசைவு உள்ள பகுதி கீழ் முதுகுதான். முன்பக்கம் குனிவது, பின்னால் சாய்வது, வலப்பக்கம் இடப்பக்கம் என உடலைச் சுழற்றுவது…. இப்படிப் பல அசைவுகளை நம்மால் எளிதாக செய்யமுடிவதற்கு முக்கியக் காரணம் இங்குள்ள எலும்புகள்தான்.

  சர்க்கஸ், நாட்டியம், மலை ஏறுதல், டென்னிஸ் போன்ற விளையாட்டு என பலவற்றுக்கும் இவை தருகின்ற அசைவுகள்தான் மூல காரணம். மேலும், உடல் எடை அதிகமாக இருந்தால் அதையும் இந்த எலும்புகள்தான் தாங்க வேண்டும். தலையில், தோளில், முதுகில் சுமக்கப்
  படும் சுமையைத் தாங்குவதும் இவற்றின் பணிதான்.

  கீழ் முதுகெலும்புகளை ‘லம்பார்’ எலும்புகள் என்கிறோம். இவற்றை எல்-1, எல்-2, எல்-3. எல்-4, எல்-5 என்று குறிப்பிடுகிறோம். எல்-5 எலும்பு அதற்குக் கீழ் உள்ள `சேக்ரம்’ எலும்புடன் இணைகிறது. எல்-1 மற்றும் எல்-2 எலும்புகளைச் சார்ந்த நரம்புகள் இடுப்பை மடிக்க உதவுகின்றன. எல்-3 மற்றும் எல்-4 எலும்புகளைச் சார்ந்த நரம்புகள் முழங்கால் மூட்டை அசைக்க உதவுகின்றன. எல்-5 நரம்புகள் கணுக்கால் அசைவுக்குப் பயன்படுகின்றன.


  கீழ் முதுகு வலிமனித வாழ்க்கையில் ஏதேனும் ஒரு நேரத்திலாவது கீழ் முதுகு வலியால் அவதிப்படாமல் இருக்க முடியாது. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் வலிகளுக்காக சிகிச்சை பெறும் பிரச்னைகளில் கீழ் முதுகு வலி (Low Back Pain) என்பது இரண்டாம் இடத்தில் உள்ளது.
  காரணங்கள்காய்ச்சல் என்பது ஒரு நோயின் அறிகுறி என்பது போலவே, கீழ் முதுகு வலியும் ஏதோ ஒரு நோயின் அறிகுறிதானே தவிர இதுவே ஒரு தனிப்பட்ட நோயல்ல!

  இந்த வலிக்குப் பல காரணங்கள் உண்டு. இந்தப் பகுதியைச் சார்ந்த எலும்புகள், தசைகள், தசைநாண்கள், இடைவட்டு (Inter Vertebral Disc) எனப்படும் ஜவ்வு ஆகியவற்றில் ஏற்படுகிற பிரச்னைகளை முதன்மைக் காரணங்களாகச் சொல்லலாம்.

  சில நேரங்களில் வயிற்றில் ஏற்படும் பிரச்னைகளாலும் கீழ் முதுகில் வலி உண்டாகலாம். உதாரணத்துக்கு, சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப் பையில் கல் உள்ளவர்களுக்குக் கீழ் முதுகில் வலி ஆரம்பித்து முன் வயிற்றுக்குச் செல்லும். வெள்ளைப்படுதல் பிரச்னை உள்ள பெண்களுக்குக் கீழ் முதுகில்தான் முதலில் வலிக்கும்.

  பொதுவாக, கீழ் முதுகு வலிக்கு 90 சதவிகிதம் முதுகெலும்புத் தொடர்பான காரணங்களாகவும். மீதி 10 சதவிகிதம் வயிற்றுப்பகுதி தொடர்பானதாகவும் இருக்கின்றன.பணி நிமித்தமாக தொடர்ந்து பல மணிநேரங்களுக்கு அமர்ந்தே இருப்பது, கூன் விழுந்த நிலையில் உட்காருவது, தொடர்ச்சியாக கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்தே இருக்க வேண்டிய சூழல், தினமும் இருசக்கர வாகனங்களில் நெடுந்தொலைவு பயணிப்பது, குண்டும் குழியுமாக உள்ள சாலைகளில் அடிக்கடி பயணம் செய்வது, அதிக எடையைத் தூக்குவது, உடற்பயிற்சி இல்லாதது, ஊட்டச் சத்துக்குறைவு, தரையில் விழுவது, உயரமான இடத்திலிருந்து குதிப்பது, திடீரென குனிவது அல்லது திரும்புவது, உடற்பருமன் போன்ற காரணங்களால் முதுகெலும்பு ஜவ்வில் அழுத்தம் அதிகமாகி கீழ் முதுகில் வலி ஏற்படும்.

  ‘ஆஸ்டியோமைலைட்டிஸ்’ (Osteomyelitis) எனும் நோய்த் தொற்றாலும், காசநோய் பாதிப்பாலும் கீழ் முதுகில் வலி வரும். வாகன விபத்துகள் அல்லது விளையாடும்போது ஏற்படுகிற விபத்துகள் காரணமாக எலும்பு முறிந்து இந்த வலி ஏற்படலாம்.

  சிலருக்குப் பிறவியிலேயே தண்டுவடம் செல்லும் பாதை குறுகலாக (Spinal canal stenosis) இருக்கும். இன்னும் சிலருக்குக் கீழ் முதுகும் சேக்ரமும் இணைகிற இடத்தில் பிறவியிலேயே பிழை உண்டாகி இருக்கும். இப்படிப்பட்டவர்களுக்கு இளமையிலேயே கீழ் முதுகு வலி வந்துவிடும். முதுகெலும்பில் கட்டி அல்லது புற்றுநோய் தாக்குவது காரணமாகவும் இந்த வலி வரலாம். இது 50 வயதுக்கு மேல் வரக்கூடும்.

  முள்ளெலும்புகளுக்கு இடையில் உள்ள ஜவ்வு தேய்ந்துவிடும். இதனால் வலி வரும். வயதாக ஆக ஜவ்வில் நீர்ச்சத்து குறைந்துவிடுவதால் குஷன்போல் இயங்குகிற தன்மையும் குறைந்துவிடுகிறது. அதிர்ச்சியைக் கிரகித்துக்கொள்ளும் தன்மை குறைகிறது. இதனால் முதியோர்களுக்குக் கீழ் முதுகுவலி வருகிறது.

  வயதாகும்போது கால்சியத்தின் அளவு குறைந்து எலும்பு மெலிந்து மிருதுவாகிவிடும். இதற்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ (Osteoporosis) என்று பெயர். இந்த எலும்புகள் விரைவில் தேய்ந்து கீழ் முதுகில் வலியை ஏற்படுத்தும்.சியாட்டிகா என்பது என்ன?முதுகு வலிக்குப் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் மிகவும் பிரதான காரணங்கள் இரண்டு மட்டுமே. ஒன்று, ஜவ்வு விலகுவது (Disc prolapse). அடுத்தது, முள்ளெலும்புகளின் பின்புறமுள்ள அசையும் மூட்டுகளில் வீக்கம் ஏற்படுவது. இந்தக் காரணங்களால் தண்டுவட
  நரம்பு செல்லும் பாதை குறுகிவிடுகிறது.

  இதனால் தண்டுவட நரம்பு அழுத்தப்படுகிறது. இதைச் சுற்றியுள்ள ரத்தக்குழாய்கள் நெரிக்கப்பட்டு, ரத்த ஓட்டம் குறைந்து நரம்பு முறையாக இயங்க வழி இல்லாமல் வலி ஏற்படுகிறது. பொதுவாக, காலுக்கு வரும் சியாட்டிக் நரம்பு இவ்வாறு பாதிக்கப்படும். இதனால்தான் இதற்கு ‘சியாட்டிகா’ (Sciatica) என்று பெயர் வந்தது.

  ஆரம்பத்தில் இந்த வலியானது கீழ் முதுகில் அவ்வப்போது ஏற்படும். பெரும்பாலானோர் இதை வாய்வு வலி என்று தீர்மானித்து சிகிச்சை செய்யாமல் இருப்பார்கள். திடீரென்று ஒருநாள் இந்த வலி கடுமையாகி தொடைக்குப் பின்புறத்திலோ, காலுக்கோ மின்சாரம் பாய்வதைப்போல் ‘சுரீர்’ என்று பரவும். படுத்து உறங்கும்போது இந்த வலி குறைந்து, பிறகு நடக்கும்போது வலி அதிகமாகும். காலில் உணர்ச்சி குறையும். நாளாக ஆக மரத்துப்போன உணர்வும் ஏற்படும். முதுகை பின்னாலோ, முன்னாலோ வளைப்பதில் சிரமம் உண்டாகும்.

  பலமாகத் தும்மினாலோ முக்கினாலோ வலி கடுமையாகும்.பரிசோதனையும் சிகிச்சையும்கீழ் முதுகு வலிக்குப் பல காரணங்கள் இருப்பதால் முதுகு எக்ஸ்-ரே, சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன், ரத்தப் பரிசோதனைகள் செய்து காரணம் தெரிந்து சிகிச்சை பெற வேண்டியது முக்கியம்.

  ஜவ்வு வீங்குவது அல்லது விலகுவது காரணமாக ஆரம்பத்தில் ஏற்படுகிற கீழ் முதுகு வலியானது வலி நிவாரணிகள், 3 வாரம் முழுமையாக ஓய்வு எடுப்பது, இடுப்பில் பெல்ட் அணிவது, பிசியோதெரபி மற்றும் ட்ராக் ஷன் சிகிச்சையில் குணமாக அதிக வாய்ப்புகள் உள்ளன. சிலருக்கு முதுகு தண்டுவடத்தில் ஸ்டீராய்டு ஊசி போட்டும் இதைக் குணப்படுத்துவதுண்டு.

  தொடர்ந்து பல வாரங்களுக்கு வலி இருக்குமானால், நடக்கவோ நிற்கவோ குனியவோ முடியவில்லை என்றால், கால் மரத்துப்போனால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது வரும். முன்பு முதுகுத் தசைகளை திறந்து இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இடம் பெயர்ந்துவிட்ட ஜவ்வை அகற்றிவிட்டு, அந்த இடத்தில் உலோகத்தால் ஆன செயற்கை ஜவ்வை வைத்துவிடுவார்கள்.

  இப்போது ‘லம்பார் எண்டாஸ்கோப்பிக் டிஸ்கெக்டமி’ (Lumbar Endoscopic Discectomy) எனும் நவீன அறுவை சிகிச்சையில், லேப்ராஸ்கோப் முறையில், முதுகில் சில துளைகள் போட்டு, விலகியிருக்கும் ஜவ்வை மட்டும் அகற்றி தண்டுவடம் நரம்புப்பகுதியில் இருக்கின்ற அழுத்தத்தை, நீக்கிவிடும்போது கீழ் முதுகு வலியும் கால் குடைச்சலும் சரியாகிவிடும்.

  அதற்குப் பிறகும் முதுகுத் தசைகளுக்கான பிசியோதெரபி பயிற்சிகளைச் செய்ய வேண்டியது முக்கியம். அப்போதுதான் அந்தத் தசைகளுக்குப் பலம் கிடைக்கும். முதுகு வலி மீண்டும் ஏற்படாது.‘ஸ்பாண்டிலோ லிஸ்தெசிஸ்’என்றால் என்ன?முதுகெலும்பில் - முக்கியமாக லம்பார் எலும்புகளில் ஏற்படும் கோளாறு இது.

  ஒன்றின் மேல் ஒன்றாக செங்கல்களை அடுக்கி வைத்ததுபோல் இருக்க வேண்டிய எலும்புகள், ஒன்றிலிருந்து ஒன்று விலகி இருக்கும் நிலைமையை ‘ஸ்பாண்டிலோ லிஸ்தெசிஸ்’ (Spondylolisthesis) என்கிறோம். இதனால் முதுகுத் தண்டுவட நரம்புகள் அழுத்தப்படும். அப்போது பிரச்னை ஏற்படும். கீழ் முதுகு வலி, ஒரு காலில் அல்லது இரண்டு கால்களில் வலி பரவுதல், கால்களில் மதமதப்பு, கால் பலவீனம், நடப்பதிலும் குனிவதிலும் சிரமம் போன்றவை இதன் அறிகுறிகள்.

  பொதுவாக பிறவிக் கோளாறு, விபத்து, அடிபடுதல், அழற்சி, முதுகெலும்பு அதீத பயன்பாடு போன்றவை காரணமாக இது ஏற்படுகிறது. சுமை தூக்குபவர்கள், விளையாட்டு வீரர்கள் ஜிம் பயற்சிகள் மற்றும் எடை தூக்கும் பயிற்சிகளை மேற்கொள்கிறவர்களுக்கு இது ஏற்படும் அபாயம் அதிகம்.

  இதற்கும் அறுவை சிகிச்சைதான் உதவும். இடம் மாறிய எலும்புகளை சரியான இடத்துக்குக் கொண்டுவந்து, அவை மீண்டும் விலகி விடாமல் இருக்க, உலோக ஸ்குரூக்களை எலும்புகளில் பொருத்தி நிலை நிறுத்துவார்கள். இதனால் நோய் குணமாகும்.

  ‘ஸ்பாண்டிலோசிஸ்’ வலி எது?அசையும் மூட்டுகளில் வீக்கம் ஏற்படு வதை ‘ஆங்கிலோசிங் ஸ்பாண்டிலைட்டிஸ்’ (Ankylosing Spondylitis) என்றும் ‘ஸ்பாண்டிலோசிஸ்’ என்றும் அழைக்கிறார்கள். இந்த நோய் முதலில் கீழ் முதுகு வலியாக ஆரம்பித்து, பிறகு இதர மூட்டு
  களுக்கும் பரவும். முதுகெலும்பில் கடுமையான இறுக்கம் தோன்றுவதால், முதுகை அசைக்கவே முடியாத அளவுக்கு வலி மிகக் கடுமையாக இருக்கும். உட்கார்ந்தால் முதுகு வலி அதிகமாகும்.

  நின்றால் அல்லது நடந்தால் வலி குறையும். இதற்கும் வலி நிவாரணிகள்தான் ஆரம்பத்தில் தரப்படும். வலி குறையாதபோது அறுவை சிகிச்சை செய்து வீக்கமுள்ள முதுகெலும்பை இயல்பு அளவுக்குக் கொண்டு வருவார்கள்.

  இதன் பலனால் கீழ் முதுகு வலி குறைந்து விடும். குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புசில குழந்தைகளுக்கு முதுகெலும்பு பக்கவாட்டில் வளைந்துவிடும். இதற்கு ‘ஸ்கோலியோசிஸ்’ (Scoliosis) என்று பெயர். இந்தப் பாதிப்பை சிறு வயதிலேயே அறுவை சிகிச்சை மூலம் ஸ்குரூ மற்றும் கம்பிகளைப் பொருத்திச் சரிசெய்துவிட வேண்டும். இல்லாவிட்டால் வளரும் பருவத்தில் கடுமையான மூச்சுத்திணறல் ஏற்படும்.

  முதுகு வலியைத் தடுக்க…


  1.நீண்ட நேரம் ஒரே இடத்தில் நிற்கக் கூடாது. முதுகை நேராக நிமிர்த்தி உட்கார்ந்து வேலைசெய்ய வேண்டும்; கூன் விழாமல் நிமிர்ந்து நடக்க வேண்டும். நாற்காலியில் அதிக நேரம் உட்காரும்போது கீழ் முதுகுக்கு சிறிய தலையணை வைத்துக்கொள்ளலாம்.

  2.சிறு வயதிலிருந்தே உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, மெல்லோட்டம், நீச்சல், சைக்கிள் ஓட்டுதல், யோகாசனம் செய்வது முதுகு வலி வராமல் தடுக்கும்.
  3.காற்றடைத்த பானங்கள், குளிர்பானங்கள், மென்பானங்கள், கோக் கலந்த பானங்
  கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவற்றில் பாஸ்போரிக் அமிலத்தைச் சேர்ப்பார்கள். இது கால்சியம் சத்து குடலில் உறிஞ்சப்படுவதைத் தடுக்கும். இதனால் இளமையிலேயே எலும்புகள் வலுவிழந்துவிடும். எனவே, இவற்றை அருந்துவதை அறவே தவிர்க்க வேண்டும்.

  4.மேல் முதுகில் வலி ஏற்பட்டால் ஐஸ் ஒத்தடம் கொடுத்து, மூச்சுப்பயிற்சிகளைச் செய்தால் போதும். வெந்நீர் ஒத்தடம் கொடுப்பது, சுளுக்கு எடுப்பது, பேண்டேஜ் கட்டுவது, கண்ட கண்ட களிம்புளைப் போட்டு தேய்ப்பதை எல்லாம் செய்தால் பாதிப்பு அதிகமாகி வலியும் கடுமையாகிவிடும்.

  5.முதுகில் வலி உள்ளவர்கள் கயிற்றுக்கட்டிலில் படுத்து உறங்கக் கூடாது. இவர்கள் கட்டாந்தரையில்தான் படுக்க வேண்டும்; கட்டை பெஞ்சில்தான் படுக்க வேண்டும் என்பதில்லை. சரியான மெத்தையில் பக்கவாட்டில், சற்று குப்புறப் படுத்துக்கொள்ளலாம்.

  6.பலமாகத் தும்மக்கூடாது. மலம் கழிக்கும்போது அதிகமாக முக்கக்கூடாது. மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

  7.அதிக எடையைத் தூக்கக்கூடாது. அப்படியே தூக்கவேண்டியது இருந்தால் எடையைத் தூக்கும்போது இடுப்பை வளைத்துத் தூக்காமல், முழங்காலை மடக்கித் தூக்க
  வேண்டும். சுமையை மார்பில் தாங்கிக்கொள்வது இன்னும் நல்லது.

  8.உடலை அதிகமாக விரியச் செய்தல், வளைத்தல் கூடாது. திடீரெனத் திரும்புதல் கூடாது.

  9.குனிந்து தரையைச் சுத்தம் செய்வதற்குப் பதிலாக நீளமான துடைப்பத்தைக் கொண்டு நின்றுகொண்டே சுத்தம் செய்வது நல்லது.

  10.இந்தியக் கழிப்பறைக்குப் பதிலாக மேற்கத்தியக் கழிப்பறையைப் பயன்படுத்தினால் நல்லது.

  11.ஹைஹீல்ஸ் செருப்புகளை அணியக்கூடாது.

  12.அருகில் உள்ள இடங்களுக்கு இரு சக்கர வாகனங்களில் செல்வதைவிட நடந்தே செல்லுங்கள்.

  13. நான்கு சக்கர வாகனங்களை ஓட்டும்போது நிமிர்ந்து உட்கார்ந்து ஸ்டியரிங் அருகில் அமர்ந்து ஓட்ட வேண்டும்.

  14.ஏற்கனவே முதுகு வலி உள்ளவர்கள் பஸ்ஸில் பயணம் செய்யும்போது பஸ்ஸின் நடுவிலுள்ள இருக்கையில் உட்கார்ந்துகொள்வது நல்லது.

  15. பருமனைத் தவிர்க்க வேண்டும்.

  16.புகை, மது, போதை மாத்திரைகள் கூடாது.

  17.மன அழுத்தம் தவிருங்கள்.  Sponsored Links
  Last edited by chan; 12th Sep 2016 at 03:10 PM.
  shrimathivenkat likes this.

 2. #2
  shrimathivenkat's Avatar
  shrimathivenkat is offline Yuva's of Penmai
  Gender
  Female
  Join Date
  Sep 2012
  Location
  chennai
  Posts
  8,456

  Re: முதுகுவலிக்குத் தீர்வு என்ன?

  good info lakshmi


loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter