ஓ நெகடிவ் தானம்...ஒரு கோடி புண்ணியம்!
இந்தியாவில் இந்த விஷயத்தில் தமிழகம் இரண்டாம் இடத்தில் இருக்கிறது.அதாவது, தானாக முன் வந்து ரத்ததானம் வழங்குவதில் நமக்கு இரண்டாம் இடம்..!

ரத்ததானம் குறித்த விழிப்புணர்வை இளைய தலைமுறையினரிடம் ஏற்படுத்தவும், உயிர்களை காப்பாற்ற எங்கும் எப்போது ரத்தம் கிடைப்பதை உறுதிப்படுத்தவும் ஜூன் 14 -ம் தேதி உலக ரத்த தான தினம் (World Blood Donor Day) கொண்டாடப்படுகிறது

ரத்தம் இல்லாமல் எந்த ஓர் உயிரும் இல்லை. நாம் மூச்சு விடும் ஆக்ஸிஜனை உடலுக்குள் சுமந்து இந்த ரத்தம்தான் என்பதால் அதன் முக்கியத்துவம் நாம் அனைவரும் அறிந்ததுதான். மற்றவர்களின் உயிரைக் காக்க உயிர் கொடுக்கப்படுவதால் அது தானங்களில் மிகச் சிறந்ததாக இருக்கிறது.

பொதுவாக நாம் ஒருவர் விபத்தில் சிக்கிக் கொண்டால்,வெளியேறிய ரத்தத்தை ஈடுகட்டவே ரத்தம் தேவைப்படுவதாக நினைக்கிறோம்.ஆனால்,உண்மையில் ஏராளமான தருணங்களில் ரத்தத்தின் தேவை அவசியமானதாக இருக்கிறது.

பிரசவத்தின் பெண்களுக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்படும் போது,ரத்த சோகை மற்றும் ரத்தம் மாற்று சிகிச்சை, தீ காயம் அடைந்தவர்களுக்கான சிகிச்சை,ரத்தப் புற்று பாதிப்பு என ரத்தத்தின் அவசர தேவையின் பட்டியல் நீளுகிறது.

யாரெல்லாம், எவ்வளவு ரத்ததானம் செய்யலாம்?

ஆரோக்கியமாக இருக்கும் 18 வயது முதல் 60 வயதுள்ள எவரும் ரத்ததானம் செய்யலாம். உடல் எடை சுமார் 45 கிலோவுக்கு மேல் இருக்க வேண்டும்.

மனிதர்களின் உடலில் சுமார் 5 லிட்டர் ரத்தம் ஓடுகிறது.இதில்,ஒரு நேரத்தில் 350 மில்லி (ஒரு யூனிட்) ரத்தத்தை கொடுக்கலாம்.இதனால், உடலுக்கு எந்த பாதிப்பும் வராது. எடை சுமார் 50 கிலோவாகவும், உயரம் ஐந்து அடிக்கு அதிகமாகவும் இருப்பவர்கள் 450 மில்லி ரத்தம் கொடுக்கலாம். 100 மில்லி ரத்தத்தில் ஹீமோகுளோபின் 12.5 கிராம் இருந்தால் மூன்று மாதத்துக்கு ஒரு முறை ரத்ததானம் செய்யலாம். எடுக்கப்பட்ட ரத்தம் 48 மணி நேரத்துக்குள் தானாவே மீண்டும் சுரந்து விடும். உடல் ஆரோக்கியமாக இருந்தால் எவ்வளவு ரத்தத்தையும் மீண்டும் மீண்டும் உற்பத்தி செய்துக் கொண்டிருக்கும்.

பொதுவாக, ஆண்கள் மூன்று மாதத்துக்கு ஒரு முறையும், பெண்கள் நான்கு மாதத்துக்கு ஒரு முறையும் ரத்ததானம் செய்யலாம். ரத்ததானம் செய்பவர்களில் 80% தன்னார்வாளர்கள்தான்.அதிலும், 60% பேர் கல்லூரி மாணவர்கள்.

நவீன மருத்துவ உலகில் ரத்தத்திலிருந்து சிவப்பணு,தட்டணு,பிளாஸ்மா என மூன்று பொருட்களாக பிரிக்கும் தொழில்நுட்பம் வந்துவிட்டது.இதனால், ரத்தம் கொடுப்பது மூலம் ஒருவர் மனிதரையும் சேர்த்து மொத்தம் 4 உயிரிகளை காப்பாற்ற முடியும்.

ரத்ததானம் என்றாலே ஓட்டம் ஏன்?

ரத்தம் கொடுத்தால் உடல் நிலை பாதிக்கும், நோய் எதிர்ப்பு தன்மை குறைந்து விரைவில் இறந்துவிடுவோம் என்பது போன்ற தவறான கருத்துகள் பரவி இருப்பதாகும்.

மேலும், தற்போது மருத்துவமனையில் மிகவும் பாதுகாப்பான முறையில் ரத்தம் எடுக்கப்படுவதால் முன் போல் புற்று நோய் போன்ற நோய்கள் வர வாய்ப்பு இல்லை.

ரத்ததானம் கொடுத்து முடிந்ததும், ரத்தத்திலுள்ள சர்க்கரை அளவை அதிகரித்துக் கொள்ள பழச் சாறு அல்லது பானங்களை குடிக்க வேண்டும்.மேலும், நல்ல சத்தான உணவாக வயிறு நிறைய சாப்பிடுவது அவசியம்.

ரத்ததானம் கொடுப்பவர்களில் சிலருக்கு அரிதாக மயக்கம் ஏற்படும்.அப்போது தலையை விட கால் உயரமாக இருக்கும்படி படுத்துக் கொள்ள வேன்டும்.பழச்சாறு மற்றும் குளிர் பானங்களை அதிகம் குடிக்க வேண்டும்.அப்படியும் சரியாகவில்லை என்றால் மருத்துவரை அணுகவும்.ரத்ததானம் செய்த ஒரிரு மணி நேரத்துக்கு புகை பிடிக்காமலும்,மது அருந்தாமலும் இருப்பது நல்லது.

ரத்ததானம் செய்த அன்றே வேலைக்கு செல்லலாம். பளூவான பணி செய்பவர்கள் சுமார் 3-4 மணி நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டால் நல்லது.

யாரெல்லாம் ரத்ததானம் செய்யக் கூடாது?

உடல் நலமில்லாதவர்கள்,மது மற்றும் போதை மருந்தின் போதையில் இருக்கும் போது, கருவுற்றிருக்கும் பெண்கள், இளம் தாய்மார்கள்,மலேரியா நோய் பாதித்தவர்கள் (நோய் குணமாகி மூன்று மாதம் கழித்து ரத்தம் கொடுக்கலாம்), இருதய நோய், சிறு நீரக கோளாறு, எய்ட்ஸ், ரத்த சோகை, தொழு நோய், வலிப்பு, உயர் ரத்த அழுத்தம், மலேரியா தாக்கி இருப்பவர்கள்,ஆஸ்பரின் மாத்திரை சாப்பிட்ட மூன்று நாட்களுக்குள், தடுப்பூசி போட்ட ஒரு மாதத்துக்குள் அறுவை சிகிச்சை நடந்து குறைந்தது மூன்று மாதத்துக்குள் ரத்தம் கொடுக்க கூடாது.மஞ்சள் காமாலை, பால் வினை மற்றும் எய்ட்ஸ் உள்ளவர்களும் ரத்ததானம் கொடுக்க கூடாது.

ரத்ததானம் கொடுக்க முடிவு செய்திருப்பவர்கள்,முன் தினம் இரவு மது அருந்தி இருக்க கூடாது மற்றும் நன்றாக நன்றாக தூக்க வேண்டும்.டென்சன் இல்லாமல் அமைதியான மனநிலையுடன் இருக்க வேண்டும்.

ஓ நெகடிவ் போன்ற அரிய குரூப் ரத்தம் அவ்வளவு சுலபத்தில் கிடைக்காது.அது போன்ற குரூப் ரத்தம் உள்ளவர்கள் தாங்களே முன் வந்து ரத்த தானம் செய்தால் கோடி புண்ணியம் கிடைக்கும்.

பொதுவாக ரத்ததானம் செய்பவர்களை மூன்று பிரிவாக பிரிக்கலாம்.தன்னார்வலர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்காக அவசர காலத்தில் ரத்தம் கொடுப்பவர்கள்,அடுத்து பணம் பெற்றுக் கொண்டு ரத்ததானம் செய்பவர்கள்.இதில், முதல் வகையினர் மிகவும் பாராட்டுக்கு உரியவர்கள்.

பணம் பெற்றுக் கொண்டு ரத்தம் கொடுப்பது உச்ச நீதிமன்றத்தால் (1996 ஜனவரி) தடை செய்யப்பட்டிருக்கிறது.

அதிகமாக(50, 75, 100 முறைகள்) ரத்ததானம் வழங்கியவர்களை பாராட்டி சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மற்றும் தமிழ்நாடு குறுதி பரிமாற்றுக் குழு (044 & 2819 0467, 2819 0891, 098400 53283) பதக்கங்கள் வழங்கி கவுரவித்து வருகிறது.இந்த விழாவுக்கு வந்து செல்பவர்களுக்கு சாதாரண பேருந்து/ ரயில் இரண்டாம் வகுப்பு கட்டணத்தை அளிப்பதோடு, தினப்படியாக 200 ரூபாயாயும் தரப்படுகிறது.

ரத்ததானம் செய்பவர்கள் இணைந்து தன்னார்வ ரத்ததான குழுக்களை அமைத்தால், அக்கூட்டங்கள் நடத்துவதற்கு தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் நிதி உதவி அளித்து வருகிறது.

தானாவே முன் வந்து ரத்த தானம் கொடுப்பதில், இந்திய அளவில் தமிழகம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

இதில் நீங்களும் ஒருவர் தானே?Similar Threads: