Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree1Likes
 • 1 Post By yuvan_nan@yahoo

அரசு மருத்துவமனைகள்! துயரக் கதை!


Discussions on "அரசு மருத்துவமனைகள்! துயரக் கதை!" in "Health" forum.


 1. #1
  yuvan_nan@yahoo's Avatar
  yuvan_nan@yahoo is offline Friends's of Penmai
  Real Name
  C.Yuvaraj
  Gender
  Male
  Join Date
  Feb 2012
  Location
  coimbatore
  Posts
  391

  அரசு மருத்துவமனைகள்! துயரக் கதை!

  அரசு மருத்துவமனைகள்! துயரக் கதை!ஞாபகம் இருக்கிறதா? ஒரு குழந்தையைப் பறிகொடுத்து, ஒரு வாரம் முழுக்க அரசு மருத்துவமனைகளில் எலி பிடிக்கவைத்தோம். எலிகள், பூனைகள், நாய்கள், பாம்புகள்... என்னென்னவோ பிடிபட்டன. ஓரிரு நாட்கள் அதைப் பற்றிப் பேசினோம். அப்புறம் வழக்கம்போல், மறந்தும் போனோம். ஆனால், ஆண்டுக்கணக்கில் பேசினாலும் தீராது தமிழக அரசு மருத்துவமனைகளின் துயரக் கதை!
  துறையூர் அருகேயுள்ள ஆத்தூரைச் சேர்ந்த பெண் அவர். காளியம்மை. திருச்சி அரசு மருத்துவமனையில் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தார். அறுவைச் சிகிச்சை செய்த மருத்துவர்கள், பிறந்ததில் ஒரு பெண் குழந்தையை மட்டுமே கொடுத்து, இன்னொரு குழந்தை இறந்துவிட்டதாகச் சொல்லி டிஸ்சார்ஜுக்கு அவசரப்படுத்தினர். ஆனால், இறந்த குழந்தையைப் பார்த்தே ஆக வேண்டும் என உறவினர்கள் வலியுறுத்த, ஓர் அட்டைப் பெட்டியைக் காட்டி இருக்கிறார்கள். நம்புங்கள்... அதில் குப்பையோடு குப்பையாக மார்பிலும் காலிலும் கத்திக் காயங்களுடன் சவமாகக்கிடந்தது சிசு. விளக்கம் கேட்ட உறவினர்கள் கடுமையாக மிரட்டித் துரத்தி அடிக்கப்பட்டனர். குழந்தை எப்படி இறந்தது என்பது இன்னமும் அவிழாத மர்மம்.
  கன்னியாகுமரி ருக்மணி, குடும்பக் கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சைக்காக நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு சுவாசத்துக்கு செலுத்தப்பட்ட வாயு எது தெரியுமா? ஆக்ஸிஜன் அல்ல; மயக்கம் அடையச் செய்யப் பயன்படுத்தப்படும் நைட்ரஸ் ஆக்ஸைடு. நிமிடங்களில் மூச்சுத் திணறிய ருக்மணியின் உடல் நீலம் பாரித்து, வீங்கி விறைத்துவிட்டது.
  கடந்த ஆண்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு நள்ளிரவில் திடீரெனப் பற்றி எரிந்தது. அசையக்கூடத் திராணி இல்லாத நோயாளிகள் ஐந்து பேர் உயிருடன் தீயில் வெந்து கரிக்கட்டை ஆனார்கள். அதிர்ச்சி அடையாதீர்கள்... அதே மருத்துவமனையில் இந்த ஆண்டும் நடந்தது தீ விபத்து.
  சென்னை ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் செப்டம்பர் மாதம் தீ விபத்து. ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் பிணவறையில் போதுமான குளிர்சாதன வசதி இல்லாததால், பிராந்தியம் முழுக்கவே பிண வாடை. திருவல்லிக்கேணி அரசு மருத்துவமனையில் இறந்த குழந்தையை எலி கடித்ததற்கு எல்லாம் நாங்கள் பொறுப்பேற்க முடியாது என்று பொறுப்பாகப் பேட்டி மட்டும் தருகிறார்கள். இந்த நிலைமையில்தான் இருக்கிறது தமிழக அரசு மருத்துவமனைகளின் லட்சணம்!
  தமிழகத்தில் 18 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், 29 மாவட்டத் தலைமை மருத்துவமனைகள், 154 வட்ட மருத்துவமனைகள், அதே அந்தஸ்துள்ள - ஆனால், வட்டங்களில் இல்லாத - 76 மருத்துவமனைகள், 1,614 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 8,706 துணை சுகாதார நிலையங்கள், 385 நடமாடும் மருத்துவமனைகள், ஏழு பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனைகள், ஏழு தொழுநோய் மருத்துவமனைகள், மூன்று காச நோய் மருத்துவமனைகள், இயங்கிவருகின்றன. இவற்றை எல்லாம் சுற்றி வலம் வந்தபோது ஏற்பட்ட ஒரே உணர்வு... அதிர்ச்சி. நோயாளிகள் சொல்லும் புகார்கள் உறையவைக்கின்றன.
  மதுரை மருத்துவமனையில் எலி பிடித்தபோது சாரைப் பாம்புகள் சாரை சாரையாகப் பிடிபட்டன. ஈரோடு மருத்துவ மனையில் நோயாளியைப் பார்க்க வந்த உறவினர்களைப் பாம்பு தீண்டி இறந்த கொடுமை அரங்கேறி இருக்கிறது. முன்னாள் முதல்வர் கருணாநிதி தொடங்கிவைத்த திருவாரூர் மருத்துவக் கல்லூரி அருகிலேயே ஒரு பெரிய குட்டையில் 'கொசுப் பண்ணை வளர்க்கிறார்கள்.
  திருச்சி அரசு மருத்துவமனையில் பெண்கள் கழிப்பறையை எட்டிப் பார்த்தாலே, குமட்டிக்கொண்டு வருகிறது. அதை ஒட்டியே இருக்கிறது பிரசவ வார்டு. கழிப்பறையின் துர்நாற்றம்தான் ஏழைக் குழந்தையின் முதல் சுவாசம் என்பது இங்கு தலைவிதி. அறுவைச் சிகிச்சை செய்துகொண்டவர்களைப் படுக்கையில்தான் படுக்கவைக்க வேண்டும். ஆனால், பல அரசு மருத்துவமனைகளிலும் படுக்கைகள் நிரம்பி, தரையில் இடம் பிடிக்கவே அடிபிடியாக இருக்கிறது. கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்றால், முதலில் எதிர்ப்படுவதே பிணவறைதான். கடந்த சில வருடங்களாகவே அங்குள்ள ஃப்ரீஸரின் இயக்கத்தில் சிக்கல் என்பதால், அழுகிய பிணங்களின் நாற்றம்தான் வரவேற்கிறது. ஏன் இந்தப் பரிதாப நிலை?
  அக்கறையின்மையும் நிதி மறுப்பும்!
  சமாதான மற்றும் முன்னேற்றத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளரான டாக்டர் அறம் அடிப்படைக் கட்டமைப்பில் உள்ள ஓட்டைகளைப் பட்டியலிடுகிறார். ''உலக சுகாதார நிறுவனத்தின் நிர்ணயப்படி ஒவ்வொரு நாடும் அதன் மொத்த நிதிநிலை அறிக்கையில் ஐந்து சதவிகிதத்தைச் சுகாதாரத்துக்கு ஒதுக்க வேண்டும். ஆனால், இந்தியாவில் ஒதுக்கப்படுவது 1.4 சதவிகிதமே. ஒரு லட்சத்து 60 ஆயிரம் கோடிகளை ராணுவத்துக்காக ஒதுக்கும் நம் நாட்டில், சுகாதாரத்துக்காக ஒதுக்கப்படுவது 24 ஆயிரம் கோடிகள் மட்டுமே. சுகாதாரத்தில் நாம் தன்னிறைவு பெற அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஆறு லட்சம் கோடிகள் தேவை. தமிழக அரசு 2012-13 ஆண்டு 5,569 கோடி பொது சுகாதாரத்துக்கு ஒதுக்கியுள்ளது. பிணவறைகளின் வசதிகளை மேம்படுத்த 10 கோடி ஒதுக்கியுள்ளது. ஆனால், இவை எல்லாம் யானைப் பசிக்குச் சோளப்பொரிதான்.
  ஒரு மருத்துவர் நாள் ஒன்றுக்கு 70 புறநோயாளிகளைத்தான் கவனிக்க வேண்டும் என்பது உலக சராசரி. ஆனால், தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் காலை 7.30 மணி முதல் காலை 11 மணி வரை மட்டுமே 300 புறநோயாளிகளை ஒரு மருத்துவர் எதிர்கொள்கிறார். எட்டு படுக்கைகளுக்கு ஒரு செவிலியர் வேண்டும். அவசரச் சிகிச்சைப் பிரிவில் ஒரு படுக்கைக்கு ஒரு செவிலியர் வேண்டும். இவை எதுவுமே அரசு மருத்துவமனைகளில் இல்லை. தமிழகத்தின் அனைத்து அரசு மருத்துவமனைகளில் இருக்கும் மொத்தப் படுக்கைகளின் எண்ணிக்கை சுமார் 25,413. நாள் ஒன்றுக்கு சுமார் 71 ஆயிரம் பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை எடுத்துக்கொள்வதாகத் தமிழ்நாடு சுகாதாரத் துறையின் இணையதளம் தெரிவிக்கிறது. படுக்கை எண்ணிக்கையின் அடிப்படையில் பார்த்தால், 46 ஆயிரம் உள்நோயாளிகள் படுக்கை வசதி இல்லாமல் தரையில் கிடத்தப்படுவதை ஒப்புக்கொள்கிறதா சுகாதாரத் துறை? இந்த அடிப்படை அவலங்களைக் களையாமல் சுகாதாரத்தில் நாம் தன்னிறைவு அடையவே முடியாது'' என்கிறார் அறம்.
  லஞ்சம் வாங்கு... நெஞ்சம் நிமிர்த்து!
  அரசு மருத்துவமனைகளை ஒரு காலத்தில் தர்மாஸ்பத்திரி என்பார்கள். எல்லாமே இலவசம் என்பதால். இன்றைக்கோ எல்லாவற்றுக்குமே விலை உண்டு. லஞ்சம் இன்றி எதுவும் நடக்காது. லஞ்சக் கட்டண நிலவரத்துக்கு ஒரு சின்ன சாம்பிள் இது. ஆண் குழந்தை பிரசவத்துக்கு 1,500, பெண் குழந்தை பிரசவத்துக்கு 1,000, போஸ்ட்மார்ட்டம் செய்த உடலை வாங்க 3,750.
  எல்லாமே காலி!
  தமிழ்நாடு மருத்துவத் துறை அமைச்சுப் பணி அலுவலர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவரான தண்டபாணி, ''அரசு மருத்துவமனை சேவைக் குறைபாடு பற்றி எல்லோரும் பேசுகிறார்கள். ஆனால், இங்குள்ள ஆள் பற்றாக்குறை பற்றி யாருக்குமே தெரிவது இல்லை. ஓர் உதாரணம் சொல்கிறேன். அரசு மருத்துவமனைகளில் 1,300 உதவியாளர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. பண்டகக் காப்பாளர் பணியிடங்கள் 340-ல் 300 இடங்கள் காலியாக இருக்கின்றன. 138 கண்காணிப்பாளர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. ஒரு நோயாளி சிகிச்சை எடுத்துக்கொள்வதற்கும் இந்தப் பணிகளுக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் கேட்கலாம். ஒரு மருத்துவமனைக்கு மருத்துவர்கள், செவிலியர்கள் தொடங்கி மொத்தப் பணியாளர்களும் சரியாக வருகிறார்களா என்பதைக் கண்காணிப்பதே இவர்கள்தான். இவர்களே இல்லை என்றால், நிர்வாகம் எப்படி சீரிய முறையில் நடக்கும்?'' என்கிறார்.
  தனியார்மயத்தின் குரூர முகம்!
  ''அரசு மருத்துவமனைகளை மோசமான சூழலில் வைத்திருப்பதன் பின்னணியில் ஒரு பெரிய அரசியல் உண்டு. அரசு மருத்துவமனை மோசமாக இருந்தால்தான், நீங்கள் தனியார் மருத்துவமனைகளை நோக்கிச் செல்வீர்கள். எல்லோருமே தனியார் மருத்துவமனைகளை நோக்கிச் சென்றுவிட்டால், அரசு மருத்துவமனைகளே தேவை இல்லை. அதாவது, அரசுக்குச் செலவே இல்லை. பிரச்னை புரிகிறதா?'' என்று அரசு மருத்துவமனைகள் புறக்கணிப்புக்குப் பின்னுள்ள பொருளாதார அரசியலை அம்பலப்படுத்துகிறார் சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் ரவீந்தரநாத்.
  தலைவிரித்தாடும் மருந்துப் பற்றாக்குறை!
  சமீபத்தில் சென்னையில் இருக்கும் ஒரு பொது மருத்துவமனை மருந்துக் கிடங்கின் பண்டகக் காப்பாளர் தனது பதிவேட்டில் இப்படி எழுதி இருக்கிறார். ''மருத்துவமனைக்குத் தேவையான 57 வகையான மருந்துகள் இல்லை. இவற்றில் புற்றுநோய், இதய நோய் உள்ளிட்ட உயிர் காக்கும் 39 மருந்து வகைகள் அடக்கம். கடந்த பல மாதங்களாக இந்த மருந்துகளின் சப்ளையே கிடையாது. 25 வகையான அவசர சிகிச்சைகளுக்கான மருந்துகள் கேட்கும் அளவில் மிகக் குறைவாகவே சப்ளை செய்யப்படுகிறது. செப்டம்பர் மாதம் மட்டும் 13 வகை முக்கிய மருந்துகள் முற்றிலும் சப்ளை செய்யப்படவில்லை. நாங்கள் கேட்டு இருந்த 'சலைன் ஆர்டரில் 10 சதவிகிதம் மட்டுமே சப்ளை செய்யப்பட்டது. வேறு வழி இல்லாமல் எங்கள் மருத்துவமனையின் டீன் தினமும் 50 ஆயிரத்துக்கு லோக்கலில் மருந்துகள் வாங்குகிறார். அவருக்கு அதிகாரம் அவ்வளவே. ஆனால், ஒரு நாளைக்குப் பற்றாக்குறை மருந்துகள் வாங்க ஒன்றரை லட்சம் தேவை! என்னதான் செய்கிறது தமிழ்நாடு மெடிக்கல் சர்வீஸஸ் கார்ப்ப ரேஷன்?
  ''ஒரு காலத்தில் அமைச்சர்களுக்கோ, அதிகாரிகளுக்கோ முடியவில்லை என்றால், உடனே அரசாங்க ஆஸ்பத்திரிக்குத்தான் போவார்கள். இன்றைக்கு கவுன்சிலர்கூடப் போக மாட்டார். இனி அனைத்து அரசு அதிகாரிகளும் மக்கள் பிரதிநிதிகளும் அரசு ஆஸ்பத்திரியில்தான் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ஒரு விதியைக் கொண்டுவரச் சொல்லுங்கள். எல்லா அரசு ஆஸ்பத்திரிகளின் நிலையும் மாறிவிடும்'' என்றார் தஞ்சாவூரில் வெளிநோயாளிகளுக்கான சீட்டு வாங்கக் காத்திருந்த அம்மாபேட்டை ராமசாமி. உண்மைதான். கேள்வி கேட்கவல்ல ஆட்கள் எல்லோரும் தனியார் மருத்துவமனைகளை நோக்கிச் செல்வதால்தான், கேள்வி கேட்க வழியில்லாதவர்களுக்கான மருத்துவமனைகள் ஆகிவிட்டன அரசு மருத்துவமனைகள்!
  இதுவும் கடந்துபோகுமோ!?

  Similar Threads:

  Sponsored Links
  lashmi likes this.
  யுவா

  எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் யாதொன்றும் அறியேன் பராபரமே..

 2. #2
  lashmi's Avatar
  lashmi is offline Penman of Penmai
  Blogger
  Ruler's of Penmai
  Real Name
  vijayalashmiravichandiran
  Gender
  Female
  Join Date
  Apr 2012
  Location
  karur
  Posts
  11,976
  Blog Entries
  43

  Re: அரசு மருத்துவமனைகள்! துயரக் கதை!

  ithellam padikum pothu manasu romba valikuthu yuvan.........but solution?????????????????????

  அன்புடன்
  லஷ்மிரவி  நான் எடுக்கும் முடிவு
  சரியா என்று எனக்கு தெரியாது.

  ஆனால் எடுத்த முடிவை
  சரியாக்குவேன்.....
  .


  --- மாவீரன் அலெக்ஸ்சாண்டர்loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter