கர்ப்பக் காலமும் இரத்த சோகையும்

இரத்தத்திலுள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கை கர்ப்பக் காலத்தில் வெகுவாகக் குறைந்து இரத்த சோகை வரும் நிகழ்வால் பல கர்ப்பிணிகள் அடிக்கடி நோய்க்கு ஆளாகிறார்கள்.

இந்தப் பிரச்சனை ஏன் அடிக்கடி கர்ப்பிணிகளுக்கு வருகிறது என்றால், கருவுக்குத் தேவையான கூடுதல் ஊட்டச்சத்து ஆக்சிஜன் போன்றவை தாயாரின் இரத்தம் மூலமே கடத்தப்படுகிறது. இரும்புச்சத்து போதிய அளவில் இல்லாத தாய்மார்கள் மற்றும் ஊட்ட உணவு உட்கொள்ளாதவர்கள் ஆகியோருக்கு இரத்தப் பற்றாக்குறை ஏற்படுவதால் நோய்த்தாக்கம் ஏற்படுகிறது.

இந்தச் பிரச்சனைக்கு இரும்புச்சத்து மாத்திரைகளைக் கொடுத்து சரி செய்யலாம். இரத்த நிறமிகள் சரியாக இருக்கின்றனவா என்பதை சரி பார்ப்பதற்காகவும், வேறு ஏதேனும் நோய்த்தொற்று இருப்பின் அதை அறிவதற்கும் இரத்தப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

இந்தப் பரிசோதனையில் இரத்த நிறமியான ஹீமோகுளோபின் குறைந்திருந்தால் இரத்த சோகை வந்திருக்கும் நிகழ்வு அடையாளம் காணப்பட்டு அதற்காக சிகிச்சை அளிக்கப்படும். இரத்த சோகைக்காக மட்டுமே பரிசோதனை செய்யாமல் மருத்துவர் வேறு சில சோதனைகளையும் செய்யக்கூடும்.

உதாரணமாக, தாயாரின் இரத்தப் பிரிவை பரிசோதனை மூலம் கண்டறிந்து பாதுகாப்பான இரத்தம் செலுத்தவும், பிரசவ காலத்தில் தேவைப்படும் சிகிச்சைக்காக இரத்தத்தை வாங்கவும் மருத்துவரால் இயலும். முதல் முறையாக கருவுறும் பெண்ணுக்கு ஆர்.எச். காரணி கண்டறியப்பட வேண்டும் என்பதற்காக இரத்தப் பரிசோதனை கட்டாயமாக்கப்படும். இதன்மூலம் குறைபாடுள்ள குழந்தைப் பேற்றை தவிர்த்துவிடலாம்.

கணவருக்கு ஆர்.எச். பாசிடிவ் ஆகவும், மனைவிக்கு ஆர்.எச். நெகடிவ் ஆகவும் இருந்தால் பிறக்கும் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படலாம். முதல் குழந்தைக்கு பாதிப்பு தீவிரமாக இல்லாவிட்டாலும் அடுத்துப் பிறக்கும் குழந்தையை போராடித்தான் காப்பாற்ற வேண்டும். தற்போது இதற்கான தடுப்பூசி முறைகள் நடைமுறையில் உள்ளன.

Similar Threads: