Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4825Likes

Today's Medical Info


Discussions on "Today's Medical Info" in "Health" forum.


  1. #1511
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: சிறுநீர்த் தொற்றுக்குத் தீர்வு!

    என் வயது 70. சிறுநீர்த் தொற்று காரணமாக PUS CELLS உற்பத்தியாகி இரவு நேரத்தில் பலமுறை சிறுநீர் கழிக்க வேண்டியுள்ளது. ஒவ்வொரு முறை சிறுநீர் கழித்த பின்னரும் சிறுநீர் முழுவதுமாக அகலுவதில்லை. சில சொட்டுகளே சிறுநீர் பிரிகிறது. இந்த உபாதை மாற வழி என்ன?
    ஏ.பரந்தாமன், திருப்பாலக்குடி.


    ஆற்று தர்ப்பை, நாணல், சம்பா நெற்பயிரின் வேர், தர்ப்பைப் புல், கரும்பு வேர் ஆகியவை சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் கிருமித் தொற்று உபாதையை அழித்து, நீர்க்கடுப்பை அகற்றி, சிறுநீரைத் தாராளமாகப் பிரித்து வெளியேற்றும் ஆற்றல் உடையவை. இந்த ஐந்து மருந்துகளின் சேர்க்கைக்கு "த்ருண பஞ்சமூலம்' என்று பெயர். தமிழகத்தில் கிராமப் பகுதிகளில் இவை கிடைக்கக்கூடும். நகரப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு இவற்றைச் சேகரித்து, தண்ணீரில் வேக வைத்துக் குடிக்கப் பொறுமையில்லை, நேரமுமில்லை என்பதால் இவற்றைத் தயாரித்து விற்கும் மருந்துக் கம்பெனிகளின் துணையை நாட வேண்டியுள்ளது. "சுகுமாரம்க்ருதம்' என்ற பெயரில் விற்கப்படும் நெய் மருந்தை ஒன்றிரண்டு ஸ்பூன் அதாவது சுமார் 5 -10 மி.லி. உருக்கி காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர நல்லது.

    நீங்கள் முட்டை வடிவில் உள்ள பார்லி சாப்பிடுவது நல்லது. இதன் முழு அரிசியைக் கஞ்சியாக்கி அதன் தெளிவை காலையில் பருகலாம். மோருடன் சேர்த்துப் பருகினால், சிறுநீரை அதிக அளவில் பெருக்கி வெளியேற்றும். கிருமித் தொற்றும் இதன் மூலம் விலகுவதால் இரவில் அடிக்கடி சிறுநீர் போகும் உபாதை குறையும். அதுபோல, காராமணியைச் சுண்டலாகச் சாப்பிடுவதால், அது சிறுநீரை நன்றாக வெளியேற்றும். கொள்ளை 10 பங்கு தண்ணீரில் நீர்த்த கஞ்சியாக்கி இந்துப்பு சேர்த்துச் சாப்பிட, சிறுநீரகங்களின் உள்ளே புகுந்து, அங்குள்ள கற்கள், கிருமித் தொற்று போன்றவற்றைச் சுரண்டி வெளியாக்கும். அதுபோல, பசலைக் கீரையை உணவில் அடிக்கடி சாப்பிட்டு வர, நீர்ச்சுருக்கு, நீர்க்கடுப்பு, இன்ஃபெக்ஷன் ஆகியவற்றைப் போக்கும். சுரைக்காய், சிறுநீரக உபாதைகளில் ஏற்படும் பல உபாதைகளை நீக்கக் கூடியது. பழங்களில் நாவல்பழம் சாப்பிட நல்லது. பீர்க்கங்காய் துவையலும் நீங்கள் சாப்பிட நல்லது.

    பொது இடங்களிலுள்ள கழிப்பிடங்களில் சிறுநீர் போவதை நீங்கள் தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு முறை சிறுநீர் கழித்த பிறகு, அது வெளியேறும் துவாரத்தைச் சுத்தமான தண்ணீரால் கழுவிக் கொள்வது நல்லது. வெள்ளரி விதையை மண்பானைத் தண்ணீரில் ஊற வைத்து, நன்றாக ஊறியதும் அந்தத் தண்ணீரைக் குடிப்பதால், வாய்ப்புண், சிறுநீர் கல்லடைப்பு, நீர்த்துவார வெடிப்பு, சதை அடைப்பு, நீர்ச்சுருக்கு இவற்றைப் போக்கிப் பலம் தரும். இதுபோலவே, நெருஞ்சில் விதையையும் ஊறப்போட்டுச் சாப்பிடுவது நல்லதே.

    சாதாரண பசு நெய்யை உருக்கி, சுமார் 10 மி.லி. உணவுக்கு முன்பு ஒரு தரம், உணவு செரித்தவுடன் அதே அளவில் ஒரு தரமும் சாப்பிடுவதால், பல சிறுநீரக உபாதைகளை நாம் குணப்படுத்தலாம் என்று ஆயுர்வேதம் கூறுகிறது. வஸ்தியாமயாந்தகம் கிருதம் எனும் நெய் மருந்தை இதுபோல உபயோகிப்பதும் சிறந்தது. பிருகத்யாதி கஷாயம் 15 மி.லி. எடுத்து 60 மி.லி. வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் சுமார் 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட, சிறுநீர் நன்றாக இறங்கும். அதன் பாதையைச் சுத்தமாக்கும்.

    தசமூலஹரீதகீ எனும் லேகியம் காலை, இரவு உணவுக்கு முன் 10 கிராம் வரை நக்கிச் சாப்பிடலாம். இப்படி பல மருந்துகள் இருந்தாலும், எதை எப்படிச் சாப்பிட்டால் சரியாகும் என்பதை ஓர் ஆயுர்வேத மருத்துவரால் மட்டுமே கூறமுடியும் என்பதால், நீங்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிட்டு, விரைவில் குணமடைய முயற்சி செய்யவும்.

    (தொடரும்)


    By எஸ். சுவாமிநாதன்
    dinamani : 08 November 2012



    Sponsored Links

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  2. #1512
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: வாய் வழியாகச் சுவாசிப்பதை நிறுத்த...

    என் கணவருக்கு சளி, இருமல், மூக்கடைப்பு போன்ற எந்த உபாதையுமில்லை. ஆனாலும் அவரை அறியாமலேயே வாயைத் திறந்து கொண்டேதான் உறங்குகிறார். வாய் வழியாகத்தான் காற்றை உள்ளிழுத்து வெளியே விடுகிறார். இது கெடுதலா? இதனால் ஏதேனும் உபாதைகள் ஏற்படுமா? அவர் மூக்கு வழியாகச் சுவாசம் விட்டு உறங்க வழி என்ன?
    சீதாலட்சுமி, காஞ்சிபுரம்.


    சுவாசப் பைகளில் மூக்கு வழியே உள் செல்லும் காற்று ரத்தத்துடன் நெருங்கிச் சம்பந்தப்பட்டு ரத்தத்தைச் சுத்தம் செய்கிறது. பலருக்கும் சுவாசிப்பது எப்படி? என்பதே தெரியவில்லை. இந்தக் குறையினால், ரத்தம் போதிய அளவு சுத்தம் அடைவதில்லை. மூக்கு வழியாக காற்றை உள்ளே இழுப்பதால், காற்று வடிகட்டப்படுவதுடன், அதற்கு வெப்பமும் கொடுக்கக் கூடிய வகையில் இயற்கையானது மூக்கைப் படைத்திருக்கிறது. வாய் வழியாகச் சுவாசித்தால் இந்த இரு நன்மைகளையும் நாம் இழப்பதுடன் மூக்கிலும், தலையிலும் நீர்க்கோர்வை எனும் உபாதைக்கு அது வித்திடவும் காரணமாகிறது.

    அதனால் உங்கள் கணவர் சுவாசப் பயிற்சிகளைக் கற்றுக் கொள்வது மிகவும் பயன்தரக் கூடியதாக இருக்கும். அவர் யோகாசனப் பயிற்சிகளைக் கற்றுக் கொண்ட பிறகுதான் சுவாசப் பயிற்சிகளைச் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை. மூக்கு வழியாகச் சுவாசிக்கவும், மார்பு தாராளமாக விரியவும் உதவக்கூடிய ஏதேனும் ஒரு வசதியான ஆசனமும் பிராணாயாம முறையுமே அவருக்குப் போதுமானது. நாம் வாயை இறுக மூடிக் கொண்டாலேயே மூக்கின் வழியாக சுவாசிக்க வேண்டி வரும். சுத்தமாகச் சுவாசிக்க வாயையும் மூக்கையும் சுத்தமாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். நன்றாகப் பல் துலக்குவதாலும், நாக்கை வழித்துக் கொள்வதாலும், வாயில் தண்ணீர் விட்டு அடிக்கடி கொப்பளிப்பதாலும் வாயிலுள்ள துர்நாற்றத்தை அகற்றிக் கொள்ளலாம். அப்படியே மூக்கையும் நன்கு கழுவிச் சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியம்.

    தாடைப் பகுதிகளிலுள்ள நரம்புகளும், தசைகளும் தளர்வடையும் வகையில் அதிகம் பேசுவதாலும், எதையாவது அடிக்கடி மென்று சாப்பிட்டாலும், இரவில் தன்னை அறியாமலேயே வாய் திறந்து கொள்ளும். அதனால் முகத்திலுள்ள நரம்புகளும், தசைகளும் வலுப்பெறச் செய்யும் கார்ப்பாஸஸ்த்யாதி தைலம், நாரயண தைலம், தான் வந்திரம் தைலம் போன்றவற்றிலொன்றை மருத்துவரின் ஆலோசனைப்படி, இளஞ்சூடாக முகத்தில் உருட்டித் தேய்த்து சுமார் 20 -30 நிமிடங்களுக்குப் பிறகு, பாலில் வெந்து கொண்டிருக்கக் கூடிய பூண்டிலிருந்து வரும் நீராவியை, முகச் சதைகளில் படுமாறு 5 -10 நிமிடங்கள் செய்து கொள்வது மிகவும் சிறந்த சிகிச்சைமுறையாகும். இதற்குச் க்ஷீரதூமம் என்று பெயராகும். வாய்கோணிக் கொள்ளும் உபாதையில் இந்தச் சிகிச்சை முறை நல்ல பயனைத் தருகிறது.

    மூக்கினுள் அணுதைலம் எனும் மூலிகைத் தைலத்தை 2 -4 சொட்டுகள் விட்டு, அது, தொண்டைப் பகுதி வழியாக, வாய்க்குள் வந்தவுடன் காறித் துப்பிவிடுவதால், மூக்குப் பகுதி எப்போதும் சுத்தமாக இருக்கும்.

    காலை, இரவு பல் தேய்த்த பிறகு இவ்வாறு செய்து கொள்வது நல்லது. வாயினுள் வலிய அறிமேதஸ் தைலம் 5 மி.லி. விட்டு, வாயினுள் குலுக்கி, எச்சில் சேர்ந்ததும் துப்பிவிடுவதன் மூலம், வாய்ப்பகுதி சுத்தமாவதுடன், அதனைச் சுற்றியுள்ள நரம்புகளும் வலுப்படும், காலை, இரவு உணவிற்குப் பிறகு இவ்வாறு செய்வது நலம். மூளையிலிருந்துதான், நரம்புகள் முகப் பகுதிக்கு வருவதால் தலையில் மட்டுமே உபயோகிக்கத் தகுந்த மூலிகைத் தைலங்கள் உள்ளன. அவற்றையும் வெதுவெதுப்பாக தலையில் ஊற வைத்துக் குளிப்பதன் மூலமாகவும், நரம்புகளை வலுப்படுத்தலாம். நபருக்கு நபர் இத் தைலங்கள் வேறுபடுவதால், ஓர் ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி அவற்றை உபயோகிப்பதே நலம்.

    (தொடரும்)


    By எஸ். சுவாமிநாதன், டீன் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே) செல் : 94444 41771
    dinamani : 16 November 2012



    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  3. #1513
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: குழந்தைகளுக்கு வரும் இருமல், பசியின்மை தீர..!

    என் வீட்டில் சிறு குழந்தைகள் உள்ளனர். அடிக்கடி சளியுடன் கூடிய இருமல், சில சமயம் வறட்டு இருமல், உள்காங்கை, பசியின்மை, உடல் மெலிந்திருத்தல், மலம் செரியாமல் இளகிப் போகுதல் போன்ற தொல்லைகள் ஏற்படுகின்றன. ஏதேனும் சிறிய கை வைத்தியம் சொல்ல முடியுமா?
    கனகவல்லி, தாம்பரம்.


    தாளீஸபத்திரி 10 கிராம், மிளகு 20 கிராம், சுக்கு 30கிராம், திப்பிலி 40 கிராம், மூங்கிலுப்பு 50 கிராம், லவங்கப்பட்டை 5 கிராம், ஏலரிசி 5 கிராம், சர்க்கரை 320 கிராம். சர்க்கரை நீங்கலாக மற்றவற்றைத் தனியே இடித்து மிகச் சிறிய கண்ணுடைய சல்லடையில் சலித்தோ, துணியால் சலித்தோ சூரணமாக்கிக் கொள்ளவும். சர்க்கரையை இடித்து நன்கு சலித்து அந்த சூரணத்துடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

    ஒரு கால் அல்லது அரை டீ ஸ்பூன், தினம் 2 - 4 வேளை உசிதப்படி தேன் அல்லது நெய்யுடன் கலந்தோ, காய்ச்சியோ சர்க்கரை சேர்த்த பாலுடனோ சாப்பிடலாம்.

    இது சளியுடன் கூடிய இருமலுக்குச் சாப்பிடக் கூடிய சிறந்த மருந்தாகும். மார்பிலும் தலையிலும் சளி கோர்த்து வறட்டு இருமல் ஏற்படும்போது இதைச் சாப்பிட நீர்க்கோர்வை எளிதில் பழுத்து வெளியாகும். வறட்டிருமல் நிற்கும். இருமலால் ஏற்படும் விலா வலி ,

    மார்பு வலி, தொண்டை வலி முதலியவையும் சுகமாகும். வெகு நேரம் சிரமத்துடன் இருமிச் சிறிது கபம் துப்பியதும் சிறிது நேரம் அடங்கும் இருமல், நா வறட்சி,தொண்டை உலர்ந்து போகுதல், கண், முகம் சிவத்தல் போன்றவை இதனால் குணப்படும். சூட்டுடன் கூடிய இருமலானால் நெய்யில் குழைத்துச் சாப்பிடலாம். அல்லது சர்க்கரை சேர்த்துக் காய்ச்சிய பசுவின் பாலுடன் சாப்பிடலாம். கபம் இறுகி ஏற்படும் இருமலில் தேனில் குழைத்துச் சாப்பிடலாம்.

    சிறுவர்களுக்கு ஏற்படும் உள்காங்கை, பசியின்மை, உடல் இளைப்பு, மலம் செரியாமல் இளகிப் போதல், ருசியின்மை, உணவின் மீது வெறுப்பு போன்றவற்றுக்கு, இதைத் தொடர்ந்து தேன், நெய், அல்லது பாலில் கொடுத்து வர நல்ல பசி, ருசி, ஜீரண சக்தி ஏற்படும். இளைப்பு மாறி சுறுசுறுப்பும், புஷ்டியும் உண்டாகும். உணவு ஜீரணமாகி மலமும் இறுகிப் போகும்.

    இதில் மூங்கிலுப்புக்குப் பதில் கூகைக் கிழங்கின் மாவை (கூகை நீர்) சேர்த்தும் செய்வதுண்டு. அதை சிறுவர்களுக்குக் கொடுப்பது மிகவும் நல்லது. சளி இருமலுடன் மலம் செரியாமல் இளகிப் போகும் போது இதைக் கொடுக்க மிகவும் நல்லது.

    இதைச் செய்வதற்கு உங்களுக்குக் கஷ்டமாக இருந்தால் ஆயுர்வேத மருந்துக் கடைகளில் தாளீசாதி அல்லது தாளீசபத்ராதி சூரணம் என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. அதை வாங்கியும் நீங்கள் பயன்படுத்தலாம்.

    (தொடரும்)


    By எஸ். சுவாமிநாதன், டீன்,ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி
    dinamani : 23 November 2012



    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  4. #1514
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: உடல் அதிகமாக மெலிவதை எப்படித் தடுப்பது?

    எனக்கு வயது 74. இரவில் அதிக தடவை எழுந்து சிறுநீர் போக வேண்டியிருக்கிறது. எவ்வளவு சாப்பிட்டாலும் சாப்பிட்டது போன்ற உணர்வில்லை. சாப்பிட்ட சில விநாடிகளில் உணவு எங்கே போனதென்றே தெரியவில்லை. உடல் அதிக வேகமாக மெலிந்து கொண்டே வருகின்றது. எக்ஸ்ரே எடுத்ததில் நுரையீரல் சுருங்கிவிட்டது என்று கூறுகிறார்கள். அடிக்கடி நாவறட்சி ஏற்படுகின்றது. இவை மாற ஆயுர்வேத மருந்துகள் உள்ளனவா?
    ஆர்.ராமன், சிவகங்கை.


    சிறுநீரகங்களின் வழியே வெளியேறும் சில சத்தான பகுதிகளை மறுபடியும் உறிஞ்சும் சக்தியை சிறுநீரகங்கள் பெற்றுள்ளன. அநேகமாக அவை உறிஞ்சப்படாமல் சிறுநீரின் மூலம் வெளியேறுவதாகத் தோன்றுகிறது. அதுபோலவே உணவை உள்ளே வேகமாக இழுத்துக் கொண்டு, அதன் சத்தான பகுதியை உடல் பெறாமல், சிறுநீரின் மூலம் வெளியேறுவதாலும் உடல் மெலிந்து வருவதாகவும் தென்படுகிறது. உடலுக்குத் தேவையான பிராண வாயுவை நுரையீரல் சுருக்கத்தின் மூலமாக இழப்பதன் மூலம், அணுக்களின் வளர்ச்சியும், போஷணையும் தடைபடுகிறது. அவை தம் செயல்களில் மந்தமான தன்மையை அடைவதால், உயிரோட்டமுள்ள இந்த அணுக்களின் சிதைவு, உடல் மெலிந்து போவதற்குக் காரணமாகலாம். அதனால் உங்களுடைய உடலின் மிக முக்கிய பகுதிகளான சிறுநீரகங்கள், தமனிகள், அணுக்கள் ஆகியவற்றை வலுப்படுத்தி, அவற்றின் செயல்பாட்டை மறுபடியும் சுறுசுறுப்பான நிலைக்கும், ஆரோக்கியமான தன்மைக்கும் கொண்டு வர வேண்டிய நிர்ப்பந்தமிருக்கிறது. உணவு வேகமாகச் செரிப்பதால், எளிதில் செரிக்கக் கூடிய உணவு வகைகளால் நன்மை ஏதும் ஏற்பட வாய்ப்பில்லை. எளிதில் செரிக்காத அதே சமயத்தில் உடல் உட்புறப் போஷணைக்கு உதவும் உணவுதான் நன்மை தரும் என்பதால், நீங்கள் காலை உணவாக, முந்திரி, பாதாம் என்ற வகையில் சிறு சிறு பாக்கெட்டுகளை வைத்து பெரிய மளிகைக் கடையில் விற்கப்படும் சத்துமாவை வாங்கி, நன்றாகப் பொடியாக்கி, கஞ்சி காய்ச்சி, தண்ணீர் கலக்காத ஏடுகளுடன் கூடிய சூடான பாலுடன் கலந்து, சர்க்கரை சேர்த்து காலை உணவாகச் சாப்பிட நல்லது.

    காலையில் 10 மணிக்கு அத்திப் பழம், பாதாம் பருப்பு, அக்ரோட் பருப்பு, பிஸ்தாப் பருப்பு, சாரப் பருப்பு, பூனைக்காலி விதைப் பருப்பு, ஆப்பிள் விதை, ஏலக்காய், கல்கண்டு இவற்றை சமன் எடையாகப் பொடிக்க வேண்டியவற்றைப் பொடித்தும், அரைக்க வேண்டியவற்றை அரைத்தும், பசுவின் நெய்யில் கலந்து, அத்துடன் சிறிது குங்குமப்பூ சேர்த்து ஒருவாரம் ஊறிய நிலையில் உள்ளதைச் சுமார் 15 - 20 கிராம் வீதம் சாப்பிடவும். இதனால் நல்ல உடல் பலம், புஷ்டி, வீரியம் பெருகும்.

    மதியம் 12 மணிக்கு இரண்டு செவ்வாழைப் பழம் அல்லது இரண்டு ரஸ்தாளி வாழைப்பழம் சாப்பிடவும். நெய்ப்புத் தன்மையும், குளிர்ச்சியும் உள்ள இவை சற்றே தாமதித்து ஜீரணமாகும் தன்மை வாய்ந்தவை. மலத்தின் அளவை அதிகரிக்கச் செய்து வெளியேற்ற உதவுவதுடன், உடலில் போஷணைக்கு வேண்டிய உணவுப் பகுதிகளை வெளியேற்றவிடாது தடுத்து நிறுத்தும் சக்தியும் வாய்ந்தவை.

    மதியம் 1 மணிக்கு மாமிச சூப் வகை உணவுகளை சூடான சாதத்துடன் கலந்து சாப்பிட்டு, பஞ்சாமிர்தம் 15 - 20 கிராம் சாப்பிடவும்.

    மாலை 4 மணிக்கு, பேரீச்சம்பழம் 8 -10 சுளைகள் சாப்பிடவும். உள்ளுறுப்புகளுக்கு நெய்ப்பும், போஷணைகளையும் உண்டாக்கும். உடலுக்கு வலுவும், புத்துணர்ச்சியையும் கொடுக்கக் கூடியது.

    இரவு 7 மணிக்கு பாலிலிருந்து தயாராகும் பாசந்தி சாப்பிட்டு, இரவு உணவாக பாஸ்மதி அரிசியைச் சாதமாக வடித்து, புலால் வகைகளைச் சேர்க்கும் பிரியாணி சாப்பிடவும். இரவில் படுக்கும் முன் சர்க்கரை கலந்த சூடான பால் சாப்பிடவும்.

    இதுபோன்ற உணவு வகைகளால் உடல் புஷ்டியாகும். நாவறட்சி நீங்கும். மெதுவாகச் செரிப்பதால் சாப்பிட்ட திருப்தி ஏற்படும். உடல் உட்புற உறுப்புகள் நன்கு வலுப்பெறும். உங்கள் உடல் உபாதை குறையும்.

    (தொடரும்)


    By எஸ். சுவாமிநாதன், டீன் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே) செல் : 94444 41771
    dinamani : 01 December 2012



    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  5. #1515
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: தூக்கமின்மையும் உடல் வலிகளும்!

    நான் ஓய்வு பெற்ற ஆசிரியர். கடந்த பல ஆண்டுகளாக சதா டென்ஷன், அதனால் தூக்கமின்மை, உடல் வலி, மூட்டுவலி, இடுப்பு வலி, பிடிப்பு போன்றவற்றினால் அவஸ்தைப்படுகிறேன். இருப்பினும், தியானம், கடவுளை வேண்டுதலினால் அவ்வப்போது சமாளித்து வருகிறேன். இவை முழுவதுமாக மாற ஆயுர்வேதத்தில் மருந்துகள், வைத்தியமுறைகள் உள்ளனவா?
    எம்.எஸ்.மணி, புதுக்கோட்டை.


    மூளைச் சுருக்கம் என்ற ஓர் உபாதையை அதிக டென்ஷன் உள்ளவர்கள் விரைவாகச் சந்திக்க நேரிடும். இந்தச் சுருக்கத்தினால், மூளையிலிருந்து செயல்படும் நரம்புகள், உடல் பகுதிக்குச் செய்திகளை விரைவாகக் கொண்டு சேர்த்தல், அங்கிருந்து செய்திகளை உடனுக்குடன் மூளைக்குத் தெரிவித்தல் போன்ற செயல்களில் தொய்வு ஏற்பட்டுவிடும். இவற்றைச் சாமர்த்தியமாகச் செய்யக் கூடிய பல ரசாயனங்கள் மூளைப் பகுதியிலிருந்து சரியான முறையில் சுரக்காமல் போவதுதான், இந்த நரம்புகளின் தொய்வுக்குக் காரணம். மேலும் ஏறிடும் வயோதிகத்தில் வாதம் எனும் உடல் தோஷத்தின் குணங்களாகிய வறண்ட தன்மை, லேசான தன்மை, மிக மிக நுண்ணிய பாதைகளில் ஊடுருவிப் பாயும் தன்மை, சொரசொரப்பு, எப்போதும் அசைந்து கொண்டே இருக்கும் தன்மை ஆகியவை இயற்கையாகவே கூடுவதால், மூளையிலிருக்கும் தர்ப்பகம் எனும் கபதோஷத்தின் குணங்களாகிய நெய்ப்புத்தன்மை, குளிர்ச்சி, பளுவான தன்மை, தாமதித்துச் செயல்படுதல், வழவழப்புத் தன்மை, அசைவற்றிருக்கும் தன்மை போன்றவற்றைக் குறைத்துவிடும். இந்த வாயுவின் சீற்றமானது உடல் வலி, மூட்டுவலி, தூக்கமின்மை, இடுப்புவலி, பிடிப்பு போன்றவற்றை ஏற்படுத்திவிடும்.

    மூளை நரம்புகளை வலுப்படுத்தவும் அங்கு ஏற்பட்டுள்ள வாயுவின் சீற்றத்தைக் காப்பாற்றி, கபத்தின் குணங்களைக் கூட்டி, அதன் மூலம் ரசாயனச் சுரப்பிகளின் கேந்திரங்களை வலுப்படுத்தவும், ஆயுர்வேதம் சில சிறந்த உபாயங்களாகிய "நஸ்யம்' எனும் மூக்கினுள் பிழியப்படும் எண்ணெய் முறையையும், தலையில் நிரப்பி வைக்கப்படும் "சிரோவஸ்தி' எனும் எண்ணெய் கட்டும் வைத்திய முறையையும் உபதேசித்திருக்கிறது. இவற்றை நீங்கள் ஓர் ஆயுர்வேத மருத்துவமனையில் தங்கி எடுத்துக் கொள்ள வேண்டிய முக்கிய சிகிச்சைகளாகும். இந்த சிகிச்சை முறைகளை செய்து கொள்ளும் நாட்களிலேயே, "ஸ்ர்வாங்தைலதாரா' எனும் உடலெங்கும் பிழியப்படும் மூலிகை எண்ணெய் வைத்தியமும், இதமான பதத்தில் தசைகளையும், மூட்டுப் பகுதிகளையும் தேய்த்துவிடும் முறையும் மிகவும் சிறந்த வைத்தியமுறைகளாகும். மூலிகை வேர்களையும், இலைகளையும் கொண்டு தண்ணீரில் கொதிக்கவிட்டு, அதிலிருந்து வரும் நீராவியை உடலெங்கும் படும்படி காட்டப்படும் சிகிச்சையும் உங்களுக்கு நல்ல பலனைத் தரலாம். மூலிகைத் தைலங்களாலும், மூலிகைக் கஷாயங்களாலும் செய்யப்படும் "வஸ்தி' எனும் ஆஸன வாய் வழியாக மலக்குடலுக்குச் செலுத்தப்படும் சிகிச்சைமுறையும் சிறப்பானதுதான்.

    நம் முன்னோர் அமைத்துக் கொடுத்துள்ள தமிழ்நாட்டு உணவுமுறையை நீங்கள் தொடர்ந்து அமைத்துக் கொள்வதும் உடல் நலனுக்கு நல்லதே. உணவு உட்கொள்ளத் தொடங்கியது முதல் அது முழு அளவு ஜீரணம் அடையும் வரையிலான கால அளவை மூன்று சமபாகங்களாகப் பிரித்து முதலாவது கபகாலம் என்றும், அடுத்து பித்த காலம் என்றும், கடைசியில் உள்ளது வாத காலம் என்றும் கூறுவர். அதனதன் காலங்களில் அவை அவை தலைவனாக நின்று அதனதன் பணியைச் செவ்வனே செய்கின்றன. அந்த வகையில் முதலில் சூடான புழுங்கலரிசிச் சாதத்துடன் நெய், பருப்பு கலந்து அன்னமும் நடுவில், பித்தத்தைத் தூண்டிவிடும் புளிப்பு, உப்பு, காரம் நிறைந்த ரசம் சாதமும், இறுதியில் வாயுவை சீராகச் செயல்படுத்தக் கூடிய துவர்ப்பு, புளிப்பு நிறைந்த மோருடன் கூடிய உப்பு, ஊறுகாய்க் காரமுடன் சாப்பிட, குடல் பகுதியில் இந்த மூன்று தோஷங்களின் சீரான செயல்பாட்டின் மூலமாகவும், நீங்கள் மூளைப் பகுதியை வலுப்படுத்திக் கொள்ளலாம்.

    (தொடரும்)


    By எஸ். சுவாமிநாதன், டீன் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே) செல்: 94444 41771
    dinamani : 08 December 2012



    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  6. #1516
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்
    முழங்கால், மூட்டுகளில் பிடிப்பு... "படக்' சப்தம்!

    எனக்கு வயது 52. முழங்காலை நீட்டி மடக்கும்போது கடுமையான வலியும் "படக்' என்ற சத்தமும் ஏற்படுகின்றது. பிடித்துக் கொள்கிறது. சிறிதுநேரம் முன்னும் பின்னும் அசைத்தால் மட்டும்தான் அந்தப் பிடிப்புவிடுகின்றது. இதைக் குணமாக்க வழி என்ன?
    ம.லூர்துமேரி, தர்மபுரி.


    ஆவரண வாயு என்ற ஒன்றை ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது. அதாவது, தனது சுதந்திரமான அசைந்து நகரும்தன்மையை, வாயு மற்ற தோஷங்களின் வாயிலாக இழக்கும்போது அல்லது அவற்றால் சூழப்படும்போது அது ஆவரண வாயு என்று பெயர் பெறுகிறது. இப்படிச் சூழ்ந்து வெளியே வர முடியாத நிலையிலுள்ள வாயுவை, உடல் வெளிப்புற மற்றும் உட்புறக் குளிர்ச்சியினால் வளரவிட்டுவிட்டால், நீங்கள் குறிப்பிடும் உபாதைகள் காணத் துவங்கும். வாயுவை நகர்த்த முடியாதபடி எவையெல்லாம் செயல்படுகிறதோ, அவற்றையெல்லாம் முதலில் அப்புறப்படுத்த வேண்டும். கொட்டஞ்சுக்காதி சூரணம் எனும் மருந்தை புளித்த மோருடன் கலந்து சூடாக்கி கால் மூட்டில் பற்றிட்டு, காலையில் சுமார் 3/4 - 1 மணி நேரம் வரை வைத்திருந்து, வெந்நீரில் அலம்பிவிட வேண்டும். இதைத் தொடர்ந்து சுமார் 21 -48 நாட்கள் வரை செய்து வர, எது வாயுவைச் சூழ்ந்து நிற்கிறதோ அவை அவ்விடம்விட்டு விலகிவிடும். இந்தச் சிகிச்சையின் மூலம் முடங்கிக் கிடந்த வாயு, வெளிக்குக் கொண்டு வரப்பட்டு விடுவிக்கப்படுகிறது.
    வாயு விலகினாலும் அதன் தாக்கம் மூட்டுகளில் விட்டுச் செல்லப்பட்டிருப்பதால், மூட்டுப் பகுதியை வலுப்படுத்தும்விதமாக ஆயுர்வேத மூலிகைத் தைலமாகிய பிண்ட தைலத்தையும் முரி வெண்ணெயையும் சிறிது கலந்து, இரும்புக் கரண்டியில் சூடாக்கி, பஞ்சில் முக்கி, முட்டியின் மீது வைத்து, ஒரு துணியில் அப்பகுதியைக் கட்டி வைக்கவும். வெதுவெதுப்பாக அப்பகுதி இருப்பதற்காக, மின்விசிறி உபயோகிப்பதைத் தவிர்க்கவும் 3/4 -1 மணி நேரம் வரை வைத்திருந்து, அதன் பிறகு பஞ்சை எடுத்துவிட்டு, அப்பகுதியை ஒரு துணியால் துடைத்துவிடும் இந்தச் சிகிச்சை முறையும் சுமார் 21 -48 நாட்களுக்குத் தொடர்ந்து செய்யலாம். காலை உணவுக்கு முன்பாகச் செய்து கொள்வது நலம். மூட்டுகளில் தேவையான எண்ணெய்ப் பசை உருவாக்கித் தந்து, அங்கு ஏற்படும் சத்தத்தை நீக்குவதையும் இந்த எண்ணெய் சிகிச்சை ஏற்படுத்தித் தரும். அடுத்த 21 நாட்களுக்கு இதே எண்ணெய் வகைகளைப் புதிதாக வாங்கி, மூட்டுகளின் கீழ் ஒரு பேசின் வைத்து எண்ணெய்களை வெதுவெதுப்பாக மூட்டின் மீது தாரையாக விழும்படிவிடவும். சுமார் 8 -12 அங்குலம் மேலிருந்து விடலாம். இதையும் காலை உணவுக்கு முன்பாகவேவிடவும். இது ஒரு சிறந்த வலி நிவாரணி சிகிச்சை மட்டுமல்ல, தேவையான நெய்ப்பையும், மூட்டுகளுக்கு ஏற்படுத்தித் தரும்.
    கீழே அமர்ந்து மலம் கழிக்கும் கழிவறையைப் பயன்படுத்த வேண்டாம். மேலே அமர்ந்து போகும் கழிவறைகளினால் கால் முழங்கால் மூட்டுகளுக்கான அழுத்தத்தைக் குறைக்கலாம். ஒரே இடத்தில் நிறைய நேரம் அமர்ந்திருப்பதையும், குளிர்ந்த நீரை குளிப்பதற்கும், குடிப்பதற்கும் பயன்படுத்தவும் வேண்டாம். பலாகுடூச்யாதி எனும் ஆயுர்வேத கஷாய மருந்தை 15 மி.லி. எடுத்து 60 மி.லி. வெதுவெதுப்பான தண்ணீருடன் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் சுமார் 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிடவும்.

    (தொடரும்)


    By dn
    dinamani : 15 December 2012



    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  7. #1517
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: ஆறாத புண்ணை ஆற்ற...!

    என் வயது 40. சுருக்கெழுத்துத் தட்டச்சராகப் பணிபுரிகிறேன். எடை 89 கிலோ. எனது இடது காலில் VERICOSE VEIN பிரச்னை எற்பட்டு, கடந்த 2009 ஆம் ஆண்டு முழங்காலுக்கு அருகே ஆபரேஷன் செய்து வெட்டி எடுத்துவிட்டார்கள். கடந்த ஒருமாதமாக ஆபரேஷன் செய்த இடத்தில் புண் ஏற்பட்டு, ஆறாமல் உள்ளது. சர்க்கரை உபாதை கிடையாது. புண்ணில் எரிச்சலும், அதனைச் சுற்றி வலியும் உள்ளது. 10 நிமிடத்துக்கு மேல் நிற்க முடியவில்லை. இதற்கு ஆயுர்வேதம் மூலம் தீர்வு கிடைக்குமா?
    பா.முத்துலெக்ஷ்மி, மதுரை-9.


    அதிகமான அசைவுகளைக் கொண்ட உடல் பகுதியில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டிருப்பதாலும், அதிக நேரம் கால்களைத் தொங்கவிட்டு வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தாலும், உடல் எடை அதிகமாக இருப்பதாலும், உங்களுக்குப் புண் ஏற்பட்டு, எரிச்சலும் வலியும் ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

    தசைநார்க் கசிவு, சிரைகள் எனும் ரத்தக் குழாய்கள் வெட்டுப்படுதல், புண் ஆழமாக இருத்தல், கிருமிகளால் உண்ணப்படுதல், எலும்பு முறிதல், அதிகமான அளவில் நெய் மற்றும் எண்ணெய்ப் பொருட்களைச் சாப்பிடுதல், புண் ஏற்பட்டுள்ள பகுதியில் உரோமம், ஆடை முதலியவை உராய்தல், குலுக்கலுடன் கூடிய பயணம், குடல் பகுதியை மலம் அதிகம் சேரும் அளவில் வளரவிட்டு, சுத்தம் செய்து கொள்ளாமல் மலச்சேர்க்கையை வளர்த்துக் கொள்ளுதல், அதிக அளவில் உணவைச் சாப்பிடுதல், அல்லது அதிகப் பட்டினியிலிருந்து உடலை இளைக்கச் செய்யும் முயற்சி, பகலில் தூங்குதல், இரவு கண் விழித்தல் ஆகியவை காரணமாக, ஆறக்கூடிய புண்ணாக இருந்தாலும், ஆறுவதில்லை என்று ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது.

    பழைய அரிசியினால் தயாரிக்கப்பட்ட கஞ்சியை காலை உணவாக, இந்துப்புடன் வெதுவெதுப்பாகச் சாப்பிடுவது நலம். அதுபோல, பச்சைப் பயறு கஞ்சியைக் காலை உணவாகச் சாப்பிட்டால் புண் விரைவில் ஆறுவதற்கு உதவியாக இருக்கும். புது அரிசி, உளுந்து, எள்ளு, கடலை, கொள்ளு, வெல்லம், மாவுப் பண்டங்கள், பாயசம், தயிர், பால், புளிப்பு, உப்பு, காரம் போன்றவற்றைக் குறைக்கவும். தலையைக் கிழக்கு நோக்கி வைத்து, இரவில் உறங்கினால், விரைவில் ஆறுவதற்கான ஒருவழியாகும் என்ற ஒரு விநோதக் குறிப்பை ஸஸ்ருதர் எனும் முனிவர் குறிப்பிடுகிறார்.

    திரிபலை, கருங்காலிக் கட்டை, அதிமதுரம், வேப்பிலை, மரமஞ்சள், மயில்துத்தம் போன்றவை புண்களை ஆற்றுவதில் சிறந்தவை.

    திரிபலை எனும் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் மற்றும் கருங்காலிக் கட்டையை வகைக்கு 5 கிராம் வீதம் சேர்த்து, அரைலிட்டர் தண்ணீரில் கொதிக்கவிட்டு, கால் லிட்டராக வற்றியதும் வடிகட்டி, புண் ஏற்பட்டுள்ள பகுதியை காலை, இரவு உணவுக்கு முன் அலம்பி

    விடுவதால், அங்குள்ள கிருமித் தொற்று நீங்குவதுடன், புண் விரைவில் ஆறுவதற்கும் ஏற்ற சிகிச்சையாகும். அதன்பிறகு, அதிமதுரத் தூளை அந்த இடத்தில் தெளிப்பதும் நல்லதே.

    துத்தம், வேப்பிலை, மஞ்சளைப் புகைத்து புண் ஏற்பட்டுள்ள பகுதியில் இரவில் படுக்கும் முன் புகையைக் காண்பித்துவர, புண் விரைவில் ஆறும்.

    இரண்டு திரிபலாகுக்குலு எனும் மாத்திரைகளைக் காலை, இரவு உணவுக்கு அரை மணி நேரம் முன்பாகச் சாப்பிடவும்.

    சுமார் 28-48 நாட்கள் வரை சாப்பிடலாம். மஞ்சிஷ்டாதி கஷாயத்தை 15 மி.லி. அளவில் எடுத்து, 60 மி.லி. வெதுவெதுப்பான தண்ணீர் கலந்து, காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிடுவதும் நல்லதே. சுமார் 3 -4 வாரங்கள் வரை சாப்பிடலாம்.


    By எஸ். சுவாமிநாதன், டீன் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே) செல் : 94444 41771
    dinamani : 22 December 2012



    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  8. #1518
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: உடல் சூட்டினால் வரும் தும்மல் நீங்க...

    என் வயது 22. நீண்ட நாட்களாக அடுக்குத் தும்மல் இருந்து வருகிறது. கோடையிலும் தும்மல் உள்ளது. குளிர்காலத்தில் சற்று அதிகமாக உள்ளது. இதனால் தலைமுடி கொட்டிவிட்டது. உடல் மெலிந்து, உஷ்ணமாக இருக்கிறது. சில சமயங்களில் பசி மந்தமாக இருக்கிறது. இவை மாற வழி என்ன?
    ஆவுடைநாயகி, புதுக்கோட்டை.


    உடல் சூட்டினால், தலைப்பகுதியிலுள்ள கபத்தினுடைய குணங்களாகிய நெய்ப்பு, குளிர்ச்சி, கனம், மந்தம், வழவழப்பு, பிசுபிசுப்பு, நிலைப்பு போன்ற தன்மை உருகுவதால், அதை வெளியேற்ற உடல் தும்மலை ஏற்படுத்தக்கூடும். வெயிலின் சூட்டினால் இமாலயத்திலுள்ள ஐஸ் கட்டிகள் உருகி, கங்கை நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்படுவதை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம். உருகிய இந்த குணங்கள், மூக்கின் வழியே வெளியே வர எத்தனிக்கும்போது, தும்மலாகவும், உணவுக்குழாயின் வழியாக வயிற்றுப் பகுதியில் சேரும்போது, அங்குள்ள பசித்தீ மந்தமாகவும் ஆகிவிடும். ஆக, உடல் உஷ்ணத்தைக் குறைத்து, கபத்தின் தன்மைகள் உருகிவிடாமல் பாதுகாக்க வேண்டிய நிர்பந்தம் உங்கள் விஷயத்தில் இருக்கிறது.

    கசப்பும், துவர்ப்புமுள்ள உணவும், மருந்தும் மட்டுமே உடல் சூட்டை அதிகரிக்கக் கூடிய பித்தத்தையும், தும்மலுக்குக் காரணமாகிய நீர்த்த கபத்தையும் கட்டும் திறமை கொண்டவை. அதனால் நீங்கள் உணவில் கசப்பு - துவர்ப்புச் சுவை கொண்ட பாகற்காய், சுண்டைக்காய், மணத்தக்காளிக் கீரை, அகத்திக் கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, வாழைப்பூ போன்றவற்றை அதிகம் சேர்க்க வேண்டும். இந்த வகை

    உணவுகளை வெதுவெதுப்பான சாதத்துடன் சாப்பிட்டால், பசியைத் தூண்டி பித்த, கபங்களை மட்டுப்படுத்தும்.

    தும்மல் குறையும்வரைதான் இந்தச் சுவைகளை நீங்கள் பயன்படுத்தலாம். இவற்றைத் தொடர்ந்து பயன்படுத்தினால் உடல் புஷ்டி குறைந்து, மெலிந்துவிடும். அதனால் தோஷங்களின் சமநிலை எட்டியதும், இனிப்பு - புளிப்பு - உப்புச் சுவைகளைச் சமமான அளவில் உணவாக ஏற்பதின் மூலம் உடலின் வனப்பு கூடும்.

    குடூச்யாதி கஷாயம் என்ற ஓர் ஆயுர்வேத மருந்து இருக்கிறது. சுமார் 15 மி.லி. கஷாயத்தில் 60 மி.லி.வெதுவெதுப்பான தண்ணீர் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் சுமார் 21 நாட்கள் முதல் 48 நாட்கள் வரை சாப்பிட்டால், அது பித்த - கபங்களைக் கட்டுப்படுத்தி, தும்மலைக் குறைத்து, பசியைத் தூண்டி, உடல் உஷ்ணத்தை நன்றாகக் குறைத்துவிடும். அஸன வில்வாதி தைலம் எனும் மூலிகைத் தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளிக்கப் பயன்படுத்தவும். தோலுக்குச் சீதோஷ்ண சகிப்புத்தன்மையைக் குன்றாமல் அது பாதுகாக்கும்.

    ஏலக்காய் விதையையும், கிராம்பையும் வெற்றிலைச் சாறு விட்டரைத்து லேசாகச் சூடாக்கி நெற்றியில் பற்று இட்டு வருவதும் நல்லதே.

    உடலுக்கு வலுவூட்டக் கூடிய அகஸ்திய ரசாயனம் எனும் லேகிய மருந்தை, இரவு படுக்கும் முன் 5 கிராம் நக்கிச் சாப்பிடவும்.

    (தொடரும்)


    By எஸ். சுவாமிநாதன்
    dinamani : 28 December 2012



    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  9. #1519
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: ஆயுர்வேதம் காட்டும் வாழ்க்கைமுறை!

    புத்தாண்டு பிறந்துள்ள நிலையில் எதை மதித்து நடக்க வேண்டும்? எப்படி நடந்து கொண்டால் வாழ்க்கை இனியதாக அமையும் என்று ஆயுர்வேதம் குறிப்பிட்டுள்ளதா?
    எஸ்.வேணுகோபாலன், சென்னை.


    தோற்றமும் மறைவும் இல்லாதது காலம். ஒரு ஜீவன் முற்பிறவியில் சேர்த்து வைத்த வினையையொட்டி காலமானது அவனுக்குப் பொதுக் காரணமாக இருக்கின்றது. காலத்தையொட்டி கதிரவன், நட்சத்திரங்கள், கிரகங்கள், விண் முதலான பெரும்பூதங்கள் மாறுதலைப் பெற்று பிறவியெடுக்கின்றன. உயிரினங்களுடைய பிறப்புகளுக்கும், பருவ காலங்களுக்கும், சுவை, வீரியம், தோஷம், உடல், உடல் பலம் இவற்றின் அழிவு வளர்ச்சி இவற்றுக்குக் காரணமாகவும் சாட்சியாகவும் காட்சி தருகின்றன.

    அறநூல்கள், "நீ வாழ விரும்புகிறாயா? அப்படியானால் நேரத்தை வீணாக்காதே' என்று கூறுகின்றன. மனத்தின் ஸத்வ குண வளர்ச்சியினால், மனிதர்களுடைய புத்தி, மேதைமை வளர்ந்து அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவற்றை விரைவில் சம்பாதித்துக் கொள்ள முடியும் என்று ஆயுர்வேதம் கூறுகின்றது. சிறிதும் காலம் தாழ்த்தாமல் கீழ் வருபவனவற்றை மனிதர்கள் தம் வாழ்நாளில் என்றென்றும் அனுசரிக்க வேண்டும்:

    ஸத்யவாதிநம் - மெய்யே பேசுகிறவன்

    அக்ரோதம் - சினமற்றவன்

    நிவிருத்தம் மத்ய மைதுனாத் - கள் மற்ற லாகிரி வஸ்துவை விலக்கினவன், பிரும்மசர்யம் வழுவாதவன்

    அஹிம்ஸகம் - அஹிம்சா விரதமுள்ளவன்

    பிரசாந்தம் - பூர்ண சாந்தியுள்ளவன்

    பிரியவாதிநம் - அன்புடன் பேசுபவன்

    ஜபசெளசபரம் - ஜபத்திலும், அழுக்கை அகற்றுவதிலும் சதா ஈடுபடுபவன்

    தீரம் - தைரியசாலி

    தான நித்யம் - தினமும் தானம் செய்பவன்

    காருண்யவேதிநம் - சகலப் பிராணிகளையும் கருணையுடன் பார்ப்பவன்

    தபஸ்வினம் - தவம் புரிகிறவன்

    தேவ - கோ - பிராம்ஹனாசார்ய - குரு - விருத்தார்ச்சநே - ரதம் - தெய்வம், பசுமாடு, வேதியர், வித்தை கற்பித்தவர், உபதேசித்தவர், முதிர்ந்தோர் இவர்களை முறைப்படி வழிபடுபவன்

    ஆநிருதிசம்ஸயபரம் - எப்போதும் கள்ளம், கபடம், பொல்லாங்கற்றவன்

    ஸமஜாகரமஸ்வப்னம் - பகல் ராத்திரிக்கு விதிப்படி விழிப்பும் தூக்கமும் உள்ளவன்

    நித்யம் க்ஷீரகிருதாசினம் - என்றும் இருவேளையும் பால், நெய் சேர்த்தே உண்பவன்

    தேச கால பிரமாணஜ்ஞம் - அந்தந்த காலம் தேசத்தின் இயல்பை அறிந்து தகுந்தபடி நடப்பவன்

    யுக்திஜ்ஞம் - ஊகமுள்ளவன்

    அநஹங்கிருதம் - கர்வம், அகந்தையில்லாதவன்

    சஸ்தாசாரம் - நல்லொழுக்கமுடையவன்

    அஸங்கீர்ணம் - துஷ்டர்களுடனும், போக்கிரிகளுடனும் சேராதவன்

    அத்யாத்ம பிரவணேந்திரியம் - இந்திரியங்களை அடக்கி ஆத்ம விசார சீலன்

    உபாஸிதாரம் விருத்தாநாம் ஆஸ்திகாநாம் ஜிதாத்மநாம் - முதியவர்கள், ஆஸ்திகர்கள், இந்திரியங்களையும் மனதையும் வென்று தன்னடக்கமுள்ளவர்களைப் பக்தியுடன் வழிபடுபவன்

    தர்மஸாஸ்திரபரம் - தர்மசாஸ்திரப்படி அனுஷ்டிப்பவன்

    வித்யாந்நரம்மேத்ய ரஸாயனம் - இப்படிப்பட்ட புருஷன் ஸத்வம் தரும் புத்திமேதைகளை வளர்க்கும் ரசாயனத்தை சேவிப்பவன்

    மேற்குறிப்பிட்டவற்றை இவ்வருடத்தில் கடைப்பிடித்துக் காலத்தை மதித்து நடந்து இந்த வருடத்தையும் வாழ்க்கையையும் இனியதாக அமைத்துக் கொள்ள முயற்சி செய்வோம்.

    (தொடரும்)


    By எஸ். சுவாமிநாதன், டீன் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)செல் : 94444 41771
    dinamani : 05 January 2013



    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  10. #1520
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: இனிப்புப் பற்பசை நல்லதா?

    எனக்கு வயது 34. பல் வலியால் அடிக்கடி அவதிப்படுகிறேன். இதுவரை ஐந்து பற்களில் சொத்தை ஏற்பட்டு தானாகவே பாதி உடைந்துவிட்டது. இதற்கு ஆயுர்வேதத்தின் மூலம் தீர்வு கிடைக்குமா? லட்சுமி, விஜயபுரி.

    இனிப்பாக இருக்கக் கூடிய மாவுப் பண்டத்தையோ, மாவாகக் கூடியதையோ வாயில் போட்டு அடிக்கடி கொறித்துக் கொண்டிருந்தால், அதன் சிறு பகுதிகள் பற்களிடையே தங்கி, வயிற்றில் உணவு செரித்துக் கொண்டிருக்கும்போது ஏற்படும் புளிப்பின் வாசனை வாயில் உள்ள இனிப்பைப் புளிப்பாக்கிவிடும். இந்தப் புளிப்பு, ஈறுகளின் இறுக்கத்தைத் தளர்த்தி நீர்க்கச் செய்துவிடும். பற்களுக்கும், ஈறுகளுக்கும் நடுவே உள்ள இடைவெளி விரிந்து அதில் வாய் மலப் பொருள்கள் தேங்கி அழுகும். ஈறுகளில் அழுந்தியுள்ள பற்களின் வேரின் மூலம் இதனால் பலவீனப்படுவதால், பல் வலியை ஏற்படுத்தும்.

    வாயில் பற்பல நோய்க் கிருமிகள் தங்க இடமுண்டு. உணவுப் பகுதிகள் பற்களின் இடுக்குகளில் சேரும்போது இந்த நோய்க் கிருமிகளுக்குப் பஞ்சமில்லை. இந்தக் கிருமிகள் பற்களின் எனாமலை அரித்துவிடும். பற்களைச் சொத்தையாக்கிவிடும். அதனால் நீங்கள் எதைச் சாப்பிட்டாலும் வாய் கொப்பளிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது நல்லது.

    இன்று கடைகளில் கிடைக்கும் பற்பசைகளும் பற்பொடியும் இனிப்பாகவே இருக்கின்றன. இவற்றால் பல் துலக்கிய பின் வாயை நன்றாகக் கொப்பளித்து பற்பசை, பற்பொடியை அகற்றாமல் விட்டுவிட்டால் இவையே நோய்க்குக் காரணமாகலாம். ஆயுர்வேதம் இவ்விஷயத்தில் ஒரு புதிய கருத்தைக் கூறுகிறது.

    பற்களைத் துலக்கப் பயன்படுத்தும் பொடியோ, பசையோ கசப்பும் காரமும், துவர்ப்பும் மிக்கதாக இருக்க வேண்டும் என்று சொல்கிறது. இந்த மூன்று சுவையினால் வாயில் ஊறும் உமிழ்நீரும், அதை ஊறச் செய்யும் உமிழ்நீர் கோளங்களும் சுறுசுறுப்பும், புத்துயிரும் பெறுகின்றன. உமிழ்நீரின் பல வேலைகளாகிய அரிசியின் மாவுச் சத்தை ptyalin என்ற என்சைம் மூலம் சர்க்கரையாக மாறுகிறது. Mucin என்ற புரதம் அதை நெய்ப்புடன் வைத்திருப்பது, உணவு உண்ணும் நேரம் நீங்கலாக மற்ற நேரங்களில் வாய்ப்பகுதியைச் சுத்தமாக வைத்துக் கொள்வது, தங்கியுள்ள உணவுப் பகுதிகளை அழுகவிடாமல் புரட்டி உட் செலுத்தி வாயில் நாற்றமில்லாமல் செய்வது போன்றவை திறம்பட நடைபெற இச்சுவைகள் உதவுகின்றன.

    பற்பொடியிலுள்ள காரச் சுவையினால் சுவைக் கோளங்களும் உமிழ்நீர் கோளங்களும் தூண்டப்படுகின்றன. துவர்ப்பு புண்ணை ஆற்றும். கசப்பு அயர்வைப் போக்கும். அதிக அளவில் உமிழ்நீர் சுரப்பதைக் குறைக்கும். இம்மூன்றும் வறட்சி தரும் சுவையானதால், பிசுபிசுப்பால் ஒட்டிக் கொள்ளக் கூடிய உணவுப் பகுதிகள், வறண்டு இடுக்குகளிலிருந்து விடுபட்டு, எளிதில் வெளியாகும். வாய் மொரமொரவென்றிருக்கும். புது உணவை விருப்பத்துடன் ஏற்கும்.

    பொதுவாக மேற்குறிப்பிட்ட சுவையுள்ள பற்பொடி நல்லதெனக் கூறும் ஆயுர்வேதம், மற்ற சுவைகள் கூடாதெனக் குறிப்பிடவில்லை. உண்ட உணவு செரிக்காத நிலையில், புளிப்பும் உப்பும் கலந்த பற்பசை அல்லது பற்பொடியில் பல் தேய்தால் உணவு விரைவில் செரித்துவிடும். வாய் உலர்ந்து புண் அதிகமான நிலையில் இனிப்பே அதிகம் நல்லது. இனிப்புக்குத் தேனையும், உப்புக்கு இந்துப்பையும், கடலுப்பையும் சேர்ப்பது நல்லதே. வாய்ப்புண் ஆற எள்ளுத் தூளால் பல் தேய்ப்பது நல்லது.

    ஆயுர்வேத மருந்துக் கடைகளில் பற்பொடிகள் பல, ஆயுர்வேதத்தில் கூற்றுப்படி தயாரித்து விற்கப்படுகின்றன. அவற்றை நீங்கள் பயன்படுத்தலாம். பற்களைத் தேய்ப்பதைப் போல பல மடங்கு பல் தேய்த்த பின்னரும் பிறகும் அடிக்கடியும் வாய் கொப்பளிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவும். ஏதோ கடமைக்கென்று செய்யாமல் வாயின் தூய்மையை மனத்தில் கொண்டு பொறுமையுடன் செய்வது அவசியம்.

    (தொடரும்)


    By எஸ். சுவாமிநாதன், டீன் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே) செல் : 94444 41771
    dinamani : 12 January 2013



    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter