Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree4825Likes

Today's Medical Info


Discussions on "Today's Medical Info" in "Health" forum.


  1. #1521
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்
    தோல் சுருக்கம், வறட்சி நீங்க!

    என் வயது 48. என்னுடைய கை, கால், இடுப்புப் பகுதிகளில் உள்ள தோல் வறண்டு சுருக்கம் சுருக்கமாக பார்க்க ஒரு மாதிரியாக இருக்கிறது. குதிகாலில் பாதங்கள் ஒரே வெடிப்பாக இருக்கிறது. இவை மாற மருந்துண்டா?
    ஏ.கோபாலகிருஷ்ணன், விழுப்புரம்.


    உடல் உட்புற வாயுதோஷத்தின் ஆதிக்கத்தினால், உடல் வெளிப்புறத் தோல் வறண்டு போகலாம். சிறுவயது முதலே இப்படி இருப்பதாகத் தங்கள் கடிதத்தில் தெரிவித்துள்ளீர்கள். அம்மா, அப்பாவினுடைய குணங்களைத் தழுவித்தான் குழந்தை பிறக்க முடியும் என்பதால், அவர்களிடமிருந்தே நீங்கள் இந்தப் பிரச்னையை அடைந்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது. வெளிப்புறத்தில் உள்ள வறண்ட பனிக் காற்றினால், தோல் வறட்சி ஏற்படலாம். எண்ணெய் தேய்த்துக் குளிக்காதிருப்பது, உட்புற நெய்ப்பைத் தரும் தேங்காய், எள்ளு, நெய் போன்றவற்றைப் போதுமான அளவில் உணவில் சேர்க்காதிருப்பது, இரவில் நெடுநேரம் கண் விழித்திருப்பது, குடலில் வாயு, மலம் ஆகியவற்றின் சேர்க்கையை உதாசீனப்படுத்தி வெளியேற்றுவதில் காட்டும் அலட்சியம் போன்ற சில காரணங்களால், தோல் வறண்டு சுருக்கமாகவும், குதிகாலில் வெடிப்பும் ஏற்படலாம்.
    அதனால் நீங்கள் தோலை மென்மையாக பதப்படுத்தும் முறைகளை உட்புறத்திலும், வெளிப்புறத்திலும் செய்து கொள்வது மிகவும் அவசியம். சூடான புழுங்கலரிசி சாதத்துடன், இரண்டு அல்லது மூன்று ஸ்பூன், அதாவது 10 - 15 மி.லி. பசுநெய்யை உருக்கிவிட்டு, சிட்டிகை உப்பு கலந்து காலை, இரவு முதல் உருண்டையைச் சாப்பிட்ட பிறகு, சாம்பார் சாதம், ரசம் சாதம், மோர் சாதம் என்ற வகையில் சாப்பிடலாம். நெய்யும், உப்பும் சேரக் கூடிய அன்னத்தினால், உடலுக்குத் தேவையான நெய்ப்பு எனும் எண்ணெய்ப் பசை உடனடியாகக் கிடைக்கும் என்று ஆயுர்வேதம் ஒரு வியத்தகு செய்தியைத் தெரிவிக்கிறது. அதுபோலவே, கறுப்பு எள்ளை நன்றாகத் தூளாக்கி, சூடான சாதத்துடன் நெய் கலந்து சாப்பிடுவதன் மூலமாகவும், குடலில் விரைவாக எண்ணெய்ச் சத்து கொண்ட நெய்ப்பை பெறுவதன் மூலம், தோலில் ஏற்பட்டுள்ள வறட்சியும், சுருக்கமும் நீங்கக் கூடும். வெளிப்புறமாகத் தேங்காய் எண்ணெயை தலை மற்றும் உடலில் தேய்த்து, அரை, முக்கால் மணி நேரம் ஊறிய பிறகு, வெதுவெதுப்பான தண்ணீரில் குளிப்பதும் நல்லதே. எண்ணெய் பிசுக்கை அகற்ற, பச்சைப் பயறு 1 டம்ளர், எலுமிச்சைத் தோல் அரை டம்ளர், வெந்தயம் கால் டம்ளர் ஆகியவற்றை நன்றாகத் தூள் செய்து, அரிசி வடித்த கஞ்சியுடன் குழைத்து,தேய்த்துக் குளிக்கப் பயன்படுத்தவும்.
    தேங்காயுடன் சிறிது வெல்லம் கலந்து வாயிலிட்டு மென்று வரும் சாறைக் குடித்துவிட்டு, சக்கையைத் துப்பிவிடுவதால், உடல் வனப்பை அடைவதுடன், தோல் சுருக்கம், வறட்சியைப் போக்கி, குதிகால் வெடிப்பையும் போக்கிவிடும். உணவில் வறட்சி தரும் கசப்பு, துவர்ப்பு, காரச் சுவைகளைக் குறைத்து, இனிப்பு, புளிப்பு மற்றும் உப்புச் சுவைகளை மிதமாகச் சேர்க்கவும். சோப்பு, பவுடர், ஷாம்பு, செயற்கையான தலைமுடி சாயம் போன்றவற்றை நீங்கள் தவிர்ப்பது நலம். எதிர்காற்றில் அதிக தூரம் பயணம் செய்வதும் நல்லதல்ல.
    விதார்யாதி கிருதம் எனும் ஆயுர்வேத நெய் மருந்தை 10 -15 மி.லி. லேசாக உருக்கி, காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால், வாயு மற்றும் பித்த தோஷங்களின் ஆதிக்கத்தை மட்டுப்படுத்தி, கபத்தின் நெய்ப்பு எனும் சிறந்த குணத்தைத் தோலிலும், உடல் உட்புறத்திலும் நீங்கள் சம்பாதித்துக் கொள்ளலாம். குதிகால் வெடிப்பும் அதன் மூலம் குணமாகலாம். பிண்ட தைலம் எனும் ஆயுர்வேத மூலிகைத் தைலத்தை குதிகால் வெடிப்பில் பூசுவதும் நல்லதுதான்.

    (தொடரும்)
    எஸ். சுவாமிநாதன், டீன்
    ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
    நசரத்பேட்டை } 600 123 (பூந்தமல்லி அருகே)
    செல் : 94444 41771


    By Sasikumar Balakrishnan
    dinamani : 20 January 2013



    Sponsored Links
    Sriramajayam likes this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  2. #1522
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: அடுக்குத் தும்மலா? எண்ணெய் தேய்த்துக் குளியுங்கள்!

    பல வருடங்களாக எனக்கு அடுக்குத் தும்மல், மூக்கில் நீர் ஒழுகுதல், தலை பாரம், பின் தலைப் பகுதியில் வலி, தாங்க முடியாத தலைவலி, குளித்தால் அலர்ஜி, பீனிசம் ஆகியவற்றால் அவதிப்படுகிறேன். ஆயுர்வேத, யுனானி ஆங்கில மருந்து மாத்திரைகள் சாப்பிட்டும் பயனில்லை. இதற்கு நிவாரணம் என்ன?
    எம்.சேக் உசேன், வடகரை.


    சகிப்புத் தன்மைக் குறைவினால் பீனிசம் அதாவது ஜலதோஷம் உபாதை ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இது யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். எந்த நாட்களில் ஏற்படும் என்று நிர்ணயிப்பது கடினம். பருவ மாறுதல் அதாவது கோடை மாறிக் காற்றோ, காற்று மாறி மழையோ, மழை மாறி பனியோ, பனி மாறிக் கோடையோ ஏற்படும்போது புழுக்கம், மந்தாரம், பனி, காற்று என்று ஒவ்வொன்றும் இதற்குக் காரணமாகிவிடும். கோடைச் சளியும், மழைச் சளியும் தீர நாளாகும். மற்றவற்றின் தொந்தரவு சகிக்காது. பருவ மாறுதல் போல இடமாறுதல், நாம் குளிக்கவும், குடிக்கவும் பயன்படுத்தும் தண்ணீரின் மாற்றம், தண்ணீரை உபயோகிக்கும் வகையில் மாறுதல் போன்றவை கூட ஜலதோஷத்தை உண்டாக்கலாம். இவ்வகை மாறுதலைக் கூட உடல் தாங்க சக்தியற்றிருப்பதுதான் காரணம். மூக்கிலும், நுரையீரலிலும், தோலிலுமுள்ள சிறு உறுப்புகள் தளர்ந்து போனால், நம்மைக் கெடுத்து பீனிச உபாதையை ஏற்படுத்திவிடுகிறது.

    நீங்கள் முதலில் இந்த உபாதையிலிருந்து விடுபட சகிப்புத் தன்மை குறைவிலிருந்து விடுபட வேண்டும். அதற்கு,

    * வாரமிருமுறை, முடிந்தால் தினந்தோறும் உடல் முழுவதும் நல்லெண்ணெய்யையும் விளக்கெண்ணெய்யையும் சம அளவில் கலந்து, வெதுவெதுப்பாக தடவித் தேய்த்துக் கொண்டு, உடல்நிலைக்கும், கால நிலைக்கும், தேச நிலைக்கும் ஏற்றவாறு குளிர்ந்த நீரிலோ வெந்நீரிலோ குளிக்கவும்.

    * பகலில் தூங்காமல் இரவில் கண் விழியாமல் இரவின் முன் யாமத்திலேயே தூங்க ஆரம்பித்து விடியற் காலையிலேயே எழுந்து கொள்ளவும்.

    * மலசுத்தம், உடல் சுத்தம் இவற்றில் கருத்துள்ளவராக இருக்கவும்.

    * தேகப் பயிற்சியை உடல் களைப்பு ஏற்படாத வகையில் விடாமல் செய்து வரவும்.

    * காலத்தில் மிதமாயும், இதமாயுமுள்ள உணவையே சாப்பிடவும்.

    * உற்சாகம், தைரியம், அமைதி இவற்றை வளர்க்கும் செயல்களில் ஈடுபடவும்.

    இவற்றின் மூலமாக உங்களுக்கு பலக் குறைவே ஏற்படாது. பீனிசம் வராது.

    எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் தலைக்கும் தோலுக்கும் வெளி சீதோஷ்ண நிலையைத் தாங்கும் வலுவை நீங்கள் பெறலாம். உடற்பயிற்சி நுரையீரலை வலுவாக்குகிறது. தூக்கத்தில் கட்டுப்பாடு நரம்புத் தளர்ச்சியை நீக்கி, நரம்புகளுக்கு வலுவூட்டுகின்றது. உண்ணும் உணவு தேய்வை ஈடு செய்து நிரப்புகிறது. மனக் களைப்பை நீக்கும் உபாயங்கள் மற்றவை. தேக மன ஆரோக்கியத்தில் இன்றியமையாத சாதனங்கள் இவை.

    அடிக்கடி சளி பிடித்துக் கொள்பவர்கள் சளி வராமல் பாதுகாப்பதற்காகவும்,பொதுவாகவே உடல் பலத்தை அதிகரித்துக் கொள்வதற்காகவும் சியவனபிராசம், அச்வகந்தாதி லேகியம் போன்ற ஆயுர்வேத மருந்துகளைச் சாப்பிட்டு உடலைச் சீராக்கிக் கொள்ளலாம். தலையில் எண்ணெய் தடவாமல் குளிர்ந்த நீரில் குளிப்பதையும், உடலில் எண்ணெய் தேய்க்காமல் வெந்நீரில் குளிப்பதையும் அறவே நிறுத்திக் கொள்ள வேண்டும். இஞ்சி, மிளகு, மஞ்சள், சீரகம், கொம்பரக்கு ஆகியவற்றை தலைக்கும் உடலுக்கும் தேய்த்துக் குளிக்கும் எண்ணெயில் சேர்த்துச் சிறிது சூடாக்கிய பிறகு பயன்படுத்துவது மிகவும் நல்லது.

    அஸன வில்வாதி தைலம் தலைக்கும், பலாச்வகந்தாதி தைலம் உடலுக்கும் பயன்படுத்துவதால் நோய் எதிர்ப்பு சக்தியை நீங்கள் வளர்த்துக் கொள்ளலாம். எளிதில் ஜலதோஷம் பிடிக்கும் தன்மை, காது, மூக்கடைப்பு, காதில் சீழ் முதலிய உபாதைகளால் கஷ்டப்படுபவர்களுக்கு அஸனவில்வாதி தைலத்தைத் தலைக்கும், இளஞ்சூடாக்கி 4 - 5 சொட்டுகள் காதுக்குள்ளும் விட்டும் பயன்படுத்தினால், விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

    (தொடரும்)


    By எஸ்.சுவாமிநாதன்.
    dinamani : 26 January 2013


    Sriramajayam likes this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  3. #1523
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: வயிற்று உப்புசம், மூச்சிரைப்பு - தீர்வு என்ன?

    எனக்கு வயது 65. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கீழே விழுந்து இடது இடுப்புப் பகுதியில் பிளேட் வைத்து ஆபரேஷன், வயிறு பருத்து பானை போல் உள்ளது. காலையில் வெறும் வயிற்றிலேயே கனமாக உள்ளது. மிகவும் உப்புசமாகவும் உணர்கிறேன். மாலை வேளைகளில் மட்டும் ஒருவிதமான மூச்சிரைப்பு ஏற்பட்டு, அடங்க சுமார் அரை மணி நேரம் ஆகிறது. இட்லி, மிளகாய்பொடி, பூண்டு எண்ணெய் அதிகம் சாப்பிடுவேன். இதற்குப் பரிகாரம் என்ன?
    எஸ்.கே.முரளிதரன், சென்னை-73.


    ஸமானன் என்றும் அபானன் என்றும் இரு வாயுக்கள் குடல் பகுதியில் தங்கியிருந்து தமக்கே உரிய சில அரிய செயல்களைச் செய்கின்றன. ஸமான வாயு பசித்தீக்கு அருகில் இருந்து கொண்டு அதைத் தூண்டுகிறது. சீரணப்பை, இரைப்பை, தோஷங்கள், மலங்கள், விந்து, மாதவிடாய் இவற்றைச் செயல்படுத்தும் நரம்பு மற்றும் குழாய்களில் உலாவுகிறது. இதன் உதவியால் உணவை ஏற்றுக் கொள்ளுதல், சீரணிக்கச் செய்தல், உணவைப் பிரித்தல், மலத்தைக் கீழ்நோக்கிச் செலுத்துதல் ஆகிய செயல்கள் நடைபெறுகின்றன. அபானன் எனும் வாயுவானது இடுப்பின் கீழ்ப் பகுதியில் தங்கி, நீர்ப்பை, இடுப்பின் பின்பக்கம், தொடை இடுக்குகள், தொடைகள் இவற்றில் உலவுகின்றது. மலம், சிறுநீர், விந்து, மாதவிடாய், கரு இவை உடலில் உறைதல் இவற்றை வெளிப்படுத்துதல் போன்ற செயல்களைச் செய்கிறது.

    இடுப்பில் செய்யப்பட்ட அறுவைச் சிகிச்சையின் விளைவாக, உங்களுக்கு அபான வாயுவின் செயல்பாடுகளில் மந்த கதி ஏற்பட வாய்ப்பிருக்கிறது. நடப்பதிலும் அமர்வதிலும், படுப்பதிலும் ஒருவித ஜாக்கிரதையான உணர்வுடனேயே அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் நீங்கள் செயல்பட வேண்டிய நிலையில் இருப்பதன் விளைவே கதி முடக்கத்துக்குக் காரணமாகலாம். இந்த கதி முடக்கம் ஸமான வாயுவிலும் பிரதிபலிப்பதால், அதன் செயல்களும் மந்தமாகின்றன.

    மேற்குறிப்பிட்ட இருவாயுக்களின் மந்தநிலை, உங்களுக்குக் காலையில் வெறும் வயிற்றிலேயே கனமான உணர்வையும், உப்புசமான நிலையையும் ஏற்படுத்துகின்றன. இவற்றின் மந்த கதியினால் ஜீரண உறுப்புகள் கோளாறு அடையலாம். அதனால் ஏற்படும் பசிக்குறைவினால், வயிற்றில் பொருமல், வலி ,பசியின்மை, வயிறு கனத்திருத்தல் முதலிய உபத்திரவங்கள் ஏற்படலாம். காரமான உணவின் மீது ஆர்வம் இதனால் ஏற்படக் கூடும்.

    இதற்கான பரிகாரம் அஷ்ட சூரணம் எனும் ஆயுர்வேத மருந்தின் மூலம் பெற முடியும். 2 சிட்டிகை முதல் அரை ஸ்பூன் வரை சாப்பாட்டின்போது சூடான முதல் சாதக் கவளத்துடன் சிறிது நெய்யையும் சேர்த்துப் பிசைந்து சாப்பிடவும். இதனால் நல்ல பசி உண்டாகும். மலம், சிறுநீர் தடையின்றி வெளியாகும். ஜீரணக் குறைவினால் ஏற்படும் வயிற்றுப் போக்கு நிற்கும். வயிற்றில் காற்று சேராது. பொதுவாக ஜீரண கோசத்தில் வாயுவினால் ஏற்படும் கோளாறுகள் இதனால் நீக்கப்படும். இந்த சூரணத்தைத் தண்ணீர் விட்டரைத்து, சிறிது சுட வைத்து, வயிற்றின் மீது பற்றுப் போடுவதன் மூலமாகவும் உங்களுக்கு ஏற்பட்டுள்ள வயிற்று உப்புசத்தைக் குறைத்துவிடலாம்.

    வாயுக்களின் கதி முடக்கத்தை நீக்கி, அவற்றின் செயல்பாடு சீராகிவிட்டால், மாலை வேளைகளில் மட்டும் ஏற்படும் மூச்சிரைப்பும் குறைந்துவிடும். இட்லி மிளகாய்ப் பொடி பூண்டு, எண்ணெய் ஆகியவற்றைச் சாப்பிடுவதைவிட, காலையில் வெதுவெதுப்பாக புழுங்கல் அரிசிக் கஞ்சியுடன் நார்த்தாங்காய் வற்றலைக் கடித்துக் கொண்டு சாப்பிடுவது விரைவாகச் செரிக்க உதவும். உணவுச் சத்தும் முழுவதுமாகச் சேரும். வாயுவின் சீரான செயல்பாடு வளரும்.

    (தொடரும்)


    By எஸ். சுவாமிநாதன்
    dinamani 03 February 2013


    Sriramajayam likes this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  4. #1524
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: நரம்புகளில் அழுத்தம்... பாதங்களில் எரிச்சல்!

    என் மனைவிக்கு வயது 70. பகலெல்லாம் வீட்டு வேலைகளை நன்கு செய்கிறாள். இரவு 7 அல்லது 8 மணிக்குப் பாதங்களில் எரிச்சல், முதுகிலும் எரிச்சல். இரவு படுக்கும் முன் இரண்டு பாதங்களிலும் துணியை தண்ணீரில் நனைத்துச் சுற்றிக் கட்டுப் போட்டு, முதுகிலும் தண்ணீர் தெளித்த பிறகு தூங்கி விடுகிறாள். பல வருடங்களாக அவதிப்படுகிறாள். எரிச்சலைப் போக்க வழி உண்டா?
    பி.முருகேசன், வாரியங்காவல்.


    நாள் முழுவதும் குனிந்து நிமிர்ந்து வேலை செய்வதால், முதுகுத் தண்டுவடத்தில் அமைந்துள்ள எலும்புகள் வளைவதும் நிமிர்வதுமாக வேலை செய்கின்றன. அவை ஒன்றோடு ஒன்று உராய்வு ஏற்படாமலிருக்க, வில்லைகள் தாங்குகின்றன. இந்த வில்லைகளில் ஏதேனும் விதத்தில் மெலிந்து போனாலோ, தன் இடம் விட்டு நெகிழ்ந்து போனாலோ, உட்புறம் அல்லது வெளிப்புறம் பிதுக்கிக் கொண்டாலோ, அவ்விடங்களிலிருந்து வெளிப்படும் நரம்புகளின் மீது அழுத்தி அவை படர்ந்துவிட்டால், நீங்கள் குறிப்பிடும் உபாதை ஏற்பட நிறைய வாய்ப்பிருக்கிறது. ஙதஐ நஇஅச எடுத்துப் பார்த்தால் இந்த உபாதைக்கான காரணம் தெளிவாகத் தென்படவும் கூடும். நரம்புகளில் ஏற்படும் இந்த அழுத்தத்தைப் பொதுவாகவே பெண்கள் வேலைப் பளுவின் காரணமாக உதாசீனப்படுத்துவதால், இந்த உபாதையானது மேலும் மேலும் வளர்ந்து எரிச்சலையும் வலியையும் நிரந்தரமாக்கிவிடுகிறது.

    கீழ் இடுப்புப் பகுதியில் முதலில் சில நாட்கள் அங்குள்ள நீர்க்கட்டு பிரியும் விதத்தில் ஆற்று மணலைத் துணியில் முடிந்து, சூடாக்கி ஒத்தடம் கொடுக்க வேண்டும். அதன் பிறகு, அவ்விடத்தில் உளுந்து மாவும் மைதா மாவும் கலந்த வரம்பைக் கட்டி, மூலிகைத் தைலங்களால் நிரப்ப வேண்டும். தைலங்கள் நபருக்கு நபர் மாறுபடும் என்பதால், ஓர் ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். எண்ணெயின் வீர்யமானது, அப்பகுதியிலுள்ள தோலின் வழியே உறிஞ்சப்பட்டு, வில்லைகளின் அழுத்தத்தை விடுவித்து, அவற்றின் ஊட்டத்தை வலுப்படுத்தி, மறுபடியும் பழைய நிலைக்கு அவற்றைக் கொண்டுவரும் முயற்சிகளில் பெரிதும் பங்காற்றுகிறது. விடுவிக்கப்பட்ட நரம்புகளில் ஏற்பட்டுள்ள அழற்சியையும் வலியையும் போக்க, மணத்தக்காளிக் கீரைச் சாறு சேர்த்து, விளக்கெண்ணெய் காய்ச்சிக் கொடுப்பது பண்டைய ஆயுர்வேத மருத்துவர்கள் செய்வது வழக்கத்திலிருந்தது. காகமாசீதைலம் என இதற்குப் பெயர்.

    இதன் செயல்முறை: சிற்றாமணக்கெண்ணெய் 1 லிட்டர், மணத்தக்காளிக் கீரைச் சாறு 1 லிட்டர், வால் மிளகு, ஏலரிசி, வெங்காயம், கடுக்காய், சீரகம் இந்த 5 சரக்கும் வகைக்கு 30 கிராம், சர்க்கரை 250 கிராம் இவைதான் இதற்குத் தேவையானவை. வெங்காயத்தைத் தவிர மற்ற நான்கு சரக்குகளையும் நன்கு சூர்ணமாக இடிக்க வேண்டும். வெங்காயத்தைக் காய்ந்த தோல் நீக்கிச் சூர்ணத்துடன் சேர்த்து மைய அரைக்க வேண்டும். சர்க்கரையைத் தனியே தூளாக்கிக் கொள்ளவும். மணத்தக்காளிக் கீரையை நன்கு அலம்பி, இடித்துச் சாறுபிழிந்து துணியில் வடிகட்டிக் கொள்ளவும்.

    சிற்றாமணக்கெண்ணெயை இரும்புச் சட்டி அல்லது வெங்கல உருளியில் இட்டு அடுப்பிலேற்றி வால்மிளகு முதலியவை அரைத்து வைத்துள்ளதைக் கலக்கி ஒரு கொதி வந்ததும், மணத்தக்காளிச் சாற்றையும் விட்டு நன்கு காய்ச்சவும். அடி பிடிக்காமல் கிளறிக் கொண்டே இருக்கவும். சாறுத் திரவம் சுண்டி, கல்கம் முதலியவை இறுகி மெழுகி போலானதும் மேல் தெளிவாக வடிகட்டிக் கொண்டு அதில் சர்க்கரையைக் கலந்து கொள்ளவும். சிறுவர்களுக்கு 1/2 - 1 அவுன்ஸ் கொடுத்தால் பேதியாகி குடல் சுத்தமாகிவிடும். பெரியவர்கள் 1 - 3 அவுன்ஸ் வரை சாப்பிடலாம். இரவில் 1 அவுன்ஸ் சாப்பிட்டு வர காங்கை எனும் உடல் உட்புற எரிச்சல் குறையும். உடல் புஷ்டியாகும். கர்ப்பிணிகள் சாப்பிட்டு வர காங்கை குறைந்து, வெட்டைப்படுதல், கை, கால் சோர்வு நீங்கும். குழந்தைகளுக்கு கரப்பான் உபாதை வராது.

    ஆசனவாய் வழியாகச் செலுத்தப்படும் க்ஷீர வஸ்தி அதாவது பாலில் காய்ச்சப்பட்ட மூலிகைப் பால் வைத்திய முறையாலும் எரிச்சலையும் வலியையும் போக்க முடியும். நெடு நாளைய தொந்தரவு என்பதால், குணப்படுத்த தொடர் முயற்சி தேவைப்படும். பசியின் தன்மை, உடல் வாகு போன்றவற்றை நன்றாக அறிந்து, அதன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் விதார்யாதி கிருதம், க்ஷீரபலா 101, தான்வந்திரம் 101 போன்ற உள் மருந்துகளின் தொடர் உபயோகத்தாலும் உங்கள் மனைவி குணம் பெற வாய்ப்புண்டு. உடலெங்கும் பிழியப்படும் தைலதாரா எனப்படும் ஆயுர்வேத வைத்தியமுறையும் சிறப்பான சிகிச்சை முறைதான்.

    உணவில் புளிப்பையும், காரத்தையும் குறைக்க வேண்டும். ஒரு ஸ்டூல் போட்டு அமர்ந்து சமையல் வேலைகளைச் செய்வதால், முதுகுத் தண்டுவட நரம்பு அழுத்தத்தைக் குறைக்கலாம். இடுப்புப் பகுதிக்கும் ஓய்வை அளிக்கும். மலச்சிக்கலும் வயிற்றில் வாயு உபாதையும் இப்பிரச்னையைப் பெரிதாக்கும் என்பதால், அவை வயிற்றில் சேராதபடி பார்த்துக் கொள்வது அவசியம்.

    (தொடரும்)


    By எஸ். சுவாமிநாதன், டீன் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே) செல் : 94444 41771
    dinamani 9 February 2013


    Sriramajayam likes this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  5. #1525
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: கைவிரல்களில் கடுமையான வலி!

    எனக்கு வயது 50. இரவு நேரங்களில் இடதுகாலில் கெண்டைக் காலில் சதைப் பிடிப்பு ஏற்பட்டு நரம்புகள் இழுத்துக் கொண்டு சுமார் 10 நிமிடங்கள் விடுவதில்லை. மிகவும் கடுமையான வலி. வலி தாங்காது அலறிவிடுகிறேன். நரம்பு தானாக தளரும் வரை வலி நீடிக்கிறது. பகல் நேரங்களில் சில சமயங்களில் எழுதும்போது கைவிரல்கள் இழுத்துக் கொண்டு கடுமையான வலி எடுக்கும். ஐந்து நிமிடங்கள் வரை நீடித்து பின்னர் தானாகவே சாதாரண நிலைக்கு வரும். இதை எப்படிக் குணப்படுத்துவது?
    வி.சகாயராஜா, திண்டுக்கல்.


    "பிண்டிகோத்வேஷ்ட :' என்ற ஓர் உபாதையை ஆயுர்வேதம் வர்ணித்திருக்கிறது. காலிலுள்ள கெண்டைச் சதைப் பிடிப்பு என்று இதைத் தமிழில் கூறலாம். குடலிலுள்ள மலம் வெளியேறுவதற்காக ஏற்படும் இயற்கையான உந்துதலை, வலுக்கட்டாயமாக அடக்க வேண்டிய நிர்பந்த நிலைகளில், இந்தத் தசைப் பிடிப்பு ஏற்படும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது. குடலில் ஏற்படும் வாயு மற்றும் மலத் தேக்கலின் பிரதிபலிப்பை, கால் கெண்டைச் சதையில் உணர்வதால், வயிற்றுக்கும் காலிலுள்ள சதைக்கும் தொடர்பு இருப்பதை நம்மால் ஊகிக்க முடிகிறது. அதனால் நீங்கள் எக்காரணம் கொண்டும் மலத்தை அடக்குவதோ, வயிற்றில் வாயுவின் தேக்கத்தை அதிகப்படுத்தவோ கூடாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

    குடலில் வாயு- மலத்தேக்கலை ஏற்படுத்தும் நெய்,எண்ணெய்ப் பசையில்லாத வறட்சியான பண்டங்களைச் சாப்பிடுதல், பச்சைக் கறிகாய்களைத் தேவையான அளவு உணவில் சேர்த்துக் கொள்ளாமல் தனி வறட்டுச் சாதமாகவே சாப்பிடுதல், பால், பழம், தண்ணீர் சேர்த்துக் கொள்ளாதது, பக்குவம் சரியான முறையில் ஆகாத உணவு வகைகள், உலர்ந்து போன காய்கள், குடலில் நீர்ப்பசையை சுண்ட வைக்கும் மிளகாய், மிளகு, பெருங்காயம் ஆகியவற்றை அதிகம் சேர்ப்பது, கொத்துக் கடலை, மொச்சை, சோளமுத்து, மரவள்ளிக் கிழங்கு, ஜவ்வரிசி இவற்றினுடைய மாவுகளை அப்படியே கூழாக்கிச் சாப்பிடுதல், தீட்டிய அரிசி, வாழைப்பூ, அத்திப் பிஞ்சு, சுண்டை வத்தல் இவற்றைத் தொடர்ந்து சாப்பிடுதல், மதுபானம், அதிகப்பட்டினி, மிதமிஞ்சி சாப்பிடுதல் போன்றவை உங்களுடைய உபாதையை மேலும் பெரிதாக்கிவிடக் கூடும்.

    குடலில் வாயு - மலச் சேர்க்கையை தவிர்ப்பதற்கும், நரம்புகளின் வலுவைக் கூட்டவும் சில எளிய உபாயங்கள்:

    காலையில் 5 மணிக்கு எழுந்ததும் ஒரு பெரிய டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரை மெதுவாய்ப் பருகவும்.

    காலையில் 7 மணிக்கு 2 வாழைப்பழம் உருக்கிய நெய்யில் தோய்த்துச் சாப்பிட்டு ஒரு டம்ளர் (சுமார் 250 - 300 மி.லி.) வெதுவெதுப்பான காய்ச்சிய பால் குடிக்கவம்.

    காலையில் இட்லி, தோசை போன்ற மாவுப் பலகாரம் தவிர்த்து சூடான புழுங்கலரிசிச் சாதத்துடன் நெய் கலந்து பருப்பு ரசம், நன்றாக வேக வைத்த கறிகாய்க் கூட்டு அல்லது பொரியல், கடைந்து வெண்ணெய் நீக்கிய மோர் என்ற வகையில் சாப்பிடவும். தயிர் நல்லதல்ல.

    காலையில் 11 மணிக்கு இளநீர் குடிக்கவும்.

    மதியம் 12 1/2 மணிக்கு ஆரஞ்சு, சாத்துக்குடி, திராட்சை, அத்திப் பழம், தக்காளி ஜூஸ், ஆப்பிள் பழம் இழற்றில் கிடைத்த பழங்கள் சாப்பிடவும்.

    மதியம் 2 மணிக்கு காலை, உணவு வகைகளைப் போலவே சாப்பிடவும்.

    மாலை 5 மணிக்கு ஒரு டம்ளர் பால் குடிக்கவும்.

    இரவு சாப்பாட்டில் புளி - புளிப்புச் சேர்க்காமல் பச்சைக் கறிகாய் சேர்த்த கூட்டு சாதம், மோருடன் சாப்பிடவும். இரவு படுக்கும் முன் வெந்நீர் அருந்தவும்.

    உடலெங்கும் மூலிகைத் தைலத்தைத் தடவி, மூலிகை இலைகளைத் தண்ணீரில் கொதிக்க விட்டு, அதிலிருந்து வெளியாகும் நீராவியை உடலெங்கும்படுமாறு செய்வதும், மூலிகை எண்ணெய் மற்றும் மூலிகைக் கஷாயங்களைக் கொண்டு செய்யப்படும் வஸ்தி எனும் எனிமா சிகிச்சை முறையாலும், தலையில் எண்ணெய்யை நிறுத்திவைக்கும் சிரோவஸ்தி முறையும், உடலிலுள்ள நாடி நரம்புகளுக்கு வலுவூட்டும் சிறந்த ஆயுர்வேத சிகிச்சைமுறைகளாகும். இவற்றால் நீங்கள் நல்ல பயனைப் பெறலாம்.

    தசமூலம் எனும் ஆயுர்வேத கஷாய மருந்தை, 15 மி.லி. அளவில் எடுத்து, 60 மி.லி. வெதுவெதுப்பான பால் கலந்து சிட்டிகை அப்ரக பஸ்மத்துடன் காலை, மாலை வெறும் வயிற்றில் சுமார் 41 -48 நாட்கள் தொடர்ந்து சாப்பிடவும்.


    By எஸ். சுவாமிநாதன், டீன்
    dinamani : 16 February 2013


    Sriramajayam likes this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  6. #1526
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: சோம்பேறித்தனம் அகல..!

    என் மகனுக்கு வயது 35. டிகிரி வரை படித்திருந்தும் எந்த வேலைக்கும் போகாமல் சோம்பேறியாக தொலைக்காட்சியில் கிரிக்கெட் போட்டிகளைப் பார்ப்பது, கம்ப்யூட்டரில் கேம்ஸ் விளையாடுவது என்றெல்லாம் பொழுதைப் போக்கி வருகிறான். அடிக்கடி முகத்தை ஒரு பக்கமாக வெட்டி வெட்டி இழுப்பதுபோல செய்கிறான். ஆனால் மனோதத்துவ நிபுணர் மூளையில் ஒரு கோளாறுமில்லை என்கிறார். இவனுக்கு ஆயுர்வேத நிவாரணம் கிடைக்குமா?
    நளினி ராமேஸ்வரம், மேற்குமாம்பலம், சென்னை-33.


    மனதில் எழும் தமோ குணத்தின் ஆதிக்கத்தினால் மனிதர்கள் சோம்பேறியாக மாறிவிடுவார்கள் என்று ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது. அதை அகற்ற, மூளைக்கு நிறைய வேலை கொடுக்க வேண்டும். மூளைக்கு எவ்வளவு வேலை கொடுத்தாலும் ஒன்றும் ஆகாது. எவ்வளவுக்கெவ்வளவு மூளைக்கு வேலை கொடுக்கிறோமோ, அவ்வளவுக்கு நல்லதே தவிர கெடுதல் இல்லை. கத்தி தீட்டத் தீட்ட கூர்மையாகிறதே, அதைப் போலத்தான் புத்தியும். ஓயாமல் மூளைக்கு வேலை கொடுத்தால் மூளை குழம்பும் என்பது விஞ்ஞானரீதியாகச் சரியல்ல. மனக் கவலை மிகுந்தால்தான் மூளையைப் பாதிக்கும். கவலைதான் கூடாது.

    உங்களுடைய மகன் எதில் ஆர்வம் காட்டுகிறார் என்பதை உற்று அறிந்து, அதில் அவருக்கு ஏற்படக்கூடிய நன்மை, தீமைகளைப் புரிந்து கொள்ளும் வகையில் எடுத்துக் கூறக்கூடிய இனிய நண்பர்கள் அல்லது உறவினர்கள் மூலம் பேசச் செய்வது நல்லது. இவ்விஷயத்தில் தொடர்ந்து முயற்சி செய்தால் அவருடைய நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்படக்கூடும்.

    உடல்ரீதியாக அவருக்கு ஏதேனும் கோளாறுகள் உள்ளதா? என்பதையும் கண்டறிய வேண்டும். அதற்கு ஒரு மருத்துவரின் உதவி தேவைப்படலாம். வீட்டிலுள்ளவர்களிடம் தெரிவிக்காத பல விஷயங்களை, வெளி மனிதர்களிடம் கூறுவதைப் பலரும் விரும்பக் கூடும். அதற்கான தீர்வையும் அவர்கள் மூலமாகப் பெறுவதால், மனரீதியாக நல்ல முன்னேற்றத்தை அவர் அடையக் கூடும்.

    ஆயுர்வேத சிகிச்சைக்கு ஒத்துழைக்க அவர் விருப்பம் தெரிவித்தால், அணு தைலம் எனும் மூலிகைத் தைலத்தை மூக்கினுள் விட்டு உறிஞ்சுவதும், ஏலாதி சூரணத்தை இஞ்சிச் சாறுடன் குழைத்துச் சூடாக்கி, நெற்றியில் பற்று இடுவதும் முதலில் செய்யப்பட வேண்டியவையாகும். இதன் மூலம் மூளையிலுள்ள எல்லையில்லா சக்தியை மறைக்கும் தமோ குணத்தின் சூழலை நீக்க முடியும். மூளைப் பகுதியைச் சுறுசுறுப்பாக்கி, வேலைக்குச் செல்ல வேண்டும், பிறரைப் போல உழைத்துச் சம்பாதிக்க வேண்டும் என்ற ஒரு நல்ல மன வளர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய பிராம்ஹீ, வல்லாரை, திரிபலை, சித்திர மூலம், வசம்பு, சதகுப்பை, தண்ணீர்விட்டான் கிழங்கு, தந்தீமூலம், நாகபலா வேர், சிபதை வேர் போன்றவற்றை நெய்யாகவும், பொடியாகவும், தைலமாகவும் தயாரித்து விற்பனை செய்யக்கூடிய மருந்துகளின் பிரயோகம் மிகவும் சிறந்த சிகிச்சைமுறையாகும்.

    கல்யாணகம், மஹாகல்யாணகம், பஞ்சகவ்யம், மஹாபஞ்சகவ்யம், பிராம்ஹீ, சாரஸ்வதம் என்ற பெயரிலிலெல்லாம் விற்பனை செய்யப்பட்டு வரும் பல மூலிகை நெய் மருந்துகளில், அவருக்கு உகந்ததை குடிக்கச் செய்து, உடலுக்கும், மூளைக்கும் தேவையான நெய்ப்பை ஏற்படுத்தி வாந்தி, பேதி, வஸ்தி எனும் எனிமா சிகிச்சைமுறைகளைச் செய்து உடல் மற்றும் மனத்தின் அழுக்குகளைக் களைந்து, உடலையும் மனதையும் புத்துணர்ச்சியூட்டும் ஆயுர்வேத சிகிச்சைமுறைகளும் சிறந்ததே.

    மனதைச் சார்ந்த உபாதைகளுக்கு "தலப்பொதிச்சல்' என்ற ஒரு சிகிச்சையை கேரளாவில் சிறப்பாகச் செய்கின்றனர். மனதின் மிகவும் உயர்ந்த ஸத்வகுண வளர்ச்சிக்காக, மூலிகைகளை அரைத்துத் தலைப்பகுதியில் பற்றுப் போட்டு, அமரச் செய்யும் இந்த வகைச் சிசிச்சையும் எதிர்பார்க்கக் கூடிய நல்ல பலனைத் தருவதாகக் கூறப்படுகிறது.

    (தொடரும்)


    By எஸ். சுவாமிநாதன், டீன் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே) செல் : 94444 41771
    dinamani: 23 February 2013


    Sriramajayam likes this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  7. #1527
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்
    இதய பாதிப்புகளின் எதிரி: கசப்பும் துவர்ப்பும்!

    இப்போதெல்லாம் இருதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் இளம் வயதினருக்கும் கூட சகஜமானதாக உள்ளன. நவீன வாழ்க்கை முறைகளும் தவறான உணவுப் பழக்கங்களும் ரத்தத்திலுள்ள கஈக என்னும் கெட்ட கொலஸ்ட்ராலை அதிகப்படுத்தி இதய உபாதைகளை அதிகம் ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு ஆயுர்வேதம் கூறும் உபாயங்கள் எவை?
    எஸ்.அனந்தராமன், புட்டபர்த்தி.


    உணவிலுள்ள ருசியின் வாயிலாக மனிதர்கள் அடையும் நன்மை, தீமைகளை பாஞ்ச பெதிக சித்தாந்தத்தின் மூலமாக ஆயுர்வேதம் வெகு சிறப்பாக எடுத்துக் கூறுகிறது. நிலமும் நீரும் அதிகம் கொண்ட இனிப்புச் சுவையையும், நெருப்பும் நிலமும் அதிகம் கொண்ட புளிப்புச் சுவையையும், நீரும் நெருப்பும் அதிக அளவில் உள்ளடக்கிய உப்புச் சுவையையும் விரும்பி ஏற்பவர்களுக்கு, அவற்றின் வரவு குடல் வழியாக, நாளங்களில் சேர்க்கப்படும் தறுவாயில், உட்புற நாளச் சுவர்களில் படிவங்களாகப் படிவதாகக் கூறுகிறது. நெய்ப்பும், கனமும், மந்தமும், வழுவழுப்பும் கூடிய குணங்கள் இந்தப் படிவங்கள் மூலமாக, உடலெங்கும் கூடும்போது, அதுவே கெட்ட கொலஸ்ட்ராலாக மாறுகிறது. அதிக உழைப்பில்லாமல், ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கும், பகலில் உணவைச் சாப்பிட்ட பிறகு படுத்து உறங்குபவர்களுக்கும், நிலம் மற்றும் நீரின் வரத்து கூடுவதால் இதயத்தின் பளுவைக் கூட்டி இதய நோய்களை உண்டாக்குவதோடு, கெட்ட கொலஸ்ட்ராலையும் கூட்டிச் சேர்க்கிறது.
    வாயு மற்றும் ஆகாயத்தை அடக்கிய கசப்புச் சுவை, இதற்கு வாயு மற்றும் நிலத்தைக் கொண்ட துவர்ப்புச் சுவை, நெருப்பு மற்றும் வாயுவை அதிகம் கொண்ட காரம் போன்ற சுவைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால், உடலில் வறட்சி, லேசு, நகரும் தன்மை போன்றவை கூடுவதால், உட்புறப் படிவங்களைச் சுரண்டி, அவற்றில் படிந்துள்ளவற்றை நீர்க்கச் செய்தோ, வறளச் செய்தோ குணப்படுத்த முடியும்.
    கசப்பு - துவர்ப்புச் சுவையின் மீது இன்றைய தலைமுறையினருக்கு நாட்டம் குறைவாக இருப்பதாலும், எந்நேரமும் கணினி முன் அமர்ந்து வேலை செய்வதாலும், பள்ளிகளில் விளையாடும் நேரம் குழந்தைகளுக்குக் குறைந்து வருவதாலும், நொறுக்குத் தீனிகளின் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள மோகத்தாலும், தண்ணீருக்கு மாற்றாக குளிர்பானங்களையே குடிக்க விரும்புவதாலும், இன்று மக்களிடையே இதய பாதிப்புகள் அதிகம் ஏற்படுகின்றன.
    பொன்னாங்கண்ணி, அகத்திக் கீரை, மணத்தக்காளிக் கீரை, முருங்கைக்கீரை, கரிசலாங்கண்ணிக் கீரை போன்றவற்றை வாரத்தில் ஒருமுறையாவது சாப்பிடுவதால், உடல் உட்புறக் கழிவுகள் வெளியேற வாய்ப்பு ஏற்படும். காலையில் மலம் சிறுநீர் கழித்த பிறகு, பல் தேய்த்து, வாயினுள் கிராம்பு, சோம்பு, ஓமம் போன்றவற்றை அடக்கிக் கொண்டு நடைப் பயிற்சியை சுமார் 45 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை செய்வதால், உடலில் ஏறும் உட்புறச் சூட்டினால், தேவையற்ற கனமான வஸ்துக்களை, ரத்தத்திலிருந்து நீர்க்கச் செய்து வியர்வை மூலமாகவும், மலரூபமாகவும் வெளியேற்றுவதால், கெட்ட கொழுப்பைக் குறைத்து இதயத்தின் வேலைத் திறனை மேம்படுத்திவிட முடியும். பள்ளிகளில் குழந்தைகளுக்கு பாகற்காய், கோவைக்காய், வாழைப்பூ போன்றவற்றைச் சாப்பிடுவதால் ஏற்படும் நல்ல பலன்களை எடுத்துச் சொல்லி, அவர்களை அவற்றைச் சாப்பிடுவதற்கு ஊக்கப்படுத்த வேண்டும். எளிமையான வாழ்க்கைமுறைத் தத்துவங்களை பள்ளிகளில் சிறுவயது முதலே பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுத்து வந்தால், அதிகப் பணம் கொடுத்து வாங்க வேண்டிய மேலை நாட்டு உணவுப் பண்டங்களின் மோகத்தை அவர்கள் விட்டுவிடுவர்.
    உடலெங்கும் நல்லெண்ணெய் தேய்த்து, வெந்நீரில் குளித்து, அன்றைய தினம் மிளகு, சீரக ரஸம், கறிவேப்பிலைத் துவையல், கடைந்து வெண்ணெய் நீக்கிய மோர் என்ற வகையில் உணவை அமைத்துக் கொண்டால், கெட்ட கொலஸ்ட்ரால் வெளியேறி, இதயத்தின் தசை நார்களின் வலுவைக் கூட்ட முடியும்.

    உணவைச் செரிக்கச் செய்யும் திறன் குன்றாமலிருந்தாலே, இதய நோய்களின் தாக்கமின்றி வாழ முடியும் என்று ஆயுர்வேதம் வலியுறுத்துகிறது. ஹிங்குவசாதி சூரணம், தசமூலாரிஷ்டம், ஜீரக வில்வாதி லேகியம், அர்ஜுனாரிஷ்டம் போன்ற பல தரமான மருந்துகளின் உபயோகத்தைச் சரியான அளவில் பயன்படுத்தி வந்தால், உடலின் உட்புற அழகு மேம்படும். உறுப்புகளின் செயல்பாடுகள் அனைத்தும் திருப்திகரமாக இருக்கும். கஈக கொலஸ்ட்ரால் வளராது. இதயம் சீரான வேகத்தில் இயங்கும்.

    (தொடரும்)
    எஸ். சுவாமிநாதன், டீன்
    ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
    நசரத்பேட்டை } 600 123 (பூந்தமல்லி அருகே)
    செல் : 94444 41771

    By Sasikumar Balakrishnan
    dinamani : 02 March 2013


    Last edited by datchu; 26th Mar 2014 at 10:24 PM.
    Sriramajayam likes this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  8. #1528
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்
    மூல நோய்க்கு மருந்து!

    எனக்கு 14 ஆண்டுகளுக்கு முன் மூலம் முழுவதும் வெளியே வந்து ஒரு வார காலத்துக்குப் பிறகு உள்ளே சென்றது. அந்த நேரத்தில் நிறைய ரத்தமும் வந்தது. சுமார் 3 ஆண்டுகள் வரை தொல்லையில்லாமல் இருந்தது. அதன் பிறகு மலம் கழிக்கும்போது மூலம் முழுவதும் வெளியே வந்துவிடும். பின் அதை உள்ளே அழுத்தித்தான் தள்ள வேண்டும். தற்சமயம் பல்பு போன்று ஆசன வாயின் வெளிப்புறம் உள்ளது. அடிக்கடி நமைச்சல் ஏற்படுகிறது. எந்த வேலையும் செய்ய முடியாமல் அவதியுறுகிறேன். இது மாற ஆயுர்வேத மருந்துகள் இருக்கின்றனவா?
    க.கலைச்செல்வன், திருநெல்வேலி.


    மூலம் வருவதற்கான காரணம் - வாத, பித்த, கப தோஷங்களுக்கு ஏற்படும் சீற்றத்தால் ஜாடராக்னீ எனப்படும் பசித்தீயின் பலம் குறைகிறது. உணவு சரி வர பாகமடையாததால், மலங்கள் சேருகின்றன. மேலும் பிரயாண உலுக்கல், சமமற்றதும், கடினமானதுமான இடங்களிலும் குத்திட்டு உட்காருதல், மிகவும் குளிர்ந்த நீரைக் கொண்டு ஆசன வாயைக் கழுவுதல், மலக்கழிவின் போது மிகவும் முக்குதல், குடல் கீழ்க்காற்று, சிறுநீர், மலம் இவற்றின் உந்துதலை அடக்குதல் அல்லது அவற்றைப் பலவந்தமாக வெளியேற்றுதல், காய்ச்சல், குல்மம், பேதி, வீக்கம், சோகை ஆகிய நோய்களால் உடல் இளைத்தல், முறைகேடான செய்கைகள், பெண்களுக்கு நிகழும் குறைப் பிரசவம், கரு வளர்ச்சியால் ஆசனவாய் அழுத்தப்படுதல் போன்ற காரணங்களாலும், குடலின் கீழ்ப் பகுதியிலிருந்து செயல்படும் அபான வாயு சீற்றமடைந்து, மலத்தை ஆசனவாய் மடிப்புகளில் தடை செய்கிறது. அவ்விடங்களில் கசிவு உண்டாகி மூல நோய் ஏற்படுகிறது.
    மேற்குறிப்பிட்ட காரணங்களால் உண்டான மூல முளைகளை சரி வர சிகிச்சை மேற்கொள்ளாமல் நீங்கள் விட்டிருக்கக் கூடும். வறட்சியுள்ளவையும், மலத்தைக் கட்டும் தன்மையுள்ளவையுமான பயறு, வரகு, சோளம், கடலை முதலியவற்றால் வாயு, தன் இருப்பிடத்தில் சீற்றமடைந்து, பலமுள்ளதாகி கீழ் நோக்கிய மலப்பையை அடைத்து, மலத்தை வற்றச் செய்து, வாயு, மலம், சிறுநீர் ஆகியவற்றின் வெளியேற்றத்தைப் பயங்கரமாக தடை செய்தால், மலப்பை தன் இடம் விட்டு நெகிழ்ந்து வெளியே வந்துவிடும். உங்களுக்கு மலப்பை இறங்கியுள்ளதா அல்லது மூல முளைகள் பெரிதாகி பல்பு போன்று தொங்குகிறதா என்பதை நவீனக் கருவிகள் மூலம் கண்டறிவது நல்லது.
    ஒரு சில ஆயுர்வேத மருந்துகளை நீங்கள் பயன்படுத்தலாம். சிரிவில்வாதி கஷாயத்தை 15 மி.லி. அளவில் எடுத்து 60 மி.லி. வெதுவெதுப்பான தண்ணீர் கலந்த சிட்டிகை இந்துப்பு சேர்த்து, 1 ஸ்பூன் (5 மி.லி.) சுகுமார கிருதம் எனும் மருந்துடன் காலை, மாலை வெறும் வயிற்றில் சுமார் 48 நாட்கள் சாப்பிடலாம்.
    கல்யாணக்க்ஷரம் எனும் பொடி மருந்தை சூடான சாதத்துடன் சிட்டிகை கலந்து, காலை, இரவு உணவில் முதல் கவளத்தைச் சாப்பிடலாம். அபயாரிஷ்டம் 30 மி.லி. காலை, இரவு உணவுக்குப் பிறகு சாப்பிடலாம்.
    மேற்குறிப்பிட்ட மருந்துகள் மூலம் இறங்கியிருந்தால் நன்றாகச் செயல்படக் கூடியவை. மலப்பை இறங்கியிருந்தால் சாங்கேர்யாதி கிருதம், மூஷிக தைலம் போன்ற விசேஷ மருந்துகளை ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிட வேண்டியவை.
    குக்குலு பஞ்ச பல சூரணத்தைப் புகைத்து, புகையை மூலத்தின் மீது படரவிடும் அபூர்வ சிகிச்சை முறையாலும் மூலம் சுருங்கக் கூடும். இதே சூரணத்தைத் தேன் குழைத்து உள்ளுக்குள் சாப்பிடும் முறையும் சிறந்ததே.
    காலையிலும் இரவிலும் உணவுக்கு அரைமணி நேரம் முன்பாக, நீங்கள் நிறைய மோர் பருக வேண்டும். மோர் ஜீரணித்தவுடன் இந்துப்பு கலந்த மோர் கஞ்சி சாப்பிடுவது மிகவும் நல்லது. இப்படி முப்பது நாட்கள் வரை பருக, மூல உபத்திரவம் குறைய வாய்ப்பிருக்கிறது.
    காலை, இரவு உணவுக்குப் பிறகு அபயாரிஷ்டம், தந்த்யரிஷ்டம் ஆகியவற்றை வகைக்கு 15 கிராம் வீதம் கலந்து, மொத்தம் 30 மி.லி. சாப்பிட்டு வருவதும் நல்லதே.
    (தொடரும்)
    எஸ். சுவாமிநாதன், டீன்
    ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
    நசரத்பேட்டை } 600 123 (பூந்தமல்லி அருகே)
    செல் : 94444 41771


    By எஸ். சுவாமிநாதன், டீன்
    dinamani: 09 March 2013


    Sriramajayam likes this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  9. #1529
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்:
    உடல் சூடு குறைய...!

    என் மகளுக்கு 14 வயது. பிறந்தது முதலே உடம்பு நல்ல சூடாக இருக்கிறது. கண் இமை, நெற்றி, மூக்கு, கன்னம் பகுதியில் அடிக்கடி சூட்டுக் கொப்பளம் வருகிறது. இந்த உபாதை மாற வழி இருக்கிறதா?
    ஒரு வாசகி, சத்தியமங்கலம்.


    கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் பிறக்கும் குழந்தைகளுக்குப் பொதுவாகவே உடற்சூடு அதிகமாக இருக்கும் என்று ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது. அதற்குக் காரணம் குழந்தையை ஈன்றெடுக்கும் தாயாருக்கு உடலில் பித்தம் எனும் தோஷம் இயற்கையாகவே குவிகிறது. இதற்குக் "காலஸ்வபாவம்' என்று பெயர். அதுபோலவே தாயும் தந்தையும் உடலில் சூடு அதிகம் உள்ளவர்களாக இருந்தாலும் அது குழந்தைக்கும் ஏற்படக் கூடும். இதற்கு "பீஜ தோஷம்' என்று பெயராகும்.

    பித்த தோஷம் இயற்கையாகவே நமக்குப் பல நன்மைகளைச் செய்கிறது. உண்ட உணவை செரிக்கச் செய்தல், உடலுக்குத் தேவையான வெப்பம், உணவில் விருப்பம், பசி, தாகம், ஒளி, தெளிவு, பார்வை, நினைவாற்றல், திறமை, மென்மை போன்ற நல்ல செயல்களைச் செய்து உடலைப் பாதுகாக்கிறது. ஆனால் இந்த பித்தமானது தன் இயற்கைக்கு மேல் வளர்ந்துவிட்டால், தன் சீற்றத்தை குணத்தின் வாயிலாகவும், செயல்களின் வாயிலாகவும் வெளிப்படுத்தும். தோலில் மஞ்சள் நிறம் உண்டாதல், சோர்வு, புலன்களுக்கு வலிவின்மை, ஓஜஸ் எனும் உடல் சக்தியின் சிதைவால் சக்திக் குறைவு, குளிர்ச்சியில் விருப்பம், எரிச்சல், வாயில் கசப்புச் சுவையை ஏற்படுத்துதல், நாவறட்சி, மூர்ச்சை, தூக்கக் குறைவு, கோபம், சூட்டுக் கொப்பளம் போன்றவற்றை ஏற்படுத்தும்.

    தொப்புள், இரைப்பை, வியர்வை, நிணநீர், இரத்தம், கண்கள், தோல் ஆகிய பகுதிகளில் பித்தம் இயற்கையாகக் குடிகொண்டுள்ளது. தன் இருப்பிடத்திலேயே பித்தம் சீற்றமடைந்தால் அதைச் சீற்றமடையச் செய்த உணவு மற்றும் செய்கைகளில் வெறுப்பும், அதற்கு நேர் எதிரான உணவு மற்றும் செய்கைகளில் விருப்பமும் மனிதர்களுக்கு இயற்கையாகவே ஏற்படும்.

    உங்களுடைய மகள் விஷயத்தில் பித்த தோஷம் தன் இருப்பிடத்தை விட்டு கபதோஷத்தின் இருப்பிடமாகிய முகத்துக்கு வந்து சீற்றமடைந்துள்ளதால், இருவகையான சிகிச்சை முறைகளைக் கையாள வேண்டிய அவசியமிருக்கிறது. ஒன்று சீற்றமடைந்த பித்த தோஷத்தை, சாந்தமாக்கி அதன் இருப்பிடத்துக்கே திருப்புவது, மற்றொன்று கபத்தை வளரவிடாமல், அமைதியுறச் செய்வது.

    பித்த - கப தோஷங்களுக்கு நேர் எதிரான சுவை கசப்பும், துவர்ப்பும் மட்டுமே. இனிப்புச் சுவை பித்தத்தைக் குறைத்தாலும் கபத்தை வளர்த்துவிடும் என்பதால், மகளுக்கு அந்தச் சுவை பொருந்தாது. கசப்பும் - துவர்ப்பும் நிறைந்த நன்னாரி வேர், வேம்பம்பட்டை, கடுக்காய், நிலவேம்பு, ஆடாதொடை, வெண்கருங்காலி, ஜாதிக்காய் போன்றவற்றை மருந்தாகப் பயன்படுத்துவதன் மூலம் விரைவில் குணமாகலாம்.

    நன்னாரி வேர், வேப்பம் பட்டை, சுக்கு போன்றவை சேர்த்துத் தயாரித்து விற்கக் கூடிய சோணிதாமிர்தம் எனும் கஷாயத்தை சுமார் 15 மி.லி.அளவில் எடுத்து 60 மி.லி வெதுவெதுப்பான தண்ணீர் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் சுமார் 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிடுவது நல்லது. திக்தகம் எனும் நெய் மருந்தைக் காலை உணவு செரித்து மதிய உணவு வேளையில் பசி உள்ள நிலையில் சுமார் 10 மி.லி. சாப்பிட்டு, 3/4 மணி நேரத்துக்குப் பிறகு மதிய உணவு ஏற்பது மிகவும் நல்லது. கடுக்காய் தோலை பன்னீர் விட்டு அரைத்து கட்டிகளின் மீது மேல் பூச்சு பூசுவதும் நல்லதே. நிலவேம்பு, ஆடாதொடை வேர், கருங்காலிக் கட்டை போன்றவற்றை வகைக்கு 5 கிராம் வீதமெடுத்து 1 லிட்டர் தண்ணீரில் கொதிக்கவிட்டு, 1/2 லிட்டராகக் குறுக்கி, வடிகட்டி தண்ணீருக்குப் பதிலாக குடிப்பது நல்லது. ஜாதிக்காயும் கடுக்காய் போல மைய அரைத்து பூசக் கூடியதே.

    இருமாதத்துக்கு ஒருமுறை மாணிபத்ரம் எனும் லேகிய மருந்தைச் சாப்பிட்டு பேதி செய்து பித்த நீரை வெளியேற்றுவதும் நல்லதே. அளவு பற்றிய விபரம் மருத்துவரை அணுகி தெரிந்து கொள்வதே நல்லது. உணவில் காரம் புளி உப்பு குறைக்கவும்.

    (தொடரும்)


    By எஸ். சுவாமிநாதன், டீன் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே) செல் : 94444 41771
    dinamani 16 March 2013


    Sriramajayam likes this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  10. #1530
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Today's Medical Info

    ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: மூலிகைத் தைலமும் மூலிகை கஷாயமும்!

    என் வயது 59. வலது விதைப்பையில் வலி உள்ளது. வலது அடி வயிறு, வலது இடுப்பு, வலது கால் வரை வலி உள்ளது. தரையில் சம்மணமிட்டு தியானம், உடற்பயிற்சி செய்தாலும், கொஞ்சநேரம் நின்று கொண்டு இருந்தாலும் வலி அதிகமாக உள்ளது. இதைக் குணப்படுத்த மருந்து உள்ளதா?
    ஜெயராமகிருஷ்ணன், ஈரோடு.


    விதைப் பையினுள் அமைந்துள்ள ரத்தக் குழாய்கள் கரியமில வாயுவை எடுத்துச் செல்வதற்காக, வயிற்றின் அடிப்பகுதியில் அமைந்துள்ள குழாய்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. அவற்றிலுள்ள வால்வுகள் பழுதடையும் பட்சத்தில், அவை சுருண்டு விடும். பழுதடைந்த ரத்தக் குழாய்களிலிருந்து ஒருவிதமான மந்தநிலையிலுள்ள வலி ஏற்படும். பாதிப்படைந்த விதைப்பை மற்ற பகுதியைவிட அதிக அளவில் கீழ்நோக்கி தொங்கக் கூடும். லங்கோடு மூலம் இப்பகுதி இறுக்கமாக மேல்நோக்கிக் கட்டப்படாமல் போனாலோ, அதிக நேரம் நிற்க நேர்ந்தாலோ, வலி அதிகமாக இருக்கும். விதைப் பையினுள் குடல் இறக்கம் ஏற்பட்டிருந்தாலும் வலி ஏற்படக் கூடும். குட்டையாகவும், குண்டாகவும் இருக்கக் கூடியவர்களைவிட, உயரமாகவும், ஒல்லியாகவும் இருக்கும் நபர்களுக்கு விதைப் பையில் வலி அதிகமாகத் தென்படும் என்பது நவீன ஆராய்ச்சியாளர்களின் கருத்தாகும்.

    இந்த உபாதை ஏற்படக் காரணமாக அடி வயிற்றில் ஏற்படும் குடல் காற்றின் அழுத்தம், அதனை உதாசீனப்படுத்தி உடற்பயிற்களைச் செய்தல், குடலில் மலத்தின் சேர்க்கையை அதிகப்படுத்தும் மொச்சை, உளுந்து, ஆட்டின் மாமிசம் போன்றவற்றை அதிகம் சாப்பிடுதல், இருசக்கர வாகனத்தில் அதிக நேரம் சவாரி செய்தல், இயற்கை உந்துதல்களாகிய மலம், சிறுநீர் ஆகியவற்றை வலுக்கட்டாயமாக அடக்குதல் அல்லது பலவந்தமாக வெளியேற்றுதல், இறுக்கமான உள்ளாடைகளை விதையைத் தாங்குமாறு அணியாமல் ட்ரவுசர் அணிதல், குளிர்ந்த நீரில் அதிக நேரம் நீச்சலடித்தல் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

    இந்த உபாதையில் கையாள வேண்டிய சில ஆயுர்வேத சிகிச்சைமுறைகளில் முன்னிற்பது வஸ்தி எனும் ஆசன வாய் வழியாகச் செலுத்தப்படும் மூலிகைத் தைலமும், மூலிகைக் கஷாயமும்தான். இதனால் கீழ்க்குடல் பகுதியிலுள்ள மலம், சிறுநீர் ஆகியவற்றின் வெளியேற்றத்தால் அப்பகுதி சுத்தமடைகிறது. அதன் பிறகு வலியைப் போக்கக் கூடிய சுகுமாரம் கிருதம், விதார்யாதி கிருதம், இந்துகாந்தம்கிருதம் போன்றவற்றில் ஒன்றிரண்டை ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிடுவது நல்லது. ஐந்து பல் பூண்டை நசுக்கி, கால் டம்ளர் பாலுடன் கலந்து, ஒன்றே கால் டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்கவிட்டு, பால் அளவு மட்டும் மிஞ்சும்போது வடிகட்டி, அந்தப் பாலை காலை, இரவு உணவுக்கு அரை மணி நேரம் முன்பாக, வெதுவெதுப்பாகச் சாப்பிடுவதன் மூலமாக, விதைப் பையில் ஏற்பட்டுள்ள ரத்தக் குழாய் சுருட்டலையோ அல்லது வேறு காரணத்தால் ஏற்பட்டிருக்கும் வலியையோ குறைத்துவிடலாம்.

    ஹிங்கு திரிகுணம் எனும் மூலிகைக் தைலத்தை வெதுவெதுப்பாக வயிற்றின் கீழ்ப்பகுதி, விதைப்பை பகுதிகளில் பூசி, சுமார் 1/2 - 3/4 மணி நேரம் ஊறிய பிறகு, வெதுவெதுப்பான தண்ணீரில் காலையில் குளிப்பதால், விதைப்பை வலியைப் போக்கிக் கொள்ளலாம்.

    விதைப்பை வலிக்கு விளக்கெண்ணெய் ஒரு சிறப்பான மருந்தாகும். வாரம் இருமுறை சுமார் 10 - 15 மி.லி. விளக்கெண்ணெய்யை அரை கிளாஸ் சூடான பாலுடன் கலந்து, காலை , இரவு உணவுக்குப் பிறகு 1 மணி நேரம் முன்பாகச் சாப்பிடுவதன் மூலம், விதைப்பையின் உள்ளே அமைந்துள்ள ரத்தக் குழாய் சுருட்டலை, நிவர்த்தி செய்யக் கூடிய வாய்ப்பு இருக்கிறது.

    உங்களுடைய உணவில் வாயு பண்டங்களைத் தவிர்க்கவும். உணவு வகைகளை வெதுவெதுப்பாகச் சாப்பிடவும். வெந்நீர் மட்டுமே அருந்தவும். முன் குறிப்பிட்ட காரணங்களைத் தவிர்க்கவும்.

    (தொடரும்)


    By எஸ். சுவாமிநாதன்
    dinamani 22 March 2013


    Sriramajayam likes this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter