Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4825Likes

Today's Medical Info


Discussions on "Today's Medical Info" in "Health" forum.


 1. #1651
  datchu's Avatar
  datchu is offline Silver Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Feb 2012
  Location
  Chennai
  Posts
  25,375

  Re: Today's Medical Info

  ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: அதிக எடையைக் குறைக்கலாம்!

  எனக்கு வயது 25. வரும் தை மாதம் திருமணம் நடைபெற உள்ளது. மென்மையற்ற குட்டையான தலைமுடி, 5 அடி 4 அங்குல உயரம் உள்ள எனது உடல் எடை 78 கிலோ. என் குட்டை முடி நீளமாக ஆக வேண்டும். உடல் எடை குறைய வேண்டும். திருமண நாள் நெருங்குவதால் என் பிரச்னைகளை ஆயுர்வேத மருத்துவர் மூலம் விரைவில் சரி செய்து திருமணத்தில் நான் அழகாகக் காட்சி தர வழிகள் உள்ளனவா?
  ஒரு வாசகி, சென்னை.


  உடல் ஏன் பருக்கிறது? சரகர் எனும் ஆயுர்வேத முனிவர் இதற்கான காரணப் பட்டியலை வெளியிடுகிறார்.

  1. அதிஸ்தெல்யமதிஸம்பூரணாத் - நிறைய உண்பது

  2. குரு - மதுர - சீத- ஸ்நிக்த உபயோகாத்- உணவில் எளிதில் ஜீரணமாகாத கடினமான தன்மை உள்ளவை, இனிப்பானவை, குளிர்ச்சி தருபவை, நெய்ப்பு மிக்கவை இவற்றையே அதிகமாக அமைத்துக் கொள்வது.

  3. அவ்யாயாமாத் - உடற்பயிற்சியின்மை

  4.அவ்யாவாயாத் - உடலுறவின்மை

  5. திவாஸ்வப்னாத் - பகல் தூக்கம்

  6. ஹர்ஷநித்யத்வாத் - எப்போதும் தெளிந்த மனத்துடன் இருத்தல்

  7. அசிந்தனாத் - கவலையோ, உணர்ச்சிக் கொந்தளிப்போ இல்லாதிருத்தல்

  8. பீஜஸ்வபாவாத் - பிறவியில் அந்த உடலின் மூலப் பொருள் சேர்க்கையில் ஏற்படும் தனிமாறுபாடு.

  இவை எட்டும் முக்கிய காரணங்கள். இவற்றில் ஒன்றோ பலவோ உடல் பருப்பதற்குக் காரணமாகலாம்.

  பொதுவாக, உணவு புஷ்டியாக எப்போதும் குறைவின்றிக் கிடைத்தல், உடலுழைப்புச் சிறிதும் இல்லாத வாழ்க்கை முறை, பிறரை வாயால் அதிகாரம் செலுத்தி வேலை வாங்கி தன் பணியை நிறைவேற்றும் வாய்ப்பு, இவையே உடல் பருக்கப் பெரும்பாலும் காரணமாகின்றன.

  உடல் எடையைக் குறைக்க விரும்பும் நீங்கள் சில விஷயங்களை தினம்தோறும் செய்து வரவும். காலையில் எழுந்ததும் மலம், சிறுநீர் கழித்த பிறகு பல் தேய்த்து வெறும் வயிறாக இருக்கும்போதே 2 ஸ்பூன் (10 மி.லி.) நெல்லிக்காய் சாறில், சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து 1/4 ஸ்பூன் (2.5 மி.லி.) தேனுடன் சாப்பிட்டுவிட்டு 1/2 -3/4 மணி நேரம் சுறுசுறுப்பாக நடக்கவும். காலை உணவாகக் கோதுமைக் கஞ்சி சாப்பிடவும். மதியம் புழுங்கலரிசி சாதத்தை சிறிய அளவில் சாம்பார், ரசம், மோர் என்று பிரித்துச் சாப்பிட்ட பிறகு, 1/2 கிளாஸ் (150 மி.லி.) சூடு ஆறிய தண்ணீரில், 1ஸ்பூன் (5 மி.லி.) தேன் கலந்து பருகவும். மாலையில் 1 கிளாஸ் (300 மி.லி.) மோர் பருகவும். இரவில் கோதுமையினால் தயாரிக்கப்பட்ட ரொட்டியைச் சாப்பிடவும். பச்சைப் பயறு, பூண்டு வேக வைத்த கூட்டை ரொட்டிக்குத் தொட்டுக் கொள்ளப் பயன்படுத்தவும். அதன் பிறகு, மதியம் சாப்பிட்ட தேன் கலந்த தண்ணீர் போல அதே அளவில் மறுபடியும் சாப்பிடவும். புலால் உணவையும், எண்ணெய்ப் பொருட்களையும், பகல் தூக்கத்தையும் அறவே தவிர்க்கவும்.

  தலைக்குப் பிருங்காமல தைலம் உபயோகித்து வரவும். தலையில் பொதியும் வகையில் ஒரு பஞ்சினால் இந்த எண்ணெய்யில் முக்கி, தலையில் ஊறவிடவும். காலையில் 1/2 - 3/4 மணி நேரம், வாரம் இருமுறை மட்டும். செவ்வாய், வெள்ளிக் கிழமைகள் நல்லது. அதன் பிறகு குளிக்கவும். கண், காது, மூக்கு முதலிய புலன்களை இயக்கும் நரம்புகளுக்குப் பலமும் குளிர்ச்சியும் அளிக்கக் கூடிய சிறந்த தைலம். அதிக மூளை வேலையுள்ளவர்கள் இதனைத் தலையில் ஊற வைத்துக் குளித்தால் மூளைக் கொதிப்பு, ரத்தக் கொதிப்பு முதலிய நோய்களிலிருந்தும் பாதுகாப்புப் பெறலாம். கேசங்கள் அடர்த்தியாகவும் கருமையாகவும் அழகாகவும் வளரும். மயிர் உதிர்தல், பொடுகு, குட்டைமுடி இவற்றைப் போக்கும்.

  இரவில் படுக்கப் போகும்போது பால் ஆடையை முகத்தில் தடவிக் கொண்டு படுக்கவும். காலையில் எழுந்தவுடன் வெதுவெதுப்பான நீர், குளிர்ந்த நீர் இரண்டையும் மாற்றி மாற்றி முகத்தில் விட்டுக் கழுவவும். பிறகு குண்டு மஞ்சள் ஒன்றை எடுத்துக் கொஞ்சம் இழைத்து சொட்டு நல்லெண்ணெய் உள்ளங்கையில் விட்டு அதில் இழைத்த மஞ்சளைக் குழைத்து முகத்தில் நன்றாகத் தடவி விட வேண்டும். அரை மணி நேரம் ஊறிய பிறகு, பயத்தம் மாவு தேய்த்து அலம்ப வேண்டும். முகத்திலுள்ள பருக்களைப் போக்கும், முகத்திலே அலாதி மினுமினுப்பு, தேஜசு உண்டாகும். திருமணத்தில் அழகாகக் காட்சி தருவீர்கள்! வாழ்த்துகள்!

  (தொடரும்)  Sponsored Links

  "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

 2. #1652
  datchu's Avatar
  datchu is offline Silver Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Feb 2012
  Location
  Chennai
  Posts
  25,375

  Re: Today's Medical Info

  ஆயுள் காக்கும் ஆயுர்வேதம் காதில் விடும் மருந்து எண்ணெய்கள்!

  கண்களின் பாதுகாப்புக்காக இளநீர்க் குழம்பு, நயனாமிருதம் ஆகிய கண்களில் விடும் சொட்டு மருந்துகள் பற்றியும், மூக்கில் விடும் சொட்டு மருந்தாக அணு தைலம் பற்றியும் அநேக முறைகள் விவரித்துள்ளீர்கள். காதுகளில் அடைப்பு, ரஅல என்ற அழுக்கான கெட்டிபட்டுப் போன வஸ்து போன்ற பல உபாதைகளிலிருந்து நிவாரணம் பெற, காதினுள் விடும் ஆயுர்வேத மருந்துகள் உள்ளனவா? எனது இடது காதில் சுமார் ஒரு வருடமாக அடைப்பாக உள்ளது.
  நளினி ராமேஸ்வரம், சென்னை.


  "வசாலசுணாதி' என்ற பெயரில் ஓர் ஆயுர்வேத மூலிகைத் தைலம் காதுகளில் விட்டுக் கொள்வதற்கு மிகவும் நல்ல மருந்தாகும். காதின் நுட்பமான உணர்ச்சிமிக்க நரம்பு மண்டலம் அதிகச் சூட்டையும், அதிகக் குளிர்ச்சியையும் தாங்காது. அதனால் இந்த மூலிகை எண்ணெய்யை இளஞ்சூடானநிலையில் பஞ்சில் எண்ணெய்யை நனைத்துச் சொட்டுச் சொட்டாகக் காதினுள் விட்டு, நிரம்பியதும் வேறு ஒரு வறண்ட பஞ்சினால் காதை அடைத்துவிட வேண்டும். சுமார் 8 - 10 நிமிடங்கள் தலையை அசைக்காமல் அப்படியே படுத்திருந்து, செருகி வைத்துள்ள பஞ்சை எடுத்துவிட்டு, எண்ணெய்யை வடித்துவிட வேண்டும். திரும்பிப் படுத்து இது போலவே மற்ற காதினுள்ளும் விட்டுக் கொள்வது நலம்.
  காதினுள் விடப்படும் எண்ணெய்யை நன்கு துடைத்து அகற்றாவிட்டால் வெளிப்புற அழுக்குகள் சேர்ந்துவிடும். மேலும் தலைக்குக் குளிக்கும்போது தண்ணீரின் துளிகள் காதினுள் எண்ணெய்ப் பிசுக்குடன் சேர்ந்து தங்கி வேக்காளத்தை ஏற்படுத்தும். அதனால் காதில் எண்ணெய் விட்டுக் கொள்ளும்போதெல்லாம், தலைக்குத் தண்ணீர் விட்டுக் குளித்தவுடன் பஞ்சு சுற்றிய குச்சியால் காதினுள் புண் ஏற்படாதவாறு மெதுவாக விட்டுத் துடைத்து விடுவது மிக மிக அவசியமாகும். காதில் ஏற்படும் வலி, ரஅல அடைப்பு போன்றவை இதன் மூலம் விலகிவிடும்.
  தற்சமயம் தமிழகத்தில் மழை மற்றும் பனி நாட்களாக இருப்பதால் சீதக் காற்று வாடை பட்டுச் சிலருக்கு காதினுள் சினப்புகள் கிளம்புவதும், காதிலும், சுற்றுப்புறத்து மண்டையிலும் கடும் வேதனையும் உண்டாகும். வாஸனைக் கோஷ்டம் என்றொரு மருந்துச் சரக்கு. அதன் மேலே ஒரு வெள்ளைத் துணியைச் சுற்றி நல்லெண்ணெய்யில் நனைத்துத் திரி போலாக்கி அதைக் கொளுத்தி எரியும்போது சொட்டுச் சொட்டாக அந்த ஜ்வாலையின் மேல் நல்லெண்ணெய்யை விட்டுக் கொண்டே வர, கீழ் சுடர் எண்ணெய் விழும். இந்தச் சுடர் தைலத்தை ஒரு கண்ணாடி பாட்டிலில் பத்திரப்படுத்தி, ஒரு பூண்டுப் பல்லை இந்தத் தைலத்தில் நனைத்து அனலில் வாட்டி இளஞ்சூடாக காதில் செருகிக் கொள்ள, மேற்குறிப்பிட்ட உபாதைகள் நீங்கிவிடும். இந்தச் சுடர் எண்ணெய்யை காதினுள் வெதுவெதுப்பாக நேரடியாகவும் விட்டு வர, குளிரால் ஏற்படும் காதுவலி, மென்னி விரைப்பு, தோள்பட்டை வலி போன்றவை நீங்கி விடும். தேங்காய் எண்ணெய்யைச் சுட வைத்து அதில் கட்டிக் கற்பூரத்தைக் கரைத்து, சூடாகவே மென்னி, பிடறி,கழுத்து போன்ற பகுதிகளில் தடவிவிட்டு, கம்பளியை அனலில் காட்டி ஒத்தடம் கொடுப்பதும் நல்லதே. ஆனால் கரப்பான், காதினுள்ளே புண் உள்ளவர்கள் மருத்துவரின் அனுமதியின்றி எண்ணெய் விடுவது சரியல்ல.
  பனிவாடைபடாமல் குளிர்நாட்களில் கம்பளி போர்த்தி உறங்கிவிட்டு, காலையில் அறையைவிட்டு மிகவும் குளிர்ச்சியான வேறொரு அறை அல்லது வீட்டை விட்டு வெளியே வந்தால், சிலருக்குத் திடீரெனக் காது வலி ஏற்படும். உடனே சூடு பறக்க நெற்றி, காது, கை, கால்களைத் தேய்த்துவிடலாம். நெற்றிக்கு இடும் விபூதியில் சிறிதளவு கட்டிச் சூடத்தைக் கலந்து அதை நெற்றி முதலிய இடங்களில் தடவிக் கொள்ளலாம். முன் குறிப்பிட்ட சூடம் கரைத்த தேங்காய் எண்ணெய்யை வலி வரும் பகுதிகளில் தேய்த்துவிடுவது நல்லது. எட்டி விதை கனமானது. 4-5 மணி நேரம் வேப்பெண்ணெய்யில் ஊற வைத்து ஒரு கூரான இரும்புக் குச்சியில் குத்திக் கொண்டு கொளுத்தி அதை ஊற வைக்க உபயோகித்த வேப்பெண்ணெய்யை எரியும் எட்டி விதையின் மேல் சொட்டு சொட்டாக விட, விதை எரிந்து கீழ் சுடர் தைலம் விழும். இதைக் காதில் விட வலி நிற்கும். வலியுடன் வரும் சீழும் நிற்கும்.
  (தொடரும்)  "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

 3. #1653
  datchu's Avatar
  datchu is offline Silver Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Feb 2012
  Location
  Chennai
  Posts
  25,375

  Re: Today's Medical Info

  ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: தோல் நோய்கள் தீர...சரியான உணவுப் பழக்கம்!

  என் வயது 23. ஆண்கள் படிக்கும் விடுதியில் காப்பாளராக இருக்கிறேன். தொடை இடுக்கில் fungal infection ஏற்பட்டு எவ்வளவோ செலவு செய்தும் குணமாகவில்லை. இதற்கு ஆயுர்வேதம் மூலம் தீர்வு கிடைக்குமா?
  -டி. விவேக், கோவை.


  வீட்டுச் சாப்பாட்டைப் போல விடுதிச் சாப்பாடு தங்களுக்கு அமைய வாய்ப்பில்லை. பலருக்கும் சமைத்து வழங்கப்படும் உணவைத் தொடர்ந்து சாப்பிட வேண்டிய நிர்பந்தம் உள்ள உங்களுக்கு உடலில் ஒருவித பகைப் பொருள்களால் ஏற்படும் உபாதை உண்டாகி இருப்பதாகத் தெரிகிறது. காலை, மதியம், இரவு என்று மூன்று நேரமும் விடுதி உணவானது வயிற்றில் சேரும்போது, உடலிலுள்ள வாத - பித்த - கப தோஷங்களை இருக்கும் இடத்திலிருந்து நெகிழ வைத்துக் கிளறிவிட்டு அவை முற்றிலும் வெளிப்படாமல் உடலின் உள்ளேயே தேக்கி வைக்கும் உணவுப் பொருள்களால், தொடை இடுக்கில் அரிப்பும், படையும், சொரிந்தால் வெள்ளை நிறத்தில் பொடிப்பொடியாக உதிர்வதும், எரிச்சலையும் உண்டாக்கும். பலருக்கும் சேர்த்து சமையல் செய்யும் இடங்களில் இரு உணவுப் பொருள்களின் சக்தி வாய்ந்த பரஸ்பர குணங்கள் ஒன்றுக்கொன்று எதிரிடையாக இருத்தல், சமமாக அதாவது ஒன்றுக்கொன்று மாறுபடாத ஒரே தன்மையுடையதாக இருத்தல், சில குணங்கள் சமமாகவும் சில எதிரிடையாகவும் கலந்திருத்தல், மேலும் செய்முறை, அளவு, தேசம், காலம், சேர்க்கை போன்றவை கவனத்தில் வைத்துச் சமைக்கப்படாதிருத்தல் இயல்பே.

  வியாபாரத்தையே முக்கிய நோக்கமாகக் கொண்டு செய்யப்படும் உணவு வகைகளால் நாக்கிற்கு ருசி கிடைக்குமே தவிர, ஆரோக்கியத்தை எதிர்பார்க்க இயலாது. உணவிலுள்ள பகைப்பொருள்களாலும் ஐந்து வகையான நபர்களுக்கு எந்தவிதமான கெடுதலும் ஏற்படுவதில்லை. உடற்பயிற்சி செய்பவர்கள், எண்ணெய்ப் பசையுண்டாக்கும் சிகிச்சை செய்து கொண்டவர்கள், பசித்தீ நன்கு வேலை செய்கின்ற நிலையிலுள்ளவர்கள், நடுவயதில் உள்ளவர்கள், நல்ல உடல் வலிமை பெற்றவர்கள் ஆகிய இந்த ஐந்து வகையான நபர்களுக்கு, சமுதாயச் சாப்பாட்டின் மூலம் தீங்கு ஏதும் ஏற்படுவதில்லை. நீங்கள் இளமையானவர், மேற்கூறியவற்றைப் பெற முயற்சி செய்து நோய் எதிர்ப்பு சக்தியை அவற்றின் மூலம் வளர்த்துக் கொள்ளலாம்.

  வெளிப்புறக் காரணங்களாலும் இந்தப் பிரச்னை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. உள்ளாடையில் சிறிதும் சோப்புத் துகள் இல்லாதவாறு நன்றாகத் தண்ணீர் விட்டு அலசி, வெயிலில் ஆடையின் உட்புறம் நன்கு படுமாறு உலர்த்தவும். நன்றாக ஆடை வெயிலில் காயுமாறு இட்டு வைப்பது ஒரு நல்ல கிருமி நாசினி முறையாகும். விடுதியில் மற்றவர்களுடைய துண்டு, சோப்பு போன்றவற்றை மாற்றி உபயோகிக்கும் வழக்கம் பொதுவாகவே இருப்பதால், அவ்வாறு ஏற்படாதவாறு நீங்கள் கவனமாகப் பார்த்துக் கொள்ளவும்.

  தொடை பருத்து நடக்கும்போது உரசிக் கொள்ளும் நிலையில், தொடை இடுக்கில் புண் ஏற்பட்டு அரிப்பும் வியர்வைக் கசிவும் அதிகமிருக்கும். உடலை இளைக்கச் செய்யும் சிகிச்சை முறைகளால் மட்டுமே இப்பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும். இரவில் படுக்கும் முன் இறுக்கமான உள்ளாடைகளை நீக்கிவிட்டு, தொளதொளவென்றிருக்கும் பெர்முடாஸ் அல்லது ட்ரௌஸர் அணிந்து கொள்வதே நல்லது.

  நீங்கள் தொடை இடுக்குப் பகுதியில் அமைந்துள்ள தோலின் சகிப்புத்தன்மையை அதிகப்படுத்தவும், தோலுக்கு நல்ல பலத்தை ஏற்படுத்தவும் ஆயுர்வேத மூலிகைத் தைலங்களாகிய நால்பாமராதி தைலம், தூர்வாதி தைலம், தினேசவல்யாதி தைலம், ஏலாதி தைலம் போன்றவற்றில் ஒன்றிரண்டைத் தடவி, சுமார் அரை முக்கால் மணி நேரம் ஊறிய பிறகு காலையில் குளித்து வரவும். எண்ணெய்ப் பிசுக்கை அகற்ற சோப்புகளின் உபயோகத்தைக் குறைத்துப் பாசிப்பயறு, கடலை மாவு, அரிசி மாவு இவைகளின் மாவு அதிகம் கலந்த அரப்புத்தூள் போட்டுக் கலந்த தண்ணீரை உபயோகப்படுத்தவும்.

  திக்தகம், மஹாதிக்தகம், சோணிதாமிர்தம், நிம்பாதி போன்ற கஷாயங்களில் ஒன்றை மருத்துவர் ஆலோசனைப்படி உள்ளுக்குச் சாப்பிட்டு வரவும்.

  (தொடரும்)  "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

 4. #1654
  datchu's Avatar
  datchu is offline Silver Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Feb 2012
  Location
  Chennai
  Posts
  25,375

  Re: Today's Medical Info

  ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: நரம்புகள் அனைத்தும் ஊட்டம் பெற...!

  என் தாயாருக்கு வயது 57. ஏழு வருடங்களுக்கு முன்பு சர்க்கரை, ரத்த அழுத்தம் காரணமாக பக்கவாத நோயில் விழுந்துவிட்டார். அவருக்கு மலச்சிக்கல், சிலசமயம் கட்டுப்பாடு இல்லாத சிறுநீர், தூக்கம் குறைவு, கை, கால் வலி, தலைவலி போன்ற உபாதைகள் உள்ளன. இந்தப் பிரச்னைகளை ஆயுர்வேத சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியுமா?
  -சேதுராமன், போடிநாயக்கனூர்.


  மூளையில் ஏற்பட்ட ரத்த உறைவு, நரம்புகளின் ஒத்துழையாமை போன்றவை அவருக்கு இந்த உபாதைகளைத் தோற்றுவித்திருப்பதாகத் தெரிகிறது. தலையினுள்ளே அமர்ந்துகொண்டு மனதைக் கருவியாகப் பயன்படுத்தி உத்தரவுகளைப் பிறப்பித்துக் கொண்டிருக்கும் மூளைக்கே ஆபத்து வந்துவிட்டால், நீங்கள் அவருக்கு ஏற்பட்டிருப்பதாகக் கூறும் உபாதைகள் அனைத்தும் ஏற்படத்தான் செய்யும்.

  "பிசுதாரணம்' என்று ஒரு சிகிச்சை முறையை இதுபோன்ற சூழ்நிலையில் ஆயுர்வேதம் எடுத்துக் கூறுகிறது. அதாவது தலையில் மூலிகைத் தைலத்தை ஒரு பஞ்சினாலோ துணியினாலோ வெதுவெதுப்பாக முக்கி எடுத்து "தாரணம்' அதாவது தரித்துக் கொள்ளுதல் என்று அதற்கு அர்த்தம் கூறலாம். "நஸ்யம்' எனும் மூக்கினுள் மூலிகை மருந்து காய்ச்சிய நெய் மருந்தை உருக்கி விடுதலும் நல்லதொரு சிகிச்சை முறையுமாகும். அவரின் உடல் எடை, உயரம், பசியின் தன்மை, அன்றைய உடல்நிலை ஆகியவற்றைப் பொருத்தே இந்த சிகிச்சைகளைத் தீர்மானிக்க வேண்டும். தங்களுடைய நீண்டதொரு கடிதத்தில் அவர் சாப்பிடும் உணவு முறைகள், இன்சுலின் ஊசிபோட்டுக் கொள்ளுதல் போன்ற விவரங்களைத் தெளிவாகக் கூறியிருப்பதால், அவற்றை மனதிற்கொண்டு கீழ்வரும் மூலிகைத் தைலத்தை பிசுதாரணத்திற்காகவும், நஸ்ய சிகிச்சைக்காகவும் நீங்கள் முயற்சி செய்து பார்க்கலாம்.

  கார்ப்பாஸஸ்த்யாதி எனும் மூலிகைத் தைலத்தை வெதுவெதுப்பாக பஞ்சில் முக்கி எடுத்து தலையில் சுமார் 30 நிமிடங்கள் முதல் 45 நிமிடங்கள் வரை ஊறவிடவும். காலையில், உணவுக்கு முன். அதற்கு முன் 4 சொட்டுக்கள் க்ஷீரபலா 101 எனும் மூலிகை நெய் மருந்தை நீராவியால் உருக்கி மூக்கினுள் விட்டு உறியச் செய்யவும். தான்வந்திரம் எனும் மூலிகைத் தைலத்தை இரும்புக்கடாயில் சூடாக்கி, உடலெங்கும் தடவி ஊறச் செய்யவும். அதிக காற்றோட்டமில்லாத அறையில் இந்த சிகிச்சை முறைகளைச் செய்வது மிகவும் நல்லது. நரம்புகளின் உணர்வுகளைத் தூண்டிவிடும் நொச்சி, ஆமணக்கு, புங்கை, கல்யாண முருங்கை, கற்பூரம் போன்ற இலைகளை நறுக்கி சிறு துண்டுகளாக்கி மூட்டையாக காடாதுணியில் கட்டி சூடாக்கி, உடலெங்கும் ஒத்தடம் கொடுக்கவும். சுமார் 15 - 20 நிமிடங்கள் வரை ஒத்தடம் கொடுத்த பிறகு, அடுத்த அரை மணி நேரம் இந்த சூடான இலை ஒத்தடம் உடலில் தங்குமென்பதால் ஓய்வெடுத்து, அதன் பிறகு வெந்நீர் குளியல் செய்து கொள்வது நல்லது. உணவாக சூடான மிளகு ரசம், பருப்புத்துவையல், மோரைச் சூடாக்கி ஓமம், கடுகு நல்லெண்ணெயில் தாளிதம் செய்து சாதத்துடன் சாப்பிடுவது நல்லது. வாரமிருமுறையோ மூன்று முறையோ இந்தச் சிகிச்சை முறைகளைச் செய்தால் போதுமானது.

  மூளை எனும் வேரில் வைக்கப்படும் இந்த எண்ணெய் முறைகளால், கை கால் தலைப்பகுதிகளில் கிளையாகப் பிரியும் நரம்புகள் அனைத்தும் ஊட்டம் பெற்று தங்கள் செயல்திறனில் மேம்படுகின்றன. வேருக்குத் தண்ணீர் விட்டதும் செடியின் கிளைகள், இலைகள், காய்கள் அனைத்தும் ஊட்டம் பெறுவதைப்போல, எண்ணெயினுடைய வீர்யமானது நரம்புகளை ஊட்டம் பெறச் செய்கின்றன.

  ஆசனவாய் வழியாகச் செலுத்தப்படும் மூலிகை எண்ணெய் மற்றும் மூலிகைக் கஷாய "எனிமா' சிகிச்சை முறைகள், சித்தாமுட்டி வேரைக் கொண்டு கஷாயம் காய்ச்சி, பாலுடன் கலந்து, நவர அரசியை அதில் வேக வைத்து உடலெங்கும் தடவித் தேய்த்துவிடும் "நவரக்கிழி' எனும் சிகிச்சை முறைகளாலும் அவருக்குப் பயன் ஏற்படும். ஆனால், இவற்றை வீட்டில் வைத்து செய்து கொள்ள முடியாதென்பதால் அவை பற்றிய மேலும் விவரங்கள் இங்கு தேவையிருக்காது.

  ஒன்றிரண்டு டீ ஸ்பூன் (10மிலி வரை) கந்தர்வஹஸ்தாதி எனும் விளக்கெண்ணெய் மருந்தை சுமார் 21 நாட்கள் வரை காலையில் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், மலச்சிக்கல், குடல் வாயு, உடல் வலி உபாதைகள் குறைய வாய்ப்பிருக்கிறது.

  (தொடரும்)  "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

 5. #1655
  datchu's Avatar
  datchu is offline Silver Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Feb 2012
  Location
  Chennai
  Posts
  25,375

  Re: Today's Medical Info

  ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: குடல் வீக்கம், தடிப்பு, வலி!

  எனது வயது 40. 2010 நவம்பரில் அப்பன்டிஸட்டிஸ் அறுவை சிகிச்சை நடைபெற்றது. தற்போது மூன்று மாதங்களாக வயிற்று வலி உள்ளது. பெருங்குடல் சிறுகுடல் சேருமிடத்தில் இரண்டும் சேர்ந்துள்ளது என்றும் வீக்கமும் உள்ளது என்று மருத்துவர் கூறி இதற்கு மருத்துவமில்லை என்றும் கூறுகிறார். இதற்கு ஏதாவது மருத்துவமிருக்கிறதா?
  -கே.எஸ். கோலப்பதாஸ், கட்டையன்விளை, நாகர்கோவில்.


  நீங்கள் கடிதத்துடன் இணைத்துள்ள ct abdomen scan report - இல் கல்லீரல் வீக்கம், சிறுநீரை தடைப்படுத்தாத வலது சிறுநீரகத்தில் கல், வயிற்றின் உள்பகுதியை பாதுகாக்கும் ஜவ்வுப்பகுதியில் தடிப்பு, வயிற்றின் வலது iliac fossa எனும் பகுதியில் சிறுகுடல் பகுதிகள் ஒட்டியிருத்தல் போன்றவை சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இவற்றில் எந்த உபாதை உங்களுக்கு வயிற்று வலியை ஏற்படுத்துகிறது என்ற ஒரு கேள்வி எழுகிறது. ஏதேனும் ஒரு உபாதையினாலா? அல்லது எல்லாம் ஒன்றுசேர்ந்து பிரச்னையை ஏற்படுத்துகின்றனவா? என்பது சட்டென்று விளங்காத வகையில் இருக்கின்றன.

  குடல் பகுதியில் எந்நேரமும் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் "ஸமானன்' என்ற வாயு கேடுற்று, இந்த உபாதைகளை ஊதிப் பெரிதாக்கியதா? என்ற ஒரு சந்தேகமும் உள்ளது. இதில் எந்த உபாதைக்கு முதலில் வைத்தியம் செய்வது? அப்படிச் செய்வதானால் மற்ற உபாதைகள் பெரிதாகாதவாறு கவனிக்க வேண்டும். கல்லீரல் வீக்கம் குறைய வேண்டும். சிறுநீரகக் கல் உருகி வெளியேற வேண்டும், ஜவ்வுப் பகுதியிலுள்ள தடிப்பைக் குறைக்க வேண்டும், சிறுகுடல் ஒட்டு பிரிய வேண்டும் போன்ற பல வேலைகளைத் திறம்படச் செய்து முடிக்கக் கூடிய மருந்து தேவை. பொதுவாகவே குடல் பகுதியின் சிறப்பான செயலாற்றலை மேம்படுத்தக்கூடிய உணவின் வகைகளில் கறிவேப்பிலை சிறந்தது. குடலில் ஏற்படும் வீக்கம், தடிப்பு, வலி போன்றவற்றைக் கறிவேப்பிலைத் துவையல் சாதம் நீக்கி விடும் திறன் கொண்டது. குளிர்ச்சியான வீர்யமுடையதால் வயிற்றில் ஏற்படும் எரிச்சல் உபாதையைப் போக்கும். குடலில் தேவையற்ற கிருமிகளை வெளியேற்றும். மூலத்திற்கு நல்ல ஓர் உணவுப்பொருள். குடலில் ஏற்படும் விஷப் பாதிப்புகளை அகற்றும் என்று நிகண்டு ரத்னாகரம் எனும் நூல் கூறுகிறது. அதனால் நீங்கள் காலை உணவாக, வெதுவெதுப்பான புழுங்கலரிசி சாதத்தில் கறிவேப்பிலைத் துவையல் நல்லெண்ணெய்யுடன் விட்டுப் பிசைந்து, சின்ன வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி இலை அரிந்து, கடுகு தாளித்த தயிர் பச்சடியில் சேர்த்து தோய்த்துச் சாப்பிடவும். கறிவேப்பிலையை முக்கிய உள்மருந்தாகக் கொண்டு தயாரிக்கப்படும் "காளசாகாதி' கஷாயமும் நீங்கள் சாப்பிட வேண்டிய நல்ல மருந்தாகும்.

  பாகலிலை, பாகற்காய், வேப்பிலை, வேப்பம்பூ, வெந்தயக்கீரை, நாவல் இலை, கோவைக்காய் முதலிய கசப்பும் துவர்ப்பும் மிக்க இலைகளையும் காய்களையும் தொடர்ந்து உபயோகித்து வந்தால், கல்லீரல் வீக்கம், ஜவ்வு தடிப்பு, சிறுகுடல் ஒட்டியிருத்தல் போன்ற உபாதைகள் குறைந்து விடும். இலைகளைத் துவையலாகவும் கசக்கிப் பிழிந்தெடுத்த சாறாகவும் பயன்படுத்தலாம். காய்களை வதக்கிச் சாப்பிடலாம். வாழைத்தண்டு பொரியல் அடிக்கடி சாப்பிட, சிறுநீரகக் கல் விரைவில் உருகி, வெளியே வந்துவிடும்.

  வெறும் தண்ணீரைக் குடிப்பதைவிட உங்களுக்குச் சீரகம் ஓமம் போட்டுக் காய்ச்சிய தண்ணீர் குடிப்பது நல்லது. சீரகம் 10 கிராம், ஓமம் 5 கிராம், 1 லிட்டர் தண்ணீரில் கொதிக்கவிட்டு, அரை லிட்டர் ஆனதும் இறக்கி, வெதுவெதுப்பான நிலையில் ஒரு நாளில் பலமுறை கொஞ்சம் கொஞ்சமாக அருந்தவும். குடல் இழந்துள்ள சக்தியை மீட்டும் தரும் குடிநீராக இது பயன்படும்.

  ஜீரக வில்வாதி லேஹ்யம், அஷ்ட சூரணம், தசமூலாரிஷ்டம் போன்ற மருந்துகளால் குடல்வயிற்றுப் பகுதிகளில் கிருமிகளின் சேர்க்கை அதிகம் உங்களுக்கு ஏற்படாதவாறு பாதுகாக்கும். உங்களுக்குள்ள நஇஅச தஉடஞதப காணும்போது குடலில் உணவு சீரான வேகத்துடன் நகரும் தறுவாயில் குமுறலுடன், படபடப்புடன், சத்தத்துடன் நகர வாய்ப்பிருக்கிறது. அதனால் உணவுச் சத்து முழு அளவு ஏற்கப்படாமல் போக வாய்ப்பிருக்கிறது. அவற்றை இம் மருந்துகள் தவிர்க்கக் கூடியவை.

  (தொடரும்)  "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

 6. #1656
  datchu's Avatar
  datchu is offline Silver Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Feb 2012
  Location
  Chennai
  Posts
  25,375

  Re: Today's Medical Info

  ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: மன இறுக்கத்தைப் போக்குங்கள்!

  எனது வயது 34. இரவில் நிறைய நேரம் விழித்திருந்து அலுவலக வேலைகளைச் செய்ய வேண்டிய நிர்பந்தம். உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க நிறைய உடற்பயிற்சியும் செய்கிறேன். மனதில் இறுக்கமான சூழ்நிலையால் வீட்டிலும் அலுவலகத்திலும் மகிழ்ச்சி இல்லாததால் நான் சிரித்துப் பழகக் கூட வாய்ப்பில்லாத இயந்திர வாழ்க்கை வாழ்கிறேன். களைப்பாக இருக்கிறது. என் எதிர்கால ஆரோக்கியம் இதனால் பாழாகுமா?
  -பரணி, சென்னை.


  சில பழக்கங்கள் வரம்புக்கு உட்படும்போது ஆரோக்கியத்தைத் தருகின்றன. வரம்பை மீறும்போது நோய்களைத் தருகின்றன. சரகர் எனும் ஆயுர்வேத முனிவர் உடற்பயிற்சி, சிரிப்பு, பேச்சு, வழிநடத்தல், உடல் உறவு, இரவில் நெடுநேரம் தூக்கமின்றி விழித்திருத்தல் ஆகியவற்றை வரம்புக்கு உட்படுத்த வேண்டிய பழக்கங்கள் என்று கூறுகிறார். இவை அனைத்தும் அளவுக்குட்பட்டிருக்கும் வரை ஆரோக்கிய வாழ்விற்கு இன்றியமையாதவைகளாகின்றன. அளவை மீறும்போது அவையே வாழ்வைக் குலைக்கலாம். வரம்பைப் பகுத்தறிவால் அறிந்து அமைத்துக் கொள்ளக் கூறுகிறார்.

  திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை இயந்திர வாழ்க்கை வாழும் பலரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நல்ல ஓய்வும், நல்ல நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் மனம்விட்டு மகிழ்ச்சியுடன் பேசுவதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொள்வது நலம் தரும். மனம் லேசாவது சிரிப்பினாலும் மகிழ்ச்சியாலும்தான். இயற்கையான சூழலில் நம்மை அறியாமல் நம் மனம் லேசாக பல அரிய வாய்ப்புகள் உண்டு. சிறு குழந்தைகளின் விளையாட்டில் குழந்தையோடு குழந்தையாக மாறப் பழகிக் கொண்டால் முகத்தில் சிரிப்பு தானே தோன்றும்.

  மனம்விட்டுச் சிரிக்கும்போது நுரையீரலிலிருந்து மூச்சுக்காற்று சிறிது தொடர்ந்து அதிக அளவில் அதிக வேகத்தில் வெளியாகிறது. வெளியாகும் வேகத்தில் ஆழ்ந்துள்ள நுரையீரல் கோச அறைகளில் தேங்கியுள்ள அசுத்தக்காற்று வெளிப்படுவதும் அதேவேகத்தில் சுத்தமான காற்று உள்ளே செல்வதும் நாமறியாமல் நிகழ்பவை. அதனால் நீங்கள் தினமும் சில நிமிடங்களாவது சிரிக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொள்ளுதல் அவசியம்.

  களைப்பு நீக்கும் மருந்துகளில் கெடுதி விளைவிக்காதது - நல்லதை நிலைத்திருக்கும்படி தருவது சியவனப்ராசம், தசமூலாரிஷ்டம், அஸ்வகந்தாரிஷ்டம் முதலியவை. பசியைத் தூண்டி உணவைச் செரிக்கச் செய்வதும், உடல் தேய்வை ஈடுசெய்யுமாறு சத்து ஊட்டம் பெற வசதி செய்து தருவது - வில்வாதிலேகியம், ஜீரகவில்வாதி லேகியம், மகாபில்வாதி லேகியம் முதலியன. மன நிம்மதியும் வலிவும் அளிப்பவை - இறைவனின் சிந்தனையும், பிறர் நல்வாழ்வு பெறச் சிந்திப்பதும், அவற்றுக்கான பணிகளில் ஈடுபடுவதும் தசைகளின் இறுக்கத்தைத் தளர்த்தி மன இறுக்கத்தைப் போக்கவல்லவை - அருவிகளில் குளிப்பது, எவ்வகைச் சிந்தனையுமின்றி காலாற நடப்பது, வாரமிருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பது, நல்லெண்ணத்துடன் பழகும் பெரியோர்கள் நண்பர்களுடன் நற்பணிகளில் ஈடுபடுவது போன்றவை.

  வார இறுதி நாட்களில் ஆயுர்வேத மருத்துவமனைகளில் செய்யப்படும் எண்ணெய் தேய்ப்பு, பெட்டியினுள்ளே செலுத்தப்படும் மூலிகை நீராவிக்குளியல், மூக்கினுள் விடப்படும் மூலிகைத் தைலங்களால் தலைப்பகுதியைச் சுத்தப்படுத்திக் கொள்ளுதல், நெற்றியின் மீது தாரையாக விடப்படும் மூலிகை எண்ணெய்கள், தலையில் எண்ணெய்யை நிரப்பி நிறுத்தி வைக்கும் சிரோவஸ்தி சிகிச்சை, ஆசனவாய் வழியாக எண்ணெய் கஷாயம் போன்றவற்றைச் செலுத்தி குடலைச் சுத்தம் செய்து கொள்ளுதல் போன்ற சிகிச்சை முறைகளை சீரான இடைவெளியில் நீங்கள் செய்து வந்தால், உடல் களைப்பு நீங்கி மனமும் இறுக்கம் தளர்ந்து லேசாகும். உங்களுடைய எதிர்கால ஆரோக்கியம் பாழாகாதவாறு இந்த சிகிச்சை முறைகள் உங்களுக்கு உதவிடக்கூடும்.

  (தொடரும்)  "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

 7. #1657
  datchu's Avatar
  datchu is offline Silver Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Feb 2012
  Location
  Chennai
  Posts
  25,375

  Re: Today's Medical Info

  ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: கபம் உருகி வெளியேற...

  எனது வயது 38. பள்ளியில் கணித ஆசிரியராகப் பணி. ஈரக்காற்று, தண்ணீர் மாற்றிக் குடித்தல், இனிப்பு சாப்பிடுதல், மின்விசிறிக் காற்று போன்றவற்றால் தும்மல், மூக்கு, காது அடைப்பு, தொண்டை கரகரப்பு, மூச்சுவிடும்போது விசில் சத்தம், இரவு படுக்கும்போது படபடப்பும் மூக்கும், தொண்டையும் அடைத்துக் கொள்ளுதல் போன்ற உபாதைகள் ஏற்படுகின்றன. இவை குணமாகுமா?
  -த.மு. சிவஞானம், திருப்பத்தூர்.


  தலையிலும் மார்பிலும் தங்கியிருக்கும் கபம் எனும் தோஷமானது நீங்கள் குறிப்பிடும் காரணங்களால் உறைந்துவிடும். உறைந்துவிடும் நிலையில், தலையில் உட்புறங்களில் அடைத்துக் கொள்வதால் மூச்சு விடுவதற்குக் கஷ்டமான நிலை உருவாகிறது. அதை வெளியேற்றுவதற்கு உடல் தும்மலை ஏற்படுத்துகிறது. ஆனாலும் உறைந்த கபம் வெளியேறாமலிருப்பதால் மூச்சுவிடும்போது விசில் சத்தமும் படபடப்பும் ஏற்படுகிறது.

  உறைந்த கபத்தை வெளியேற்ற சூடான வீர்யம் கொண்ட மூலிகை மருந்துகளைப் பொடித்து சூரணம் செய்து தேன் குழைத்துச் சாப்பிட்டால், கபம் உருகி வெளியேறிவிடும். அதற்கான சில மூலிகைகளும் அதன் தயாரிப்பு முறையும் -

  பச்சைக் கற்பூரம், கிராம்பு, ஏலரிசி, இலவங்கப்பட்டை, சிறுநாகப்பூ, ஜாதிக்காய், விலாமிச்சைவேர், சுக்கு, கருஞ்சீரகம், காரகில், மூங்கிலுப்பு, ஜடாமாஞ்சி, அல்லிக்கிழங்கு, திப்பிலி, சந்தனம், அஸரூன், வெட்டிவேர், வால்மிளகு ஆகிய இந்த பதினெட்டு மருந்துகளும் வகைக்கு 10 கிராம், சீனா கல்கண்டு அல்லது சர்க்கரை 90 கிராம், இவற்றில் பச்சைக்கற்பூரத்தையும் கல்கண்டையும் தவிர மற்றவற்றைத் தனியே இடித்து மெல்லிய கண்ணுள்ள சல்லடையில் சலித்துக் கொள்ளவும். பிறகு அந்தத் தூளில் பச்சைக்கற்பூரத்தைத் தூளாக்கிச் சேர்த்து கல்வத்திலிட்டு அரைத்து எல்லாவற்றையும் ஒன்றாகக் கலக்கவும். பிறகு கல்கண்டுத்தூள் அல்லது சர்க்கரை சேர்த்துக் கலந்து கொள்ளவும். பச்சைக்கற்பூரத்திற்குப் பதிலாக சிலர் நாட்டு கட்டிச் சூடத்தைச் சேர்த்துக்கொள்வது வழக்கம்.

  பெரியவர்கள் 1/2 - 1 ஸ்பூன் அளவு எடுத்தால் சூரணத்தின் அளவைவிட ஒரு மடங்கு கூடுதலாகத் தேன் குழைத்து காலை, இரவு உணவிற்குப் பிறகு சாப்பிடலாம். குழந்தைகள் 1 சிட்டிகை முதல் கால் டீ ஸ்பூன் வரை சூரணம் சாப்பிடலாம். அவர்களுக்கும் தேன் ஒரு மடங்கு அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

  மழை பனி நாட்களில் ஏற்படும் சளி உபாதை, நீர்க் கோர்வை, தொண்டைக் கமறல், மார்புச் சளி, இருமல், இடுப்புப்பிடிப்பு, முதுகுப் பிடிப்பு, அஜீரணமான மலப்போக்கு, வாயில் ருசியின்மை, குடல் வலுவிழந்து அடிக்கடி மலம் கட்டியும் இளகியும் மாறி மாறிப் போவது முதலியவற்றுக்கு நல்லது. மூலநோய் வறண்டு வலி கொடுத்தால் இதைச் சாப்பிட்டால் வலி குறையும். சளி வெளியேறாமல் வறண்டு விலாப்புறம் முதுகு, மார்பு, தலை முதலிய இடங்களில் வலியுடன் இருமலுமிருந்தால் நெய் அல்லது பாலுடன் சாப்பிட நல்லது. இந்த சூரணத்திற்குக் "கர்பூராதி சூரணம்' என்றும் பெயருண்டு. ஆயுர்வேத மருந்துக் கடைகளில் கிடைக்கும்.

  ரேவல் சீனிக்கிழங்கு 100 கிராம், வேப்பம்விதை 40 கிராம், சதகுப்பை 20 கிராம், சோம்பு 20 கிராம், கருஞ்சீரகம் 20 கிராம். இந்தச் சரக்குகளை வெயிலில் நன்கு காய வைத்து ஒன்றாக இடித்து சூரணம் செய்து சிறு கண் சல்லடையில் சலித்து சீசாவில் பத்திரப்படுத்தவும். தலையில் நீர்க்கோர்வையினால் ஏற்படும் தலைவலி, நீர்முட்டல், கண்ணீர் கசிதல், சளியினால் காய்ச்சல் முதலிய நிலைகளில் 1 - 2 டீ ஸ்பூன் சூரணத்தைத் தண்ணீருடன் கலந்து இரும்பு அல்லது ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கரண்டியிலிட்டு இளந்தீயில் சூடாக்கி, பொறுக்கும் சூட்டில் நெற்றிப்பொட்டு, நெற்றியிலும் தோல் மூடும்படியான கனத்திற்குப் பற்றுப் போடவும். ஒரு நாளில் இரண்டு முறை போடலாம். மண்டை நீரை வற்ற வைத்து வேதனையைக் குறைத்துவிடும்.

  மாப்பண்டங்கள், புதுஅரிசி, இனிப்புகள், எண்ணெய்ப் பலகாரம், ஐஸ் கலந்த பானங்கள், ஐஸ்கிரீம், தயிர், புலால், குளிர்ந்த தண்ணீர், குளிர்ந்த காற்றில் பயணம், ஜனநெருக்கடியிலும், நீர்த்தேக்கமுள்ள பகுதியில் வசிப்பது, பகலில் படுத்து உறங்குதல் போன்றவற்றை தவிர்க்கவும்.

  (தொடரும்)  "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

 8. #1658
  datchu's Avatar
  datchu is offline Silver Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Feb 2012
  Location
  Chennai
  Posts
  25,375

  Re: Today's Medical Info

  ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: தாய், சேய் நலம் பெற..!

  என் வயது 27. முதல் பிரசவம் ஆகி ஒரு வாரம் தான் ஆகிறது. எந்த வகையான உணவும்,பழக்கவழக்கங்களும் இருந்தால் என் குழந்தையை ஆரோக்கியத்துடன் வளர்க்க முடியும்? குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்த நான் என்ன செய்ய வேண்டும்?
  நளினி, ஆத்தூர்.


  இளம் குழந்தைக்குத் தாய்ப்பால்தான் உத்தம உணவு. தாயின் உணவிலிருந்து தாய்ப்பால் உண்டாகிறது. அதனால் நீங்கள் உண்ணும் உணவு பரிசுத்தமாய், புஷ்டி பலம் நிறைந்ததாக இருந்தால், அதைப் பருகும் சிசு புஷ்டி பலத்துடன் நோயற்று வளரும். சுத்தமான பசுவின் பால், தயிர், மோர், வெண்ணெய், நெய், பழங்கள், தேங்காய், பச்சைக் காய்கறிகள், கீரைகள், உளுந்து, பயறு, நிலக்கடலை, துவரை, மஸர் டால் போன்ற பருப்புகள், புழுங்கலரிசி, கைக்குத்தலரிசி, கோதுமை, கிழங்குகளில் இளம் முள்ளங்கி, கேரட், வெங்காயம், பூண்டு, பால் முதுக்கன் கிழங்கு, தண்ணீர்விட்டான் கிழங்கு போன்றவை உத்தமம். கருணைக்கிழங்கு, சேனைக்கிழங்கு பீட்ரூட் மிதமாய்ச் சாப்பிடலாம். உருளைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு ஆகியவற்றை முடிந்தவரை தவிர்க்கவும். தாய்ப்பாலை வளர்க்கும் கீரைகளில் அம்மான் பச்சரிசிக் கீரையும், காய்களில் பழுத்த பூசணிக்காயும் சிறந்தவை. அடிக்கடி சாப்பிடுவது நல்லது. குடிப்பதற்கு இளநீர் நல்லது. அதன் வழுக்கையும் நல்லதே. மாமிச வகைகளில் வெள்ளாட்டு இறைச்சி சூப்பு உத்தமம், குழந்தைக்கு மூன்று மாதம் ஆகும் வரை நீங்கள் மீன் சாப்பிட வேண்டாம். உப்புக்கண்டம் காய்ந்த கருவாடு, காரமிட்ட வத்தல் போன்றவற்றை எப்போதுமே தவிர்க்கவும்.

  உணவை அதிக அளவிலும் குறிப்பிட்ட நேர அமைப்பு இல்லாமலும் சாப்பிடக் கூடாது. உணவு வகைகளைத் திட்டமிட்டுக் கலந்து, குறிப்பிட்ட நேர அமைப்பில் சாப்பிடவும். உங்களுடைய உடலுக்கும் இளங்குழந்தையின் குடலுக்கும் ஒத்துக் கொள்ளாதவற்றை ஆராய்ந்து பார்த்து ஒதுக்கிடவும்.

  சிலர் குழந்தைக்கு மப்பு தட்டும் என்ற பயத்தில் குறைந்த அளவில் உணவு சாப்பிடுகின்றனர். அது தவறாகும். ஜீரணம், பசி தீவிரமாக மிளகு, திப்பிலி, பெருங்காயம், புளி கூட்டிய வத்தக் குழம்பு சாதமே இரு வேளையும் சாப்பிடுகின்றனர். இந்தப் பழக்கமும் சரியல்ல. தாய் சேய் இருவரின் புஷ்டிக்கு இது குந்தகம் விளைவிக்கும். தாய்க்கு ரத்த மூலக் கடுப்பு, வாய்ப்புண், சோகை போன்ற உபாதைகள் ஏற்பட்டு, தாய்ப்பால் சுண்டும். காபி, டீ குடிப்பதைத் தவிர்க்கவும். அவற்றின் நச்சுத்தன்மை உடலில் சேர்ந்தால் குழந்தைக்கு இதயத்தின் இயங்கும் சக்தி கெட்டுவிடக் கூடும். பிரசவித்த பதினோராவது நாளிலிருந்து கிரமமாய், நல்ல புஷ்டி தரும் உணவை, குழந்தைக்கு மப்பு தட்டாமல் கவனித்துச் சாப்பிடவும்.

  தாய்ப்பாலின் நன்மையும் தீமையும் தாயின் உணவினால் உண்டாகக் கூடியது.

  தாயின் தூய்மையான மனப்பான்மை, பரிசுத்தமான பழக்க வழக்கங்கள் தாய்ப்பாலை தூய்மையாகவும் நன்றாகவும் போஷிக்கச் செய்கின்றன. அந்த வகையில் -

  ஸ்நாதாநுலிப்தா - உடலின் எல்லாப் பகுதிகளையும் தினசரி மஞ்சள் பூசிக் குளித்து, வியர்வையினால் துர்வாடை ஏற்படாமல் பூசிக் கொள்ளுதல், உடல் பூச்சுக்கு சந்தனம், விலாமிச்சம் வேர், பூலாங்கிழங்கு இம்மூன்றையும் வழவழவென சூர்ணம் செய்து உபயோகிப்பது, இந்நாளில் விற்கப்படும் பவுடர்களைப் பார்க்கிலும் நல்லது.

  சுத்தவஸ்த்ரதாரிணீ - சுத்தமான ஆடைகளையே அணிய வேண்டும். தினமும் தண்ணீரில் துவைக்கவும், தோல் வியர்வையை உறிஞ்சவும், பருத்திநூல் ஆடையே அணிவிப்பது நல்லது. பட்டு மற்றும் செயற்கை நூலாடையைத் தவிர்க்கவும்.

  அலங்கிருதா - மெல்லிய, தூய, அழகான ஆடைகளையும், மிதமான அளவில் நகை மற்றும் மலர்களை அணிந்து கொள்ளவும். குழந்தைக்கு தன் ஐம்புலன்களின் வழியாக புலப்படும் இவ்வஸ்துக்களால் இன்பம் ஏற்படும்.

  பிரம்ஹசாரிணி - பிரசவம் முதல் குறைந்தது ஆறு மாதங்கள்வரை உடலுறவைத் தவிர்க்கவும். காம உணர்ச்சிக்கு வசப்படாமலிருந்தால், தாயிடம் சுரக்கும் பால் சிசுவிற்கு நல்ல புஷ்டியளிப்பதாக இருக்கும்.

  இரவில் தூக்கமின்மை ஏற்படும் என்பதால், பகலில் நல்ல ஓய்வும் கொஞ்சம் தூக்கமும் தாய்க்கு அவசியம்.

  மனம் சம்பந்தமான பழக்கங்கள்: நல்லொழுக்கம், சஞ்சல சித்தமில்லாமல் ஒழுக்கத்தில் மனஉறுதி, வீண் சபலமின்றி, பேராசையின்றி கிடைத்தைக் கொண்டு மகிழ்ச்சியுடனிருத்தல், மனக்கெடுதலை ஏற்படுத்தும் சூதாட்டம், புகையிலை தவிர்த்தல், பொறாமை, குழப்பம், தடுமாற்றம், அடங்கா உணர்ச்சி ஆகியவற்றை விலக்குதல், அற்பமான, இழிவான, தாழ்ந்த, கொடுமையான விஷயங்களைத் தவிர்த்தல், மூளைக்கு அதிக சோர்வு தரும் படிப்பு, ஆராய்ச்சி, தொழில், உத்யோகம் இவற்றை சில மாதங்களாவது தவிர்க்க வேண்டும். வீட்டில் சுறுசுறுப்புடன் இருத்தல் நலம். கோபம், பயம், சோகம் மூன்றும் கூடாது. இவை தாய்பாலை குறைத்துவிடும்.

  (தொடரும்)  "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

 9. #1659
  datchu's Avatar
  datchu is offline Silver Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Feb 2012
  Location
  Chennai
  Posts
  25,375

  Re: Today's Medical Info

  ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: அழகாக..!

  என் வயது 25. உடல் எடை அதிகமாக உள்ளது. முகம், கை, கால்களில் ரோமங்கள் உள்ளன. கருப்பான நிறம், முடி குட்டையாகவும், உதிரவும் செய்கிறது. நான் இந்த புதுவருடம் முதல் அழகாக இருக்க விரும்புகிறேன். ஆயுர்வேதத்தில் இதற்கான தீர்வு சொல்லப்பட்டுள்ளதா?
  ஆர்.குட்டி, மதுரை.


  அழகாக இருக்க விரும்பும் நீங்கள் காலை முதல் இரவு வரை செய்ய வேண்டிய சிறப்பான செயல்களை ஆயுர்வேதம் வர்ணித்துள்ள வகையில் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். அதில் முதலாக வைகறைத் துயில் எழு எனும் உபதேசம் முக்கியமானது. சூர்ய உதயத்திலிருந்து முன் ஒரு மணி நேரம் அருணோதயவேளை. அதற்கு முன்னுள்ள ஒரு மணி நேரம் பிரம்ம முகூர்த்தம் எனப்படும். இந்த வேளையில் இயல்பாக மனம் தெளிந்து விருப்பு, வெறுப்பு முதலியவற்றால் கலக்கமில்லாதிருக்கும். இரவின் தன்மையாலும், அமைதியாலும் முன் நாளின் கொந்தளிப்பு அடங்கி, களைப்பு அகன்று தானே பொறிகளும், மனமும் சுறுசுறுப்புடன் விழித்தெழும் வேளை. ஆசை, கோபம், தாபம், சோகம், பயம் போன்ற எண்ண அலைகள் அடங்கி இன்னதென அறியமுடியாத அமைதி நிலவும் வேளை. இந்த வேளையில் நீங்கள் எழுந்து கொள்ள பழகிக் கொள்ள வேண்டும்.

  விழித்தெழுந்ததும் உடன் வாய் கொப்பளித்து அதன் பிறகு மலம், சிறுநீர் கழித்து, பல் துலக்கவும். தசனகாந்தி எனும் பற்பொடியால் பல் துலக்குவது சிறந்தது. அரை கிளாஸ் தண்ணீரில் ஒரு ஸ்பூன் (5 மி.லி) சுத்தமான தேன் கலந்து அதில் சிறிது இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறு கலந்து அந்தக் கலவையைக் குடிக்கவும். இது உடல் பருமனைக் குறைக்க உதவும். அதன் பிறகு அரை, முக்கால் மணிநேரம் நடைப்பயிற்சி பழகவும். நன்றாக வியர்வை வரும்வரை நடந்த பிறகு அந்த வியர்வையை உடலிலேயே நன்றாக தேய்த்துவிடவும். இந்த நடைப்பயிற்சியை காலை வெயில் வந்த பிறகு செய்யவும்.

  குண்டு மஞ்சளை தண்ணீரில் இழைத்து ரோமங்கள் உள்ள பகுதியில் தேய்க்கவும். இரண்டு சொட்டு இளநீர் குழம்பை கண்களில் விட்டுக்கொள்ளவும். குங்குமாதிதைலம் எனும் ஆயுர்வேத சொட்டுமருந்தை மூக்கினுள் இரண்டு, நான்கு சொட்டுகள் விட்டு உறிஞ்சி துப்பிவிடவும். ஏலாதிகேர தைலத்தை முகத்தில் நன்றாக அழுந்தித் தேய்த்துவிடவும். அரிமேதஸ் எனும் தைலத்தை ஒரு ஸ்பூன் (5 மி.லி) வாயினுள் விட்டு நன்றாகக் கொப்பளித்துத் துப்பவும். காதினுள் நான்கைந்து சொட்டு வசாலசுனாதி தைலத்தை வெதுவெதுப்பாக விட்டுக்கொள்ளவும். இவை அனைத்தும் தினமும் செய்யப்படவேண்டிய முறைகளாகும். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் நீலிப்ருங்காதி எனும் தேங்காய் எண்ணெயை பஞ்சில் முக்கி எடுத்து தலையில் ஊறவிடவும். அரை, முக்கால் மணி நேரம் ஊறிய பிறகு வெதுவெதுப்பான நீரில் குளிக்கவும். எண்ணெய்ப் பிசுக்கை அகற்றிக்கொள்ள சீயக்காயுடன் சிறிது கடலை, பயறு, அரிசிமாவு, வெந்தயத்தூள் ஆகியவற்றைக் கலந்து தண்ணீரில் கரைத்து உடலெங்கும் தேய்த்து அலம்பிக் கொள்ளவும். இவற்றின் மூலம் தேவையற்ற ரோமங்கள் நீங்கும், உடலின் கருமை நிறம் குறையும். முடி நன்றாக வளரும். உடல் வனப்பு கூடுவதால் நீங்கள் பார்ப்பதற்கு அழகாகத் தெரிவீர்கள்.

  பெண்மையைப் போற்றி வளர்க்கும் சதாவரீகுலம், பலசர்ப்பிஸ், குமார்யாசவம், தான்வந்திரம் கஷாயம், பலாதைலம், அசோகாரிஷ்டம், புஷ்யானுகம் சூர்ணம் போன்ற ஆயுர்வேத மருந்துகள் உங்களுக்கு நல்ல பலன் தரக்கூடியவை. ஓர் ஆயுர்வேத மருத்துவரை அணுகி இவற்றில் எது உங்களுக்குப் பொருந்துமோ அவற்றை நீங்கள் சாப்பிடலாம். மனதில் கோபதாபங்களுக்கு இடம் தராமல் தக்கப் போக்கிடம் காட்டி அவற்றைத் தவிர்த்து மன அமைதியுடனும், மகிழ்ச்சியுடனும் நீங்கள் வாழக் கற்றுக்கொள்ளவேண்டும். எந்த செயலிலும், விருப்பத்துடனும், ஆர்வத்துடனும் ஈடுபட்டு கருத்தூன்றிச் செய்வதால் மனதின் நிறைவான பலனை பெற்றதற்கான மகிழ்ச்சி ஏற்படும்.

  இரவில் படுக்கும் முன் பல் தேய்த்து, பாதங்களைச் சுத்தப்படுத்தி, சுடுதண்ணீரால் வாய்க் கொப்பளித்து, ஒரு கிளாஸ் (300 மி.லி) வெந்நீரைக் குடித்து கிழக்கு அல்லது தெற்குமுகமாக தலை வைத்து இடது புறம் சரிந்து படுக்கவும். இதனால் இரவில் உண்ட உணவு விரைவில் செரிக்கும். காலையில் புத்துணர்ச்சியுடன் எழுந்துகொள்ளலாம்.

  (தொடரும்)  "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

 10. #1660
  datchu's Avatar
  datchu is offline Silver Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Feb 2012
  Location
  Chennai
  Posts
  25,375

  Re: Today's Medical Info

  ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: வாயுவின் சீற்றமும் மனதில் பயமும்!

  என் வயது 80. ரத்தக்கொதிப்பு உள்ளது. அதற்கு ஆங்கில மாத்திரை உபயோகிக்கிறேன். மூட்டு வலி, கழுத்து வலி, கைகால் வலி உள்ளது. அதற்கு ஆயுர்வேத தைலம் நாராயண தைலம் பயன்படுத்துகிறேன். இரவு சிறுநீர் சராசரி இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை போக வேண்டியுள்ளது. அடிக்கடி பயம் ஏற்படுகிறது. இவை நீங்க ஆயுர்வேத மருந்து உள்ளதா?
  எஸ். சீனிவாசன், சென்னை - 33


  வாயு தோஷத்தின் வறட்சியினால் வயோதிகத்தில் உடலின் நெய்ப்பு எனும் சத்தான பகுதி வறண்டு விடுகிறது. பயிர் செய்ய வேண்டிய நிலம், வறண்ட நிலையில் பல இடங்களில் வெடித்து நிற்பதை வரப்பின் மீது நின்று கொண்டு நீங்கள் பார்த்திருக்கக் கூடும். அதுபோல சத்தான நீர்ப்பகுதியை உங்கள் உடல் இழந்து விட்டதாகத் தெரிகிறது. வயோதிகத்தில் பித்த-கபதோஷங்களால் சூழப்படாத வெறும் வாயுதோஷத்தின் தனியான சீற்றத்தின் பலனாக மூட்டு வலி, கழுத்து வலி, கை,கால் வலி ஏற்பட்டுள்ளது. உடலுக்கு நெய்ப்பைத் தரும் மூலிகை நெய் மருந்துகளில் ஒன்றை, சிறிய அளவில் காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட, குடலில் இந்த நெய்ப்பின் வரவால், உலர்ந்த தாதுக்களை விரைவில் வளர்ச்சியடையச் செய்யும். உடல் பலம், பசித் தீ, பிராண சக்தி ஆகியவற்றையும் அதிகரிக்கச் செய்யும்.

  அதன் பிறகு மூலிகை நீராவியால் உடலைக் குளிப்பாட்ட, உடல் மென்மையான தன்மையை அடையும். உடலின் மென்மையால் வாதநோய்கள் நிலைபெறாது. இப்படி நெய்ப்பும், நீராவி சிகிச்சையும் தொடர்ந்து செய்தால் சில நாட்களிலேயே உடலில் ஏற்படும் குத்து வலி, மூட்டு வலி, தசைப் பிடிப்பு முதலியவை நீங்கி விடும். வாயுவின் சீற்றத்திற்கும் மன பயத்திற்கும் சம்பந்தமுண்டு. வாயுவின் அதிகமான சலன விஷேசத்தால் மனம் மருண்டு போகும். கல்யாணகம், மஹாகல்யாணகம், பஞ்சகவ்யம், ப்ராம்ஹீ போன்ற ஆயுர்வேத நெய் மருந்துகளின் அளவான உள் சேர்க்கையால் வாத தோஷத்தின் கோபத்தை அடக்குவதால் மன பயம் தானாகவே குறைந்துவிடும்.

  வாயுவால் பீடிக்கப்பட்டிருக்கும் நிலையில் கருங்குறிஞ்சி, தேவதாரு மற்றும் சுக்கு ஆகியவற்றை மூலப்பொருளாகக் கொண்டு தயாரிக்கப்படும் சஹசராதி கஷாயத்தை ஐந்து, பத்து சொட்டு க்ஷீரபலா101 எனும் மருந்தைக் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர விருப்பம்போல் விரைவாகவோ, மெதுவாகவோ நடக்க இயலும் என்று அஷ்டாங்கஹ்ருதயம் எனும் ஆயுர்வேதநூல் கூறுகிறது.

  சிறுநீர்ப் பையின் அருகேயுள்ள புரஸ்தோலக்ரந்தியின் வீக்கத்தின் காரணமாக இரவில் அடிக்கடி சிறுநீர் வெளியேறக்கூடும். சிறிது வேப்பெண்ணெய், கடுகெண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் சம அளவில் கலந்து இரும்புக் கரண்டியில் சூடாக்கி சிட்டிகை உப்பிட்டு இளக்கி, வயிற்றின் அடிப்பகுதியில் தேய்த்து அரை முக்கால் மணி நேரம் ஊறிய பிறகு, சூடான தண்ணீரில் குளித்து வர வீக்கம் விரைவில் வடிந்து இரவில் சிறுநீரின் அதிக அளவு போக்கானது குறைந்துவிடும்.

  பொதுவாகவே, வாயுவின் சீற்றம் நாடிநரம்புகளில் வயோதிகத்தில் கூடும் என்பதால் நீங்கள் தலைக்கு க்ஷீரபலா தைலம் வெதுவெதுப்பாகத் தடவி சிறிது நேரம் ஊறிய பிறகு வெந்நீரில் குளித்து வருவது நல்லது. ராஸ்னாதி சூரணத்தை உச்சந் தலையில் தேய்த்து விடவும். அனுவாஸனம் எனும் எண்ணெய் வஸ்தி (எனிமா) சிகிச்சைமுறையை ஆயுர்வேத ஆஸ்பத்திரியில் நீங்கள் செய்து கொண்டால் உடலில் ஏற்பட்டுள்ள உபாதைகள் குறைவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன.

  நெய் கலந்த பருப்பு கஞ்சி, நெய் சேர்த்த பால் சாதம், எள்ளும் அரிசியும் கலந்து தயாரித்த கஞ்சிகள், இனிப்பும் புளிப்பும் உப்பும் விகிதமான அளவில் கலந்த உணவுப் பொருட்கள் நீங்கள் சாப்பிடவேண்டிய உணவு வகைகளில் மேன்மையானவை.

  (தொடரும்)  "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter