பென்சிலின்

பிப்ரவரி 14ம் தேதி காதலர்களின் விசேஷ தினம் என்பதைப் போலவே அறிவியல் வரலாற்றிலும் அது மறக்க முடியாத தினம். ஆம்... 1929ம் ஆண்டு, இதே பிப்ரவரி 14ம் தேதிதான் தொற்றுநோய்களின் தடுப்பு மருந்தான பென்சிலினை அறிமுகப்படுத்தினார் அலெக்ஸாண்டர் ஃப்ளெமிங். ஸ்காட்லாந்தை சேர்ந்த தாவரவியலாளரும், மருந்தியலாளருமான இவர், பென்சிலினை கண்டுபிடித்தது மிகவும் தற்செயலான ஒரு நிகழ்வு!ராணுவத்தில் மருத்துவர் குழுவில் ஒருவராகப் பணியாற்றிய அலெக்ஸாண்டருக்கு, காலம்காலமாக மக்கள் ஏதாவது தொற்றுநோய்க்கு ஆளாகி கூட்டம் கூட்டமாக இறப்பதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

நோய்த்தொற்றை உருவாக்கும் கிருமிகளை அழித்துவிட்டால் இதுபோன்ற பேரழிவுகளில் இருந்து மக்களைக் காப்பாற்றிவிட முடியும் என்று நம்பினார். முதல் உலகப்போர் நடைபெற்ற 1914ம் ஆண்டில் சிகிச்சை அளித்தும் நிறைய போர்வீரர்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டால் உயிரிழந்ததைப் பார்த்த பிறகு, தன் ஆய்வைத் தீவிரமாக்கினார். ஆனாலும் அவரால் தெளிவான முடிவுக்கு வர முடியவில்லை.

1928ல், லண்டனில் உள்ள செயின்ட் மேரி மருத்துவமனையில் ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தார் ஃப்ளெமிங். சில நாட்கள் தன்னுடைய ஆய்வை நிறுத்திவிட்டு, மீண்டும் ஒருநாள் ஆய்வுக்கூடத்துக்கு வந்திருந்தபோது உணவுப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த மூடப்படாத ஒரு தட்டில் பூஞ்சைகள் படிந்திருந்ததைக் கண்டார்.

சாதாரண மனிதராக இருந்தால் உணவு கெட்டுப் போய்விட்டது என்று குப்பையில் கொட்டியிருப்பார்கள். விஞ்ஞான மூளை சும்மா இருக்குமா? இது என்னவாக இருக்கும் என்று பூஞ்சை படிந்த இடத்தையும், அதைச் சுற்றியிருந்த இடங்களையும் கவனித்தார். பூஞ்சைகள் படிந்திருந்த இடங்களில் மட்டும் நுண்கிருமிகள் அழிக்கப்பட்டு, மற்ற இடங்களில் நுண்கிருமிகள் உயிரோடு இருந்தது தெரிய வந்தது.

அது எந்த வகை பூஞ்சை என்பதைத் தேடினார். ஜன்னலுக்கு வெளியே பென்சிலியம் நொடேடம் (Penicilium notatum) என்ற ஒருவகை செடியிலிருந்து அந்தப் பூஞ்சைகள் பறந்து வந்திருந்தன. அந்தச் செடியை ஆய்வு செய்தபோது நோய்த்தொற்று கிருமிகளை அழிக்கும் ஆற்றல் பென்சிலியம் பூஞ்சைக்கு இருந்ததை உறுதிப்படுத்தினார்.

பென்சிலின் என்றே பெயர் வைத்து அந்தப் பூஞ்சையிலிருந்து மருந்தைத் தயாரித்தார். உலகமெங்கும் கோடிக்கணக் கான மக்களின் உயிரை இன்றும் காப்பாற்றிக் கொண்டிருக்கும் பென்சிலின் கண்டுபிடிப்புக்காக, 1945ம் ஆண்டு அலெக்ஸாண்டர் ஃப்ளெமிங்குக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இன்றும் பல ஆன்டிபயாடிக் கண்டுபிடிப்புகளுக்கு அடிப்படையாக இருப்பது பென்சிலின்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி சக விஞ்ஞானி ஒருவர், என்னுடைய ஆய்வுக்கூடம் எத்தனை சுத்தமாக இருக்கிறது. நீங்களும் அதைப் போல் பராமரித்திருந்தால் நீங்கள் இன்னும் பெரிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியிருப்பீர்களே? என்று கேட்டார்.அதற்குப் பதிலளித்த அலெக்ஸாண்டர் ஃப்ளெமிங், பெரிய கண்டுபிடிப்புகள் நிகழ்ந்திருக்குமா என்று தெரியாது. ஆனால், சுற்றிலும் அடைத்து வைக்கப்பட்டிருந்த சுகாதாரமான ஆய்வுக்கூடமாக இருந்திருந்தால் என்னால் பென்சிலினை கண்டுபிடித்திருக்கவே முடியாது என்றார் புன்னகையுடன்!


Similar Threads: