புலிமியா நெர்வோசா
விலை கொடுத்து வாங்குகிற வம்பு!
ஒரு பக்கம் பருமனைப் பற்றிக் கவலைப்படாமல் நாளொரு மேனியும் பொழுதொரு கிலோவுமாக எடை எகிறிக் கொண்டிருக்கிற இளம் பெண்கள்... இன்னொரு பக்கம் பாலிவுட், கோலிவுட் ஹீரோயின்களை பார்த்து அவர்களைப் போலவே ‘ஒல்லி பெல்லி’யாக வலம் வர ஆசைப்படுகிற இளம் பெண்கள்...பருமனின் பின்னணியிலாவது பல காரணங்களை அடுக்கலாம். ‘ஒல்லி பெல்லி’ உடம்பு அதுவாக உருவாவதில்லை. தாமே வலியச் சென்று விலை கொடுத்து வாங்குகிற வம்பு!


பட்டினி கிடப்பதில் தொடங்கி, பஞ்சை விழுங்குவது வரை ஒல்லிக் குச்சி உடம்புக்கு எதையெல்லாமோ முயற்சி செய்கிறார்கள் இன்றைய பெண்கள். அவற்றில் முக்கியமான ‘புலிமியா நெர்வோசா’ பற்றிப் பேசுகிறார் மருத்துவர் நிவேதிதா.‘‘புலிமியா என்பது ஒருவகையான உண்ணும் ஒழுங்கீனம். இதனால் பாதிக்கப்படுகிறவர்களில் பெண்களுக்கே முதலிடம். இவர்களது உணவு ஒழுங்கீனத்தின் பின்னணியில் உடல் மற்றும் மன ரீதியான காரணங்கள், சமூக எதிர்பார்ப்புகள் என எத்தனையோ விஷயங்கள் இருக்கலாம்.

புலிமியா பார்ட்டிகளுக்கு எடை குறைக்க வேண்டும் என்கிற ஆர்வமும் இருக்கும். அதே நேரம் உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி போன்றவற்றை முறையாகப் பின்பற்றாமல், குறுக்கு வழியைத் தேடுபவர்கள். எடையைக் குறைத்து மெலிந்து காணப்பட வேண்டும் என்ற ஆசைக்கும், அதிகம் உண்ணக் கட்டாயப்படுத்தப்படுவதற்கும் இடையிலேயான வாழ்க்கைப் போராட்டம் இவர்களுடையது. வாயைக் கட்ட முடியாமல் அதிகமாக சாப்பிடுவார்கள்.

பிறகு அந்த உணவின் மூலம் உடலுக்குள் போன அதிகப்படியான கலோரிகளை ஆரோக்கியமற்ற முறையில் வெளியேற்ற முனைவார்கள். புலிமியாவில் 2 வகை உண்டு. முதல் வகையான Purging bulimiaவில் சாப்பிட்டதும் வாந்தியைத் தூண்டுவது, பேதி மருந்து எடுத்துக் கொள்வது, எனிமா கொடுத்துக் கொள்வது போன்றவற்றைச் செய்வார்கள். இரண்டாவது வகையான Nonpurging bulimiaவில் விரதமிருப்பது, அளவுக்கு அதிகமாக டயட் மற்றும் உடற்பயிற்சி செய்வது போன்றவை அடக்கம்.

உங்களுக்கு புலிமியா இருக்கிறதா? சில அறிகுறிகள்...

*எந்நேரமும் உடல் வடிவத்தையும் எடையையும் குறித்தே யோசிப்பது.

*எடை கூடி விடுமோ என பயப்படுவது.

*உணவுப் பழக்கத்தைக் கட்டுப்படுத்தவே முடியாது என்கிற பயம்.

*கொஞ்சம் கொஞ்சமாக, சின்னச் சின்ன இடைவேளைகளில் உண்பதற்குப் பதிலாக ஒரே வேளையில் அளவுக்கு மீறி உண்பது.

*வாந்தி எடுக்கவோ, அளவுக்கு மீறி உடற்பயிற்சி செய்யவோ தன்னைத் தானே வற்புறுத்திக் கொள்வது.

*சாப்பிட்ட உடன் பேதி மருந்து எடுத்துக் கொள்வது.

*எடைக் குறைப்புக்காக சப்ளிமென்ட்டுகளையும் செயற்கை உணவுகளையும் முயற்சி செய்வது.

புலிமியா பாதித்தவர்களுக்கு எடை மற்றும் உடல் வடிவம் குறித்த கவனம் மனதுக்குள் ஓடிக்கொண்டே இருக்கும். ஆனாலும், அவர்கள் பார்வைக்கு சாதாரண எடை உள்ளவர்களாக அல்லது சராசரியைவிட சற்றே அதிக எடை கொண்டவர்களாக இருப்பதால், குடும்பத்தாரால் அவர்களது பிரச்னையை அடையாளம் காண முடியாது. எனவே பெற்றோருக்கும் சில டிப்ஸ்...

*உங்கள் பிள்ளைகள் எப்போதும் தன் எடையைப் பற்றியே பேசுவதும் கவலைப்படுவதுமாக இருக்கிறார்களா?

*அதிக கொழுப்பு மற்றும் இனிப்பு சேர்த்த உணவுகளை அதிகமாக உண்கிறார்களா?

*மற்றவர்கள் முன்னிலையில் உண்பதைத் தவிர்க்கிறார்களா?

*சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதோ அல்லது சாப்பிட்டு முடித்த உடனேயோ கழிவறைக்கு விரைகிறார்களா?

*உணவு சாப்பிட்டதும் தாழ்வு மனப்பான்மைக்குத் தள்ளப்படுகிறார்களா? வெட்கமும் குற்ற உணர்ச்சியும் தலைதூக்குகிறதா?

மேற்குறிப்பிட்ட அறிகுறிகளை அந்த வயதுக்குரிய விஷயங்களாக நினைத்து பெற்றோர் அலட்சியம் செய்யக்கூடாது. பிள்ளைகளுடன் பேசி, தேவைப்பட்டால் மருத்துவ ஆலோசனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். புலிமியா பயங்கரங்கள் அடுத்த இதழிலும்...

புலிமியா பாதித்தவர்களுக்கு எடை மற்றும் உடல் வடிவம் குறித்த கவனம் மனதுக்குள் ஓடிக்கொண்டே இருக்கும்.


Similar Threads: