ஸ்டெதஸ்கோப்

நோய்களுக்கு எதிரான போராட்டத்தில் மருந்து மாத்திரைகளையும் தாண்டி, ஸ்டெதஸ்கோப்பின் கண்டுபிடிப்பு மிக முக்கியமான திருப்புமுனை! என்ன பிரச்னை என்று புரிந்துகொள்ள முடிந்தாலே பாதிக்கிணறு தாண்டிய மாதிரிதான். ஸ்டெதஸ்கோப் விஷயத்தில் மருத்துவர்களுக்குப் பெரிதும் உதவி செய்தது இந்த பாதிக்கிணறு ஃபார்முலாதான்.


இதயத்துடிப்பு, நுரையீரலின் அசைவுகள் போன்றவை ஆரோக்கியத்தை வெளிப்படுத்தும் காரணிகளாக இருப்பதைப் புரிந்துகொண்ட மருத்துவர்கள், நோயாளியின் மார்புப் பகுதியில் காது கொடுத்துக் கேட்டு சிகிச்சை அளிக்க ஆரம்பித்தார்கள். 18ம் நூற்றாண்டு வரை இதுதான் நடைமுறையில் இருந்தது.

1816ல், கிரேக்க மருத்துவரான ரெனி லேனக், சிகிச்சைக்கு வந்த இளம்பெண் ஒருவரை பரிசோதித்தபோது இந்த முறையை மாற்றினார். ஒரு காகித அட்டையை சுருட்டி நெஞ்சில் வைத்து அதன் மறுமுனையைக் காதில் வைத்துக் கேட்டபோது, உள்ளுறுப்புகளின் சத்தம் கேட்டது.

இதன் தொடர்ச்சியாக, ஒரு சிறுவன் காகிதத்தை சுருட்டி வைத்து ஒரு பக்கம் ஹோவென சத்தமிட, அதன் மறுபகுதியில் அந்த சத்தத்தைக் கேட்டு இன்னொரு குட்டிப் பையன் சிரித்துக் கொண்டிருப்பதையும் பார்த்தார் லேனக். உடனே சுறுசுறுப்பானது லேனக்கின் மூளை. ஸ்டெதஸ்கோப்புக்குப் பிள்ளையார் சுழி விழுந்தது இங்கேதான்.


மர உருளையையும், மறுபக்கத்தில் காதில் கேட்கும் வகையில் டிரம்பெட் இசைக்கருவி வடிவத்திலும் இணைத்து ஒரு கருவியை உருவாக்கினார். இதுதான் ஸ்டெதஸ்கோப்பின் முதல் மாடல். இது கிட்டத்தட்ட நம்மூர் நாதஸ்வரம் வடிவத்தில்தான் இருந்தது.இதன் மூலம் நோயாளிகளின் மார்பில் காதை வைத்துக் கேட்பதில் இருந்த சங்கடங்களில் இருந்து விடுதலை கிடைத்தது.

நெஞ்சுப் பகுதியை பரிசோதனை செய்யும் கருவி என்ற அர்த்தத்தில் ஸ்டெதஸ்கோப் என்ற பெயர் சூட்டினார் லேனக். கிரேக்கத்தில் ஸ்டெதேஸ் என்ற வார்த்தை மார்பையும், கோப் என்ற வார்த்தை பரிசோதனையையும் குறிக்கிறது.

லேனக்கின் கண்டுபிடிப்பைப் பார்த்து, மற்ற மருத்துவர்களும் ஸ்டெதஸ்கோப்பைப் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். இரண்டு காது இருக்கும்போது ஒரு காதில்தான் கேட்டாக வேண்டுமா என்று யோசித்த அயர்லாந்து மருத்துவர் ஆர்தர் லியர்ட், இரண்டு பக்கமும் காதில் கேட்கிற வகையில் அதை மாற்றி வடிவமைத்தார்.

இதற்கும் அமோக வரவேற்பு. ஃபைனல் டச் கொடுத்தார் அமெரிக்க மருத்துவர் ஜார்ஜ் சமான். இப்போது மருத்துவர்கள் கோட்டுக்கு மேல் ஸ்டைலாகப் போட்டுக் கொண்டிருக்கும் நவீன ஸ்டெதஸ்கோப்பை வடிவமைத்தது அவர்தான். வடிவமைத்ததோடு உலகம் முழுவதும் அதை வெற்றிகரமான வியாபாரமாகவும் ஆக்கியதும் ஜார்ஜ்தான்!


Similar Threads: