பெண்களுக்கு கொழுப்பு சிக்கலை ஏற்படுத்துமா?ஆண்களுக்குத் தொப்புள் பகுதியில் கொழுப்பு சேருவது ஆபத்தான விஷயம். ஆனால், பெண்களுக்குப் பிட்டத்திலும் தொடையிலும் சேருவதால் பெரிய தீங்கேதும் ஏற்படாது. சில பேருக்குக் கால்களில் ரத்தக் குழாய்கள் பெருத்து முண்டும் முடிச்சுமாகத் தெரியலாம்.

பெண்களின் உடலில் பிட்டத்திலும் தொடைகளிலும் தோலுக்குச் சற்றுக் கீழே மட்டுமே கொழுப்பு திரளும். ஆனால் ஆண்களின் தொப்பையில் கொழுப்பு அடி வயிற்றுப் புழையிலும் சிறுகுடல் பகுதியிலும் திரளும். தோலின் அடியில் திரளும் கொழுப்பு கொஞ்சம்தான். தொப்புளுக்கு அருகில் கட்டை விரலையும் ஆள்காட்டி விரலையும் பயன்படுத்திக் கிள்ளிப் பார்க்கிறபோது ஒரு அங்குலத் தடிமனுக்கு மேல் சதை சிக்கினால் கொழுப்பு ஏறிவிட்டதாக அர்த்தம்.

இதயக் கோளாறுகள், ரத்தக் குழாய் அடைப்பு, நீரிழிவு போன்றவை தாக்கும் வாய்ப்புகளைக் கண்டறிய நேராக நின்றுகொண்டு தொப்புள் மட்டத்தில் இடுப்புச் சுற்றளவையும், பிட்டங்கள் பெருத்திருக்கிற இடத்தின் சுற்றளவையும் அளக்க வேண்டும். இடுப்புச் சுற்றளவைப் பிட்டச் சுற்றளவால் வகுத்தால் இடுப்பு-பிட்டத் தகவு என்ற எண் கிடைக்கும்.

ஆண்களுக்கு இது அதிகபட்சமாக 0.85 முதல் 0.9 வரை இருக்கலாம். பெண்களுக்கு அதிகபட்சமாக 0.75 முதல் 0.8 வரை இருக்கலாம். இந்த உச்சவரம்புகளைவிடக் குறைவாயிருப்பதே நல்லது. உச்சவரம்பை மீறினால் உபத்திரவம்தான். வயிறு முழுக்க பெண்களுக்கு இடுப்பைச் சுற்றிக் கொழுப்பு சேர்ந்தாலும் அதேநேரம் பிட்டத்திலும் சேர்ந்து பிட்டம் பெருத்துவிடுவதால் இடுப்பு-பிட்டத் தகவு அதிகமாகாது.

பெண்களின் தோலுக்கும் தசைச் சுவருக்கும் இடையில்தான் கொழுப்பு அதிகமாகச் சேரும். பல பெண்களுக்கு எவ்வளவு முயன்றாலும் பிட்டங்களும் தொடைகளும் இளைக்காது. அவ்விடங்களில் உள்ள கொழுப்பு செல்கள் விடாப்பிடியானவை. தாய்மையுற்றுச் சிசுவுக்குப் பாலூட்டும்போது மட்டுமே பால் உற்பத்திக்காகத் தமது கொழுப்பு அமிலங்களைத் தந்து உதவும். சிசுக்களின் பாதுகாப்புக்காக இயற்கை, இம்மாதிரி ஓர் ஏற்பாட்டைச் செய்துள்ளது.

ஊட்டப் பற்றாக்குறை காரணமாகத் தாயின் உடலில் கொழுப்பு இருப்பு குறைந்து, பாலிலும் சத்து குறைகிற நிலை ஏற்படுமானால் பிட்டங்களிலும் தொடைகளிலுமுள்ள செல்களிலிருந்து கொழுப்பு அமிலங்கள் விடுவிக்கப்பட்டுச் சத்துக் குறைபாட்டை ஈடுசெய்கிறது. எனவே, பெண்களைப் பொறுத்தவரை கொழுப்பு என்பது மிகப் பெரிய சிக்கல்களை ஏற்படுத்துவதில்லை.

ஆனால், ஆண்கள் கவனமாக இருக்க வேண்டும். இதயம், நீரிழிவு சார்ந்த நோய்கள் அவர்களை அதிகம் தாக்க வாய்ப்புள்ளது என்பதைக் கவனத்தில்கொண்டு செயல்பட வேண்டும்.


Similar Threads: