மஞ்சள் காமாலை வரக்காரணம்
ஒருவருக்கு `மஞ்சள் காமாலை' என்றால் வாந்தி, குமட்டல், பசியின்மை, உடல் சோர்வு, வயிற்றின் வலதுபக்க மேல்பாகத்தில் வலி, மூட்டுவலி, வயிறுவீக்கம், காய்ச்சல், ரத்தக்கசிவு என ஒன்பது விதமான அறிகுறிகள் காணப்படும். கண்ணின் வெள்ளைப்படலத்திலும், நாக்கின் அடிப்பகுதியிலும் மஞ்சளாக இருக்கும்.

உடலும் மெலிந்து காணப்படும். மஞ்சள் காமாலை என்பது அடைப்புக் காமாலை என்றும், அடைப்பில்லா காமாலை என்றும் இருவகைப்படும். அடைப்புக் காமாலையில் கணைய கோளாறு, பித்தக்குழாய் கற்கள், பித்தக்குழாய் புற்றுநோய் என்ற மூன்று உட்பிரிவும், அடைப்பில்லா காமாலையில் வைரஸ் கிருமிகள் (A,B,C,D,G,E) மதுபானம் பேக்டீரியாக்கள் (டைபாய்டு காய்ச்சல்), மலேரியா என்ற ஒட்டுண்ணிகள், சில்லறை மருந்துகள், மதுபானம் அருந்துவதால் ஏற்படுகிறது.

கொழுப்புச் சத்துள்ள உணவை நாம் உட்கொள்ளும்போது அதை ஜீரணிப்பதற்காக கல்லீரல் பித்தநீரை சுரக்கிறது. இந்த நீர் பித்தபைக்கு குழாய் மூலம் வருகிறது. இந்த பித்தக்குழாயில் கல் மற்றும் கேன்சர் (Cancer) கட்டிகளாய் அடைப்பு ஏற்படலாம். அப்படி அடைப்பு ஏற்பட்டால் பித்தநீர் கல்லீரலிலேயே தேங்கி ரத்தத்தில் கலந்துவிடுகிறது.

இதனால் மஞ்சள் காமாலை ஏற்படுகிறது. இது அடைப்பு காமாலை எனப்படுகிறது. கல்லீரலை தாக்கும் A,B,C,D,E,G என்ற பலவகையான வைரஸ்களாலும் மஞ்சள் காமாலை ஏற்படலாம். மலேரியா காய்ச்சல், டைபாய்டு காய்ச்சல் வந்தாலும் கல்லீரல் பாதிக்கப்பட்டு மஞ்சள் காமாலை வரலாம். மதுபானங்கள் அருந்துவதன் மூலமாகவும் மஞ்சள் காமாலை நேரிடலாம்.