மருத்துவக் காப்பீடு அவசியமா?


மருத்துவச் செலவுகள் சமீபகாலமாக எக்கச்சக்கமாக அதிகரித்து வருகிறன. இந்த மருத்துவச் செலவுகளில் இருந்து நம்மைக் காப்பாற்றும் கவசமாக மருத்துவக் காப்பீடு உள்ளது. உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் மருத்துவக் காப்பீடு பெற்றிருப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கிறது.

மருத்துவச் செலவுகளை சமாளிக்கும் விதம் குறித்து முன்கூட்டியே திட்டமிடாமல், திடீரென அது ஏற்படும்போது, முடிந்த விதங்களில் எல்லாம் கடன் வாங்கியும், சொத்துகளை விற்றும் செலவழிப்பவர்கள்தான் அதிகம். பொழுதுபோக்குகள், தேவையற்ற ஆடம்பரங்கள் என்று எவ்வளவோ செலவழிக்கும் நாம், மருத்துவக் காப்பீடு போன்ற அத்தியாவசிய விஷயங்களில் மட்டும் அதி சிக்கனக்காரர்களாக ஆகிவிடுகிறோம். உண்மையில் மருத்துவக் காப்பீடு ஏன் அவசியம் என்பது குறித்த விவரங்களைப் பார்க்கலாம்...

வாழ்க்கை முறை மாற்றம்:

முந்தைய தலைமுறையினர் மாதிரி நமது இன்றைய வாழ்க்கை முறை இல்லை. வாழ்க்கை வசதிகள் அதிகரித்திருக்கும் அதேநேரம், மனரீதியான நெருக்கடிகளும் கூடியிருக்கின்றன. பலரும், வேலைப் பளு, பிற அன்றாட நெருக்கடிகள் காரணமாக ஏற்படும் மன அழுத்தத்தால் தவிக்கின்றனர். ஒழுங்கற்ற அல்லது நீண்ட நேரவேலை, உடற்பயிற்சி, உடல் செயல்பாடுகள் குறைவு, சரியான உணவு பழக்கம் இல்லாதது, சாப்பிடும் உணவுகளிலும் கலந்திருக்கும் வேதி நஞ்சுகள் போன்றவை உடல் நலத்துக்கு தீங்கு விளைவிப்பவையாக உள்ளன. இதெல்லாம் இன்று ஏறக்குறைய அனைவருமே சந்திக்கும் விஷயங்கள் என்பதால், மருத்துவக் காப்பீடு அவசியம்.

மாறும் நோய்தன்மை:

தொற்று நோய்கள் தற்போது வெகுவாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. அல்லது முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளன. ஆனால் அதேவேளையில், உடல் பருமன், இதயக் கோளாறு, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் ஆகிய பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. ஆய்வு முடிவுகளின்படி, இன்று நூறில் 18 பேருக்கு உயர் ரத்த அழுத்தம் உள்ளது. இதனால் நரம்பு, இதயக் கோளாறுகள் ஏற்படுகின்றன. அதிலும் 30 சதவிகிதம் பேருக்கு மாரடைப்பு வருகிறது என்றும், சர்க்கரை நோய் பாதிப்பு அதிகமாக இருக்கிறது என்றும் தெரிவிக்கப்படுகிறது. அதனால் மருத்துவ காப்பீடு அவசியமாகிறது.

அதிகரிக்கும் செலவுகள்:

இன்று தொழில்நுட்ப வசதிகளும், மற்ற அறிவியல் வளர்ச்சிகளும் உச்சத்தை எட்டியுள்ளன. அதனால், நோய் கண்டறியும் முறை துவங்கி அதன் தன்மையை ஆராய்வது வரை அனைத்துக்கும் கட்டணம் கூடியுள்ளது. இந்தக் கட்டணங்களைச் சமாளிக்க கடன் வாங்க வேண்டிய அல்லது சொத்துகளை விற்க வேண்டிய நிலைக்கு பலரும் தள்ளப்பட்டுள்ளனர். அந்த நிலையைத் தவிர்க்க மருத்துவக் காப்பீடு உதவும்.

மறைமுகச் செலவுகள்:

பிரதான மருத்துவச் செலவுகள் மட்டுமின்றி, அதையட்டிய பிற செலவுகளும் கூடியிருக்கின்றன. மருத்துவச் சிகிச்சை பெற ஓர் ஊருக்குச் சென்று தங்கியிருக்கும் செலவு, பயணச் செலவு, நோய்ப் பாதிப்பு காலத்தில் ஒருவருக்கு ஏற்படும் சம்பள இழப்பு ஆகியவற்றை சமாளிக்கவும் மருத்துவக் காப்பீடு தேவை. மொத்த மருத்துவச் செலவில் இதுபோன்ற மறைமுக மருத்துவச் செலவுகள் 35 சதவீதமாக உள்ளன என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.

திட்டமிடத் தவறுவது:

நம்மில் பலரும் வீடு கட்டவும், வாகனம் வாங்கவும், ஓய்வு காலத்துக்கும் திட்டமிடுகிறோமே தவிர, உடல்நலத்துக்காக திட்டமிடுவதில்லை. ‘அதற்கு ஏன் அலட்டிக்கொள்ள வேண்டும், உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டால் பார்த்துக்கொள்வோம்’ என்று கருதுகிறோம். ஆனால் அதுபோன்ற நிலை ஏற்படும்போது, வழக்கமான செலவுகளும் வரிசை கட்டி நிற்பதால் நம்மால் சமாளிக்க முடியாமல் தடுமாறிப் போகிறோம். எனவே மருத்துவக் காப்பீடு மிகவும் அத்தியாவசியமாகிறது.

விபத்து மற்றும் உடல் நலக்குறைவுக்கு மட்டுமின்றி மருத்துவச் சிகிச்சைக்கு முந்தைய, பிந்தைய செலவுகள், அவசரகால ஊர்திச் செலவு போன்றவற்றுக்கும் மருத்துவக் காப்பீடு கை கொடுக்கும். இன்று நாம் ஒவ்வொருவரும் ஆரோக்கியத்தில் மிகவும் கவனம் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளோம். ஒவ்வொருவரையும் சார்ந்து ஒரு குடும்பம் இருப்பதால், அவர்கள் நலனையும் கருத்தில்கொண்டு மருத்துவக் காப்பீடு பெறுவது அவசர, அவசியம்!

Similar Threads: