உதவி செய்யப் போனால் உபத்திரவம் வராது!

நம்பிக்கை தரும் புதிய விதி

‘‘என்னது? ரோட்டுல அடிபட்டுக் கிடக்குறவங்களுக்கு உதவுறதா? நமக்கு எதுக்குப்பா வம்பு? இடிச்சிட்டுப் போனவனை விட்டுட்டு போலீஸ் நம்மளைப் பிடிச்சுக்குவாங்க. கோர்ட்டு, விசாரணைன்னு நிம்மதி போயிரும்பா!’’ - இந்த டயலாக் இந்தியாவில் ‘ஜனகணமன’வை விட அதிகம் வழக்கில் உள்ளது. இதனால்தான் இங்கே விபத்தில் சிக்கியவர் உயிருக்காகத் துடிக்க, ஆளாளுக்கு அவரவர் வேலைக்குப் பறக்கிறோம்.

இந்த நிலைமை இனி இல்லை. ‘சாலை விபத்தில் உதவுகிறவர்களிடம் யாரும் எதையும் கேட்கக் கூடாது!’ என ஆறுதல் தந்திருக்கிறது மத்திய அரசின் சாலை மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் வழிகாட்டுதல் விதி ஒன்று. ‘‘இந்தியாவில் மட்டும் 2.3 நிமிடத்தில் ஒருவர் சாலை விபத்தில் இறப்பதாகச் சொல்கிறார்கள். விபத்து நேர்ந்த கணத்தில் இருந்து உயிர் காக்க மருத்துவமனைக்குப் போகும் அந்த இடைப்பட்ட நேரத்தை கோல்டன் ஹவர் என்பார்கள்.

யார் உதவுவது என்ற தயக்கத்தில் இந்த பொன்னான நேரம் வீணடிக்கப்படுகிறது. காயத்தால் இறப்பவர்களை விட இந்தத் தாமதத்தால் இறப்பவர்களே அதிகம். அப்படியிருக்கும் போது இந்த மாதிரி ஒரு விதி அத்தியாவசியம்!’’ என்கிறார், சாலை விழிப்புணர்வுக்காக இயங்கும் ‘தோழன்’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன். இந்தப் புதிய மாற்றத்தின் முக்கியத்துவங்களை மேலும் அடுக்குகிறார் அவர்.

‘‘டெல்லியில் உள்ள சேவ் லைஃப் ஃபவுண்டேஷன் எனும் சாலை விழிப்புணர்வு அமைப்புதான் பல வருடங்களாக இதற்காகப் போராடி வந்திருக்கிறது. விபத்தில் உதவ முன்வருகிறவர்களுக்கு பாராட்டு கிடைக்கவில்லை என்றாலும் சங்கடம் எதுவும் நேரக் கூடாது என்ற நியாயமான கோரிக்கையைத்தான் விதிகளாக்கி அதை மக்கள் சார்பாக நாடாளுமன்ற கவனத்துக்குக் கொண்டு சென்றது இந்த அமைப்பு.

நாடாளுமன்றம் உச்சநீதிமன்றத்திடம் கருத்துக் கேட்க, ஏற்கெனவே இருக்கும் மோட்டார் வாகனச் சட்டத்தின் விதிகளில் இந்த விதிகளையும் சேர்த்துக்கொள்ளும்படி பரிந்துரைத்தது அது. மத்திய அரசு நாடாளுமன்றத்தில் வழிகாட்டு நெறி எனும் அடிப்படையில் இந்த விதிகளை ஏற்றுக்கொண்டதால் இனிமேல் இது போன்ற விபத்துகளில் உதவும் நபர்களுக்கு காவல்துறையாலோ, மருத்துவமனைகளாலோ அல்லது நீதிமன்றங்களாலோ தொல்லை இருக்காது!’’ என்கிறவர், ‘தொல்லை’ எனும் அந்த வார்த்தையை மேலும் உட்சென்று பார்க்கிறார்.

‘‘பொதுவாக சாலை விபத்தில் ஒருவர் பாதிக்கப்படும்போது அது இயற்கையாக ஏற்பட்ட விபத்தா, இல்லை சாலை விதிகளை மீறி நிகழ்ந்ததா, இல்லை கொலை முயற்சியா என்பதையெல்லாம் விசாரிப்பது காவல்துறையின் கடமை. இதற்காக அவர்கள் சாட்சிகளைத் தேடி அலைவதும் இயல்பு. இந்த இடத்தில்தான் சிக்குகிறார்கள் உதவப் போகிறவர்கள்.

விபத்துக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லாத அவரையே ஒரு கட்டத்தில் சந்தேகப்படும் அளவுக்குக் கொண்டுபோய்விடுகிறது இந்த விசாரணை. ஆனால், நிதர்சனமாய்ப் பார்த்தால் விபத்து ஏற்படுத்தியவரே ஒருவரை மருத்துவமனைக்கு அழைத்து வருவதெல்லாம் ஒரு சதவீதத்துக்கும் குறைவாகத்தான் நடக்கும். அந்த ஒரு சதவீதத்துக்காக மீதமிருக்கும் 99 சதவீதத்தினரின் உதவும் மனப்பான்மையை நோகடிக்கக் கூடாது. இதுதான் இந்தப் புதிய விதிகளின் சாரம்.

இந்த விதிகளின்படி உதவி செய்பவரின் பெயர், முகவரி அல்லது தொலைபேசி எண் போன்ற விவரங்களை அரசு அதிகாரிகளோ அல்லது மருத்துவமனைகளோ கட்டாயப்படுத்தி வாங்கக் கூடாது. அதே போல் பாதிக்கப்பட்டவரை மருத்துவமனையில் சேர்க்கும் நல்லவர்களிடம் மருத்துவமனைகள் பணம் கேட்டு நிர்ப்பந்திக்கக் கூடாது என்றும், சேர்க்கிறவரின் விவரங்களைக் கேட்பது கூட அவசியமில்லை என்றும் சொல்கிறது இந்த விதி.

அந்த விபத்து தொடர்பான நீதிமன்ற விசாரணையின் போது கூட உதவியவர் ஒருமுறைதான் அழைக்கப்பட வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த விசாரணையும் ஒரு மாத காலத்துக்குள் நடக்க வேண்டும் என்றும் கெடு விதிக்கப்பட்டுள்ளது. இது எல்லாமே பழைய பாணியிலான தொல்லைகளுக்கு முடிவு கட்டும்.

உதவ வருபவர், தன்னைப் பற்றிய தகவல்களைத் தர விரும்பவில்லை எனில் தரவேண்டிய அவசியம் இல்லை!மனிதாபிமானத்தை ஊக்குவிக்கும் நல்ல மாற்றம் என்றாலும் மத்திய அரசு இதை தனிச்சட்டமாக இயற்றவில்லை. வழிகாட்டு விதியாகத்தான் கொண்டுவந்திருக்கிறது என்பதால் உடனடியாக நாடு முழுவதும் இது அமலாகிவிடாது. மோட்டார் வாகனச் சட்டம் மாநிலத்துக்கு மாநிலம் கொஞ்சம் வித்தியாசமாகப் பின்பற்றப்படுகிறது.

எனவே, ஒவ்வொரு மாநில அரசும் ஆர்.டி.ஓ அலுவலகங்கள், நீதித்துறை, மருத்துவமனைகளுக்கு கட்டளையிடும்போதுதான் மாநில அளவில் இந்த விதிகள் சரியாகப் பின்பற்றப்படும். இதைத் தமிழகமும் விரைவில் பின்பற்றும் என்று நம்புவோம்!’’ என்கிறார் ராதாகிருஷ்ணன்.ஹெல்மெட் மட்டுமாங்க முக்கியம்? இதுவும்தான்!


Similar Threads: