பார்வையைப் பாதுகாக்கும் மாத்திரை!


மாலைக்கண் நோயைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். வைட்டமின் ஏ சத்துக்குறையால் ஏற்படுகிற நோய் இது. இந்தப் பாதிப்புள்ளவர்களால் குறைந்த வெளிச்சத்தில் எதையும் பார்க்க முடியாது; முக்கியமாக, மாலை நேரத்திற்குப் பிறகு பார்வை குறைந்துவிடும்; இரவில் சுத்தமாகப் பார்வை தெரியாமல் சிரமப்படுவார்கள். ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அதிகமாகப் பாதிக்கிற நோய் இது.

படம் ஓடிக்கொண்டிருக்கும் தியேட்டருக்குள் ஒருவர் நுழையும்போது பார்வை சரியாகத் தெரியவில்லை என்றாலோ, இரவில் கார் ஓட்டும்போது எதிரில் வரும் வாகனத்தின் வெளிச்சத்தைப் பார்த்துவிட்டுச் சாலையைப் பார்த்தால், பார்வை சரியாகத் தெரியவில்லை என்றாலோ அவருக்கு மாலைக்கண் நோய் இருக்கக்கூடும்.

உடலில் வைட்டமின் ஏ பற்றாக்குறை ஏற்பட்டதுமே விழி வெண்படலத்தில் ஈரம் காய்ந்து உலர்ந்துவிடும். கண்கள் மின்னும் தன்மையை இழந்துவிடும். விழிவெண்படலத்தில் சுருக்கங்கள் விழுந்து கண்ணின் அழகு கெட்டுவிடும்.

அடுத்து, விழி வெண்படலத்தில் சாம்பல் நிறத்தில், முக்கோண வடிவத்தில் மேடிட்ட புள்ளிகள் தோன்றும். இதற்கு ‘பைடாட்ஸ் புள்ளிகள்’ (Bitot’s Spots) என்று பெயர். இதைத் தொடர்ந்து கருவிழியில் புண்கள் ஏற்படும்.

அப்போது நாம் பார்க்கும் பொருளின் ஒளிக்கதிர்கள் சரியான அளவில் கண்ணுக்குள் செல்லாது. இதன் விளைவால் பார்வை குறையும். கருவிழியில் தொற்று ஏற்பட்டு, புண்கள் அதிகமாகி, தழும்பு விழுந்து அது நிரந்தரமாகிவிடும். அப்போது வெளிச்சம் கண்ணுக்குள் புகவே முடியாது என்பதால், பார்வை முற்றிலும் தெரியாது.

இந்தியாவில் மட்டும் ஆண்டுதோறும் சுமார் 5 லட்சம் குழந்தைகள் வைட்டமின் ஏ பற்றாக்குறை காரணமாக பார்வையை இழக்கிறார்கள். இந்த நிலைமையைத் தடுக்க வேண்டுமானால், வைட்டமின் ஏ அதிகமுள்ள கேரட், பூசணி, கீரை, முட்டைக்கோஸ், முள்ளங்கி, பட்டர்பீன்ஸ், பீர்க்கங்காய், முருங்கைக்காய், அவரைக்காய், மாம்பழம், பப்பாளி, தக்காளி, ஆரஞ்சு, பால், நெய், வெண்ணெய், முட்டை, மீன், மீன் எண்ணெய், இறைச்சி போன்ற உணவுகளைச் சாப்பிட வேண்டும். குழந்தைக்கு ஒரு வயதுக்குள் வைட்டமின் ஏ மருந்தை ஒருமுறை போட்டுக் கொண்டால், பார்வை இழப்பதைத் தடுக்கலாம். அல்லது வைட்டமின் ஏ மாத்திரையையும் சாப்பிடலாம்.

பார்வையைப் பாதுகாக்கும் வைட்டமின் ஏ மருந்தைக் கண்டுபிடித்ததே ஒரு வரலாற்று அதிசயம்தான்!‘அலோபதி மருத்துவத்தின் தந்தை’ என்று அழைக்கப்
படும் ஹிப்போகிரேடஸ் வாழ்ந்த கி.மு.460க்கும் 367க்கும் இடைப்பட்ட காலத்திலேயே இந்த வைட்டமினின் தேவை அறியப்பட்டிருந்ததாக மருத்துவ வரலாறு கூறுகிறது.

அக்காலகட்டத்தில் மாலைக்கண் நோய் வந்த குழந்தைகளுக்குக் கல்லீரல் இறைச்சியைத் தேனில் கலந்து கொடுத்து நோயைக் குணப்படுத்தியுள்ளனர். இதை உறுதி செய்யும்விதமாக 19ம் நூற்றாண்டில் ஒரு வரலாற்று நிகழ்வும் பதிவாகியுள்ளது. ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த கடற்படைக் கப்பல் ஒன்று அறிவியல் ஆராய்ச்சிக்காக அடிக்கடி உலகைச் சுற்றி வருவதுண்டு.

அதில் பயணம் செய்தவர்கள் பலருக்கும் உண்டான பிரச்னை, மாலைக்கண் நோய். கப்பல் பயணம் சென்று திரும்பியதும் இந்த நோய் அவர்களுக்கு வந்துவிடும். எட்வர்டு சுவார்ட்ஸ் என்பவர் அந்தக் கப்பலில் டாக்டராக இருந்தார். ஆஸ்திரியா நாட்டின் வியன்னாவிலிருந்து அது கிளம்பும்போது 352 பேர் அதில் பயணம் செய்தனர். அவர்களில் சுமார் 75 பேருக்குத் தினமும் மாலை நேரம் வந்ததும் கண் பார்வை குறைந்துவிடும்.

அவர்களுக்கு ஹிப்போகிரேடஸ் காலத்துச் சிகிச்சைமுறையைப் பின்பற்ற முன்வந்தார் அவர். அதாவது, மாட்டிறைச்சியில் கல்லீரலை அந்த 75 பேருக்கும் தினசரி உணவில் கொடுக்கத் தொடங்கினார். வியப்புக்குரிய விதத்தில் அந்த 75 பேருக்கும் மாலைக்கண் நோய் முற்றிலும் குணமானது.

அதன் பின்னர் 1912க்கும் 1914க்கும் இடைப்பட்ட காலத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த மெக்கோலம், டேவிஸ் என்னும் இரண்டு உயிர்வேதியலாளர்கள் விலங்குகளை வைத்துப் பல ஆராய்ச்சிகளைச் செய்து வந்தனர். கோதுமையைப் பிரதான உணவாகக் கொண்ட பசுக்களுக்கு கண் பார்வை பறிபோவது வழக்கமாக இருந்தது. ஆனால் மக்காச்சோளத்தைப் பிரதான உணவாகக் கொண்ட பசுக்களுக்குக் கண் பிரச்னைகள் ஏற்படவில்லை.

ஆகவே, கோதுமையில் கண் பார்வைக்குத் தேவையான ஒரு சத்துப்பொருள் இல்லை என்பதும், மக்காச்சோளத்தில் அது உள்ளது என்பதும் புலனாயிற்று. ஆனால், அச்சத்துப் பொருள் எது என்று அப்போது அவர்களுக்குத் தெரியவில்லை. அவர்கள் பசுக்களுக்குக் கோதுமை தருவதை நிறுத்திவிட்டு, சுண்டெலிகளை உணவாகக் கொடுக்கத் துணிந்தனர். வெண்ணெயை உணவாகக் கொடுத்து வளர்க்கப்பட்ட சுண்டெலிகள் ஆரோக்கியத்துடன் வளர்வது மட்டுமல்லாமல், அந்தச் சுண்டெலிகளைப் பசுக்களுக்கு இரையாகக் கொடுத்தால், அவற்றுக்குக் கண் பார்வையில் எக்குறையும் ஏற்படவில்லை என்பதும் உறுதியானது.

அதன்படி வெண்ணெயில் உள்ள ஒரு சத்துப் பொருள் கண் பார்வைக்குத் தேவைப்படுகிறது என்று அவர்கள் அறிவித்தனர். அதற்கு ‘கொழுப்பில் கரையும் பொருள்’ (Fat soluble factor) என்று பொதுவாகத்தான் பெயரிட்டனர். அதன் பிறகு ஒவ்வொரு வைட்டமினாகக் கண்டுபிடிக்கப்பட்டதும்தான் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட அச்சத்துப் பொருளுக்கு ‘வைட்டமின் ஏ’ என்று பெயர் வைத்தனர்.

இதைக் கண்டுபிடித்த பெருமை மெக்கோலம், டேவிஸ் எனும் இருவருக்குச் சென்றடைந்தது. சுவிட்சர்லாந்து வேதியியலாளர் பால் காரீர், ‘வைட்டமின் ஏ’வுக்குரிய வேதியியல் வடிவத்தையும் கட்டமைப்பையும் கண்டுபிடித்து, 1937ல் நோபல் பரிசு பெற்றார். இப்படி படிப்படியாக கண்டுபிடித்த வைட்டமின் ஏ மருந்துதான் இன்றைக்கும் பல லட்சம் குழந்தைகளுக்குப் பார்வையை மீட்டுத் தரும் அருமருந்தாகத் திகழ்கிறது.


Similar Threads: