நோய்களின் கண்ணாடி
உணவை மெல்வதற்கும், விழுங்குவதற்கும் உதவும் நாக்கு, மொத்தமே நான்கு அங்குல நீளத்தில், ௨ கிராம் எடையில் இருக்கும்.

நாக்கிற்கு, மகத்தான சக்தி உண்டு. வயது கிடையாது. மனிதனுக்கு வயதாக ஆக பார்வை குறையலாம்; தோல் சுருங்கலாம்; கேட்கும் திறன் குறையலாம். ஆனால், சுவையை உணரும் சக்தி மட்டும் குறையவே குறையாது.

எண்ணற்ற நரம்புகளாலும், தசைகளாலும் ஆன நாக்கின் மேற்புறத்தில் 'பாப்பிலி' என்று சொல்லப்படும் சதைப்பற்றான சிறு முகிழ்கள் உள்ளன.

அவற்றில்தான், சுவையுணர்வு செல்கள் உள்ளன. உப்பு, இனிப்பு, கசப்பு, துவர்ப்பு என்ற நான்கு முக்கிய சுவைகளை அறியும், சுவை முகிழ்கள், நாக்கில் குறிப்பிட்ட இடங்களில் அமைந்துள்ளன.

நமது கைகளில் உள்ள ரேகைகளைப் போலவே, நமது நாக்கிலும், ரேகைகள் உண்டு. அதுவும், ஒவ்வொரு மனிதருக்கும் வேறுபடும். மனித உடலில், அதிக வலிமை உள்ள தசை உறுப்பு நாக்கு தான்.

நாக்கு, உறுப்புகளின் பாதிப்புகளை வெளிக்காட்டும். மருத்துவர்கள், நோயாளியின் நாக்கை முதலில் பரிசோதிப்பர். அதனால், நாக்கை, நோய்களின் கண்ணாடி என்று கூறுகின்றனர்.

நோய் வந்துவிட்டால், நாக்கின் சுவை அறியும் செயலில், இரண்டு விதமான, குறைபாடுகளைக் காண முடியும். ஒன்று மாறுபட்டு சுவை உணர்தல். மற்றொன்று குறை சுவை உணர்வறிதல்.

மாறுபட்டு சுவை உணர்வறிதல், என்பது, பாயாசம் கசக்கும்; சூப், உப்பு கரிக்கும். இதற்கு காரணம், உடலில் துத்தநாகம் என்ற உப்புச்சத்துக் குறைபாடு தான்.

காய்ச்சலின் போது அதிகப்படியான துத்தநாகம் இழப்பு ஏற்படுகின்றது. அதனால், மாறுபட்ட சுவை அறியப்படுகிறது. காய்ச்சலின் போது வாய் கசப்பது இதனால் தான்.


அ.ஜேசுதாஸ்,
காது, மூக்கு, தொண்டை நிபுணர், திருச்சி.