காஸ்ட்லி ஆகும் கேன்சர் சிகிச்சை!


* மும்பையில் வைரம் பட்டை தீட்டும் தொழிற்சாலையில் பணிபுரிபவர் விஜய் சவான். அந்த நிறுவனத்தில் ஒன்றரை கோடி ரூபாய் வைரங்களைத் திருடி மாட்டிக் கொண்டார். ஏன் திருடினார்? ‘‘என் மனைவிக்குப் புற்றுநோய்.

சிகிச்சைக்கு பல லட்சம் தேவைப்படுகிறது. எனக்கு வேறு வழி தெரியவில்லை’’ என வாக்குமூலம் கொடுத்திருக்கிறார் அவர்.* டெல்லியைச் சேர்ந்த சதீஷ் மோர்யாவுக்கு ரத்தப் புற்றுநோய். மத்திய அரசு மருத்துவமனையான எய்ம்ஸ் மருத்துவமனையில் இதுவரை சிகிச்சைக்கு 3 லட்ச ரூபாய் செலவழித்துவிட்டார். ‘இன்னும் 6 லட்சம் செலவாகும் என சொல்கிறார்கள். என்னிடம் பணமில்லை. குடும்ப சேமிப்பு கரைந்துவிட்டது.

30 வயதில், திருமணமான மூன்றே மாதத்தில் நான் சாக வேண்டுமா?’ என இவர் போட்ட வழக்கை கருணை மனுவாக ஏற்ற டெல்லி உயர் நீதிமன்றம், சதீஷுக்கு இலவச சிகிச்சை கொடுக்க எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உத்தரவிட்டிருக்கிறது.

புற்றுநோய் தரும் அதிர்ச்சியால் அல்ல... சிகிச்சைக்கு ஆகும் செலவைக் கேட்ட அதிர்ச்சியில்தான் நிறைய நோயாளிகள் செத்துவிடுகிறார்கள். சமீபகாலங்களில் அது தாறுமாறான வேகத்தில் உயர்ந்துகொண்டிருக்கிறது. உலக சுகாதார நிறுவனம் சொல்லும் கணக்கின்படி ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் 10 லட்சம் பேர் புதிதாக புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள்.

ஐந்து லட்சம் பேர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்துபோகிறார்கள். இந்த எண்ணிக்கை இந்த ஆண்டில் ஏழு லட்சமாக உயரும் என அஞ்சப்படுகிறது. முன்பெல்லாம் 75 வயதுக்கு முன்பாக புற்றுநோயால் இறக்கும் அபாயம் வெறும் 7 சதவீதமாக இருந்தது.

இப்போது மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்களிடம் சிகிச்சைக்கு பணம் கேட்கும் புற்றுநோயாளிகளில் ஐந்தில் ஒருவர் 45 வயதுக்குள் இருப்பவர். அவர் குடும்பத்துக்காக சம்பாதிக்கும் ஒற்றை நபராக இருந்தால், அந்தக் குடும்பமே புயலில் சிக்கிவிடுகிறது.

கடந்த 15 ஆண்டுகளில் புற்று நோய் சிகிச்சைக்கான செலவு மூன்று முதல் நான்கு மடங்காக உயர்ந்திருக்கிறது. கடந்த ஓராண்டில் உலகம் முழுக்க புற்றுநோய் மருந்துகள் வாங்க செலவிடப்பட்ட தொகை, சுமார் 63 லட்சம் கோடி ரூபாய்.

பல பெரிய நாடுகளின் ஆண்டு பட்ஜெட்டே இதைவிடக் குறைவு! இந்தியாவில் நிறைய கார்ப்பரேட் மருத்துவமனைகளுக்கு இதய நோய்களுக்கு அடுத்தபடியாக அதிக வருமானம் தரும் பிரச்னையாக புற்றுநோய் இருக்கிறது. ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள், அறுவை சிகிச்சை, கீமோதெரபி, அதைத் தொடர்ந்த மாத்திரைகள் என எல்லாமே லட்சங்களில் பணத்தை விழுங்கிவிடுகின்றன.

மருத்துவக் காப்பீடு நிறுவனங்களில் அதிகம் பேர் க்ளெய்ம் கேட்கும் நோய்கள் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது புற்றுநோய். எனினும் எல்லோருக்கும் எல்லா செலவுகளும் திரும்பத் தரப்படுவதில்லை. புற்றுநோய் உள்ளிட்ட எல்லா நோய்களுக்குமான காப்பீடு செய்துகொண்டவர்களுக்குக் கூட கீமோதெரபி மற்றும் மாத்திரைகளுக்கான கட்டணங்கள் கிடைப்பதில்லை.

மரணம் நெருங்கும் தறுவாயில் இருப்பவர்களுக்கு தரப்படும் பராமரிப்புகளுக்கான செலவையும் காப்பீட்டு நிறுவனங்கள் ஏற்பதில்லை. இதனால் பலரும் பாதியிலேயே சிகிச்சையைக் கைவிட்டு, விரக்தியோடு வீட்டில் முடங்குகிறார்கள்.

இந்தியாவில் வெறும் 15 சதவீதம் பேர் மட்டுமே மருத்துவக் காப்பீடு செய்திருக்கிறார்கள். அவர்களில் பலரும் காப்பீடு செய்திருக்கும் தொகை, புற்றுநோய் அறுவைசிகிச்சைக்குக்கூட போதாது என்பதுதான் உண்மை.

இந்தியாவில் புற்றுநோய் சிகிச்சைக்கான வசதிகள் குறைவாக இருப்பதும் சிக்கலை அதிகரிக்கச் செய்திருக்கிறது. 2000 புற்றுநோயாளிகளுக்கு ஒருவர் என்ற விகிதத்தில்தான் ஸ்பெஷலிஸ்ட்கள் இருக்கிறார்கள். அறுவை சிகிச்சை நிபுணர்கள் விகிதம் இன்னும் குறைவு. இதனால் சிகிச்சைக் கட்டணம் எகிறுகிறது. இந்தியா போன்ற ஒரு நாட்டில் சுமார் 1200 ரேடியோதெரபி மெஷின்களாவது இருக்க வேண்டும்.

ஆனால் மொத்தமே இங்கு இருப்பது 232 மெஷின்கள்தான். பெரும்பாலான கருவிகள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. அவற்றின் விலையும் மிக அதிகம். சுமார் 50 கோடி ரூபாயாவது இருந்தால்தான் ஒரு சுமாரான புற்றுநோய் மருத்துவமனையை அமைக்க முடியும். இப்படி செலவு செய்து கருவிகளை வாங்கிப் போட்டுவிட்டோமே என தேவையில்லாத பரிசோதனைகளை எல்லாம் செய்யச் சொல்வதால் செலவுகள் இன்னும் எகிறுகின்றன.

புற்றுநோய் சிகிச்சையில் உதவும் பிரதானமான 20 மருந்துகளில் வெறும் 3 மட்டுமே இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன. மற்றவை இறக்குமதி செய்யப்பட வேண்டும். நிறைய மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில்கூட புற்றுநோய் சிகிச்சை வசதிகள் இல்லை.

எம்.பி.பி.எஸ். முடித்துவிட்டு மேற்படிப்புக்குச் செல்லும் டாக்டர்களுக்கேகூட புற்றுநோய் பரிசோதனை நடைமுறைகள் பற்றித் தெரிவதில்லை. இந்த அடிப்படை வசதிகளை சரி செய்தால், இந்தியாவில் மூன்றில் இரண்டு பங்கு புற்றுநோய் மரணங்களைத் தவிர்க்கலாம். ஆனால் செய்யத்தான் யாருக்கும் மனசில்லை.

செலவைக் குறைக்கவும் மரணத்தைத் தவிர்க்கவும் என்னதான் வழி? ‘‘புற்றுநோய் தாக்கியிருப்பது சீக்கிரமே தெரிந்தால் சிகிச்சை அளித்து குணப்படுத்துவதும் சுலபம். செலவும் குறைவாகும்’’ என்கிறார்கள் டாக்டர்கள்.

உதாரணமாக இந்தியாவில் கர்ப்பப்பை புற்றுநோயால் ஒவ்வொரு ஆண்டும் 1 லட்சத்து 20 ஆயிரம் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். இவர்களில் சுமார் 71 ஆயிரம் பேர் சிகிச்சை பலனின்றி இறக்கிறார்கள். அதாவது, ஒவ்வொரு ஏழு நிமிடத்துக்கும் ஒரு பெண் இறக்கிறார். நோய் முற்றிய நிலையில் சிகிச்சைக்கு வருவதுதான் காரணம்.

மார்பகப் புற்றுநோய் தாக்கியிருக்கிறதா என்பதைக் கண்டறிய ஆண்டுக்கு ஒருமுறை மேமோகிராம் சோதனைசெய்துகொள்ள வேண்டும். இந்த சோதனைக்கு அதிகபட்சம் 2 ஆயிரம் ரூபாய் ஆகும். கவனிக்காமல் விட்டு முற்றிய நிலையில் சிகிச்சைக்குப் போனால் சுமார் 6 லட்சம் ரூபாயிலிருந்து 10 லட்சம் ரூபாய் வரை சிகிச்சைக்கு ஆகலாம்.

இதேபோலவே எல்லா புற்றுநோய்களுக்கும் ஆண்டுக்கு ஒருமுறையோ 10 ஆண்டுகளுக்கு ஒருமுறையோ பரிசோதனை உண்டு. சில நூறு ரூபாயிலிருந்து ஐந்தாயிரம் ரூபாய் வரை கட்டணங்கள் வேறுபடும்.

வாழ்க்கைமுறை மாற்றமும் உணவுப்பழக்கமும்தான் புற்றுநோய்க்கு பிரதான காரணங்களாக இருக்கின்றன என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள். நம் பாரம்பரிய உணவுகளுக்கு மாறுவதைத் தவிர இதற்கு வேறு தீர்வு இல்லை.

புகையிலையைப் பயன்படுத்துகிறவர்களுக்கு ஒரு செய்தி... ஏற்கனவே நம் உணவுகளிலேயே ஏராளமான விஷமும் ரசாயனங்களும் கலந்து நம் உடலுக்குள் போகின்றன. நீங்கள் ஏன் அதைத் தனியாக நுரையீரலுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறீர்கள்?இந்தியாவில் நிறையகார்ப்பரேட் மருத்துவமனைகளுக்கு இதய நோய்களுக்கு அடுத்தபடியாக அதிக வருமானம் தரும் பிரச்னையாக புற்றுநோய்இருக்கிறது.


Similar Threads: