கிழங்குகளும் அதன் குணங்களும்


மண்ணுக்கு அடியில் விளையும் உருளைக்கிழங்கு, வள்ளிக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, சேனைக்கிழங்கு, சேமைக்கிழங்கு, மஞ்சள் முள்ளங்கி, வெள்ளை முள்ளங்கி, பீட்ரூட், இஞ்சி ஆகிய கிழங்குகள், சமையலுக்கு அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.

இஞ்சி: இஞ்சியை, தனியாக சமைத்து உண்பது கிடையாது. ஆனால், சமையலில் சேர்க்கப்படும் முக்கியமான ஒன்று. குழம்பு, துவையல், வடை ஆகியவற்றில் இஞ்சி முக்கிய பங்காற்றும். இஞ்சி, பசியை உண்டாக்கிறது. தீனிப்பைக்கு பலம் சேர்க்கும்; அஜீரணத்தை போக்கும்; கபத்தை அகற்றும். ஈரலில் உள்ள கட்டுகளையும் அறுக்கும். அஜீரணத்தால் ஏற்படும் வயிற்றுப் போக்கையும் நிறுத்தும் தன்மை கொண்டது.

உருளைக் கிழங்கு: நமது நாட்டில் குளிர் பிரதேசங்களில் இது பயிரிடப்படுகிறது. உருளைக்கிழங்கில், உடலுக்கு வெப்பம் தரும் கார்போஹைட்ரேட் எனும் மாவுச்சத்து அதிகம் உள்ளது. தோலுடன் வேகவைத்து பின் தான் தோலை உரிக்க வேண்டும். வாயுவை உண்டாக்கும் கிழங்கு என்பதால், சிறிதளவு எடுத்துக் கொள்ளலாம். இஞ்சி, புதினா, எலுமிச்சம் போன்ற ஏதாவது ஒன்றை சேர்த்துச் சமைப்பது நல்லது.

கருணைக் கிழங்கு: காறாக்கருணை என்றும் சேனைக்கிழங்கு என்றும் கூறுவர். கருணைக் கிழங்கை உண்பதால், கபம், வாதம், ரத்த மூலம் நீங்கும். பசி உண்டாகும். இரைப்பைக்கு பலம் சேர்க்கும். கருணைக் கிழங்கை சமைக்கும் போது, சிறிது புளி சேர்த்துக் கொண்டால் கூடுதல் சுவை தரும்.

கேரட்: நமது நாட்டின் குளிர் பிரதேசங்களில் பயிரிடப்படுகிறது. இதில் ஏ, பி, சி வைட்டமின்கள் உள்ளன. பச்சையாக உண்ணும் போதும் சுவையுடனும் இருக்கும். பாஸ்பரஸ், கால்சியம் போன்றவையும் இதில் அடங்கியுள்ளது. உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வது நலம் தரும்.

பீட்ரூட்: உண்பதற்கு இதுவும் இனிப்பாக இருக்கும். பி, சி வைட்டமின்கள் அதிகம் உள்ளன.

முள்ளங்கி: குடல் வாதம் நீங்கும். பசியை உண்டாக்கும். தொண்டைக் கம்மல், மூலரோகம், கல்லடைப்பு போன்றவைகளையும் போக்கும். உடம்பில் நீர் சத்தை அதிகரிக்கும்.

வள்ளிக்கிழங்கு:வள்ளிக்கிழங்கில் வெளிறிய மஞ்சள், சிவப்பு எனும் இரண்டு வகைகள் உண்டு. இதை சர்க்கரை வள்ளி என்றும் கூறுவர். ரத்தத்தைப் பெருக்கும். மூளைக்குப் பலம் தரும். அதிகம் உண்டால் மந்தப்படுத்தும். வாயுவை உண்டாக்கும். எதையும் சற்று அளவாகவே எடுத்துக் கொண்டால், உடல் நலத்துக்கு நல்லது.


Similar Threads: