பனீரா? சீஸா?


எது நல்லது?

பால் குடிக்க அடம் பிடிக்கிற குழந்தைகளுக்குக் கூட பனீரும் சீஸும் பிடிக்கிறது. ‘இரண்டுமே பால் பொருட்கள்தானே... ஆரோக்கியமானவைதான்’ என்கிற எண்ணத்தில் அம்மாக்களும் தோசையிலிருந்து பீட்சா வரை எல்லாவற்றிலும் இவற்றைச் சேர்த்து சாப்பிட வைக்கிறார்கள். இந்த இரண்டில் எது பெஸ்ட்? தினமும் கொடுக்கலாமா? சந்தேகங்களை தீர்க்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் வர்ஷா...``சீஸ் என்பது பால் பொருளாகவே இருந்தாலும், அதைப் பதப்படுத்துதலில் நிறைய உப்பு சேர்க்கப்படுகிறது. பனீரோ இயற்கையான முறையில் பாலில் இருந்து நேரடியாக தயாரிக்கப்படுகிறது.


அதனால் பனீர், சீஸை விட நல்லது என்பது உண்மைதான். அதற்காக பனீர் நல்லது என்று சொல்லிவிட்டார்களே என தினமும் அதிகமாகச் சேர்த்துக் கொள்ளக்கூடாது. அதிக அளவு பனீர் எடுத்துக் கொண்டால் உடலில் தேவையற்ற கொழுப்புச்சத்து சேர வாய்ப்பு உள்ளது. இயற்கையான காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றில் கிடைப்பதை விட, பனீரில் புதிய சத்துகள் எதுவும் கிடைப்பதில்லை என்பதை உணர வேண்டும்.

பனீரை எப்படி சமையலில் பயன்படுத்த வேண்டும் என்பது முக்கியம். சிலர் எண்ணெயில் வறுத்த பனீரை உணவில் சேர்ப்பார்கள். இது ஆரோக்கியமல்ல. கீரையுடன் சேர்த்து செய்யும் பாலக் பனீர், எண்ணெய் இல்லாமல் செய்யும் பனீர் டிக்கா ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம். பனீர் கலந்த உணவுகளையும் அடிக்கடி எடுத்துக் கொள்ளாமல், வாரம் இரு முறை என்ற அளவோடு உட்கொள்ளலாம்.

அடுத்து சீஸுக்கு வருவோம். சீஸ் ஆரோக்கியத்துக்கு நல்லது என்று நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம். உண்மையில் நீண்ட நாட்கள் கெடாமல் இருப்பதற்காக சீஸில் அதிக அளவில் உப்பும் ப்ரிசர்வேடிவ்ஸும் சேர்க்கப்படுகின்றன. சீஸை ஃப்ரீசரில் வைத்து மட்டுமே பயன்படுத்த முடியும்.

பாஸ்தா, பீட்சா, பர்கர் போன்ற ஜங்க் உணவுகளில் அதிக அளவு சீஸ் சேர்த்து செய்கிறார்கள். இது உடலில் கெட்ட கொழுப்புகளை அதிகமாக்கிவிடும். இயற்கையாகக் கிடைக்கும் காய்கறிகள், பழங்கள், பருப்புகள் போன்றவற்றை உணவில் சேர்த்து வந்தாலே, நம் உடலுக்குத் தேவையான எல்லா சத்துகளையும் பெற முடியும்...’’


Similar Threads: