நஞ்சை அழித்து நன்மை புகட்டும் சாம்பார் - ரசம்! ஏன்? எப்படி?


புலி அல்ல புளி!

நமது சமையல் முறையில் நாம் சேர்த்துக் கொள்ளும் ஒவ்வொரு பொருட்களுக்குப் பின்பும் ஓர் அழுத்தமான மருத்துவக் காரணம் உண்டு. சாம்பார், ரசம் என தினசரி நமது உணவுப் பயன்பாட்டில் தவிர்க்க முடியாததாக இருப்பது புளி. நமது உணவுப் பொருட்களில் உள்ள நச்சை வெளியேற்றக்கூடிய மகத்தான தன்மை புளிக்கு இருக்கிறது என சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஹைதராபாத்திலுள்ள நேஷனல் இன்ஸ்டி டியூட் ஆஃப் நியூட்ரிஷன் நடத்திய ஆய்வில் குடிநீர் மூலம் உடலில் தேங்கும் ஃப்ளோரோசிஸை புளியானது சிறுநீர் வழியே வெளியேற்றி விடுவது கண்டறியப்பட்டுள்ளது.இதை இன்றைக்கு அல்ல... பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே கண்டறிந்ததால்தான் நம் முன்னோர் புளியை உணவில் சேர்த்து வந்துள்ளனர்.

சித்த மருத்துவத்தில் புளி முக்கியமான மருத்துவப் பொருளாக இருக்கிறது என்கிறார் சித்த மருத்துவர் காசிப்பிச்சை‘‘பழைய புளியை நெருப்பில் சுட்டு, உப்பை வறுத்து அதன் மூலம் சீரகம், மிளகு ஆகியவற்றைக் கொண்டு வைக்கும் ரசத்தை நோய்வாய்ப்பட்டவர்களுக்குக் கொடுப்பார்கள். நோய்வாய்ப்பட்டவர்களுக்கு செரிமான சக்தி குறைந்த அளவில்தான் இருக்கும் என்பதே காரணம்.

எந்த ஒரு உணவுப் பொருளையும் செரிமானம் செய்யும் தன்மை புளிக்கு இருக்கிறது. புளி என்பது Hormone stimulant - அதாவது, உடலில் உள்ள ஹார்மோன்களை தூண்டிவிட்டு வளர்சிதை மாற்றத்துக்கு காரணமாக இருக்கிறது.

‘ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்’ என்றொரு பழமொழி சொல்வார்கள். அதன் உண்மையான அர்த்தம் வேறு. ஆ-நெய் என்றால் பசு நெய், பூ-நெய் என்றால் தேன். 40 வயதுக்குள் பசுநெய் சாப்பிட வேண்டும்... அதற்கு மேல் தேன் சாப்பிட வேண்டும். ஆகவேதான் ஆநெய்க்கு ஒரு காலம் வந்தால் பூநெய்க்கு ஒரு காலம் வரும் என்றார்கள். பசுநெய் போலவே புளியையும் 40 வயதுக்குள் இளமைத் துடிப்போடு இருக்கும் காலகட்டத்தில்தான் சாப்பிட வேண்டும். இள வயதினருக்கு புளி அவசியம் தேவை. சரியான அளவில் புளியை எடுத்துக் கொள்பவர்களுக்கு ஆண்மை வீறு கொண்டிருக்கும்.

சுட்ட பழைய புளி மற்றும் பூண்டை சேர்த்து அரைத்து சாப்பிட்டால் மூலக்கடுப்பு மற்றும் ரத்த மூலம் ஆகியவை குணமடையும். புளி என்பது டார்டாரிக் அமிலம். பொதுவாக அமிலங்களுக்கு நச்சுகளை அழிக்கும் தன்மை இருக்கும். விஷம் குடித்தவர்களுக்கு புளிக்கரைசல் கொடுப்பதைப் பார்த்திருப்போம். புளிக்கரைசல் குடலில் இருக்கும் விஷத்தை வயிற்றுப்போக்கு மூலம் வெளியேற்றி விடும்.

எலுமிச்சைப் பழத்தை தேய்த்துக் குளித்தாலும், புளியங்காயை அரைத்துத் தேய்த்துக் குளித்தாலும் சரும நோய்கள் வராது. இப்படியாக பல நன்மைகள் புளியில் இருந்தாலும், அதை அளவாகவும் முறையாகவும் பயன்படுத்தவில்லை என்றால் நேரெதிர் தீங்குகளுக்கு ஆளாக நேரிடும். புளி என்பது அமிலத்தன்மை உடையது என்பதால் ரத்தத்தில் உள்ள அமில காரத்தன்மையை சமநிலைப்படுத்த வேண்டி காரத்தன்மையுடைய தண்ணீர் நிறைய குடிக்க வேண்டி வரும்.

இதன் காரணமாகத்தான் புளியோதரை, பிரியாணி ஆகியவற்றை சாப்பிடும்போது தண்ணீர் நிறைய குடிக்கிறோம். அப்படி தண்ணீர் குடிக்காமல் விடும்போது உடலில் உள்ள நீர் உறிஞ்சப் பட்டு மலச்சிக்கல் ஏற்படும். இது நாளடைவில் மூலத்தை ஏற்படுத்தவும் கூடும். அதாவது, மூலநோய்க்கு மருந்தாக இருக்கும் புளியை முறையாக உட்கொள்ளாவிட்டால் அந்நோய்க்கு காரணமாகவும் மாறும்.

வாதம் பித்தம் கபம் என மனித உடலை மூன்று வகையாகப் பிரிக்கலாம். பித்த உடலில் அமிலநிலை அதிகம் இருப்பதால் சூடாக இருக்கும். அதனால் பித்த உடலைக் கொண்டவர்கள் புளியைத் தவிர்க்க வேண்டும். புளியமரம், நெல்லி, சீமைக்கருவேலம் போன்று இலைகள் சிறியதாக இருக்கும் மரங்கள் சூடானவை என்பதால்தான், அம்மரங்களில் பறவைகள் அண்டுவதில்லை. மா, பலா, வேப்பை மரங்கள் போன்று இலைகள் பெரியதாக இருக்கும் மரங்கள் குளிர்ச்சியானவை.

புளியமரம் போன்ற சூடான மரங்கள் கார்பன் டை ஆக்சைடை அதிகம் வெளியேற்று கின்றன. புளியமரத்துக்கு அருகே செல்லும்போது இதன் காரணமாக மூச்சுத் திணறல் ஏற்படுவதைத்தான் பேய் அடித்ததாகக் கூறுகிறோம். புளி அதிகம் சேர்த்துக் கொள்பவர்கள், அதற்கேற்றாற் போல தண்ணீர் குடிக்கவில்லையென்றால் சிறுநீரகத்தில் கல் ஏற்படக்கூடும். ஆகவே புளியை அளவோடும் சரியான முறையிலும் உட்கொண்டால் அதுவும் மூலிகையே!’’ என்கிறார் காசிப்பிச்சை.எடையை குறைத்து பருமனைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் புளிக்கு இருக்கிறது என்கிறார் உணவியல் நிபுணர் வினிதா கிருஷ்ணன்.

‘‘புளியில் இருக்கும் Garcinia cambogia என்கிற மூலப்பொருள் எடை குறைப்பதற்கு உதவியாக இருக்கிறது. அது நம் உடலில் தேங்கும் கலோரியை எரிக்கும் ஆற்றல் உடையது. கேரளாவில் பெரிதும் பயன்படுத்தப்படும் கொடம்புளியில் இந்த மூலப்பொருள் அதிகம் இருக்கிறது. புளியை ஊறவைத்த தண்ணீரைக் குடித்தாலும் எடை கட்டுக்குள் வரும்.

100 கிராம் புளியில் 13 சதவிகிதம் Non starch polysaccharides (NSP) என்கிற நார்ச்சத்து இருக்கிறது. இதிலுள்ள Bile salt உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்கிறது. காப்பர், பொட்டாசியம், கால்சியம், இரும்பு, துத்தநாகம், மெக்னீசியம் போன்ற தாதுக்களும், வைட்டமின் ஏ, சி, தையமின், ஃபோலிக் அமிலம், ரிபோஃப்ளேவின், நியாசின் போன்ற வைட்டமின்களும் புளியில் இருக்கின்றன’’ என்கிறார் வினிதா கிருஷ்ணன்.ஏராளமான நன்மைகள் புளியில் இருந்தாலும் அதை அளவாகவும் முறையாகவும் பயன்படுத்தவில்லை என்றால் நேரெதிர் தீங்குகளுக்கு ஆளாக நேரிடும்.


Similar Threads: