உப்பு

ஆஹா... என்ன ருசி!

வெடிகுண்டு!


‘மாதா ஊட்டாத சோற்றை மாங்காய் ஊட்டும்’ என்பார்கள். இது எந்த அளவுக்கு இந்திய உணவில் ஊறுகாய் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது என்பதையே காட்டுகிறது. இருப்பினும், காரமும் உப்பும் அதிகமாக உள்ள ஊறுகாய், சிப்ஸ் போன்றவற்றை அதிகம் உண்பதால் ஏற்படும் விளைவுகளை நமக்கு தெளிவுப்படுத்துகிறார் ஊட்டச்சத்து நிபுணர் மீனாட்சி பஜாஜ்.

``ஒருவர் ஒரு நாளைக்கு 6 கிராம் அளவே சோடியம் குளோரைடு என்னும் உப்பை எடுத்துக் கொள்ளலாம். உணவுகளில் சேர்க்கப்படும் உப்பின் மூலம் 5 கிராம் அளவும், இயற்கையாகவே காய்கறிகளில் உள்ள உப்பின் மூலம் ஒரு கிராம் அளவும் இதில் அடங்கும். ஆனால், உப்பு அதிகமாக சேர்க்கப்பட்ட ஊறுகாய், பிஸ்கெட், உப்புக்கடலை, அப்பளம், வற்றல்,

பதப்படுத்தப்பட்ட உணவுகள், சிப்ஸ் மற்றும் உப்பு, காரம் சேர்த்து வறுக்கப்பட்ட முந்திரி, பிஸ்தா, சாஸ், இன்ஸ்டன்ட் சூப் போன்றவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் ஒரு நாளைக்கு 10 கிராம் அளவு உப்பை நாம் உட்கொள்கிறோம். சுருக்கமாக சொன்னால், உப்பினால் செய்யப்பட்ட வெடிகுண்டைத்தான் நாம் தினமும் சாப்பிடுகிறோம்!

அதிகப்படியான உப்பினால் இதயம், சிறுநீரகங்கள், கல்லீரல் ஆகியவை செயல் இழப்பதோடு, ரத்த அழுத்தம், பக்கவாதம் போன்ற நோய்கள் ஏற்படும் அபாயமும் உண்டு. வயிற்றில் புற்றுநோய் வரும் வாய்ப்பு உள்ளது. அளவுக்கு அதிகமாக காரம் சேர்வதால், உணவுக்குழாய்களில் எரிச்சல், வீக்கம், புண் ஏற்படும். மேலும், நெஞ்சு எரிச்சல், GERD என்று சொல்லப்படும் Gastroesophageal reflux diseases ஆகிய பிரச்னைகளும் வரும்.

உலக சுகாதார நிறுவனம் வயதானவர்களுக்கான அளவாக 5 கிராம் உப்பையே பரிந்துரைத்துள்ளது. உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், கிட்னி, கல்லீரல், இதயம் ஆகிய உறுப்புகள் செயல் இழந்தவர்கள், உயர் ரத்தம் அழுத்தம் உள்ளவர்கள், அல்சரால் பாதிக்கப்பட்டவர்கள், நீரழிவு நோயாளி கள் ஆகியோருக்கு ஊறுகாய் கூடாது.

நெல்லிக்காய், இஞ்சி ஊறுகாய்களை அளவாக சேர்த்துக் கொள்ளலாம். நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நச்சுப்பொருட்களை அகற்றுகின்றது. டி.பி. நோயாளிகள் மாத்திரை சாப்பிடும்போது வரும் வாந்தியைக் கட்டுப்படுத்தக்கூடிய நார்த்தங்காய், எலுமிச்சை ஊறுகாயை சேர்த்துக் கொள்ளலாம். இஞ்சி ஊறுகாய் செரிமானத்துக்கு நல்லது.’’


Similar Threads: