காலை எழுந்தவுடன் வாசலில் கிடைக்கும் செய்தித்தாளை ஒரு கையிலும், மற்றொரு கையில் சூடான காபி டம்பர் என்றுதான் பலருடைய காலை வேளை ஆரம்பமாகிறது. காலை வேளையில் பால்காரன் பாலைக் கொடுக்கத் தவறிவிட்டால் அப்பப்பா வீட்டில் தான் என்ன ஆர்ப்பாட்டம். காபீனின் தன்மை அப்படிப்பட்டது. காபி அல்லது டீ குடித்து உடம்பை பழக்கிவிட்டால் அந்த நேரத்துக்கு கிடைக்காவிட்டால் மனத்தை பாதிக்கும் தன்மை உடையது. மனத்தை மட்டுமா பாதிக்கும்? தலைவலி வருவது போல் இருக்கும். அசதியாக இருக்கும். இன்னும் பலருக்கு உடல் நடுக்கம் போன்ற அறிகுறிகளும் ஏற்படலாம்.
உடலுக்கும் மனத்துக்கும் புத்துணர்ச்சி தரும் ஒரு கப் காபியில் 80 120 mg கஃபீன் (Caffine) அடங்கியுள்ளது. தேநீரில் 30-65 mg கஃபீன் உள்ளது. கஃபீன் என்ற வேதியப் பொருள் மூளையில் ஆல்பா அலைகளை தாக்கி மூன்று அல்லது நான்கு மணி நேரம் வரை உடம்பையும் மனத்தையும் உற்சாகப்படுத்தி விழிப்புடன் வைத்திருக்கும். அந்த நான்கு மணி நேரம் முடிந்துவிட்டதும் டீ, காபியை நாடுகிறது மனம்.
கஃபீனுடன், டானின் (Tannin) என்ற வேதியப் பொருள் காபி, டீயில் இருக்கிறது. இந்த டானின் உணவில் உள்ள சத்துக்களை, முக்கியமாக இரும்பு மற்றும் சுண்ணாம்புச் சத்து உடம்பில் சேரவிடாமல் தடுக்கின்றது. உணவு சாப்பிட்ட ஒரு மணி நேரம் வரை, அல்லது உணவு சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவோ டீ, காபி குடிக்கக் கூடாது. ஆனால் நம்மில் எத்தனைப் பேர் சாப்பிட்டதும் டீ, அல்லது காபி என்று நாடுகிறோம். முக்கியமாக ரத்தச் சோகையில் பாதிக்கப்பட்டவர்கள் டீ, காபியை உட்கொள்ளக் கூடாது. கஃபீன் இதய துடிப்பை அதிகரித்து ரத்த அழுத்தத்தையும் அதிகரிப்பதால் இதய நோயாளிகளும் இதை தவிர்ப்பது நல்லது. எலும்புகளில் இருந்து சுண்ணாம்புச் சத்தை வெளியேற்றி எலும்புகளையும் பற்களையும் பலவீனப்படுத்துவதால் நல்ல ஆரோக்கியத்திற்கு இவற்றை தவிர்ப்பது நல்லது.
ஒரு நாளைக்கு இரண்டு கப் (அதாவது ஒரு கப் என்பது 100 ml ) அளவுடன் நிறுத்திவிட்டால் உடல்நலம் கெடாது. இந்த அளவை தாண்டிவிட்டால் நோய்கள் தாக்குவதற்கு வாய்ப்பு அதிகம் இருக்கும். குடல்புண், மூட்டு வலி, அதிக உடல் பருமன், இருதய படபடப்பு என்று நோய்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
இந்த கஃபீன் கோடைக்காலத்தில் ஈரப்பதத்தை குறைத்து (dehydration) தாகத்தை அதிகரிக்கும். ஒரு முறை ஒரு பெண்மணி என்னிடம் அதிக உடல் எடையை குறைப்பதற்கான ஆலோசனைக்காக வந்தார். அவர் என்னிடம் நான் காலையில் டிபன் கூட சாப்பிடுவதில்லை. வீட்டு வேலைகளை முடித்தபிறகு இரண்டு மணிக்கு சிறிய அளவு சாதம் தான் சாப்பிடுகிறேன். இரவு நேரமும் இரண்டு அல்லது மூன்று சப்பாத்தி தான். ஏனோ தெரியவில்லை உடல் எடை அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்று வருத்தத்துடன் தெரிவித்தார். அவருடைய மருத்துவ மற்றும் டயட் வரலாற்றினை முழுமையாக எடுத்த பிறகு நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை கப் காபி அல்லது டீ குடிப்பீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் ஆறு அல்லது ஏழு சிறிய கப் என்று பதிலளித்தார். அந்த ஆறு கப்பில் குறைந்தபட்சம் ஒரு தேக்கரண்டி சர்க்கரையைச் சேர்த்துக் குடிப்பார் என்றும் கூறினார். ஒரு தேக்கரண்டி சர்க்கரை 20 K cal அளிக்கிறது. இப்போது ஆறு தேக்கரண்டிக்கான கணக்கை நீங்களே போடுங்கள். முதலில் இந்தப் பழக்கத்தை நிறுத்துமாறு கூறினேன். ஒரே மாதத்தில் இரண்டு கிலோ எடையை குறைத்துவிட்டார் அந்த பெண்மணி.
இந்தப் பழக்கத்தை சிறிது சிறிதாக மாற்றிக் கொள்ள வேண்டும். பாலுடன் இஞ்சி, அல்லது துளசி சேர்த்து தேநீராக தயாரித்து உண்டால் சுவையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்

Similar Threads: