ஒரு தாய் ஒரு முறை என்னிடம் வந்து, பள்ளிக்குச் செல்லும் என் எட்டு வயது குழந்தை அதிக உடல் பருமனுடன் இருப்பதால் மற்ற குழந்தைகள் அவனை கேலி செய்கிறார்கள். இதனால் பால் உணவில் சேர்ப்பதை நிறுத்திவிட்டேன். அதற்கு பதிலாக பழச்சாறு கொடுக்கிறேன் என்று கூறினார். பால் கொடுப்பதால் எடை உயரும் என்று நம்பும் பலருடைய கவனத்திற்கு சில அறிவியல்பூர்வமான உண்மைகளை கூற விரும்புகிறேன்.
பசும்பால் ஒரு நல்ல புரதம் நிறைந்த உணவு மட்டுமல்ல, சுண்ணாம்புச் சத்தும் நிறைந்துள்ளது. வளர்சிதை மாற்றங்களுக்கு தேவையான உயர்தர புரதம் பாலில் மட்டுமே காணப்படுகிறது.
உடல் வளர்ச்சி 21 வயது அடைந்ததும் முழுமை பெறுகிறது. அதுவரை குறைந்தபட்சம் எல்லோரும் தினமும் 2 கப் (100 ml 1 கப்) அளவாவது உட்கொள்ள வேண்டும். 21 வயது முடிந்ததும் எலும்பு மற்றும் பற்களின் பராமரிப்புக்கு பால் மிகவும் அவசியமான உணவாகும்.
பாலில் டிரிப்டோபேன் (Tryptophan) என்ற அமினோ அமிலம் இருப்பதால் நரம்பு போதிய அளவு டிரிப்டோபேன் உடம்பில் சுரக்கப்படாததால் தூக்கமின்மை போன்ற பிரச்னை உருவாகலாம். தூங்க செல்வதற்கு முன் ஒரு டம்ளர் அல்லது கப், பால் அருந்திவிட்டு பத்து நிமிடம் கழித்து தூங்கச் சென்றால் நல்ல ஆழ்ந்த உறக்கம் கிடைக்கும்.
பாலில் இருக்கும் lactose (லாக்டோஸ்) சிலருக்கு ஒவ்வாமை ஏற்படுத்தலாம். இது பெரும்பாலும் குழந்தைகளிடையே காணலாம். இந்தப் பிரச்னை இருக்குமானால் பாலுக்குப் பதிலாக மோர், தயிர் போன்ற உணவுகளைச் சேர்த்துக் கொள்ளலாம். பாலை நன்கு காய்ச்சி மேலே படியும் ஏட்டினை நீக்கிவிட்டால் பாலின் கொழுப்புத்தன்மை குறைந்துவிடும். உடல் பருமன் உடையவர்களும், பெரியவர்களும் தினமும் உணவுடன் தயிர், அல்லது மோரை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
காபி, டீக்கு பதிலாக மோர் குடிக்கலாம். பல்வேறு பழங்களில் இருந்து சாறு தயாரிப்பது போலவே நாம் பழங்களுடன் பால் அல்லது தயிரை சேர்த்து லஸ்சிகளை தயாரித்து குழந்தைகளுக்கு அளிக்கலாம். பழங்களின் சத்துகளுடன் பால் அல்லது தயிரின் சத்துக்களும், சுவையும் சேர்வதால் சிறந்த ஊட்டச்சத்து மிக்க பானமாகவும் குழந்தைகளுக்கு ஏற்றதாகவும் அமைகிறது.
உங்கள் தோல் பளபளக்கவும், முடி உதிராமல் இருக்கவும், சுருக்கங்கள் விழாமல் இருக்கவும் தினமும் உணவில் தயிரை சேர்த்துக் கொள்ளுங்கள் தயிரில் லாக்டோபாஸிஸ் (Lactobacillus) என்ற நுண்கிருமிகள் குடல் பகுதியில் அல்சரை உருவாக்கும் கிருமிகளின் வளர்ச்சியைத் தடுக்கிறது. செலினியம் என்ற நச்சுப்பொருட்களை வெளியேற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் தயிரில் அதிகமாக உள்ளதால் புற்றுநோய் வருவதைத் தடுக்க வல்லது.
குழந்தைகளுக்கு சிறுவயதிலிருந்தே தயிரை உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திவிட வேண்டும். முக்கியமாக வயிற்றுப் போக்கு ஏற்பட்ட குழந்தைகளுக்கு தயிர் மற்றும் மோரை கொடுப்பதால் குடலில் வெளியேற்றப்பட்ட உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான நுண்கிருமிகளை மறுபடியும் குடலில் உற்பத்தி ஆவதற்கு ஏதுவாகிறது.
(Paneer) பன்னீர் என்று அழைக்கப்படும் பாலாடைக் கட்டியும் உடலுக்கு நல்ல புரதத்தை அளிக்கிறது. எடை குறைவாகவும், நோய் எதிர்ப்புத் தன்மை குறைவாக இருக்கும் குழந்தைகளுக்கும் பால்கட்டியை உணவில் சேர்த்துக் கொடுப்பதால் எடை உயர்ந்து, தொற்று நோய்கள் அண்டாமல் பார்த்துக் கொள்ளலாம்.
புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொள்பவர்கள் மோரை கண்டிப்பாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இருதய நோய் மற்றும் அதிக உடல் பருமன் உடையவர்கள் பாலில் படியும் ஏடை நீக்கிவிட்டு உட்கொள்ளலாம்.

Similar Threads: