நமக்கு நோய் என்று ஒன்று வந்தால், உடனே டாக்டரைப் போய் பார்க்கிறோம். மருந்துச் சீட்டை அவர் எழுதியவுடன் நாம் டாக்டரிடம் கேட்கும் முதல் கேள்வி, ‘டாக்டர் என்ன சாப்பிடலாம்?’ எல்லா நோய்களுக்கும் மருந்துடன் உணவும் நோய் தீர்க்கும் ஒரு முக்கியப் பங்கை வகிக்கிறது என்பதை நாம் தெளிவாகப் புரிந்துகொண்டு இருக்கிறோம். சில நோய்களுக்கு உணவே மருந்தாக அமைகிறது என்பதை நாம் சமீப காலமாக மறந்துவிட்டோம்.
சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா நாட்டுக்குப் பயணம் சென்றிருந்தேன். அப்போது வர்ஜீனியா என்ற நகரத்தில் என் தங்கை வீட்டில் தங்கி இருந்தேன். என் தங்கையின் கணவரின் அலுவலகத்தில் பணியாற்றிய HOW என்ற பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த நண்பர் ஒருவர், எங்களை அவருடைய வீட்டுக்கு அழைத்தார். நாங்களும் சென்றோம். பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டோம். நல்ல உபசரிப்பு. சாப்பிட்டு முடித்து வீடு கிளம்பும்போது, ஹெளவின் மனைவி உள்ளே சென்று ஒரு அழகான சிவப்பு நிறப் பையில் ‘a small gift’ என்று சொல்லி என்னிடம் கொடுத்தார். நானும் புன்முறுவலுடன் நன்றி கூறி வாங்கிக்கொண்டேன். காரில் ஏறி வீடு திரும்பும்போது, அந்தப் பையில் என்ன உள்ளது என்ற ஆர்வத்தில் அதைப் பிரித்துப் பார்த்தேன். ‘Healthy cookery’ என்று எழுதப்பட்ட அந்த அழகிய பையில், நம் சமையலுக்கு உதவும் மஞ்சள் தூள் ஒரு பாக்கெட்டும், அதே அளவு சீரகம் ஒரு பாக்கெட்டும் இருந்தது. ஆச்சரியத்தில் மெளனமாகச் சிந்திக்க ஆரம்பித்தேன்.
மஞ்சளே சேர்க்காமல் சமைக்கப்படும் துரித உணவுகளின் மீது என் மனம் சென்றது. எந்த விஷயமாக இருந்தாலும், அது அமெரிக்காவிலிருந்து வந்தால் அதற்கு நாம் தரும் தனி மதிப்புதான் என்ன? நம் நாட்டுச் சமையலில் மஞ்சள் இல்லாமல் சமைத்ததே இல்லை. இந்த மஞ்சளின் பெருமை தற்போது உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டது. மஞ்சளில் இருக்கும் ‘Curcumin’ என்ற வேதிப் பொருள், நூற்றுக்கும் மேலான புற்றுநோய் வகைகளைத் தடுக்கவல்லது. ஒருவகைக் குடல் புற்றுநோய், இந்த மஞ்சளை உபயோகிப்பதால் இந்தியர்களைத் தாக்குவதில்லை. மஞ்சள் காமாலை நோயாளிகள், மஞ்சளை உணவில் சேர்க்கக்கூடாது என்பது ஒரு மூடநம்பிக்கை. உணவில் சேர்க்கும் மஞ்சளுக்கும் உடம்பில் வரும் மஞ்சள் காமாலை நோய்க்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அடுத்ததாக, சீரகத்தின் நன்மைகளைப் பார்ப்போம்.
வயிறு சம்மந்தமான எல்லா நோய்களுக்கும் சீரகம் ஒரு நல்ல ஒளஷதம். நோய் எதிர்ப்புத்தன்மையுடன் வயிற்றுப் புண்களையும் ஆற்றும் தன்மை பெற்றது. ஒரு அரை டீஸ்பூன் சீரகத்தை வாயில் போட்டு சிறிது சிறிதாக மென்றால் வாய் துர்நாற்றம், குடல்புண் போன்ற பிரச்னைகளிலிருந்து முழு தீர்வு பெறலாம்.
கொலஸ்ட்ரால் உள்ளவர்களும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களும், தினமும் ஒன்றரை டீஸ்பூன் வெந்தயத்தை காலையிலும் மாலையிலும் உட்கொள்வதால் சிறந்த பயன் அடையலாம். இதை உணவு உட்கொள்வதற்கு அரை மணி நேரத்துக்கு முன் உட்கொள்ள வேண்டும். வெந்தயத்தை தண்ணீரில் ஊறவைத்தும் சாப்பிடலாம் அல்லது லேசாக வறுத்து தூளாக்கி நீரிலோ மோரிலோ கலந்து உட்கொள்ளலாம்.
சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்குள் வந்தால் சாப்பிடும் அளவை, சிறிது சிறிதாகக் குறைத்துவிடலாம். இதை உட்கொள்ளும்போது, நோய்க்கான மருந்துகளை நிறுத்தக்கூடாது.
‘பூண்டைத் தின்றவர் ஆண்டை வென்றார்’ என்பது பழமொழி. ஆனால், புதிய ஆராய்ச்சிகள் என்ன சொல்கின்றன? பூண்டிலிருக்கும் ஒருவகை நார்ச்சத்து, இதயத்தைப் பலப்படுத்தி நீண்ட ஆயுளைக் கொடுக்கும் என்று உறுதிப்படுத்துகின்றன. பூண்டு ஒரு உணவாகவும், மூலிகையாகவும் மருந்தாகவும் பயன்படுகிறது.
ரத்தக்குழாயில் கொழுப்பு படிவதை பூண்டு தடுக்கிறது. வைட்டமின் சி சத்தும் அதிகமுள்ளது. இதில் இருக்கும் ஒருவகைச் சத்து, தாய்ப்பால் அதிகம் சுரக்க உதவுகிறது

Similar Threads: