தண்ணீரே ஆனாலும் அளந்து குடி


நீர் நம் உயிர்!


அளவுக்கு மிஞ்சினால் அமிர்தம் மட்டுமல்ல... தண்ணீர்கூட நஞ்சுதான்’ என்கிறது லேட்டஸ்ட் மருத்துவத் தகவல் ஒன்று. தேவைக்கு அதிகமாக தண்ணீர் குடிக்கும் போது அது சிறுநீரகங்களுக்கு சுமையை அதிகரிக்கும் என்பதே காரணம் என்று அதற்கு விளக்கமும் தருகிறது. உண்மையா? சிறுநீரக நோய் நிபுணர் பிரகலாத் தெளிவுப்படுத்துகிறார்.

``ஒரு நாளைக்கு நமது உடலில் 15 லிட்டர் சிறுநீர் தயாராகிறது. ஆனால், ஒன்றரை லிட்டர் சிறுநீர் மட்டுமே உடலில் இருந்து வெளியேற்றப்படுகிறது. அப்படியானால் எஞ்சியுள்ள அளவு வியர்வை, வாந்தி, உடல் உபாதைகளின் போது மட்டுமே வெளியேறும். நமது உடலின் தேவைக்கேற்ப அதன் பயன்பாடும் இருக்கும். ஒரு நாளைக்கு 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடித்தால் போதுமானது. தாகம் ஏற்பட்டால்தான் குடிக்க வேண்டும் என்றில்லாமல், காலை, மதியம், இரவு என சமமாக பிரித்து தண்ணீர் அருந்தலாம். 4 லிட்டர் அல்லது அதற்கு அதிகமாக தண்ணீர் குடிப்பவர்களுக்கு சிறுநீரின் வீரியமானது குறைந்துவிடும்.


நிறைய தண்ணீர் குடிப்பதால் சிறுநீரகங்களில் உள்ள `மெடுல்லரி கான்சன்ட்ரேஷன் கிரேடியன்ட்’ (Medullary concentration gradient) சரியாக வேலை செய்யாது. தேவையான நீரை எடுத்துக் கொண்டு தேவையில்லாத நீரானது சிறுநீராக வெளியேறும். அதுதான் இயல்பானது. நிறைய தண்ணீர் குடித்தால் உடலில் நீர்ச்சத்துகள் தங்காமல், அதுவும் சேர்ந்து சிறுநீரில் வெளியேறி விடும். இது உடலுக்கு நல்லதல்ல. சிலருக்கு மரணம் வரை கொண்டு சென்றுவிடும் அபாயமும் இதில் இருக்கிறது.

அதனால் தேவையான அளவு தண்ணீர் குடிப்பதே நல்லது. சிலர் தண்ணீருக்கு பதிலாக ஜூஸ், ஏரியேட்டட் பானங்கள் என குடிப்பார்கள். இதனால் சுண்ணாம்புச் சத்தானது கரையாமல் சிறுநீரகத்தில் சேர்ந்து சிறுநீரகக் கற்களை உருவாக்கிவிடும். தாகம் எடுத்தால் தண்ணீர்தான் குடிக்க வேண்டுமே தவிர, பிற குளிர்பானங்களை குடிக்கக் கூடாது...’’

-


Similar Threads: