கானா வாழை

சித்த மருத்துவர் சக்தி சுப்பிரமணியன்

மிக்க நிலப்பகுதிகளில் செழிப்பின் அடையாளமாக விளங்கும் ஒரு பூண்டு இனமே கானா வாழை. வாழை மரத்தைப் போன்ற இலைகள் கொண்டவை என்பதாலும், அடிக்கன்றுகள் ஈன்று தன்னை அபிவிருத்தி செய்து கொள்வதானாலும் ‘கானா வாழை’ என்று பெயர் பெற்றுள்ளது. சிறிய நீல நிறப் பூக்களைக் கொண்டிருக்கும் கானா வாழையை கீரைபோல சமைத்து உண்பது வழக்கம். இதன் இலைகளை மாவில் துவைத்து பஜ்ஜி செய்து உண்பதும் உண்டு.



கண்களுக்கு அழகான தாவரமாகவும், நாவிற்கு ருசியான உணவாக மட்டுமேஅல்லாமல் உன்னதமான மருந்தாகவும் நமக்குப் பயன்படக்கூடியது கானா வாழை. Commelina benghalensis என்பது கானா வாழையின் தாவரப் பெயர் ஆகும். ஆங்கிலத்தில் Benghal dayflower என்று அழைக்கிறார்கள். ஆயுர்வேதத்தில் கர்ணமோரட்டா என்று குறிப்பது வழக்கம். இதன் இலைகள் வழவழப்புத்தன்மை கொண்டு சற்று தடிப்புடையதாகவும், தண்டுகள் வாழையைப் போல மிக்க நீர்ச்சத்து உடையதாகவும் இருக்கும். ஒரு முறை வேர் ஊன்றிவிட்டால் பல ஆண்டுகளுக்குக் கூட தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் திறன் கொண்டது கானா வாழை. ஒரு செடி சுமார் 1600 விதைகளை உற்பத்தி செய்து அபிவிருத்தி செய்துகொள்ளும் என்று தாவரவியலாளர்கள் குறிப்பிடுகிறார்கள். கானா வாழை பற்றிய அகத்தியர் பாடல்

‘கானாம்வா ழைக்குமுலைக் கண்குழிப்
புண் ஆறும்
ஆனாலும் போகம் அதிகரிக்கும் - மானே
கேள்
ஐயம் விளையும் அனல்தணியும் நீங்காத
பையுதிர மாறுமுன்னிப் பார்.’

தாய்மார்களின் மார்பகத்தில் உண்டாகும் கட்டிகள், எரிச்சல், வலி, வீக்கம், புண் ஆகிய பிரச்னைகளுக்கு கானா வாழை அருமருந்தாகும். கானா வாழையை சமூலமாக எடுத்து (இலை, வேர், தண்டு, பூக்கள் அனைத்தும் சேர்ந்தது) நன்றாக அரைத்து பற்றாகப் போட்டுக்கொள்வதன் மூலமோ அல்லது கட்டி வைப்பதானாலோ வேதனையிலிருந்து விடிவு ஏற்படும். தாம்பத்திய உறவில் உணர்வைத் தூண்டி உற்சாகம் தரும். மேலும், உடலின் வெப்பத்தைச் சீர் செய்து தணிக்கக் கூடியது. ரத்தப்போக்கு, ரத்தக் கசிவை நிறுத்தும் தன்மை மிக்கது கானா வாழை என்பதே மேற்கண்ட அகத்தியரின் பாடலுக்குப் பொருள்.

கானா வாழையின் மருத்துவத் தன்மைகள் நாட்டு மருத்துவத்தில் கானா வாழை புத்துணர்வு தரும் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இதில் இருக்கும் வேதிப்பொருட்கள் நோய் உண்டாக்கும் நுண்கிருமிகளை ஒழித்துப் புண்களை விரைவில் ஆற்றும் சக்தி படைத்தது என்பதைப் பழங்குடி மக்களும் பழகிய தமிழரும் புரிந்து ைவத்திருந்தனர். கானா வாழையின் தண்டுகள் மாவுச்சத்தும், மியூசிலேஜ் என்ற நீர்ச்சத்தும் மிகுதியாகக் கொண்ட ஒன்று. புரதச்சத்தின் கருவூலமாகவும் இது திகழ்வதால் கால்நடைகளுக்கும் பிரியமான தாவரமாக விளங்குகிறது. கன்றுக்குட்டிகள் கானா வாழைப்புல்லை விரும்பி உண்பதால் ‘கன்றுக்குட்டிப் புல்’ என்றே இதற்குப் பெயரும் உண்டு. இளங்கன்றுக்குட்டிகள் தாய்ப்பாலை மறக்க வேண்டியும், அதிகளவு பாலைக் கொள்முதல் செய்ய வேண்டியும் கன்றுக்குட்டிகளுக்கு கானா வாழையை நம்மவர்கள் பயன்படுத்துகிறார்கள். கானா வாழை காய்ச்சலைப் போக்கக்கூடிய ஓர் அற்புத மூலிகை. ரத்தத்தைத் தூய்மைப்படுத்தும் மருத்துவ குணம் மிக்கது. சிறந்த சிறுநீர் பெருக்கியாகவும் உடலினுள் ேதங்கிக் கிடக்கும் உப்புச்சத்தை வெளியேற்றும் துப்புரவுப் பணியாளனாகவும் பயன்படுகிறது. சிறுநீரகப் பைகள், கல்லீரல் மற்றும் மண்ணீரல், நுரையீரல், இரையறை ஆகியவற்றுக்கு பலம் தருவதோடு அவற்றின்
கோளாறுகளை சீர் செய்வதாகவும் விளங்குகிறது.

தொழுநோய்கள் உள்பட பல சரும நோய்களுக்கு சிறந்த மருந்தாகிறது. கால்களில் நீர் தேங்கி வீக்கமும் வலியும் செய்கிற வாத நோயில் கானா வாழை கை வந்த மருந்தாக நோயைத் தணிக்கிறது. கானா வாழையை கீரையாக உள்ளுக்குச் சாப்பிடுவதாலும் கானா வாழைச்சாற்றை மேலுக்கு பூசி வைப்பதாலும் வீக்கமும் வலியும் கரைந்து போகும். மேலை நாட்டு மருத்துவர்கள் கானா வாழைக்கு வற்றச் செய்யும் தன்மையும், உள்ளழல் ஆற்றும் தன்மையும் உள்ளது என்று தெரிவிக்கின்றனர். ஹவாய் மற்றும் ஜப்பான் தேசத்தவர்கள் கானா வாழை ஓர் உடல் தேற்றியாகவும், உடலில் தேங்கிய நச்சுகளை நீக்கியாகவும் பயன்படுகிறது என்று தெரிவிக்கின்றனர். இந்திய மருத்துவர்கள் கானா வாழையை வாந்தியுண்டாக்கியாகவும், மாதவிலக்குத் தூண்டியாகவும் நெஞ்சகச் சளியைக் கரைக்கக்கூடியதாகவும், காய்ச்சல் தணிப்பானாகவும், ரத்தத்தை உறைய வைக்கும் தன்மை மிக்கதாகவும், மலமிளக்கியாகவும் பயன் தருகிறது என்பர்.

எகிப்து தேசத்தவரும் சீனரும் இது உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது என்றும் உடலுக்கு உரம் தரவல்லது என்றும் தெரிவிக்கின்றனர். சீன மருத்துவர்கள் கானா வாழையை உடலின் ரத்தத்தில் மிகுந்துள்ள உஷ்ணத்தைத் தணிக்கவும், ரத்தக்கசிவைத் தடுக்கவும் மருந்தாகப் பயன்படுத்துகின்றனர். மேலும் குளிர்காற்றின் விளைவுகளைப் போக்கவும், வீக்கத்தைக் கரைக்கவும் வலியைப் போக்கவும், நெஞ்சகக் கோளாறுகளை நீக்கி சுவாசப் பாதையைச் சீர் செய்யவும் மருந்தாகப் பயன்படுத்துகின்றனர். கானா வாழையைப் பொதுவாக உலகம் முழுவதிலுமே சிறுநீர்ப் பாதையில் ஏற்பட்ட தொற்றுகளைப் போக்கவும், நுரையீரலினுள்ளும் சுவாசப் பாதையினுள்ளும் ஒட்டிக் கொண்டு துன்பம் செய்யும் சளியை நீக்கி ஆரோக்கியத்தை நிலைநிறுத்தும் வகையிலும், கண்கள் சிவந்து எரிச்சல் ஏற்படும்ேபாது இயல்பு நிலைக்குக் கொண்டு வரும் பொருட்டு மேற்பற்று மருந்தாகவும், ரத்தக் கசிவைத் தடுத்து நிறுத்துவதற்கான மேற்பற்று மருந்தாகவும் பயன்படுத்தி வருகிறார்கள்.கானா வாழை மருந்தாகிப் பயன்தரும் விதம்

* கானா வாழையைச் சாறு எடுத்து அல்லது நீரில் இட்டு தீநீர் ஆக்கி வாய் கொப்புளிப்பதால் வாயில் பற்றித் துன்பம் தருகிற நோய்க்கிருமிகள் விலகும். இதனால் தொண்டைக் கட்டு, தொண்டைக் கம்மல், தொண்டை அழற்சி, குரல்வளை தொடர்பான தொல்லைகள் அகன்று போகும்.

* சுமார் 20 மி.லி. அளவு கானா வாழைச் சாற்றை உள்ளுக்குக் குடிப்பதாலோ அல்லது தீநீர் இட்டுக் குடிப்பதாலோ ரத்தக்கழிச்சல் வயிற்றுப்புண்ணால் வயிற்றில் ஏற்படும் ரத்தக்கசிவு, ஆசன வாயினின்று கசியும் ரத்தம் ஆகியன கட்டுப்படுவதோடு அதற்கான நோயும் குணப்படும்.

* கானா வாழை இலையைக் கைப்பிடி அளவு எடுத்து அதனோடு பத்து மிளகுத் தூள் சேர்த்து சுவைக்காக பனை வெல்லமோ உப்போ சேர்த்துத் தீநீராக்கிக் குடிப்பதால் கடுமையான காய்ச்சல் காணாது போவதோடு வலியும் விலகும்.

* கானா வாழையை வேருடன் எடுத்து அதற்குச் சமமான அளவு அறுகம்புல் சேர்த்து அரைத்து அந்தி சந்தி என தினம் இருவேளை நெல்லிக்காய் அளவு உண்டு வர விரைவில் ரத்த, சீதபேதி நின்றுவிடும்.

* கானா வாழை இலையுடன் சம அளவுக்கு கீழ்க்காய் நெல்லி சமூலத்தைச் சேர்த்து நன்கு மைபோல அரைத்துப் புளிப்பில்லாத புதிய தயிரில் கலந்து தினம் மூன்று வேளை என உள்ளுக்குக் கொடுப்பதால் பெண்களின் வெள்ளைப்போக்கு விரைவில் குணமாகும்.

* பால்வினை நோயால் பாதிக்கப்பட்ட ஆண்களின் இந்திரிய ஒழுக்கு கூட அடங்கிப் போகும்.

* கானா வாழை இலையை அரைத்து அதனோடு சிறிது மஞ்சள் தூள் கலந்து நன்கு குழைத்துப் படுக்கைப் புண்கள் மேல் பூச்சாகப் பூசுவதாலும் அல்லது கானா வாழை இலையை நிழலில் உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு புண்களின் மேல் தூவி வருவதாலும் படுக்கைப் புண்களும் நாள்பட்ட புண்களும் ஆறிப்போகும்.

* கானா வாழை இலையைக் கசக்கிச் சாறு பிழிந்து அதனோடு சிறிது மஞ்சள் சேர்த்து முகப்பருக்களின் மேல் பூசி வர விரைவில் பருக்கள் உடைந்து காயம் ஆறிப்போகும்.

* கானா வாழையை அடிக்கடி உண்டு வந்தால் புற்றுநோய், நெறிக்கட்டி நோய் தடுக்கப்படும்.

கண்டும் காணாமலும் நாம் கடந்துபோகிற, கால்நடைகள் உணவாகப் பயன்படுத்துகிற புல் இனம் என்று நாம் நினைக்கும் கானா வாழையில் இத்தனை சிறப்புகளை இறைவன் படைத்துள்ளான் என்பது வியக்கத்தக்கதுதான்! கானா வாழை காய்ச்சலைப் போக்கக் கூடிய ஓர் அற்புத மூலிகை. ரத்தத்தைத் தூய்மைப்படுத்தும் மருத்துவ குணம் மிக்கது. சிறந்த சிறுநீர் பெருக்கியாகவும் உடலிலுள் தேங்கிக் கிடக்கும் உப்புச்சத்தை வெளியேற்றும் துப்புரவுப் பணியாளன் ஆகவும் பயன்படுகிறது.