அளவுக்கு மிஞ்சினால் தண்ணீரும் நஞ்சு


நீர் நம் உயிர்!

சாதாரணமாக நடுத்தர வயது மனிதனின் உடலில் 60 சதவிகிதம் நீர் உள்ளது. மனிதன் உயிர்வாழ நீர் அவசியம். வளர்சிதை மாற்றம், பளபளப்பான சருமம் மற்றும் உடலுக்குத் தேவையான ஆற்றல் போன்றவற்றுக்கும் நாள்தோறும் போதுமான தண்ணீர் குடிப்பதும் மிக அவசியம்.

ஆனால், ‘டயட்டில் இருக்கிறேன்’ என்று பாட்டில் பாட்டிலாக தண்ணீர் அருந்துவது உயிருக்கே ஆபத்து என்கிறது ஆய்வு. தண்ணீர் குடித்து எடை குறைக்கலாம் என்று நினைத்து அதிகமாக தண்ணீர் அருந்துவது தவறு. ஒருநாளைக்கு எவ்வளவு தண்ணீர் அருந்தலாம் என்பதை அவரவரின் எடை, செய்யும் வேலையைப் பொறுத்தே தீர்மானிக்க வேண்டும்.

80 கிலோ எடை உள்ள ஒருவர் 200 கிலோ எடை உடையவர் அருந்தும் நீரின் அளவை எடுத்துக் கொள்ளக்கூடாது. 80 கிலோ எடை இருந்தால், தன் எடையில் பாதி அளவான 40 அவுன்ஸ் - அதாவது, சுமார் ஒன்றேகால் லிட்டர் தண்ணீர் அருந்தலாம்.

நீங்கள் செய்யும் வேலையைப் பொறுத்து குடிக்கும் நீரின் அளவை மாற்றிக் கொள்ளவேண்டும். ஏசி அறையில், கம்ப்யூட்டர் முன்பு மணிக்கணக்காக உட்கார்ந்து வேலை செய்பவராக இருந்தால் குறைந்த அளவே போதும். கடினமான வேலை மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்பவராக இருந்தால் 1/2 லிட்டர் தண்ணீரை கூடுதலாக அருந்துவது நல்லது.

உங்களால் சரியான அளவை பின்பற்ற முடியவில்லை என்றால், இதோ இந்த சின்ன விஷயங்களை கடைப்பிடித்தாலே நாளொன்றுக்கு தேவையான நீரை பருக முடியும்.காலை எழுந்தவுடன் 1 டம்ளர் தண்ணீர்அருந்துங்கள். உணவு வேளைக்கு அரைமணி நேரத்துக்கு முன் 2 டம்ளர் தண்ணீர் அருந்துங்கள்.

உறங்கச் செல்வதற்கு 2மணி நேரத்துக்கு முன்பு 1 டம்ளர் தண்ணீர் அருந்துங்கள்.வெளியில் செல்லும் போது உடன் ஒரு பாட்டில் தண்ணீர் எடுத்துச் செல்லுங்கள்.நீர்ச் சத்துள்ள காய்கறிகள் மற்றும் பழங்களிலிருந்தும் அதிகப்படியான நீர் கிடைப்பதால், நேரிடையாக அருந்தும் நீரின் அளவை குறைத்துக் கொள்ளலாம்.