கலப்பட பாலால் கணக்கில்லா பிரச்னைகள் !

வெண்மை புரட்சி அல்ல மிரட்சி!

‘இந்தியா முழுவதும் விநியோகிக்கப்பட்டு வரும் பாலில் 68 சதவிகித பால் தரமற்றது...’ - இச்செய்தியை ஏதேனும் ஓர் ஆராய்ச்சி நிறுவனம் தனது ஆய்வின் முடிவாகக் கூறியிருந்தால் கூட நாம் இந்த அதிர்ச்சிக்கு ஆளாகியிருக்க மாட்டோம்.


மக்களவையில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் இச்செய்தியை கூறியதுதான் பலரையும் பீதிக்கு உள்ளாக்கியிருக்கிறது. உணவுப்பொருள் ஒழுங்குமுறை அமைப்பு நடத்திய ஆய்வில் பல்வேறு காரணங்களுக்காக பாலில் வெள்ளை பெயின்ட்,காஸ்டிக் சோடா, குளுக்கோஸ் ஆகியவை கலக்கப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது.

பால் என்பது பல்வேறு வடிவங்களில் தினசரி நாம் நுகரும் பொருளாக மாறி விட்ட இச்சூழலில், இப்படிப்பட்ட அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது. பல்லாயிரம் கோடிகள் புழங்கும் தொழிலாக பால் உற்பத்தி ஆன பிறகுதான் இப்படியான கலப்படங்களை நாம் சந்திக்கிறோம். ``கலப்படங்கள் மேற்கொள்ளப்பட்ட பாலைக் குடிப்பதன் மூலம் நாம் கணக்கில்லாத அளவுக்கான உடல் நலப் பிரச்னைகளுக்கு ஆளாக நேரிடும்’’ என்கிறார் இரைப்பை மற்றும் குடல் அறுவை சிகிச்சை நிபுணர் ராதாகுமார்.

‘‘மூன்று காரணங்களுக்காக பாலில் கலப்படங்கள் நிகழ்த்தப்படுகின்றன. முதலாவது பாலின் வெண்மை மற்றும் அடர்த்திக்காக. மாட்டுப்பால் வெள்ளையாக இருக்காது. வெள்ளையும் மஞ்சளும் கலந்த நிறத்தில்தான் இருக்கும். பாக்கெட் பாலோ பளீரென வெள்ளையாக இருக்கிறதே எப்படி? அதற்காக Hydrogen peroxide எனும் ப்ளீச்சிங் மெட்டீரியலை பயன்படுத்துகின்றனர். பாலின் அடர்த்திக்காக மாவு, குளுக்கோஸ், வெள்ளை பெயின்ட் ஆகியவை சேர்க்கப்படுகின்றன. பாலின் அமில - காரத்தன்மையை சரியான அளவுக்குள் கொண்டு வருவதற்காக காஸ்டிக் சோடா, அமோனியம் குளோரைடு, சோடியம் குளோரைடு, யூரியா ஆகியவை கலக்கப்படுகின்றன.

பால் கெட்டுப்போகாமல் பதப்படுத்துவதற்காக, பிணவறையில் பிணங்களை பதப்படுத்தப் பயன்படுத்தப்படும் ஃபார்மலின் எனும் திரவத்தைப் பயன்படுத்துகின்றனர்.அடர்த்திக்காக கலக்கப்படும் மாவு சரியாக செரிமானம் ஆகாமல் வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும். பெயின்ட் வயிற்று
வலியை ஏற்படுத்தும். நீரிழிவு நோய் உள்ளவர்கள் குளுக்கோஸ் கலந்த பாலைக் குடிக்கும்போது ரத்த சர்க்கரை அளவு அதிகமாகும்.

அமில-காரத் தன்மைக்குப் பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்கள் உணவுக்குழாய், இரைப்பை ஆகியவற்றை அரித்து விடும். இதன் காரணமாக வயிற்றெரிச்சல், வாந்தி, வயிற்றுவலி ஆகியவை ஏற்படும். நமது உடலில் இயல்பிலேயே யூரியா இருக்கிறது. வெளியிலிருந்து அதிகப்படியான யூரியா உள்ளே செல்லும் நிலையில் அதை சிறுநீரகத்தால் தாங்கிக் கொள்ள முடியாது.

இதன் காரணமாக சிறுநீரகச் செயலிழப்பு ஏற்படலாம். ஃபார்மலின் திரவத்தை உணவுப் பொருட்களில் பயன்படுத்துவதற்குத் தடை இருக்கிறது. இது புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய காரணியான Carcinogenஐ உருவாக்கக் கூடியது. Hydrogen peroxide எனும் ப்ளீச்சிங் மெட்டீரியலில் இருந்து O3 எனும் வாயு வெளியேறுகிறது. அவ்வாயு உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும் பாதிக்கும். உறுப்புகளின் மேற்பகுதியை சிதைத்து விடும் அபாயமும் இருக்கிறது’’ என்கிறார் ராதாகுமார்.

மத்திய அமைச்சர் ஒருவரே மக்களவையில் இப்பிரச்னை குறித்துப் பேசியிருக்கிறார் என்றால், இதன் தீவிரத்தன்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மத்திய அரசு தனிக் கவனமெடுத்து இப்பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும். ஏனென்றால், பால் என்பது குழந்தைகளின் முக்கிய உணவாக இருக்கிறது.
Similar Threads: