வெயிட் போட உதவும் `வெரி குட்’ யோசனைகள்!


`சைஸ் ஜீரோ’வாக உடம்பைக் குறைக்க வேண்டும் என்று ஆசைப்படுவதைப் போலவே, `என்ன சாப்பிட்டாலும் வெயிட் போட மாட்டேங்கிறேனே!’ என புலம்புவோரும் இருக்கிறார்கள். இயற்கையான வழிகளில் உடல் எடையைக் கூட்ட நாம் கடைப்பிடிக்க வேண்டிய உணவுப் பழக்கங்கள் குறித்துப் பேசுகிறார் புதுச்சேரியை சேர்ந்த டயட்டீஷியன் மகிதா.
பால், பால் பொருட்கள் கைகொடுக்கும்!

உங்கள் உடல் வாகு மற்றும் உடல் அமைப்பை பொறுத்து தான் எடை கூடுவதில் சாத்தியம் இருக்கிறது. நோய் காரணமாகவும் உடல் எடை குறைந்து கொண்டே போகலாம். உடல் எடையை எப்படியாவது ஏற்றிவிட நினைத்து பீட்ஸா, பர்கர் என ஜங்க் ஃபுட்களை அதிகம் சாப்பிட்டு வேறு சில நோய்களை நீங்களே தேடிக் கொள்ளாதீர்கள். சரியான விகிதத்தில் புரதம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை முறையாக உட்கொண்டாலே எடை கூட்டலாம்.

உடல் எடையை அதிகரிக்க பால் ஒரு சிறந்த உணவு. தினமும் பால் அருந்துங்கள். பால் சுவை திகட்டினால் விதவிதமான பழ ஃப்ளேவர்களில் மில்க் ஷேக் செய்து பருகுங்கள்.

பால் பொருட்களான தயிர், மோர், வெண்ணெய், நெய், பனீர் இவற்றை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். சைவப் பிரியர்களுக்கு எடை கூட புரதம் மற்றும் இதர சத்துக்கள் அதிகம் உள்ள பால் பொருட்கள் நிச்சயம் கை கொடுக்கும்.

கடலை, டிரை ஃப்ரூட்ஸ், கிழங்கு எடை கூட்டும்!

முட்டையில் உள்ள மஞ்சள் கரு வேகமாக எடை அதிகரிக்க உதவும். கடலை, முந்திரி, பாதாம், கொண்டைக்கடலை போன்ற பருப்பு வகைகளும், உலர்ந்த திராட்சை போன்ற டிரை ஃப்ரூட்ஸையும் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். உணவாக எடுத்துக்கொள்ளாவிட்டாலும் ஸ்நாக்ஸ் போல இவற்றை அடிக்கடி அப்படியே சாப்பிடலாம்; அல்லது ஊறவைத்து உண்டு வரலாம்.

உருளைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, கருணைக்கிழங்கு போன்ற கிழங்கு வகைகளை நிறைய உட்கொள்ளுங்கள். அவ்வப்போது உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்று ஸ்நாக்ஸ் வகைகளாகவும் உட்கொள்ளலாம்.

புரதச்சத்து மற்றும் கொழுப்புச்சத்து அதிகம் இருக்கும் உணவுப் பொருட்களான சிக்கன், மட்டன் மற்றும் மீன் ஆகியவற்றை ரெகுலராகவும், முறையாகவும் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

பளபள மேனிக்கு... பழங்கள்!

பழங்கள் உடல் எடையை கூட்டுவதோடு மேனியை புத்துணர்ச்சியோடும் பளபளப்பாகவும் வைக்கும். பலாப்பழம், மாம்பழம், சப்போட்டா பழம் போன்றவற்றை அதிகம் உட்கொள்ளவும். குறிப்பாக, வாழைப்பழங்களை தினமும் உண்டு வரலாம். இது எடை கூட்டுவதோடு செரிமான பிரச்னைகள் ஏதேனும் இருந்தாலும் குணமாக்கிவிடும்.

கடல் உணவு பிரியர்களாக இருந்தால் நிறைய இறால் வகை உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். புரதமும், விட்டமினும், அமிலங்களும் ஊட்டச்சத்துக்களும் நிறைந்த இறால் எடையைக் கூட்ட உதவும்.

சோயா மாவில் பூரி, கோதுமை மாவில் சப்பாத்தி, சிவப்பு அரிசி என வயிறு நிறைய விதவிதமான சத்துள்ள உணவுப்பொருட்களை சாப்பிடுங்கள்.

உடல் எடையை கூட்ட மூன்று வேளை உணவு அவசியம். காலேஜ் போகிற அவசரத்திலோ அல்லது ஆபீஸ் பதற்றத்திலோ காலை உணவை நிச்சயம் ஸ்கிப் செய்யக் கூடாது. மூன்று வேளையும் வயிறார உண்பதே உடல் எடையைக் கூட்டுவதற்கு அடிப்படையான தேவை.

சாப்பிடும்போது பெரிய தட்டில் உணவை வைத்து ஆற அமர்ந்து, பதற்றமில்லாமல் ரசித்து உண்ணுங்கள். காய்கள் உட்பட எதையும் ஒதுக்கிவைக்காமல் சாப்பிடுங்கள்.

முறையான உணவுப் பழக்கத்தோடு தினமும் எளிதான உடற்பயிற்சிகள் சிலவும் செய்யுங்கள். இது உங்கள் உடலை உறுதியாக வைத்திருப்பதோடு நல்ல பசியையும் ஏற்படுத்தும்.

இரவில் நீண்ட நேரம் கண் விழித்து உடலை கெடுத்துக்கொள்ளாதீர்கள். இது உங்களை சூடாக்கி உடலின் மெட்டபாலிசத்தையே மாற்றும். சரியான அளவில் தூங்கி எழுந்து, முறையாக சாப்பிட்டு, மகிழ்ச்சியாக இருந்தாலே உடலும் விரைவில் சரியான எடைக்கு வந்துவிடும்.

சியர் அப் ஃப்ரெண்ட்ஸ்!


Similar Threads: