உணவு நல்லது வேண்டும்!



அக்ரூட் பருப்பு, அவகேடா பழம் என்பதெல்லாம் கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், விற்கிற விலைவாசியில் இதையெல்லாம் சாப்பிட முடியுமா என்ன ? அதேபோல், இன்றைய அவசர வாழ்வில் கார்போஹைட்ரேட் இவ்வளவு, புரதம் இவ்வளவு என்று அட்டவணை போட்டுத்தான் பின்பற்ற முடியுமா? இருக்கிற நிலைமையில் எது சாத்தியமான ஊட்டச்சத்து உணவு? உணவியல் நிபுணர் ஜோட்ஸ்னாவிடம் கேட்டோம்.


‘‘உண்ணும் உணவே நீங்கள்’ என்று பழமொழி ஒன்று இருக்கிறது. அந்த அளவுக்கு உணவுதான் நம் ஆரோக்கியத்தைப் பெரிதும் தீர்மானிக்கிறது. உணவுமுறையை ஒழுங்காகப் பின்பற்றாதவர்களே அதிகமாக நோய்த் தாக்கத்துக்கு ஆளாகிறார்கள் என்பதும் மறுக்க முடியாத ஓர் உண்மை. அப்படி என்றால், நம் உணவு பேலன்ஸ்டாக இருக்க வேண்டும்.

பேலன்ஸ்ட் டயட் என்பதற்கு சில கணக்கு இருக்கிறது. மாவுப்பொருளின் மூலம் 60 சதவிகித கலோரிகளையும், புரதத்தில் இருந்து 15 சதவிகிதத்தையும், கொழுப்பில் இருந்து 30 சதவிகிதத்தையும் வழங்க வேண்டும். இதற்காக அட்டவணை தயார் செய்து சாப்பிட்டுக் கொண்டிருக்க முடியாது. கலோரி என்பது ஓர் எண்ணிக்கை அவ்வளவுதான். நமக்குத் தேவையான இந்த கலோரிகளை எந்த உணவில் இருந்து வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.

எந்த வயதில் என்ன சாப்பிட வேண்டும், எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டால் போதும். காய்கறிதான் நல்லது, பழங்கள் மட்டுமே சாப்பிட்டால் போதும் என்றும் மிகைப்படுத்திக் கூறவேண்டியதில்லை.

பொதுவாக உணவில் ஒரு கப் சாதம் எடுத்துக்கொண்டால் காய்கறிகளை சிறிதளவே எடுத்துக் கொள்கிறோம். இது தவறு. ஒரு கப் சாதத்துக்கு இரண்டு கப் காய்கறிகள் எடுத்துக் கொள்வதே சரியானது. அசைவ உணவுகளில் அதிக கொழுப்பு இருப்பதால் அளவோடு எடுத்துக் கொள்வது நல்லது.

தேங்காய் எண்ணெய் பயன்பாட்டைப் பற்றி பயம் கொள்ளத் தேவை இல்லை. மற்ற எண்ணெய்கள் கூட கொதிக்க வைக்கும்போது தன்மை மாறிவிடும் குணம் கொண்டது. ஆனால், தேங்காய் எண்ணெய் கொதிநிலையிலும் மாறாத தன்மை கொண்டது என்பதால் சமையலுக்கு தாராளமாகப் பயன்படுத்தலாம்.

அத்துடன் கடலை எண்ணெய், நல்லெண்ணெய் என்று மற்ற எண்ணெய்களையும் சுழற்சி முறையில் பயன்படுத்துவது நல்லது. முக்கியமாக, எந்த எண்ணெயாக இருந்தாலும் அளவோடு பயன்படுத்த வேண்டும்’’ என்றவர், தற்போது நம் மக்களுக்குப் பிடித்தமான உணவாக எது இருக்கிறது என ஒரு சிறு ஆய்வு நடத்தியதையும் குறிப்பிடுகிறார்.

‘‘பள்ளி குழந்தைகளிடம் உங்களது பிடித்தமான உணவு எது என கேட்டபோது, அவர்கள் ஆரோக்கியமான உணவு எதையும் சொல்லவில்லை என்பது வருத்தத்துக்குரிய செய்தி. உருளைக்கிழங்கில் செய்யும் ஃப்ரென்ச் ஃப்ரைஸ், பீட்சா, பர்கர், சைனீஸ் உணவுகள் என இன்றைக்கு நடைமுறையில் உள்ள உணவுகளையே அடுக்கினார்கள்.

இந்த பதிலையே கல்லூரி மாணவர்களிடமும், பெரியவர்களிடமும் எதிர்கொண்டோம். இதனை வைத்துப் பார்க்கும்போது பெற்றோரிடம் இருந்துதான் பிள்ளைகள் கற்றுக்கொள்கிறார்கள் என்பது புரிந்தது. அதனால், உணவுப்பழக்கத்தை பெற்றோர்கள் முதலில் மாற்ற வேண்டும்’’ என்கிறார்.அப்படியானால் எந்த நேரத்தில் என்ன மாதிரியான உணவுகளைச் சாப்பிட வேண்டும்?

‘‘நாள் முழுக்க ஒரே உணவை சாப்பிடக்கூடாது. காலையில் அரிசி உணவான இட்லி, தோசை என்றால், மதிய உணவில் கோதுமை, கேழ்வரகு வேறு ஒன்றைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். காலை உணவுக்கும், மதிய உணவுக்கும் இடைப்பட்ட நேரத்தில் ஏதாவது ஒரு பழமோ, குளிர்ந்த மோரோ எடுத்துக் கொள்ள வேண்டும்.

பள்ளி செல்லும் குழந்தைகளின் பையில் நொறுக்குத் தீனிகளுக்குப் பதில் பழங்களை வைத்து அனுப்பும் பழக்கத்தையும் பெற்றோர் பின்பற்ற வேண்டும். பழங்களை உணவுகளோடு சேர்த்து சாப்பிடுவதைத் தவிர்த்து, உணவு நேரத்துக்கு இடைவெளியில் சாப்பிடுவது பலன் தரும். அதுவும் கடித்து சாப்பிடும்போது பழத்தின் நார்ச்சத்துகள் உட்பட எல்லா சத்துக்களும் முழுமையாகக் கிடைக்கும். மாலை வேளையில் அதிகமாக பசிக்கும். இந்த நேரத்தில் நொறுக்குத் தீனிகளை சாப்பிடாமல் கேழ்வரகு, கோதுமை அடை என காய்கறிகள் சேர்த்து சாப்பிடலாம்.

இரவு உணவில் புரதம் முக்கியம். எனவே, ஒரு காய்கறி சூப் செய்து சாப்பிடுவதை பழக்கமாக்கிக் கொள்ள முயற்சிக்க வேண்டும். பின்னர் பருப்புக் கூட்டுடன் சாமை, திணை, கேழ்வரகு இவற்றில் ஏதாவது ஒன்றின் உணவை சேர்த்துக் கொள்வதும் வேண்டும். அதேபோல், சமையலில் பயன்படுத்தும்
காய்கறிகளில் 3 வகையான நிறம்கொண்டதாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இதுதான் பொதுவான உணவுமுறை. முக்கியமாக அவசர வாழ்க்கை முறையில் மாற்றங்கள் தவிர்க்க முடியாததுதான். அதற்காக நம் பாரம்பரிய உணவுகளை மறந்துவிடக்கூடாது. அதுதான் நமக்கு எப்போதும் ஆரோக்கியமான உணவு’’ என்கிறார்.


Similar Threads: