மது அஞ்சறைப் பெட்டியில் தவறாமல் இடம் பெற்றிருப்பது சுக்கு. இஞ்சியின் உலர்ந்த வடிவம்தான் இந்த சுக்கு ஆகும். இஞ்சி எப்படி மணமூட்டும் பொருளாகவும், நோய் தீர்க்கும் பொருளாகவும் பயன்படுகிறதோ அப்படி சுக்கும் ஒரு சிறந்த நோய் தீர்க்கும் பொருளாகப் பயன்படுகிறது. இந்தியர்கள் பழங்காலந்தொட்டே இதன் சிறப்பை உணர்ந்து இதை பயன்படுத்தியுள்ளார்கள். சித்த, ஆயுர்வேத மருத்துவ முறைகளில் இது வெகுவாக பயன்படுகிறது. சித்த மருத்துவத்தில் மிளகு, திப்பிலி, சுக்கு இம்மூன்றும் கலந்த திரிகடுகு என்ற கூட்டு மருந்து மிகவும் புகழ் பெற்றதாகும். சுக்கு அவசர உதவி மருந்தாகப் பயன்படுகிறது.


பொருளாதாரப் பயன்கள்

சுக்கிலிருந்து ஒரு வகையான எண்ணை எடுக்கப்படுகிறது. சுக்குப் பொடியிலிருந்து ஒலியரோசின் எடுக்கப்படுகிறது. இது முக்கியமான சில மருந்துகள் மற்றும் மணப் பொருட்கள் தயாரிப்பில் பயன்படுகிறது. ஒரு கிலோ சுக்குப் பொடியிலிருந்து 150 கிராம் எண்ணை உற்பத்தி செய்யப்படுகிறது. இஞ்சியை பலமுறை சுண்ணாம்பு நீரில் நனைத்து உலர வைத்து வெண்சுக்கு தயாரிக்கப்படுகிறது.

பல்வேறு மொழிப் பெயர்கள்

சமஸ்கிருதம் சுன்டா
இந்தி, வங்காளம் ஷோந்த்
மராட்டியம் ஷூண்ட்
தெலுங்கு ஷோண்டி
கன்னடம் வோனா ஷூண்டி
மியான்மர் ஜின்சி க்யாவ்

குணங்கள்

சுக்கு உடலுக்கு பலத்தைத் தருகிறது. நரம்புகளுக்கு உற்சாகம் மற்றும் சக்தியைத் தருகிறது. அஜீரணம், வயிற்று நோய்களை குணப்படுத்தும். மலச்சிக்கலை நீக்கும். நல்ல கண் பார்வையைத் தரும். விஷங்களை இறக்கும். உடல் வாயுத் தொல்லை, கீல் வாயுவை குணப்படுத்தும். உடல் வலியைத் தீர்க்கும். மற்றும் இருமல், தொண்டை நோய், காய்ச்சல், களைப்பு இவைகளை குணப்படுத்தும்.


மருத்துவப் பயன்கள்

நீரில் சுக்கை உரசி நெற்றிப் பொட்டில் தடவ தலைவலி தீரும்.

சுக்கை பொடி செய்து அதனுடன் பூண்டுச்சாறு கலந்து சாப்பிட சூலை நோய் குணமாகும்.

சுக்கை பசு மோர் விட்டு அரைத்து சாப்பிட பேதி நிற்கும்.

சுக்குத்தூளுடன் நீர் கலந்து வெல்லம் கலந்து சாப்பிட பித்தம் வெளியேறும்.

சுக்கு, மிளகு, வெற்றிலை ஆகியவற்றை சேர்த்து அரைத்து சாப்பிட வாய்வுத் தொல்லை நீங்கும்.

5 கிராம் வீதம் சுக்கு, ஜாதிக்காய், சீரகம் இவைகளை எடுத்து இடித்து உணவுக்கு முன்பு சாப்பிட அஜீரணக் கோளாறுகள் நீங்கும்.

சுக்குப் பொடியுடன், பெருங்காயப் பொடி கலந்து சாப்பிட வயிற்றுவலி தீரும்.

10 கிராம் வீதம் ஓமம், சுக்கு ஆகியவற்றை ஒரு டம்ளர் நீரிலிட்டு காய்ச்சி இதில் ஒரு துண்டு பெருங்காயத்தை உரைத்து சாப்பிட வயிற்றுவலி நீங்கும்.

சுக்கு, பெருங்காயம் இரண்டையும் பாலில் உரசி நெற்றிப் பொட்டில் பற்று போட தலைவலி தீரும்.

நல்லெண்ணையில் சுக்கு, பெருங்காயம் ஆகியவற்றை போட்டு காய்ச்சி உடல் வலி உள்ள இடங்களில் தடவ உடல்வலி தீரும்.

சுக்குத்தூளை தயிருடன் கலந்து வெல்லம் சேர்த்து காலையில் சாப்பிட பித்தம் தீரும்.

5 கிராம் வீதம் சுக்கு, சீரகம், திப்பிலி, மிளகு இவைகளை எடுத்து பொடியாக்கி தேன் கலந்து காலை, மாலை சாப்பிட செரியாமை தீரும்.

சுக்கு, திப்பிலி, வால்மிளகு, ஏலம் இவைகளை வகைக்கு 5 வீதம் எடுத்து வறுத்து பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட குரல் இனிமை பெறும்.

ஒரு துண்டு சுக்கு, அதிமதுரம் இரண்டையும் லேசாக சிதைத்து வாயில் ஒதுக்கிக் கொண்டு சாறை உறிந்து கொண்டே இருக்க தொண்டைக்கட்டு, இருமல் போன்றவை குணமாகும்.

சுக்கை உலர வைத்து இடித்து பொடியாக அரைத்து தினசரி காலையில் இந்தப் பொடியால் பல் துலக்கி வர பல்வலி, ஈறு வீக்கம், பல் ஈறில் இரத்தம் வருதல் போன்ற குறைபாடுகள் தீரும்.

Similar Threads: