காதலை கண்கள் காட்டும் என்பார்கள். காதலை மட்டுமல்ல, உடல்நலக் குறைவையும் கண்கள் தெளிவாகக் கூறிவிடும்.
அதனால்தான் உடல்நிலை சரியில்லை என்று மருத்துவரிடம் சென்றால் அவர் முதலில் நமது கண்களைப் பரிசோதிக்கின்றார். ஆகவே நாமும் நமது கண்கள் எப்படி இருந்தால், என்ன பிரச்சினையாக இருக்கக்கூடும் என்று தெரிந்துகொள்வோம்...
மங்கலான பார்வை: பொதுவாக இந்தப் பிரச்சினை கணினியில் அதிக நேரம் வேலை பார்ப்பவர்களுக்கு ஏற்படும். கணினியில் உள்ள பிக்சல்களின் அமைப்பு சரியாக இல்லாவிட்டாலும் இந்த நிலை ஏற்படலாம். இது மட்டுமல்லாமல், சிலருக்குக் கண்களில் இருந்து கண்ணீரும் வரும்.


கண்களில் ஈரப்பசை குறையும்போது எரிச்சல் ஏற்படும். அதிகம் மங்கலான பார்வை இருந்தால் அது நீரிழிவு நோய்க்கான அறிகுறியாகக் கூட இருக்கலாம்.
சிவப்பு, எரிச்சல்: கண்கள் சிவப்பாகவும், எரிச்சலுடனும் இருந்தால் அது சைனஸ் மற்றும் சளியின் அறிகுறி. மேலும் சில நேரங்களில் ஒவ்வாமை காரணமாகவும், கண்களுக்குப் போடும் மேக்-அப் செட்டின் வேதிப்பொருட்கள் மூலமாகவும் இந்நிலை ஏற்படும்.
கண்களுக்கான மருந்துகளை தேவையில்லாமல் கண்களில் பயன்படுத்தினாலும் எரிச்சல், சிவப்பு ஏற்படக் கூடும்.
வெளிர்நிற கண்கள்:கண்கள் வெளிறிப் போயிருந்தால் உடம்பில் ரத்த சோகை முற்றியுள்ளது என்று பொருள். அதாவது உடலில் ஹீமோகுளோபின் அளவு மிகவும் குறைவாக இருப்பதால் கண்கள் வெளிறிப் போயிருக்கின்றன. இந்த நிலையில் கண்கள் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
மஞ்சள்நிற கண்கள்: உடலில் கல்லீரல், பித்தப்பை மற்றும் பித்த நாளங்கள் சரியாக இயங்காதபோது கண்கள் இந்த நிறத்தை அடைகின்றன. மேலும் கண்களில் இருக்கும் வெள்ளை நிறப் பகுதி மட்டும் நன்கு மஞ்சள் நிறத்தில் காணப்பட்டால் அவர்கள் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று பொருள்.
வீக்கமான கண்கள்: கண்கள் வீக்கத்துடன் காணப்படுவது, உடல் குறைபாட்டைக் காட்டுகிறது. குறிப்பாக, தைராய்டு பாதிப்புகளில் ஒன்றான ஹைப்பர் தைராய்டு நிலையாக இருக்கலாம்.
ஆகவே உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். சில நேரங்களில் எந்த விதக் காரணமும் இன்றியும் கண்கள் வீக்கமாகக் காணப்படலாம். எப்படியிருந்தாலும், கண்கள் வீக்கத்துடன் காணப்படுகின்றன என்று யாராவது கூறினாலோ, அப்படி உங்களுக்குத் தோன்றினாலே உடனே மருத்துவரை நாடுவதே நலம்.
வறட்சியான கண்கள்: கண்கள் வறண்டு காணப்படுவது, உடலில் நோய் எதிர்ப்பு அமைப்பு பலவீனமடைந்துள்ளதைக் காட்டலாம். எனவே அம்மாதிரி வேளையில், ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும். நிறையத் தண்ணீர் பருக வேண்டும்.


Similar Threads: