ஓமமிருக்க பயமேன்

அஜீரணமா? வயிறு உப்புசமா? வயிற்று வலியா? உடனே ஓமத்தைத் தேடிப் போங்க!! கொஞ்சம் ஓமம், கொஞ்சம் இந்துப்பு சேர்த்து வாயில் போட்டு மென்று விழுங்கவும். அரை மணிக்குள் வயிற்று வலி, உப்புசம் எல்லாம் போயே போச்சு!

அஞ்சறைப் பெட்டியில் ஒரு அயிட்டமாகத் தினசரி சமையலில் இடம் பெறாவிட்டாலும், ஓமத்துக்கு ஒரு இடமுண்டு. ஓமத்தை அரைத்து சாறு பிழிந்து கடலை மாவில் கலந்து எண்ணெயில் பிழிய (ஓமப்பொடி) வாசனை மூக்கைத் துளைக்கும். தவிர, கடலைமாவும் எண்ணெயும் தரும் அஜீரணத்துக்கு முறிவு ஓமம்.

ஓமத்தை வெறும் வாணலியில் கொஞ்சம் புரட்டி எடுத்து வைத்துக்கொண்டு கொஞ்சம் வாயில் போட்டுமென்றால் எப்படிப்பட்ட உணவும் செரிக்கும்.

தினமும் சாப்பிட்டவுடன் ஒரு சிட்டிகை தனியாகவோ பாக்குடனோ சேர்த்து ஓமத்தை மெல்லலாம்.

ஓமத்தையும் சுக்கையும் இரண்டு பங்கு எலுமிச்சை ஜூஸில் ஊறவைத்து உலர்த்தி சிறிது இந்துப்பு சேர்த்துப் பொடி செய்து வைத்துக்கொள்ளவும். வயிறு உப்புசமாக இருக்கும்போது ஒரு சிட்டிகை எடுத்து வெந்நீரில் கலந்து குடித்தால் வாயுத்தொல்லை ஓடிவிடும்.

ஓமம், உப்பு, கிராம்பு சேர்த்து மென்று நீரை விழுங்கினால் சளி, கபம், இருமல் கரையும்.

சமையலில் பகோடா, பஜ்ஜி, பூரி செய்ய மாவுடன் ஓமத்தை சேர்த்துப் பிசைந்தால் மணமே அலாதி. ஜீரணமும் தரும். பூரிக்குத் தொட்டுக்கொள்ளகூட ஒன்றும் வேண்டாம்.

உருளைக்கிழங்கு கறி செய்யும் போது சீரகத்துடன் கொஞ்சம் ஓமத்தையும் சேர்த்து தாளிதம் செய்தால் வீடே மணக்கும். எளிதில் செரிக்கும்.

எலுமிச்சை ஊறுகாய் செய்யும்போது 3 ஸ்பூன் ஓமத்தை இந்துப்பு, மிளகாய் பொடி, சர்க்கரை எல்லாம் சேர்த்து குலுக்கி வெயிலில் காய வைத்து பிறகு சாப்பிடவும்.


Similar Threads: