உணவுக் கட்டுப்பாடும் மனநிலைக் குறைபாடும் - ஆர்த்தோரெக்சியா (Orthorexia)
ஆர்த்தோரெக்சியா (Orthorexia) என்பது ஒரு புது வகை மனநிலை உடல் நலக் குறைபாடு என்று அமெரிக்க உடல் நல இதழ்கள் கூறுகின்றன. சரியான நேரம், சரியான காலம், சரியான அளவு, சரியான சத்துப் பொருள்கள் என்று துல்லியமாகக் கணக்கிட்டு உண்ணப்படுகின்ற சரியான சமச்சீர் உணவை "Perfect Diet" என்கின்றனர். இந்தச் சரியான உணவிற்காகத் தங்கள் காலத்தை செலவழிக்கின்ற பிரிவில் பெரும்பாலும் பெண்களே அடங்குகின்றனர்.

ஆர்த்தோரெக்சியா என்னும் இக்குறைபாடு தாங்கள் அழகாகவும், மெலிவாகவும் ஆனால் அதற்கேற்ற உடல் எடையோடும் இருக்க வேண்டும் என்று முனைந்து செயல்படுகின்ற பெண்களில் அநேகர் தொடர்ந்த மனப்பதட்டத்திற்கும் மன இறுக்கத்திற்கும் ஆட்படுகின்றனர்

என்று Fox News என்னும் அமெரிக்க இதழ் கூறுகிறது. பெரும்பாலான பெண்கள் பணிக்குச் செல்கின்ற இக்காலச் சூழலில் உணவுக் கட்டுப்பாட்டில் தீவிர கவனம் செலுத்தும் பெண்கள் பெரிதும் இடர்ப்படுகின்றனர்.

ஆரோக்கியமான உணவு முறை என்று கருதப்படும் இவ்வகை உணவுப் பழக்கத்தால் உடம்புக்குக் கேடு நேருமா? ஆம் கேடு நேர வாய்ப்புண்டு.

சாதாரணமாகப் பசியைப் போக்குவதற்காகவே நாம் உணவு உண்கிறோம். ஆனால் அதுவே கொழுப்பு, புரதம், நார்ச்சத்து, விட்டமின் என்று வேறு வேறாக கிராம், மில்லி கிராம் என்று அளவிடப்பட்டு உண்ணப்படும் போது அதுவே பெரும் சுமையாக மாறிவிடுகிறது. பல நேரங்களில் நல்ல பல சத்துப் பொருட்கள் தவிர்க்கப்படுகின்றன.

ஆர்த்தோரெக்சியாவுக்கு ஆட்பட்டவர்கள் பெரும்பாலும் பால் பொருள்கள், இறைச்சி, முட்டை, பருப்புகள், விதைகள் போன்றவற்றை உணவிலிருந்து நீக்குகின்றனர். இதனால் உடலுக்குத் தீமையே விளையும். மேலும் உடல் பருத்து விடக் கூடாது. பின்புறம் பெருத்து விடக்கூடாது. ஆனால் அதே கன்னத்தின் அழகு குறைந்து விடக் கூடாது. குதிகால் தசைகள் குறுகிவிடக் கூடாது என்று ஒவ்வொன்றையும் நினைத்து நினைத்து உணவை உண்ணும் போது உணவின் மேலுள்ள விருப்பமே குறைந்து போகலாம்.

மேலும் இது போன்றதொரு நிலை தொடர்ந்த மன இறுக்கத்தையும், மனத் தாழ்ச்சியையும் (Depression) உண்டாக்கலாம். இது போன்றதொரு மனநிலைக்கு ஆட்படும் போது அது உடலின் ஹார்மோன் சுரப்பைக் குறைக்கலாம், ஜீரண நீர்கள் சுரப்பதைத் தடுக்கலாம், சினையகத்தைக் கருக்குழலைப் பாதிக்கலாம் என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். நல்ல உணவியலாளர்களை (Dieticians) கலந்து ஆலோசித்து எளிதாகப் பின்பற்றக் கூடிய உணவுக் கட்டுப்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

Similar Threads: