சாப்பிடும் போது கவனம் உணவில் இருக்க வேண்டும்.


சாப்பிடும் பொழுது கவனத்தை உணவில் வைக்க வேண்டும். நாம் சாப்பிடும் பொழுது சாப்பிடுகிறோம் என்ற எண்ணத்துடன் உணவில் கவனம் வைத்துச் சாப்பிட்டால், அது நன்றாக ஜீரணம் செய்யும். சாப்பிடும் பொழுது கவனத்தைக் குடும்பம், வியாபாரம் போன்று வேறு ஏதாவது விஷயங்களில் வைத்துச் சாப்பிடும் பொழுது, சரியாக ஜீரணம் செய்வது கிடையாது. ‘நாம் மூளைக்குத்தானே வேலை கொடுக்கிறோம்? ஜீரணம் வயிற்றில்தானே நடக்கிறது? அது எப்படி பாதிக்கும்? என்ற சந்தேகம் வரும். நம் மூளைக்கும், உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் சுரப்பிகளுக்கும், வேகஸ் என்ற நரம்பு மூலமாக இணைப்பு உள்ளது. நாம் எதைப் பற்றி எண்ணுகிறோமோ அது சம்பந்தப்பட்ட சுரப்பிகளை இந்த வேகஸ் நரம்பு சுரக்க வைக்கும்.


உதாரணமாக நாம் சிறுநீர் கழிக்க வேண்டும் என்றால் என்ன செய்கிறோம்? உடம்பில் எந்தப் பட்டனை (சுவிட்சை) அழுத்தினால் சிறுநீர் வருகிறது? அதற்கென்று தனியாக ஒரு பட்டனும் கிடையாது. மனத்தால் சிறுநீர் வர வேண்டும் என்று எண்ணியவுடன் வருகிறதல்லவா? எனவே மனம் நினைத்தால் மூத்திரப் பையின் கதவுகளைத் திறக்க முடியும். அதே போல் மனத்தால் நினைத்தால் கதவை அடைக்க முடியும். இது மூலமாக நாம் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு ரகசியம் என்னவென்றால், மனத்தால் நினைத்தால் நம் உடல் உறுப்புகளை இயக்க முடியும். நோய் முதலில் மனத்தில்தான் தோன்றுகிறது. பின்னர் மனம் தான் உறுப்புகளுக்கு நோயை உண்டாக்குகிறது. அதே போல் நாம் ஆரோக்யமாக இருக்கிறோம் என்ற எண்ணம் இருந்தால் மட்டுமே உறுப்புகளுக்கு நோய் குணமாகும்.


உதாரணம்-நாம் தூங்கும் பொழுது கனவு காண்கிறோம். கனவில் ஒரு பாம்பு துரத்துவது போல் காண்கிறோம். கனவில் வேகமாக ஓடுகிறோம். திடீரென கனவு கலைந்து எழுந்து அமர்ந்து பார்க்கும் பொழுது நம் இருதயம் வேகமாகத் துடித்துக் கொண்டிருக்கும். பட படவென இருக்கும். உடல் முழுவதும் வியர்வை வந்திருக்கும். ‘நாம் கனவில்தானே ஓடினோம்? பின்னர் ஏன் வியர்வை வந்தது, நெஞ்சு படபடக்கிறது? ஏனென்றால் கனவில் ஓடுவது போல் மனம் நினைத்துப் பார்க்கும் பொழுது உடலில் ஓடுவதற்கான சக்தியை இழக்கிறோம். அதற்கான சுரப்பிகள் தூண்டப்படுகின்றன. இந்த 2 உதாரணம் மூலமாக நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், மனம் எதைப் பற்றி நினைக்கிறதோ, உடலிலுள்ள அது சம்பந்தப்பட்ட சுரப்பிகள் சுரக்கும்.


எனவே, உணவை உண்ணும் பொழுது நம் கவனம், எண்ணம், நான் சாப்பிடுகிறேன் என்று இருந்தால் மட்டுமே, ஜீரணம் சம்பந்தப்பட்ட அனைத்து சுரப்பிகளும் நன்றாகச் சுரக்கும். அவ்வாறு இல்லாமல் சாப்பிடும் பொழுது குடும்பம், வியாபாரம், குழந்தை, மனைவி என்று யோசிப்பவர்களுக்கு ஜீரண சுரப்பிகள் சுரக்காததால் தான் நமக்கு நோய்கள் ஏற்படுகின்றன. எனவே தயவு செய்து இனி சாப்பிடும்பொழுது கவனத்தை உணவில் வையுங்கள்.


ஒரு ஞானியிடம் சென்று சிலர் கேட்டார்கள். “ஐயா! உலகில் நோய்களுக்கான காரணம் என்ன?” என்று, அந்த ஞானி கூறினார் “சாப்பிடும் பொழுது யாரும் சாப்பிடுவதில்லை என்று.” மீண்டும் கேட்டார்கள். “உலகிலுள்ள அனைத்து நோய்களைக் குணப்படுத்துவது எப்படி?” அதற்கு அந்த ஞானி சொன்னார் “சாப்பிடும் பொழுது சாப்பிட்டால் எல்லா நோயும் குணமாகும்” என்று. இந்த வார்த்தைக்கு இதுதான் அர்த்தம் உள்ளது. சாப்பிடும் பொழுது சாப்பிட வேண்டும் என்றால் என்ன? சாப்பிடும் பொழுது கவனத்தை உணவில் வைக்க வேண்டும். சாப்பிடும் பொழுது கவனத்தை உணவில் வைக்கும் எவருக்கும் எந்த நோயும் வருவதில்லை.


எனவே சாப்பிடும் பொழுது உணவுக்கு மரியாதை கொடுத்து இந்த உணவை அளித்த கடவுளுக்கும், இயற்கைக்கும் நன்றி சொல்லி அவரவர்க்குத் தெரிந்த ஒரு பிரார்த்தனையைச் செய்து உணவுக்கு மரியாதை கொடுத்து சாப்பிட்டால் மட்டுமே நோய்கள் குணமாகும். நம் குடும்ப மருத்துவருக்கு மரியாதை கொடுத்தால் நோய்கள் சற்றுப் பெரிதாகும். எனவே, மருத்துவருக்கு மரியாதை கொடுப்பதை விட்டு விட்டு, சாப்பிடும் சாப்பாட்டிற்கு மரியாதை கொடுத்துப் பழகுங்கள்.


உணவு சாப்பிடும் பொழுது, உணவைக் கையில் எடுத்து ‘இந்த உணவு வயிற்றுக்குள் சென்று ஜீரணமாகி ரத்தமாக மாறி உடலிலுள்ள அனைத்து உறுப்புகளுக்கும் உணவாகவும், அனைத்து நோய்களுக்கும் மருந்தாகவும் செயல்படுகிறது’ என்ற எண்ணத்தில் சாப்பிட்டால் மட்டுமே ஆரோக்கியமாக வாழ முடியும்.


“பசியின்றி எதையும் உண்ணாதீர்கள்-உண்ணும் பொழுது
உணவைத் தவிர எதையும் எண்ணாதீர்கள்”


எனவே, சாப்பிடும் பொழுது தயவு செய்து கவனத்தை உணவில் வைத்து வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் சாப்பிடுவதன் மூலமாக ஆரோக்கியமாக இருக்கலாம்.Similar Threads: