ஐந்து வகையான உணவுகள்:

- ஹீலர் பாஸ்கர்


உணவுகளில் பல வகைகள் உள்ளன. இருந்தாலும் சுலபமாகப் புரிந்துகொள்வதற்காக நாம் சிலவகைகளாகப் பிரித்துள்ளோம்.


முதல் வகை:


இயற்கையாக, சுவையாக இருக்கும், சமைக்காத உணவுகள், அனைத்துப் பழங்கள், தேங்காய், வெள்ளரிக்காய், கேரட் போன்றவை சமைக்காமல் அதே சமயம் சுவையாக இருக்கும் உணவுகள் இவை அனைத்தும் முதல் வகை உணவுகள். இவற்றில் சுவை 100%இருக்கும். எனவே 100 மதிப்பெண்கள். பிராண சக்தி 100% இருக்கும். எனவே மேலும் 100 மதிப்பெண்கள். சத்துப்பொருள் 100% இருக்கும். எனவே மீண்டும் 100 மதிப்பெண்கள். ஆக மொத்தம் முதல்வகை உணவுக்கு 300 மதிப்பெண்கள். எந்த உணவைச் சமைக்காமலும், அதே சமயத்தில் சுவையாக பச்சையாகச் சாப்பிட முடியுமோ, அவையனைத்தும் முதல்வகை உணவுகளில் வரும்.


இரண்டாம் வகை:


சமைக்காத ஆனால் சுவையில்லாத உணவுகள் இந்த வகையில் சேரும். உதாரணமாக முளை கட்டிய தானியங்கள், சுவையில்லா பழங்களும், காய்கறி வகைகளும். இந்த இரண்டாம் வகை உணவுகளில் பிராணன் 100% இருக்கும். எனவே 100 மதிப்பெண்கள். சத்துப்பொருள்கள் 100% இருக்கும். எனவே 100 மதிப்பெண்கள். ஆனால் சுவை இருக்காது. எனவே அதற்கு 0 மதிப்பெண்கள். எனவே இந்த வகை உணவுகளுக்கு மொத்தம் 200 மதிப்பெண்கள். எனவே இவை இரண்டாம் தர உணவுகள் என நாம் பிரிக்கலாம். உதாரணம் முளை கட்டிய தானியங்கள்.


மூன்றாம் வகை:


சமைத்த காய்கறிகள், கீரைகள், தானியங்கள் அனைத்தும் இந்த மூன்றாவது வகை உணவுகளாம். ஓர் உணவை சமைப்பதால் (வேக வைப்பதால்) அந்த உணவிலுள்ள சுவை 50% குறைகிறது. எனவே சுவைக்கு 50 மதிப்பெண்கள். மேலும் சத்துப்பொருள் பாதி குறைந்து விடுகிறது. எனவே மீண்டும் 50 மதிப்பெண்கள். பிராணசக்தியும் பாதி குறைந்து விடுகிறது. எனவே மேலும் ஒரு 50 மதிப்பெண்கள். ஆக மொத்தம் இவ்வகை உணவுகளுக்கு 150 மதிப்பெண்கள் தரலாம். உதாரணம், இட்லி, தோசை, பொங்கல், ஊத்தப்பம், சாப்பாடு, சப்பாத்தி ஆகிய நாம் வழக்கமாக எடுத்துக்கொள்ளும் அனைத்து சமைத்த உணவுகளும்.


நான்காம் வகை:
அசைவ உணவுகள் இந்த நான்காவது வகையில் வரும். அசைவ உணவில் சத்துப் பொருள்100% இருக்கும். எனவே 100 மதிப்பெண்கள். பிராணன் ஒன்றுமே இருக்காது. எனவே 0மதிப்பெண். சுவை இருக்காது. எனவே 0.மதிப்பெண். ஆக மொத்தம் அசைவ உணவுகளுக்கு 100மதிப்பெண்கள். எனவே அசைவ உணவுகளை முடிந்தவரை தவிர்ப்பது அல்லது குறைப்பது நல்லது. ஆனால் சில நாடுகளில், பாலைவனப் பிரதேசங்களில், வெப்பம் அதிகமுள்ள நாடுகளில், தாவரவகை உணவுகள் கிடைக்காத காரணத்தினால் அசைவ உணவுகள் சாப்பிட வேண்டிய சூழ்நிலை உள்ளது. உடல் ரீதியாக அசைவ உணவைச் சாப்பிடுவதால் உடலுக்கு எந்தத் தீங்கும் கிடையவே கிடையாது. ஆனால் ஆன்மிக ரீதியாக ஓர் உயிரைக் கொல்வது பாபம் என்ற அடிப்படையில் நம் மனத்தில் ஓர் எண்ணம் தோன்றிய பிறகு நாம் சாப்பிட்டால் அந்த எண்ணம் நோயை உண்டாக்கும். எனவே அசைவ உணவைச் சாப்பிடுபவர்கள் இதைச் சாப்பிட்டால் பாபமில்லை என்ற எண்ணத்துடன் மனத்திலே எந்தவொரு குழப்பமும் இல்லாமல் சாப்பிடும் பொழுது சரியாக ஜீரணமாகிறது. மனத்தில் 50/50 சாப்பிடலாமா? வேண்டாமா? அல்லது சாப்பிட்டால் நல்லதா? கெட்டதா? என்ற எண்ணத்துடன் குழப்பத்துடன் சாப்பிடும் பொழுது அது நோயை உண்டாக்குகிறது. இஃது அசைவத்திற்கு மட்டுமன்று. எந்த ஓர் உணவைச் சாப்பிட்டாலும் உடம்புக்கு ஆரோக்கியமென்ற தெளிவான திடமான நம்பிக்கையுடன் சாப்பிடும்பொழுது அது மருந்தாக வேலை செய்கிறது. அந்த உணவு நமக்கு நோய் ஏற்படுத்துமோ என்ற எண்ணத்துடன் சாப்பிடும்பொழுது அது நோயை உண்டாக்குகிறது. இறுதியாக அசைவ உணவு சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. இது நான்காவது வகை உணவு.


ஐந்தாம் வகை:


போதைப் பொருள்கள் (லாகிரி வஸ்துகள்) இவை உணவே அல்ல. சில பொருள்களை நாம் உணவுபோல் சாப்பிடுகிறோம். ஆனால் அவை உணவல்ல. போதைப்பொருள்கள். உதாரணமாக டீ, காபி, பீடி, சிகரெட், சாராயம், பீடா, கஞ்சா, அபின், பாக்கு ஆகியவை அனைத்தும் உணவுப் பொருள்களே அல்ல. அவை போதைப் பொருள்கள். உணவுப் பொருளுக்கும், போதைப் பொருளுக்கும் எப்படி வித்தியாசம் கண்டுபிடிப்பதென்றால் எந்தவொரு பொருளை மூன்று நேரமும் சாப்பிட்டு நம்மால் உயிரோடு இருக்க முடியுமோ இவையனைத்தும் உணவுப் பொருள்கள். எந்தப் பொருளை மூன்று நேரமும் அது மட்டும் சாப்பிட்டு உயிரோடு இருக்க முடியாதோ, அவை போதைப் பொருள்கள். தேங்காயை மட்டும் சாப்பிட்டு ஒரு மனிதன் உயிரோடு இருக்க முடியும்; அஃது உணவு. சிகரெட் மட்டும் புகைத்துக் கொண்டு ஒரு மனிதன் உயிரோடு இருக்க முடியுமா? அது போதைப் பொருள். அசைவம் சாப்பிட்டு ஒருவர் உயிரோடு இருக்க முடியும். எனவே அசைவம் என்பது ஓர் உணவு. கஞ்சா குடித்துக்கொண்டே ஒருவர் உயிரோடு இருக்க முடியுமா? இருக்க முடியாது. எனவே அது போதைப் பொருள். உணவு என்பது நம் உடலில் வெளியிலிருந்து சத்துப் பொருள்களை உடலுக்கு எடுத்துச் செல்லும் ஒரு பொருள். போதைப் பொருள் என்பது உடலிலேயே சேமித்து வைக்கப்பட்டிருக்கும் சத்துப் பொருள்களை எடுத்துச் செலவு செய்யும் ஒரு பொருள்.


எனவே போதைப் பொருளைப் பயன்படுத்தும் பொழுது சில குறிப்பட்ட நேரம் மட்டும் உடலில் அதிகமான தெம்பு இருக்கும். பிறகு நாம் வலுவிழந்து காணப்படுவோம். ஏனென்றால் நம் உடலில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். சில சத்துப்பொருள்களை இந்தப் போதைப்பொருள் எடுத்துச் செலவு செய்து நம்மை வீரியமாக இருக்கச் செய்கிறது. ஆனால் அது நம் உடம்பிற்கு உணவை ஒரு போதும் கொடுப்பதில்லை. எனவே தயவு செய்து போதைப் பொருள்களைச் சாப்பிடக் கூடவே கூடாது. நான் பல மருத்துவரிடம் சென்றேன். பல வருடங்களாக சிகிச்சை எடுத்துக் கொள்கிறேன். ஆனால் எந்த நோயும் குணமாகவில்லை என்று மருத்துவத்தையும், மருத்துவர்களையும் குறை சொல்கிறார்கள். ஆனால் அவர்கள் பயன்படுத்தும் போதைப் பொருள்களைப் பற்றி அவர்கள் வெளியே சொல்வதே கிடையாது. எனவே அசைவம் சாப்பிடுவதை விட டீத்தூள், காபித்தூள் சாப்பிடுவது கெடுதல் அதிகம்.


மேலே கூறப்பட்டுள்ள உணவு வகைகளைப் புரிந்து கொண்டு நீங்கள் எந்தவகை சாப்பிடுகிறீர்கள்? என்று புரிந்து கொள்ளுங்கள். முடிந்தவரை முதல் வகை உணவை நோக்கி உங்கள் பயணம் இருக்கட்டும். சில இயற்கை மருத்துவர்கள் மூன்று நேரமும் இயற்கை உணவு சாப்பிடுங்கள் என்று கூறுகிறார்கள். இஃது எல்லாராலும் கடைப்பிடிக்க முடியாது. நீங்கள் ஒரு மாதம் தொடர்ந்து மூன்று வேளையும் இயற்கை உணவு சாப்பிட்டு வந்தால் ஒரு மாதம் முடிந்தவுடன் இட்லியைப் பார்த்தால் நாக்கில் எச்சில் ஊறும். என்ன செய்வீர்கள்? எனவே நம் சிகிச்சையில் ஒரு சிறிய யோசனை உங்களுக்குத் தருகிறோம்.
காலையில் சமைக்காத உணவுகளை மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள். நம் உடலுக்குத் தேவையான பிராண சக்தியும், தாது உப்புகளும் இயற்கையான முறையில் காலையில் உணவு மூலமாக நம் உடலுக்குச் சென்று விடும். பகல் உணவு சமைத்த உணவு. ஆசை தீர எது எதுவெல்லாம் பிடித்ததோ அனைத்தையும் சாப்பிடுங்கள். இது நம் மனத்திற்கு ருசிக்காக சாப்பிட்டுக் கொள்ளலாம். இரவு நேரங்களில் அதிகமாக சாப்பிடக்கூடாது என்பதற்காக அரிசிக் கஞ்சி, கோதுமைக் கஞ்சி போன்ற கஞ்சி, ஏதாவது ஒரு காய்கறி பொரியலை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த முறையில் சாப்பிடுவதால் இயற்கை உணவு சாப்பிட்டது போலவும் இருக்கும். ஆசை தீர சமைத்த உணவு சாப்பிட்டது போலவும் இருக்கும். கஞ்சி என்ற நோயைக் குணப்படுத்தும் மருந்தைச் சாப்பிட்டது போலவும் இருக்கும். நமக்கு எல்லா வகையிலும் சத்துப்பொருள்கள் உள்ளே சென்று நாம் என்றும் ஆரோக்கியமாக இருக்கவும், சிறந்த வழியையும் கொடுக்கும்.


காலையில் இராஜா போல சாப்பிட வேண்டும். பகலில் மந்திரி போல சாப்பிட வேண்டும். இரவு பிச்சைக்காரனைப் போல சாப்பிட வேண்டும் என்று பழமொழி கேள்விப்பட்டிருப்பீர்கள். இது தான் ஆரோக்கியத்திற்கான சரியான வழி. ஆனால் நாம் காலையில் பிச்சைக்காரனைப் போல இரண்டு தோசை, இரண்டு இட்லி என்று அவசர அவசரமாகச் சாப்பிட்டு விட்டு அலுவலகத்துக்கு ஓடுகிறோம். பகலில் மந்திரியைப் போல அளவாக சாப்பிடுகிறோம். இரவு இராஜாவைப் போல அனைத்து உணவுகளையும் மொத்தமாக அள்ளிச் சாப்பிடுகிறோம்.


நமக்கு நோய் வருவதற்கு அடிப்படைக் காரணமே இரவு அதிகமாக சாப்பிடுவதுதான். எனவே காலை நேரங்களில் நம் வயிற்றில் ஜீரணசக்தி அதிகமாக இருக்கும், எனவே காலை உணவை தயவு செய்து திருப்தியாக, நிறை அமைதியாக, ஆசை தீர சாப்பிடுங்கள். பகல் உணவு அளவாக இருக்கட்டும். இரவு முடிந்தவரை அளவைக் குறையுங்கள். ஏனென்றால் இரவில் நமக்கு உழைப்பு குறைவு. சூரியனும் கிடையாது. நம் உடலில் ஜீரணம் ஆக வேண்டுமென்றால் வெப்பம் இருக்க வேண்டும். பகலில் நாம் உழைக்கிறோம், நடக்கிறோம், ஓடுகிறோம், வேலை செய்கிறோம், எனவே உழைப்பு மூலமாக உடலுக்கு உஷ்ணம் கிடைக்கிறது. மேலும் சூரியன் இருக்கும்பொழுது இயல்பாகவே வெப்ப சக்தி நம் உடலுக்குள் புகுகிறது. அதனால் பகலில் அதிகமாக சாப்பிடுங்கள். இரவில் குறைவாக சாப்பிட்டு ஆரோக்யமாக வாழுங்கள்.

Similar Threads: