பொதுவான டயட் அட்டவணை எல்லோருக்கும் உதவுமா?


சிலருக்கு சூடான உடல்வாகும், சிலருக்குக் குளிர்ச்சியான உடல்வாகும் இருக்கும். இவர்களுக்குப் பொதுவான டயட் அட்டவணை உதவுமா? அல்லது அவரவர் உடலுக்கு ஒப்புக்கொள்ளும் பொருள்களைக் கொண்டே டயட்டை மேற்கொள்ள வேண்டுமா? உதாரணத்துக்கு வெண்பூசணி ஜூஸ், வாழைத்தண்டு ஜூஸ் சாப்பிட்டால் உடல் இளைக்கும் என்கிறார்கள். இது குளிர்ச்சியான உடல்வாகுள்ளவர்களுக்கு எதிர்மறையான விளைவுகளைத்தானே உருவாக்கும்? அதே மாதிரி கொள்ளு சாப்பிட்டால் இளைக்கும் என்பது சூட்டு உடல்வாகு கொண்டவர்களுக்கு சரிவருமா?

பதில் சொல்கிறார் அறிஞர் அண்ணா அரசு சித்த மருத்துவக் கல்லூரியின் பேராசிரியர் ஹிமேஷ்வரி.

பொதுவான டயட் அட்டவணை நிச்சயம் உதவாது. டயட் என்பது ஒருவரின் தனிப்பட்ட உடல் நிலை, தற்போதைய ஆரோக்கிய நிலை மற்றும் வானிலை மாறுதல்களைப் பொறுத்துத் திட்டமிடப்பட வேண்டியது. சைனஸ் பிரச்னை உள்ள ஒருவருக்கு பூசணிக்காய் எடுத்துக் கொள்ளச் சொல்ல முடியாது.

இந்திய மருத்துவப் பாரம்பரிய முறைகள், ஒவ்வொரு தனிப்பட்ட மனிதருக்கும், அவரது பிரச்னை மற்றும் தேவைகளுக்குத் தகுந்தபடிதான் சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன. ஒவ்வொரு உணவுக்கும் ஒரு மருத்துவக் குணம் உண்டு. அது மனிதருக்கு மனிதர், கால நிலைக்கேற்ப மாறுபடலாம்.

உதாரணத்துக்கு வெயில் காலத்தில் நிறைய எலுமிச்சம்பழம் எடுத்துக் கொள்கிற நபருக்கு, அதே எலுமிச்சை குளிர் காலத்திலும் ஒப்புக் கொள்ளும் என்று சொல்ல முடியாது. நெல்லிக்காயை காலை வேளைகளில் எடுத்துக் கொள்ளலாம்.

இரவில் அதைத் தவிர்க்க வேண்டும். கொள்ளும் அப்படித்தான். அல்சர் எனப்படுகிற வயிற்றுப்புண் இருப்போருக்கு அது நல்லதல்ல. எனவே பொத்தாம் பொதுவாக ஒரு டயட் முறையைப் பின்பற்றாமல், அவரவர் உடல் நிலைக்கும், கால நிலைக்கும் தகுந்த உணவுக் கட்டுப்பாட்டு முறையைத் தேர்ந்தெடுப்பதே சரியானது.


Similar Threads: