உணவு விஷயத்தில் தேவை கவனம்


வெந்ததை தின்று விதி வந்தால் மாண்டு போவதல்ல வாழ்க்கை. ஆரோக்கியமான உணவுப் பழக்கம் வாழ்க்கைக்கு அவசியத் தேவை. உணவு விஷயத்தில் அசட்டையாக இருப்பவர்கள்தாம் அடிக்கடி நோய் வாய்ப்படுகிறார்கள். டாக்டரிடம் சென்று கைக்காசை இழந்து பக்கவிளைவுகளையும் இலவசமாக வரவழைத்துக் கொள்கிறார்கள்.

உணவு என்பது அறுசுவைகளின் கலவையாக இருக்க வேண்டும். மனதுக்கு பிடிக்காமல் கடனே என்று எதையும் சாப்பிடக் கூடாது. ஆரோக்கியத்துக்கு உகந்தது என்றால் அந்த உணவை சாப்பிடுவதற்கு மனதை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். உடலுக்கும் மனதுக்கும் நிறைவு தரும் உணவுப் பொருட்களை மட்டுமே சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு நல்லது.

உணவுப் பொருட்கள் நம் உடலுக்கு சக்தியளிப்பதோடு நின்று விடுவதில்லை. நம் குண நலன்களையும் தீர்மானிக்கின்றன. பால், நெய், கீரை, காய்கறிகள், தானியங்கள், பருப்பு வகைகள், பழங்கள் என்று சரியான அளவில் சாப்பிட்டு வருபவர்கள், அமைதியான குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். எந்த சூழ்நிலையிலும் பதட்டம் அடைய மாட்டார்கள். சிந்தனை தெளிவாக இருக்கும். சரியான முடிவு எடுப்பார்கள்.

காரம், உப்பு, புளிப்பு, மட்டன், சிக்கன், எண்ணெயில் பொறித்த உணவுப் பொருட்கள் என்று சகட்டு மேனிக்கு ஒரு வெட்டு வெட்டுபவர்கள் எப்போதும் டென்ஷனாகவே இருப்பார்கள். சிந்தனையில் தெளிவிருக்காது. குழப்பமான மனநிலையில் ஏடாகூடமாக முடிவு எடுப்பார்கள். பழையது, புளித்துப் போனது, சுகாதாரமற்ற உணவு வகைகளை சாப்பிடுபவர்கள் எப்போதும் மந்த தன்மையுடன்தான் இருப்பார்கள். நல்லது எது? கெட்டது எது? என்று பிரித்துப் பார்க்கத் தெரியாது. யார் சொன்னாலும் அதை அப்படியே நம்பி விடுவார்கள்.

சீசனுக்கு ஏற்ற உணவு வகைகளை சாப்பிடுவதுதான் நல்லது. வெயில் காலத்தில் குளிர்ச்சியான உணவுகளை சாப்பிட வேண்டும். குளிர் காலத்தில் சூடான உணவுப் பொருட்களை சாப்பிட வேண்டும். தண்ணீரைக் காய்ச்சி மிதமான சூட்டில் சாப்பிட வேண்டும். குளிர் காலமோ, வெயில் காலமோ இரவில் குளிர்ச்சியான பொருட்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

எப்போதும் வயிறு முட்ட சாப்பிடக் கூடாது. அரை வயிறு சாப்பிடுகிறவன்தான் ஆரோக்கியமாக இருப்பான் என்பது பழமொழி. ஏற்கனவே உண்ட உணவு செரிமான பிறகே அடுத்த வேளை உணவை உண்ணுங்கள். பசி இல்லாத போது சாப்பிடாதீர்கள். பசிக்கும்போது சாப்பிடாமல் இருக்காதீர்கள். எதையும் மென்று நன்று தின்னுங்கள். அவசர அவசரமாக அள்ளித் திணிக்காதீர்கள். உங்கள் உணவை யாரும் பறித்துச் சென்றுவிட மாட்டார்கள்.

சாப்பிட்டவுடன் படுக்காதீர்கள். உணவு உண்டு ஒரு மணி நேரம் கழித்து உறங்குவதுதான் உடலுக்கு நல்லது. பணக்காரன் நினைத்தபோது சாப்பிடுகிறான். ஏழை கிடைத்தபோது சாப்பிடுகிறான். பசித்த போது அனைவரும் சாப்பிடும் நிலை நம் நாட்டில் இல்லை. அதனால் உணவை எப்போதும் வீணாக்காதீர்கள்.

சிவப்பு அரிசி, பாசிப் பயறு போன்றவை எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவுகள். மாமிசம், உளுந்து, பால் போன்றவை மெதுவாக ஜீரணமாகும் கடின உணவுகள். எளிதில் செரிமானம் ஆகக் கூடிய உணவுகளையே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். இயற்கையான சுவை குன்றாத உணவு, சரியான கலவையில் சமைத்து சூடாக பரிமாறப்படும் உணவுகள் ஜீவனுள்ள உணவுகள். இவற்றையே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். குழைந்து போனது, அரைவேக்காடு, தீய்ந்து போனது, புளித்தது, பழையது போன்றவை ஜீவனற்ற உணவுகள். சூடாக சமைத்து ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவதும் ஜீவனற்ற உணவுதான். இவற்றை தவிர்க்க வேண்டும். ஜீவனுள்ள உணவை சாப்பிட்டால் மனதும் உடலும் புத்துணர்ச்சியோடு இருக்கும். சமைத்த உணவை சாப்பிடுவதை விட பச்சை காய்கறிகளே அதிக ஜீவனுள்ளவை. அதிக சத்துள்ளவை.

உணவு விஷயத்தில் கவனம் செலுத்தினால், ஆரோக்கியம் பற்றி யாரும் கவலைப்பட வேண்டிய அவசியமே நேராது.

Similar Threads: